பாவம் என்றால் என்ன? மனம் செய்யக் கூடாது என்பதை புத்தி செய்வதும். மனம் செய் என்று சொல்வதை புத்தி செய்யாமல் விடுவதே பாவம். ஏனென்றால் நிறைய பேருக்கு மனம் நன்றாகத்தான் இருக்கிறது. உடல் இச்சைக்கு அடிமையாகி மனம் சொல்வதை கேட்காமல் புத்தி சொல்வதை கேட்க ஆரம்பித்து விடுகிறது. அதன்பின் மனமும் மனசாட்சியும் ஊமைகளாகி விடுகின்றன,
பாவம் செய்த கதையும் “ நாயை அடிப்பானே ... அதை சுமப்பானே.. கதைதான். ஏன் பாவம் செய்ய வேண்டும் ?? ஏன் அதற்குண்டான தண்டனையை பெற வேண்டும்??? அதற்கு பாவம் செய்யாமல் இருப்பது எவ்வளவோ தேவலை.
மனிதர்களாக பிறந்த நாம், கிறிஸ்தவர்களாக பிறந்த நாம், அதுவும் கத்தொலிக்க கிறிஸ்தவர்களாக பிறந்த நாம், ஞானஸ்தானம் பெற்ற நாம், நற்கருணை ஆண்டவரை உட்கொள்ளும் நாம், உறுதி பூசுதல் பெற்ற நாம் பாவம் செய்கிறோம். அதுவும் மீண்டும் மீண்டும் பாவம் செய்கிறோம். பலர் தாங்கள் பாவம் செய்கிறோம் என்ற ஒரு சிறு உருத்தல் கூட இல்லாமல் பாவம் செய்கிறார்கள்.
நாம் பாவிகள்... பலவீனர்கள்... ஆனால் அதற்காக பாவத்திலே இருக்க முடியுமா? அதை விட்டு விட்டு எழுந்திருக்க வேண்டாமா? அதை விட்டு நிரந்தரமாக பிரிய வேண்டாமா? அதற்கான முயற்சிகளிலாவது இறங்க வேண்டாமா? அதற்காகத்தானே இந்த தவக்காலம். நாம் நம் உடலை ஒறுத்து தவம் செய்து நம்மை மாற்றிக்கத்தானே தவமுயற்சிகள் செய்கிறோம்...
நம் அனைவரையும் பார்த்து ஒரு அவலக்குரல் அழைக்கிறது, ஏக்கக்குரல் அழைக்கிறது, ஒரு ஏமாந்த குரல் அழைக்கிறது. “ உனக்காகத்தானே கசையால் அடிக்கப்பட்டேன், உனக்காகத்தானே முள்முடி சூட்டப்பட்டேன். உனக்காகத்தானே சிலுவை சுமந்தேன். உனக்காகத்தானே காயப்பட்டேன். கல்வாரி மலையில் அறையப்பட்டேன்.
உனக்காகத்தானே என் உயிரையும் விட்டேன்.
என்னை ஒரு மருந்துக்கு கூட திரும்பி பார்க்கமாட்டாயா என்று ஏங்குகிறது.
நாமோ நாமெல்லாருமே சொல்லும் ஒரே வார்த்தை “ தலைவா உன்னை நினைக்க எங்களுக்கு நேரமில்லை. நாங்கள் ரொம்ப பிஸி. எங்களுக்கு பல சொந்த வேலைகள் இருக்கின்றன. சுயநல வேலைகள் இருக்கின்றன. விளம்பர இடைவெளியில் கூட உம்மை நாங்கள் நினைக்கமாட்டோம் அப்போதும் நாங்கள் Full Engaged ஆகத்தான் இருப்போம் “.
அப்போ இந்த கல்வாரி அரசனின் ஏக்கக்குரல் அவ்வளவுதானா ?
நாம் இப்போது நம் ஆண்டவரும் கடவுளுமான… நமக்காக கல்வாரியில் பலியான இயேசு சுவாமியை நினைக்க… அவர் பாடுகளை தியானிக்க.. நேரமில்லை…என்று சொன்னால்.. அவருக்கும் ஒரு காலம் வரும்.. அவரும் சொல்வார்..
“ உன்னை எனக்கு தெறியாது “ – ஆனால் அந்த நாள் நமக்கு மிகவும் கடினமான நாளாக இருக்கும்.. அந்த நாளை நம்மால் எதிர்கொள்ள முடியாது..
ஆகையால் இப்போதே அவர் பாதத்தில் விழுவோம்… அந்த கல்வாரி ஆண்டவரின் திருஇரத்தத்தால் கழுவப்படுவோம்… அந்த ஊதாரி மைந்தனைப்போல் நாமும் சொல்வோம்..
“ எழுந்து என் தந்தையிடம் செல்வேன்.. நான் என் கதை முழுதும் எடுத்துச் சொல்வேன்.. பாவத்தை முழுதும் அறிக்கையிடுவேன்..”
பாவங்கள் கழுவப்பட்ட பரிசுத்த உள்ளத்தோடு எப்போதும் ஆண்டவர் இயேசு சுவாமியை விட்டு ஒரு நொடி கூட பிரியாமல் .. அவரோடு இனைந்து அவர் கரம் பற்றி நடக்க இத்தவக்காலத்தை பயன்படுத்துவோம்….
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠