அக்டோபர் 09

அர்ச். தியோனீசியுஸும் துணைவரும் - வேதசாட்சிகள் (முதல் யுகம்)

இவர் அத்தேன்ஸ் நகரில் பிறந்து, சிறந்த கல்வி சாஸ்திரங்களைப் படித்து, அந்த ஊரில் பெரிய அதிகாரியும் மகிமை நிறைந்த நடுவருமாயிருந்தார். 

கர்த்தர் மரணமடைந்தபோது சூரியன் மங்கி உலகமெங்கும் பெரும் அந்தகார முண்டானதை அவர் கண்டபோது, ஒன்றில் உலகம் அழிய வேண்டும், அல்லது உலக சிருஷ்டிகர் உயிர் துறந்திருக்க வேண்டும் என்று கூறினார். 

அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் அத்தேன்ஸ் பட்டணத்திற்கு போய் வேதம் போதித்த போது, தியோனீசியுஸ் சத்திய வேதத்தை அறிந்து அர்ச். சின்னப்பர் கையால் ஞானஸ்நானம் பெற்றார். ஜெருசலேம் பட்டணத்திற்குச் சென்று அங்கிருந்த தேவமாதாவைச் சந்தித்து அவர்களிடம் புத்திமதிகளைக் கேட்டு ஆறுதல் அடைந்தார். 

இவருக்குண்டாயிருந்த புண்ணியங்களைப் குறித்து இவருக்கு மேற்றிராணியார் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த மேலான பட்டத்தைப் பெற்ற பின், தியோனீசியுஸ் வேதத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்து அநேகரை சத்திய வேதத்தில் சேர்த்துக்கொண்டு திருச்சபை நாளுக்குநாள் அபிவிருத்தி அடையும்படி முயற்சித்தார். 

இவர் மூலமாய் அநேகர் சத்திய வேதத்தில் சேர்ந்ததைக் கண்ட அதிகாரி சினங்கொண்டு இவரையும் இவருடைய இரு துணைவர்களையும் பிடித்து சிறைப்படுத்தினான். 

இவர்கள் வேதத்தை விடும்படி பல வழியிலும் முயற்சித்தும், இவர்கள் அதற்கு இணங்காததினால் இவர்களை அவன் கொடூரமாய் அடிக்கக் கூறி, துஷ்ட மிருகங்களுக்கு இரையாய் போட்டும், அக்கினியில் எறிந்தும், அவர்களுக்கு சிறிதளவும் சேதம் ஏற்படாததைக் கண்ட அதிபதி கோப வெறிகொண்டு அவர்களை சிரச்சேதம் செய்தான். 

தியோனீசியுஸின் தலை வெட்டப்படவே, அவர் அந்த தலையை எடுத்துக் கொண்டு சற்று தூரம் நடந்து போனார்.

யோசனை 

சர்வேசுரனால் செய்யப்படும் யாதொரு அற்புதச் செய்கையைப்பற்றி நாம் கேள்விப்படும்போது, அவரை அதிகதிகமாய்த் துதித்து விசுவாசத்தில் உறுதியாயிருப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். தோமினுஸ், வே. 
அர்ச். கிவுஸ்லேயின், ம. .
அர்ச். பெர்ட்ரான்ட், து.