"மரியாள் உற்பவித்த முதல் கணத்தில் இருந்தே, தொடக்கப் பாவத்தின் கறையில் இருந்தும் மற்ற அனைத்து பாவங்களில் இருந்தும் முழுமையாக பாதுகாக்கப்பட்டு, தம் வாழ்நாள் முழுவதும் தூயவராகத் திகழ்ந்தார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 508) "மீட்புத் திட்டத்தில் தம்மால் முன்பே தேர்ந்து கொள்ளப்பட்டவரான மரியாள், தம் மகனின் சாயலுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டுமென கடவுள் இவ்வாறு முன்குறித்து வைத்தார்." (உரோமையர் 8:29) எனவே, "தம் உடலில் நிகழ்ந்த மறை நிகழ்ச்சிகள் வாயிலாக மனிதரைப் பாவத்தினின்று மீட்க வந்த இறைமகன் இயேசு, மரியாளிடம் இருந்து மனித இயல்பை எடுத்துக் கொண்டார்." (திருச்சபை எண்.55)
"மரியாளின் கன்னிமையே கடவுளின் மனித உடலேற்புக்கு உண்மையான தொடக்கமாக அமைந்தது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 503) இறைத் தந்தையின் திட்டத்துக்கு "ஆம்" என பதில் அளித்ததால், இறைமகன் இயேசுவை பரிசுத்த ஆவியின் வல்லமையால் கருத்தாங்கும் பேறுபெற்றவர் மரியாள். "தம் முழு இதயத்தோடு கடவுளின் மீட்புத் திருவுளத்தை ஏற்று, தம் மகனுக்கும் அவரது அலுவலுக்கும் தம்மையே ஆண்டவரின் அடிமையாக மரியாள் முற்றிலும் கையளித்தார். இவ்வாறு எல்லாம் வல்ல கடவுளின் கையில் செயலற்ற ஒரு கருவியாக அல்லாமல், நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் மனித இனத்தின் நிறைவாழ்வுக்குத் தன்னுரிமையுடன் ஒத்துழைத்தவர் மரியாள்." (திருச்சபை எண்.55)"
ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் அனைவரும் பாவிகளானது போல், ஒருவரின் கீழ்ப்படிதலால் அனைவரும் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்." (உரோமையர் 5:19) முதல் ஏவாளின் கீழ்ப்படியாமையால், மண்ணிலிருந்து வந்த முதல் ஆதாம் மனிதகுலத்தின் அருளை இழக்கச் செய்தார். புதிய ஏவாளான மரியாளின் கீழ்ப்படிதலால், விண்ணிலிருந்து வந்த புதிய ஆதாமான இயேசு மனிதகுலம் இழந்த அருளைப் பெற்றுத்தந்தார். இவ்வாறு, இறைவனின் மீட்பு அலுவலில் மரியாள் ஓர் இன்றியமையாத பகுதியாக ஆகிவிட்டார். இறைத்திட்டத்தில் உயிரோட்டமான சிறப்புமிக்க இடத்தை மரியாள் பெற்றிருப்பதால், கடவுளின் மகிமையும் பெருகுகின்றது." (மரியாளின் சேனை கைநூல் அதி. 5/1) எனவே, மரியாள் மனிதகுலத்தின் வணக்கத்திற்கு தகுதியானவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠