பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்!" (மத்தேயு 11:28) என்று இயேசு அழைக்கும்போது, மரியாளிடம் செல்வது ஏன்?

பரிந்துரை மரியாள்

"நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் இயேசு நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம்." (உரோமையர் 5:10) நம்மை இறைத்தந்தையோடு ஒப்புரவாக்கி நமது மீட்புக்கு காரணமான தலைமைக் குரு இயேசுவின் தாயாகுமாறு, விண்ணக அழைப்பு (எபிரேயர் 3:1) பெற்றவர் கன்னி மரியாள். இவ்வாறு, "மரியாளின் மூலமாக மாட்சி பெறத் திருவுளம் கொண்ட நித்திய தந்தை, அவர் மூலமாக எல்லையற்ற வரங்களை நம்மீது பொழியவும் விருப்பம் கொண்டார். மரியாள் வழியாக இறைத்தந்தை நமக்குத் தந்த கொடைகளுள் மிகச்சிறந்த நற்கொடை நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே!" (மரியாளின் சேனை கைநூல் அதி. 5/1) இயேசுவை மனிதகுலத்துக்கு கொடையாக அளித்தவர் மரியாள் என்பதால், மரியாளை நாடும் அனைவரும் இயேசுவைக் கண்டடைகின்றனர்.
"'கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்குமிடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்' (1திமோத்தேயு 2:5-6) என்ற திருத்தூதரின் கூற்றுக்கேற்ப, நம் இணைப்பாளர் ஒருவரே. இறைமகன் இயேசுவின் இந்த இணைப்பாளர் பணி தன்னிகரற்றது. எனவே மரியாளின் பரிந்துரைக்கும் பணியால், கிறிஸ்துவின் இணைப்பாளர் பணி சற்றேனும் மறைவதுமில்லை, குறைவதுமில்லை. மாறாக, அதன் ஆறறல் இதன் வழியாக வெளிப்படு கிறது. ஏனெனில், பரிசுத்த கன்னி கொண்டுள்ள நிறைவாழ்வளிக்கும் செல்வாக்கு அனைத்தும் கிறிஸ்துவினுடைய பேறுபலன்களின் நிறைவுப் பெருக்கத்தினின்றே வழிகின்றது; அவரது இணைப்பாளர் பணியையே அடித்தளமாகக் கொண்டுள்ளது; அப்பணியை முற்றிலும் சார்ந்ததாய் இருக்கின்றது; அதிலிருந்தே தன் ஆற்றல் அனைத்தையும் பெறுகின்றது." (திருச்சபை எண். 60)

மரி லத்தாஸ்ட் (1822-1847) என்ற கன்னிக்கு காட்சி அளித்த நம் ஆண்டவர் இயேசு, "கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளராக நான் இருக்கிறதைப் போன்று, எனக்கும் உங்களுக்கும் இடையிலான இணைப்பாளராக கன்னி மரியாளை நியமித்திருக்கிறேன். ஆகவே, உங்களுக்கு நான் கொடுக்கிற அருள்வரங்களை இறையன்னை வழியாக மட்டுமே பெற முடியும். உங்களுக்கு வேண்டிய அனைத்தையும், என் திவ்விய தாயின் பரிந்துரை மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அவர் ஆசி வழங்குபவர்களுக்கு நானும் ஆசி வழங்குவேன்" என்று கூறியுள்ளார். எனவே, நமது சுமைகளை அன்னை மரியாளிடம் இறக்கி வைக்கும் போது, இறைமகன் இயேசுவின் ஆறுதலை நாம் கண்டடைய முடியும். இறைவனின் திட்டத்தில் மரியாள் முக்கியமானவராகத் திகழ்வதை நாம் இதன் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.