"இறைமகன் இயேசு விண்ணகத்தில் தாய் இல்லாதவராகவும், மண்ணகத்தில் தந்தை இல்லாதவராகவும் தோன்றினார்" என்பதே நமது விசுவாசம். 'இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்' (லூக்கா 2:52) என்று நற்செய்தி கூறுகிறது. மனிதர்களுக்கு பத்து கட்டளைகளை வழங்கிய கடவுள், ஆண்டவர் பேரிலுள்ள கடமை முடிந்ததும் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை குறித்து எடுத்துரைக்கிறார். "உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட" (விடுதலைப் பயணம் 20:12) என்பதே ஆண்டவர் நமக்கு வழங்கிய கட்டளை. "நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்" (மத்தேயு 16:13) என்று கூறிய இயேசு, "திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவேற்றுவதற்கே வந்தார்." (மத்தேயு 5:17) எனவே, அவர் விண்ணகத் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருந்ததுடன், தம் மண்ணகப் பெற்றோர்களுக்கும் பணிந்து நடந்தார். (லூக்கா 2:49,51)
'ஒருநாள் மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்தபோது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, "அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்" என்றார். அதற்கு இயேசு, "என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார்.' (மத்தேயு 12:46-50) இந்நிகழ்வில் இயேசு, மக்கள் அனைவரையுமே தம் சகோதரராகவும், சகோதரியாகவும், தாயாகவும் மாற அழைப்பு விடுக்கிறார். மேலும் விண்ணகத் தந்தையின் திருவுளத்துக்கு தம்மை முற்றிலும் அர்ப்பணித்து, மீட்புத் திட்டத்தில் ஒத்துழைத்த அன்னை மரியாளையும் இயேசு பெருமைப்படுத்துகிறார்.
"கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" (லூக்கா 9:62) என்ற தம் வார்த்தைகளுக்கு ஏற்ப, இயேசு இங்கு குடும்ப உறவுகளை விலக்கி வைப்பதை காண்கிறோம். இதில் மரியாளை அவமானப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். "என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர்" (மத்தேயு 10:37) என்ற தமது போதனைக்கு உயிரூட்டம் கொடுக்கும் வகையில், தாம் இறைத் தந்தைக்கு உரியவர் என்பதை இயேசு இங்கு தெளிவுபடுத்துகிறார். அதே வேளையில், உலக மீட்புக்காக இறைத்தந்தையின் திருவுளத்துக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்து, வார்த்தையான இறைமகனுக்கு மனித உடல் கொடுத்த கன்னி மரியாளின் மேன்மையையும் இயேசு புகழ்ந்துரைக்கின்றார்.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠