அக்டோபர் 08

தபசியான அர்ச். தாயீஸம்மாள் (4-ம் யுகம்) 

எஜிப்து தேசத்தில் தாயீஸ் என்னும் ஒரு ஸ்திரீ சர்வேசுரன் தனக்களித்த புத்தி சாமர்த்தியத்தையும் அழகு சௌந்தரியத்தையும் துர்ப்பிரயோகஞ் செய்து, அவலட்சணமான பாவச் சேற்றில் அமிழ்ந்து, அநேக ஆத்துமங்களை நரகத்திற்கு இரையாக்கினாள். 

இவளால் அநேக ஆத்துமங்கள் நித்தியத்திற்கும் கெட்டுப் போனதுடன் இவளுடைய துர்மாதிரிகையால் சத்திய வேதப் பரம்புதலுக்கு இடைஞ்சலுண்டானது. 

வனவாசியான அர்ச். பாபனூஸியஸ் என்பவர் இந்த நிர்ப்பாக்கிய பாவியான ஸ்திரீயின் மீது இரக்கங் கொண்டு, ஒரு நாள் வேஷம் மாற்றிக்கொண்டு தாயீஸ் வீட்டுக்குச் சென்று அவளை நோக்கி, நான் உன்னோடு இரகசியம் பேசவேண்டியிருப்பதால் ஒருவரும் இல்லாத ஒரு தனி அறைக்குள் என்னுடன் வர வேண்டுமென்றார். 

பாவக் கருத்தோடு அவர் இப்படி பேசுகிறார் என்று நினைத்த தாயீஸ் இங்கு ஒருவருமில்லை, பயப்படாதேயுமென்றாள். அதற்கு வனவாசி சர்வேசுரனைப் பற்றியும் பாவத்தைப்பற்றியும், தீர்வை, நரகாக்கினை முதலியவை பற்றியும் எவ்வளவு திறமையுடன் பேசினாரெனில் அவள் உடனே மனந்திரும்பினாள். 

அன்றே இவள் அது வரையில் பாவத்தால் சம்பாதித்த ஆடையாபரணம், தட்டுமுட்டு முதலியவைகளை நெருப்புக்கு இரையாக்கி, தன் துர்மாதிரிகைக்காக அவ்வூராரிடம் மன்னிப்புக் கேட்டு, வனவாசி குறித்த கன்னியர் மடம் போய்ச் சேர்ந்து, அதிலுள்ள ஒரு சிற்றறைக்குள் செல்லவே அது பூட்டி முத்திரையிடப்பட்டது. 

ஒரு துவாரத்தின் வழியாய்த் தனக்கு கொடுக்கப்படும் சொற்ப உணவை உண்டு , கடுந் தபம் புரிந்து, தேவ ஏவுதலின் பேரில் மூன்றாம் வருடம் அவள் அடைபட்டிருந்த அறையை விட்டு வெளிப்பட்டு, மற்ற கன்னியாஸ்திரீகளுடன் சஞ்சரித்து, ஜெபத்திலும் புண்ணியத்திலும் ஈடுபட்டு, சிற்றறையினின்று வெளிப்பட்ட 15-ம் நாள் புண்ணியவதியாய் மரணமடைந்தாள்.

யோசனை

நாம் இதுவரையிலும் செய்த கணக்கற்ற பாவ அக்கிரமங்களுக்கும் காட்டிய துர்மாதிரிகைகளுக்கும் என்ன தவஞ் செய்தோமென்று யோசித்துப் பார்ப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். ப்ரிட்ஜெட், வி.
அர்ச். பெலாஜியா, தவ.