அக்டோபர் 10

அர்ச். பிரான்சீஸ்கு போர்ஜியார் - துதியர் (கி.பி. 1572)

ஸ்பெயின் தேசத்தாரான போர்ஜியார் பெயர் பெற்ற பிரபுவும், மகா தளகர்த்தரும் திரண்ட செல்வமும் உடையவராய் இருந்தார். சிறு வயதிலேயே இவர் தெய்வ பக்தியுள்ளவராய் ஞானக் காரியங்களில் வெகு நேரம் செலவு செய்து, ஒறுத்தல் முயற்சியால் தம்மை அடக்கி, கர்த்தருடைய பாடுகளின் மீது அதிக பக்தி வைத்திருந்தார். 

தமது எஜமானியான இராணி மரணமானபின் அவளுடைய பிரேதமடங்கிய சவப்பெட்டி திறக்கப்பட்டபோது, இராணியின் அழகான முகம் அவலட்சணமாயிருப்பதையும், பிரேதத்தினின்று துர்நாற்றம் வீசுவதையுங் கண்ட போர்ஜியார் சற்று நேரம் அங்கே நின்று சாவைப்பற்றி நினைத்து, தமது மனைவி தமக்கு முன் மரித்தால் தாம் துறவற அந்தஸ்தில் சேருவதாகத் தீர்மானித்துகொண்டார். 

சில காலத்திற்குப்பின் அவருடைய மனைவி இறக்கவே போர்ஜியார் உலகத்தைத் துறந்து சேசு சபையில் சேர்ந்தார். சேசு சபையின் ஒழுங்குகளை வெகு நுணுக்கமாய் அனுசரித்து சகலருக்கும் நன்மாதிரிகையானார். 

செல்வ செழிப்பில் வளர்ந்த இவர் ஏழையின் போஜனத்தை அருந்தி, வீடு பெருக்கி, மடத்தின் நீச வேலைகளைச் செய்து, சில சமயத்தில் பிச்சை எடுத்துப் புசிப்பார். மயிர்ச் சட்டையைத் தரித்து, சங்கிலியால் தமது சரீரத்தை அடித்துக்கொண்டு, ஒருசந்தி உபவாசத்தால் தமது சரீரத்தை அடக்கினார். 

பூசை நேரத்தில் ஒரு சம்மனசைப் போல காணப்படுவார். பாப்பாண்டவரால் தரப்பட்ட கர்தினால் பட்டத்திற்கு இவர் சம்மதிக்கவில்லை. தம்மை எப்போதும் தாழ்த்தி தாம் பாவிகளுக்குள் பெரும் பாவியென்று சொல்லுவார். 

பாப்பரசரின் உத்தரவுப்படி போர்ஜியார் திருச்சபை விஷயமாக பிரயாணஞ் செய்தபோது தமது 62-ம் வயதில் பாக்கியமான மரணமடைந்து மோட்ச பிரவேசமானார்.

யோசனை

நாம் பிரேதத்தைப் பார்க்கும் போதும், சாவு மணி சத்தம் காதில் விழும்போதும் நமது சாவைப்பற்றி நினைத்து, அதற்குத் தயாராக இருக்கிறோமா என்று யோசிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். பவுலினுஸ், மே.
அர்ச். ஜான், து.