"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை" (யோவான் 3:13) என்ற இயேசுவின் கூற்றே இந்த சந்தேகத்துக்கு அடிப்படையாக அமைகின்றது. ஆனால் விண்ணகத்திற்கு ஏறிச்செல்வதும், விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதும் வெவ்வேறானவை என்பதைப் புரிந்துகொண்டால் இதற்கு தீர்வு கிடைத்துவிடும். ஏனோக்கின் விண்ணேற்பு பற்றி விவிலியம் பின்வருமாறு கூறுகிறது: 'ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்.' (தொடக்க நூல் 5:24) இறைவாக்கினர் எசாயாவின் விண்ணேற்பை விவரிக்கும் வார்த்தைகள் இவை: 'இதோ! நெருப்புத் தேரும் நெருப்புக் குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களைப் பிரித்தன. எலியா சுழற்காற்றில் விண்ணகத்திற்குச் சென்றார்.' (2 அரசர்கள் 2:11)
கடவுளோடு நடந்த ஏனோக்கும், கடவுளின் வாக்கை அறிவித்த எலியாவும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது உண்மை என்கிறபோது, மனிதராய் தோன்றிய இறைமகன் இயேசுவைப் பெற்றெடுத்த அன்னை மரியாள் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பதும் சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மையே என்பது தெளிவாகிறது. "அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்" (1 கொரிந்தியர் 15:53) என்ற வார்த்தைகளுக்கு ஏற்பவே மரியாளின் விண்ணேற்பு நிகழ்ந்தது. "ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது" (மத்தேயு 5:37) என்று வாக்களித்த இயேசு, 'தம் அன்னையின் தாழ்நிலையைக் கண்ணோக்கி, எல்லாத் தலைமுறையினரும் அவரைப் பேறு பெற்றவர் எனப் போற்றும் வகையில் அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.' (லூக்கா 1:48-49)
"மாசற்ற கன்னி மரியாள், ஆதிப் பாவக்கறை எதுவுமின்றி பாதுகாக்கப்பட்டு, இறுதியாக தம் மண்ணுலக வாழ்வு நிறைவுற்றதும், உடலோடும் ஆன்மாவோடும் விண்ணுலக மாட்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். மேலும் அனைத்துக்கும் அரசியாகவும் ஆண்டவரால் உயர்த்தப்பட்டார். இவ்வாறு ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவரும், பாவம் மற்றும் சாவின் மீது வெற்றி கண்டவருமான தம் மகனுக்கு இன்னும் முழுமையாக ஒத்தவரானார். புனித கன்னியின் விண்ணேற்பு அவரது மகனின் உயிர்ப்பில் தனிப்பட்ட பங்கேற்பாகவும் மற்ற கிறிஸ்தவர்களின் உயிர்ப்புக்கு முன்னடையாளமாகவும் இருக்கிறது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக் கல்வி எண். 966) "வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்" (திருவெளிப்பாடு 12:1) என்னும் வார்த்தைகள் அன்னை மரியாளின் விண்ணக மாட்சியை உறுதி செய்கின்றன.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠