ஜுன் 30

அர்ச். சின்னப்பர். அப்போஸ்தலர் 

அர்ச்.சின்னப்பர் என்று வழங்கப்படும் பவுல் என்பவர் பெஞ்சமின் கோத்திரத்திலிருந்து பிறந்து பழைய ஏற்பாட்டின் சட்ட ஆசாரங்களைத் தீர்க்கமாய் கற்றறிந்து, அவைகளை வைராக்கியத்துடன் அனுசரித்து கிறீஸ்தவ வேதத்திற்கு பிராண சத்துருவாகி கிறீஸ்தவர்களை வாதித்துக் கொல்ல சர்வ பிரயாசையும் பட்டு வந்தார்.

ஆகவே கிறிஸ்தவர்களைப் பிடிக்கும்படி தமாஸ்கு நகருக்குச் செல்லுகையில், அற்புதமாய் மனந்திரும்பி தாழ்ச்சியினிமித்தம் பவுல் என்னும் தமது முன் பெயரை, பவுல் அல்லது சின்னப்பன் என்பதாக மாற்றிக்கொண்டு சத்தியவேதம் பரவும்படி முயற்சித்தார்.

இதற்காக இவர் ஊர் ஊராய்ப் பிரயாணஞ் செய்து கடலைக் கடந்துபோய் வேதம் போதித்தார். இந்த அப்போஸ்தலர் கிறீஸ்தவ வேதத்தினிமித்தம் சிறையில் அடைக்கப்பட்டு நிஷ்டூரமாய் அடிபட்டு கல்லாலெறியப்பட்டார்.

அவர் கப்பலேறி பிரயாணஞ் செய்தபோது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு ஒரு தடவை ஒரு பகலும் இரவும் கடலில் அமிழ்ந்திருந்தார். இவர் அநேக முறை கல், முள் நிறைந்த பாதைகளில் நடந்து, கள்வரால் தாக்கப்பட்டு பசி தாகத்திற்குள்ளாகி, ஒரே வார்த்தையில் இவர், சேசுநாதர் சுவாமியினிமித்தம் சகலவித நிந்தை அவமானம், வறுமை, சிறுமை முதலிய கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தார்.

இவருடைய பிரசங்கத்தால் அநேகர் சத்திய வேதத்தில் சேர்ந்தார்கள். பவுலுடைய பக்தியுள்ள ஜெபத்தாலுண்டான புதுமைகள் அநேகம். இவர் அநேக பிரயாணங்கள் செய்து, வேதம் போதித்து, புத்தமதி நிறைந்த 14 நிருபங்களை எழுதி வைத்தார்.

இவர் தேவ சிநேகத்தால் தூண்டப்பட்டு ஆத்தும் இரட்சண்யத் திற்காக பிரயாசையுடன் உழைக்கும்போது இராயனுடைய உத்தரவுப்படி பிடிபட்டு, உரோமையில் இராயப்பர் வேதசாட்சியான அதே நாளில் தலை வெட்டுண்டு வேதசாட்சி முடி பெற்றார்.

யோசனை 

நாம் பாவ வழியை விட்டு விலகுவது மாத்திரம் போதாது. ஆனால் புண்ணிய வழியில் சுறுசுறுப்புடன் நடக்கவும் வேண்டும்

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். மார்சியல், மே.