எச்சரிப்பைப் பெறும் ஆன்மாவின் கடமை

இப்படித் தனக்குள்ளே எழும்பும் குரலுக்குச் செவி கொடுப்பதே ஒவ்வொரு ஆன்மாவின் உடனடியான கடமையாகும். 

ஆன்மா மனந்திரும்பி, ஆண்டவரில் தன் முழு நம்பிக்கையையும் வைக்க வேண்டும். ஜெரேமியாஸ் தீர்க்கதரிசி கூறும் ஆண்டவரின் வார்த்தைகளை அது நினைத்துக் கொள்ள வேண்டும்:

"ஆண்டவர் உரைக்கிறார். நாம் சமாதான எண்ணங்களையே எண்ணுகிறோம்.., துன்ப எண்ணங்களை அல்ல, நீங்கள் நம்மை மன்றாடித் திரும்ப வருவீர்கள். நம்மை வேண்டுவீர்கள். நாம் உங்கள் மன்றாட்டைக் கேட்டருளுவோம். நீங்கள் நம்மைத் தேடுவீர்கள். முழு இருதயத்தோடு தேடிய பின்னர் நம்மை அடைவீர்கள்” (ஜெரேமி. 29:12,13).

இவ்வாக்கியங்களில் ஆன்மா கொள்ள வேண்டிய நம்பிக்கையும், செய்ய வேண்டிய மன்றாட்டும் ஆண்டவரை முழு இருதயத்துடன் தேடி நேசிக்க வேண்டிய அன்பும் கூறப்படுகின்றன.

எச்சரிப்பைப் பெறும் ஆன்மா ஆண்டவரில் தளராத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும், அஞ்சக் கூடாது.

எச்சரிப்பைப் பெறும் ஆன்மா: இடைவிடாமல் ஆண்டவரிடம் மன்றாட வேண்டும். தாழ்ந்து பணிவுடன் ஜெபிப்பது முக்கியம்.

எச்சரிப்பைப் பெறும் ஆன்மா: ஆண்டவரைத் தேடி நேசிக்க வேண்டும். இந்த நம் அன்பைப் பெறவே அவர் எச்சரிப்பை அனுப்புகிறார்.

இவ்வாறு ஆண்டவரை நேசிப்பதையே அலுவலாக ஆன்மாக்கள் கொள்ள வேண்டும். நேசித்தல், நிந்திக்கப் பட்ட கடவுளின் அன்பிற்குப் பரிகாரத்தைப் பிறப்பிக்கும். அதுவே உண்மையான மனந்திரும்புதலாகும்.

மனுக்குலம் மனந்திரும்புவதற்குப் பரிகார ஆன்மாக்கள் மாதாவின் பரிகார பக்தி முயற்சிகளைப் பயிற்சி செய்ய வேண்டும்.

8. எச்சரிப்பின் காலத்தின் ஆன்மாக்கள் தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் இருப்பது அத்தியாவசியம்

அதாவது, சுத்திகரிப்புத் தண்டனையை ஒரு ஆன்மா தவிர்க்க வேண்டுமானால், அது எப்பொழுதும் சாவான பாவம் இல்லாமல் தேவ இஷ்டப்பிரசாத நிலைமையில் இருக்க வேண்டும். 

இஷ்டப்பிரசாத நிலையில் இருக்கும் ஆன்மா சாத்தானுக்குச் சாட்டையாயிருக்கிறது; சாத்தான் அதன் கிட்ட வர மாட்டான். ஆதலால் அந்த ஆன்மா பாது காப்பாக இருக்கிறது.

தேவ இஷ்டப்பிரசாத நிலைக்கு நாம் திரும்பி வர நாம் நல்ல பாவசங்கீர்த்தனம் - கூடுமான மட்டும் ஒரு பொதுப் பாவசங்கீர்த்தனம் செய்து கொள்ள வேண்டும். 

பொதுப் பாவசங்கீர்த்தனம் நம்மைச் சுத்திகரிக்க மிகச் சிறந்த சாதனமாயிருக்கிறது. அதன் வழியாக நம்மைச் சுத்திகரித்து எப்போதும் தயார் நிலையில் இருந்தால், நாம் எச்சரிப்பிற்கோ, தண்டனைக்கோ பயப்பட வேண்டியதில்லை.