யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?" (மாற்கு 6:3) என்று நாசரேத் ஊர்க்காரர்கள் கூறியது மரியாளின் மற்றப் பிள்ளைகளைப் பற்றிதானே?

"தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப, அவரது போதனைகளையும், வல்ல செயல்களையும் கண்டாலும் நாசரேத்தூர் மக்கள், அவரை இறை மனிதராக ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். எனவே அவர்கள், "இவர் தச்சர் அல்லவா! மரியாளின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?" (மாற்கு 6:3) என்று கேள்வி எழுப்பினார்கள். இதனால் இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதரர்களும், சகோதரிகளும் இருந்தார்கள் என்ற முடிவுக்கு நாம் வர முடியாது. ஏனெனில் யூத வழக்கத்தின்படி, நெருங்கிய உறவினர்களும், அவர்களது பிள்ளைகளும் சகோதரர், சகோதரி என்றே அழைக்கப்படுகின்றனர்.

இதற்கு ஆதாரமாக விவிலியத்தில் இருந்து நாம் சில சான்றுகளைக் காட்ட முடியும். ஆபிரகாம் தமது தம்பி மகனான லோத்திடம், "நாம் சகோதரர்*" (தொடக்கநூல் 13:8) என்று கூறுவதைக் காண்கிறோம். லாபான் தமது மருமகனான யாக்கோபை நோக்கி, "நீ என் சகோதரன்* என்பதற்காக ஒன்றும் வாங்காமல் எனக்கு வேலை செய்யலாமா?" (தொடக்கநூல் 29:15) என்று கேட்பதைக் காண்கிறோம். நற்செய்திகளில் சுட்டிக்காட்டப்படும் யாக்கோபு, யோசே, யூதா, சீமான் போன்றவர்களும் இயேசுவுக்கு இத்தகைய உறவுமுறை சகோதரர்களே. மேலும், இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதரிகள் யாரும் இல்லை என்பதும் தெளிவு. ஏனெனில் மரியாளும் யோசேப்பும் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றபோது, பன்னிரண்டு வயது சிறுவனான இயேசுவுடன் சகோதர, சகோதரிகள் யாரும் உடன் சென்றதாக கூறப்படவில்லை. (லூக்கா 2:41-52)

இயேசுவின் சகோதரர்களாக கருதப்படும் யாக்கோபு, யோசே ஆகியோர் மரியாள் என்ற பெயர் கொண்ட மற்றொரு தாயின் பிள்ளைகள். அவரை 'இயேசுவின் தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாள்' (யோவான் 19:25) என நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். 'அவர்களுள் மகதலா மரியாளும் யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாளும், சலோமி என்பவரும் இருந்தனர்.' (மாற்கு 15:40) இறுதியாக, இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதரர்களோ, சகோதரிகளோ இருந்திருந்தால், அன்னை மரியாளை அவர் யோவானின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டிய (யோவான் 19:27) தேவை இருந்திருக்காது. எனவே, யூதா, சீமான் உள்பட இயேசுவின் சகோதர, சகோதரிகளாக நற்செய்தியில் காணப்படும் யாரும் மரியாளின் சொந்த பிள்ளைகள் இல்லை என்பது உறுதியாகிறது. ஆகவே, கடவுளின் தாயாக மட்டுமே கன்னி மரியாள் வாழ்ந்தார் என்பதும் தெளிவாகிறது.

*தமிழ் விவிலியத்தின் பொது மொழிபெயர்ப்பில், பொருள் தெளிவுக்காக 'சகோதரர்' என்பதற்கு பதிலாக 'உறவினர்' என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.