பாலன் தூயவரிடம் தவழ்தல்

அந்தோனியாரின் நண்பர்களில் ஒருவர் டீஸோ, அவர் புனிதருக்கும் அவ்வப்போது பல உதவிகள் செய்வதுண்டு. ஒரு நாள் அவர் அந்தோனி யாரை தனது மாளிகைக்கு வருமாறு அன்புடன் அழைத்தார். புனிதரும் சென்றார்.

இரவில் அவர் இருந்த அறையிலிருந்து பேரொலி கிளம்புவதைக் கண்ட டீஸோ, காரணம் என்ன வென்றறிய ஆசைப்பட்டு, சாவித் துவாரத்தின் வழியாய் உற்று நோக்கினார்.

அறையினுள் இருந்த மேசையின் மேல் விரிக்கப்பட்ட வேதாகமம் இருந்தது. அதன் மீது சுடர் ஒளி வீசும் தேவபாலன் நிற்பதைக் கண்டார்.

பாலனின் சிறு விரல்கள் அந்தோனியாரை அரவணைத்திருந்தன. அவரும் பாலனை தழுவிப் பேரானந்த நிலையிலிருந்தார்.

டீஸோ மோட்சத்தை தன் வீட்டிலேயே கண்டது போல் உணர்ந்தான்.

அவன் இதயம் அக்களிப்பால் துள்ளியது.

தேவபாலன் தன் விரலால் கதவுப் பக்கம் சுட்டிக் காட்டினார். தான் பார்ப்பதை அவருக்கு உணர்த்தவே அவ்வாறு செய்தார் என அறிவித்தார். விரைவில் மாட்சிமிகும் காட்சி மறைந்தது.

அந்தோனியார் அறையிலிருந்து வெளியே வந்து நண்பனைத் தழுவி "நான் உயிருடன் இருப்பது வரை எவருக்கும் சொல்லக்கூடாது" என அவரை வேண்டிக் கொண்டார். அவரும் அவர் இறந்த பின்னரே இந்த அற்புதத்தைப் பற்றி வெளியிட்டார்.

அந்தோனியாருக்குத் தொண்டு செய்ததால் அல்லவா தனக்கு அவ்வரிய காட்சி கிடைத்தது என நினைத்து அவர் மீது மேலும் அதிக அன்பும், பற்றுதலும் கொண்டு நல்வாழ்வு நடத்தினார்.

வீமேஜ் நகர மண்டல மேலாளர்

1226ம் ஆண்டு முதல் 1227 தூய ஆவியானவரின் திருநாள் வரை லிமேஜ் பட்டணம் அவரது திருத்தொண்டால் பொலிவுற்றது. இரு பெரும் மாளிகைகள் இங்கு இருந்தன. அவை இரண்டையும் அடுத்து இரு பேராலயங்கள் இருந்தன. தூய இராயப்பரால் அனுப்பப் பட்ட இயேசுபிரானின் 72 சீடரில் ஒருவரான தூய மார்த்தாள் ஆலயம் இதிலொன்று; இன்னொன்று தூய எத்தீன் ஆலயம். பிரான்சிஸ்கன் துறவிகள் 1223ல் இப்பட்டணம் வந்தனர். இவர்கள் தூய மார்த்தாளின் ஆலயப் பொறுப்பினை வகித்த ஆசீர்வாதப்பர் சபையினர் அளித்த வீடொன்றில் வாழ்ந்தனர். அந்தோனியார் அப்போது மண்டல மேலாளராக நியமனம் பெற்றிருந்தார். இங்கு தம் உடன் துறவிகளுடன் வாழ்ந்து பல கோவில்களுக்கு சென்று திருவுரையும் ஆற்றினார்.