தவக்கால சிந்தனைகள் 9 ***

நம் அரசரின் சிரசில் முள்முடி..

திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி நன்றியரிந்த தோத்திரம் செய்கிறோம்...

அகிலத்தைப் படைத்த ஆண்டவரின் சிரசில் முள்முடி..

மூவுலகையும் ஆளும் ராஜாவின் சிரசில் முள்முடி..

பொற்கிறீடம் சூட்டப்படவேண்டிய சிரசில் முள்முடி..

நம்மைத் தீர்ப்பிடும் நீதியரசரின் சிரசில் முள்முடி...

பாவிகளாகிய நம் தலையில் அல்லவா இருக்க வேண்டும் இந்த முள்முடி..

நன்றியற்ற நம் தலையில் அல்லவா இருக்க வேண்டும் முள்முடி..

தீமை செய்ய யோசிக்கும் நம் தலையில் அல்லவா இருக்க வேண்டும் முள்முடி..

மற்றவரை பழிவாங்க திட்டம் போடும் நம் தலையில் அல்லவா இருக்க வேண்டும் முள்முடி..

மற்றவரை பிரிக்க, கேடு செய்ய யோசிக்கும் நம் தலையில் அல்லவா இருக்க வேண்டும் முள்முடி..

பாவமான செயல்களுக்காக திட்டமிடும் நம் தலையில் அல்லவா இருக்க வேண்டும் முள்முடி..

கண்ணியமில்லாத சிந்தனைகளை சிந்திக்கும் நம் தலையில் அல்லவா இருக்கவேண்டும் முள்முடி..

நம் அரசர்.. நம் கடவுள் ஏன் முள்முடி தரித்தார்.. நமக்காக நம் பாவங்களுக்காக.. பாவசிந்தனை, பாவ செயல்கள் உற்பத்தியாகி நம்மை பாவத்தில் தள்ளி ஆண்டவர் மனதை நோகச்செய்த குற்றத்திற்காக நம் தெய்வம் பரிகாரம் செய்கிறார்.  நம்மால் செய்யப்படவேண்டிய பரிகாரத்தை அவர் செய்கிறார்..

கொடியவர்கள் நம் மாசில்லாத தலைவரின் சிரசில், தேவ ஞானத்தை உடைய தேவன் சிரசில், தூய்மையான எண்ணங்கள் உற்பத்தியாகும் உன்னதரின் சிரசில்.. தங்களின் கோப வெறிகொண்டு  மிகுந்த வேதனைத் தரும் கூறிய முட்களை உடைய செடியை அப்படியே பிடுங்கி சிறிது பிண்ணி நம் தலைவரின் தலையில் வைத்து அதை ஒரு தடியால் அடிக்கிறார்கள். அந்தக் காயத்தால் மென்மையான சிரசை முட்கள் கிழிக்க தலையிலும் இரத்தம் கொட்டுகிறது.

பலியிடப்போகும் செம்மறி கூட தன்னைக் கொல்பவர்களைப் பார்த்து கத்தும் ஆனால் இந்த மாசில்லாத செம்மறி தன்னை எத்தகைய வேதனைக்கும், உபாதைகளுக்கும், வேதனைக்கும் உட்படுத்தினாலும் சிறிதும் எதிர்ப்பின்றி அத்தனைக்கும் ஒத்துழைக்கிறார். இவரல்லோ உண்மைத் தேவன்.. தேவாதி தேவன்..

விண்ணகம் இருந்து மண்ணகம் இறங்கிய பரிசுத்த உணவு இப்படியா வதைக்கப்பட வேண்டும்.. வார்த்தை மனுவுருவாகி நம்மிடையே குடிகொண்ட குற்றத்திற்காக இப்படியா தண்டனை பெறவேண்டும்..

தவறும், குற்றமும் நாம் புரிந்தோம்... பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம். பாவம் நம்மிடையே இருக்க அதற்கான பழிக்காக நம் ஆண்டவர் பழி வாங்கப்படுகிறார். அவர் அத்தனை வேதனைகளையும் தன்னகத்தே தாங்கி நிற்கிறார். ஆனால் நாம் தலையால் செய்த பாவதிற்காக ஒரு தலைவவலியைக் கூட நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். என்னே முரன்பாடு..

முள்முடி தாங்கிய நம் மூவொரு அரசனுக்கு நாம் கொடுக்கும் பதில் என்ன?

“ அன்பான எங்கள் பரிசுத்த அரசனே ! முதலில் நான் செய்த பாவத்திற்கு பரிகாரம்...செய்ய வேண்டும்.. அதற்கு நான் எனக்கு வரும் துன்பங்களாகிய சிலுவையை அது எத்தகையைய துன்பமாக இருந்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. அது உடல் வலியாக இருந்தாலும் சரி.. மன வலியாக இருந்தாலும் சரி.. இல்லை எப்பேர்ப்பட்ட துன்பமானாலும் சரி.. அதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. அதை சுமக்க வேண்டும்.. அதுவும் நாள்தோறும் சுமக்க வேண்டும்...அதை சுமந்து கொண்டு உம்மைப் பின் செல்ல வேண்டும்.. நான் என்னைக் உம் கல்வாரிக்கு பலிபொருளாக தயாரித்தால் எனக்கு மோட்சம் உறுதி.. எனக்கு மட்டும் அல்ல என்னைச் சார்ந்தோர்.. சாரோதோர்.. என்னைப் போன்ற எத்தனையோ பாவிகளுக்கு மோட்சம் உறுதி... என்னைப் பலிபொருளாக மாற்றும் என் நல்ல கல்வாரி நாயகனே ! எனக்காக முள்முடி தாங்கிய என் அரசனே “ - ஆமென்

எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி....எங்கள் பெயரில் தயவாயிரும்...

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !