ஜுலை 02

அர்ச். தேவமாதா அர்ச். எலிசபெத்தம்மாளை மினவிய திருநாள்


கபிரியேல் சம்மனசானவர் அர்ச். கன்னிமரியம்மாளுக்கு மங்கள வார்த் தைக் கூறினபோது தேவமாதா தமது உறவினளான எலிசபெத்தம்மாள் கர்ப்பிணியாயிருந்ததை சம்மனசு மூலமாக அறிந்து கொண்டார்கள். 

மேலும் தன் வயிற்றிலிருக்கும் உலக இரட்சகருக்கு எலிசபெத்தம்மாளின் குமாரனான ஸ்நாபக அருளப்பர் முன்னோடியாயிருப்பதை அற்புதமாய் அறிந்து, தேவமாதா எலிசபெத்தம்மாளுக்குத் தன்னால் கூடிய உதவி செய்யும்படி அவளிருந்த ஊருக்குப் பிரயாணம் செய்தார்கள். 

தன் வீட்டிற்கு வந்து சேர்ந்த கன்னி மரியம்மாளை எலிசபெத்தம்மாள் கண்டவுடனே, இஸ்பிரீத்துசாந்துவினால் நிறைந்தவளாய் மரியம்மாளின் வயிற்றிலிருக்கும் திருக்குழந்தை உலக இரட்சகரென்று அறிந்து அவர்களை மினவி வணங்கி, பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே! உமது திருவயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே. என் ஆண்டவளுடைய தாயார் என்னிடம் வர எனக்குப் பாக்கியம் கிடைத்ததெப்படி? என்றாள். 

இதை தேவமாதா கேட்கவே, என் ஆத்துமமானது என் ஆண்டவரை வணங்கி தோத்திரம் பண்ணுகிறது என்னும் கீர்த்தனையை உச்சரித்தார்கள். 

மேலும் அக்கணமே எலிசபெத்தம்மாள் வயிற்றிலிருந்த குழந்தை சந்தோஷத்தால் துள்ளியது. இதற்குப்பின் தேவமாதா எலிசபெத் அம்மாள் வீட்டில் சில காலம் தங்கி அவளுக்குத் தன்னால் கூடிய உதவி புரிந்த பின் நசரேத்துக்குப் புறப்பட்டார்கள்.

யோசனை

நாம் ஒருவரையொருவர் சந்தித்து உரையாடும்போது எத்தனையோ தடவை நமது உரையாடல் பிறர் சிநேகமற்றதும் ஒழுங்கீனமுமாயிருக்கின்றது. இவ்விஷயத்தில் இனி எச்சரிக்கையாக இருப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ப்ரோசெஸ்ஸும் துணை., வே.
அர்ச். ஒத்தோ , மே.
அர்ச். மொனெகொண்டெஸ், வ.
அர்ச். யதோசெயுஸ், மே.