ஜுலை 01

அர்ச். தேயபால்ட் - துதியர் (கி.பி. 1066) 

பிரபு குலத்தாரான தேயபால்ட் பக்தியுள்ள தம் தாயாரால் புண்ணிய வழியில் வளர்க்கப்பட்டு கல்வி சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தார். 

இவர் சுகபோகமுள்ள இராஜ அரண்மனையில் வளர்ந்த போதிலும் அங்கு நிலவிய பாவச்சோதனை வலையில் அகப்படாமல் பரிசுத்தராய் ஜீவித்து, வனவாசிகளுடைய சரித்திரங்களை அடிக்கடி வாசித்து அவர்களைப் பின்செல்ல வெகு ஆசை கொண்டார். 

இல்லற வாழ்க்கையை வெறுத்து வேறொரு துரை மகனுடன் வீட்டை விட்டு ஓடிப்போய் வனவாசஞ் செய்து ஜெபத்தில் காலத்தைக் கழித்தார். இருவரும் பசியால் வருந்தும்போது கூலி வேலை செய்து தங்கள் பசியை ஆற்றிக்கொள்வார்கள். கூடை, பாய் முதலியவைகளை முடைந்து, அவைகளை விற்பனைச் செய்து காலத்தை கடத்தினார்கள். 

இவர்களுடைய புண்ணியத்தைக் கண்டவர்கள் அவர்களை உயர்வாக எண்ணியதினால் அவ்விடத்தை விட்டு திருத்தலங்களை சந்திக்கப் புறப்பட்டார்கள். ஓரிடத்தில் தேயபால்ட் தன் தகப்பனைக் கண்டு பாசத்தினால் கவரப்பட்டும் தன்னைக் காட்டிக்கொள்ளவில்லை. 

தன்னோடு இருந்தவர் இறந்தபடியால், தேயபால்ட் மாத்திரம் ஒரு காட்டில் தபஞ் செய்துகொண்டு வந்தார். தமது மேற்றிராணியாருடைய உத்தரவுப்படி இவர் குருப்பட்டம் பெற்றார். சகலராலும் பக்தியாய் மதிக்கப்பட்டு, தபஞ் செய்யும் வனவாசி தங்கள் குமாரனென்று அறிந்த அவருடைய பெற்றோர் அவ்விடஞ் சென்று அவரோடு வசித்தார்கள். 

இவருக்கு வியாதி கண்டு கடைசி தேவதிரவிய அநுமானங்களைப் பெற்று அவர் ஏற்கனவே குறிப்பிட்ட நாளில் அர்ச்சியசிஷ்டவராகக் காலஞ்சென்றார்.

யோசனை 

உலக காரியங்களில் நாட்டமற்றவர்கள் மரண நேரத்தில் மன சமாதானத்துடன் உயிர் விடுவார்கள்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். ரும்போல்ட், மே.வே. 
அர்ச். ஜூலியஸும் துணை. வே.
அர்ச். கால், மே. 
அர்ச். கலேய்ஸ், ம.
அர்ச். லெயோநோருஸ், மே
அர்ச். சிமியோன், து. 
அர்ச். தியெர்ரி, ம.