நம் ஆண்டவரிடம் ஜெபம்

ஓ என் மிகுந்த தாழ்ச்சியுள்ள சேசுவே, தேவரீர் என் மீது வைத்த நேசத்திற்காக உம்மையே தாழ்த்தி, சிலுவை மரணம் மட்டும் கீழ்ப்படிந்திருந்தீரே. ஒரேயொரு சிறு அவமதிப்பையும் தாங்க முடியாமல் சீற்றங் கொள்ளும் அளவுக்கு மிகுந்த ஆங்காரமுள்ளவனாக என்னை நான் காணும்போது, உம் திருமுன் நிற்கவும், உமது சீடன் என்று சொல்லிக் கொள்ளவும் எப்படித் துணிவேன்? என் பாவங்களின் நிமித்தம் நரக பாதாளத்தில் தள்ளப்பட அநேக சந்தர்ப்பங்களில் தகுதியுள்ளவனாக இருந்திருக்கிற நான், உண்மையில் எப்படி ஆங்காரமுள்ளவனாய் இருக்கக் கூடும்? இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே, எனக்கு உதவி செய்து, தேவரீரைப் போல என்னை மாற்றியருளும்.

என் பேரில் வைத்த சிநேகத்திற்காக தேவரீர் எவ்வளவோ அவமானங்களையும், காயங்களையும் சுமந்தீர். நானும் உமது சிநேகத்திற்காக, எனக்கு வரும் புறக்கணிப்புகளையும், அவமானங்களையும் பொறுமையோடு தாங்கிக் கொள்வேன். ஆயினும், ஓ என் சேசுவே, என் சிந்தனைகளில் நான் எவ்வளவு ஆங்காரியாய் இருக்கிறேன் என்றும், என் வார்த்தைகளில் ஏளனமும், இகழ்ச்சியுமுள்ளவனாய் இருக்கிறேன் என்றும், என் செயல்களில், உலக மகிமையின் மீது எவ்வளவு ஆர்வமுள்ளவனாய் இருக்கிறேன் என்றும் நீர் காண்கிறீர். மெய்யான இருதயத் தாழ்ச்சியையும், என் சொந்த ஒன்றுமில்லாமையைப் பற்றிய தெளிந்த அறிவையும் எனக்குத் தந்தருளும். உம் பேரிலுள்ள சிநேகத்திற்காக, நிந்திக்கப் படுவதில் அகமகிழ்வேனாக. எனக்கு மேலாக பிறர் தெரிந்து கொள்ளப் படும்போது வன்மம் கொள்ளாதிருப்பேனாக. புகழப்படும்போது ஆங்காரத்தினால் நிரப்பப் பட தேவரீர் என்னை அனுமதியாதேயும். மாறாக, உமது பார்வையில் உயர்ந்தவனாயிருப்பதையும், சகலத்திலும் உம்மைப் பிரியப்படுத்துவதையும் மட்டுமே நான் ஆசித்துத் தேட எனக்கு அருள்வீராக. ஆமென்.