பொதுப் பாவசங்கீர்த்தன ஆத்தும சோதனை

(தேவையானால் அனைத்துப் பாவங்களையும் எழுதி, குருவிடம் வாசித்துக் காட்டவும்)

முதல் கற்பனை

மனதறிய விசுவாச சத்தியத்தைப் பற்றி சந்தேகத்திற்கு இடங்கொடுத்தேனா? - விசுவாசத்துக்கு எதிரான எண்ணங்களை உடனே நீக்காமல் இருந்தேனா? - வேத உண்மைகளையும், புண்ணிய வாழ்க்கையையும் பற்றி அறிந்து கொள்ள முயன்றேனா? அப்படிப்பட்ட புத்திமதிகளைக் கேட்காமலும், படித்துத் தெரிந்து கொள்ளாமலும் அசட்டையாயிருந்தேனா? வேதத்தை அறிந்தால் அதன்படி நடக்க வேண்டி யிருக்கும் என்ற கபடான எண்ணத்தோடு அறிவதைத் தவிர்த்தேனா? - ஜெபித்தால் திருந்திவிடக்கூடும் என்று ஜெபத்தைக் கைவிட்டேனா? - கோவிலில் மரியாதைக் குறைவாயிருந்தேனா? பேசிச் சிரித்தேனா? - பலிபீடத்திற்கடுத்த திருப்பொருட்களைத் தேவையின்றித் தொட்டேனா? பாவசங்கீர்த்தனத்தில் சொல்லிக் கொள்ளலாம் என்று துணிந்து துரோகம் செய்தேனா? - சாவான பாவத்தில் விழுந்து விட்டபின் உத்தம மனஸ்தாபத்தால் உடனே மனந்திரும்பி பாவசங்கீர்த்தனம் செய்து இழந்த தேவ இஷ்டப்பிரசாதத்தை அடைந்து கொள்வதில் காலதாமதம் செய்தேனா? - சர்வேசுரனை நம்பாமல் மனிதர் மேல் நம்பிக்கை கொண்டேனா? - சர்வேசுரன் செய்துள்ள நன்மைகளை எண்ணி அவருக்கு நன்றி செலுத்தாமல் இருந்தேனா? - ஆண்டவரின் இரக்கத்தின் மேல் நம்பிக்கை யற்று இருந்தேனா? - சர்வேசுரனை அடிக்கடி நினைத்து, அவருடைய தேவப் பிரசன்னத்தில் வாழ்ந்தேனா? - செய்யும் காரியம் அனைத்தையும் சர்வேசுரனுக்கு மகிமையாகச் செய்தேனா? அல்லது மனித முகத்தாட்சணியத்திற்காகவும், சுய மதிப்பிற்காகவும் செய்தேனா? - நான் செய்யும் காரியங்களை ஆண்டவருக்கு அர்ப்பணிக்காமலிருந்தேனா? - வழக்கமாக ஜெப தவங்களை அசட்டையினால் விட்டு விட்டேனா? - எல்லாப் பாவங்களையும் பாவத்துக்கு ஏது வான சந்தர்ப்பங்களையும் விட்டு விலகாமலிருந்தேனா? - ஆண்டவர் தந்த நல்ல ஏவுதல்களை ஏற்காமல் தள்ளிப் போட்டேனா? - காலை மாலைகளில் சிறிதளவேனும் ஜெபத்தை பக்தியுடன் செய்தேனா? - பக்தி மனப்பற்றுதல் இல்லாமல் உயிரில்லாத ஜெபங்களைச் செய்தேனா? - இரவு உறங்கப் போகுமுன் சர்வேசுரனை நினைத்து நன்றி கூறாமலும், அன்று செய்த பாவம், குற்றங்குறைகளுக்கு மன்னிப்புக் கேளாமலும் இருந்தேனா? - தேவ காரியங்களைப் பற்றி பகடி பரிகாசம் செய்தேனா? - சீதோஷ்ணம், காற்று, மழை பற்றி எரிச்சல் பட்டேனா, பேசினேனா? - முன் செய்த பாவத்தைப் பற்றி சந்தோஷப்பட்டேனா? அதைப் பற்றிப் பெருமை பாராட்டினேனா? - பாவத்துக்கு ஏதுவான இடம் பொருள் ஆட்களை விலக்கினேனா ? - வீட்டிலே பாவ சந்தர்ப்பமான எந்தப் பொருளும் இல்லாதபடி அகற்றி விட்டேனா? பாவத்துக்கேதுவான சந்தர்ப்பத்திலே உட்பட்டேனா? - பிறர் பக்தி வாழ்வு வாழ்வதற்கு இடை யூறாய் இருந்தேனா? பக்தியுடன் வாழ்கிறவர்களை கேலி பரிகாசம் செய்தேனா? அவர்களை வசை பேசித் துன்புறுத்தினேனா? - கடவு ளுக்கோ, அர்ச்சிஷ்டவர்களுக்கோ செய்து கொண்ட நேர்ச்சை களைச் செலுத்தாமல் விட்டேனா? - கிளி ஜோசியம், கைரேகை சாஸ்திரம், தினப்பலன், குறத்தி வள்ளுவ சாஸ்திரங்கள், நல்ல நாள் கெட்ட நாள், ராகு காலம், இதர மதத் தகடுகள், தாயத்துகள், கண் திருஷ்டி, ஆரத்தி எடுத்தல், குத்துவிளக்கு, ஓம் முதலிய மந்திரங்கள் மற்றும் இவை போன்ற சர்வேசுரன் மேல் கொள்ள வேண்டிய முழு நம்பிக் கைக்கு எதிரானவைகளை நம்பினேனா, பயன்படுத்தினேனா? - பேய்ச் சடங்கு, திருவிழாக்களில் பங்கெடுத்தேனா? பேய்க்குப் படைத்ததைப் பிரசாதமெனக் கருதி சாப்பிட் டேனா, உபயோகித்தேனா? - கத்தோலிக்கரல்லாதார் மத அனுசாரங்களில் கலந்து கொண்டேனா? பூசாரிகளை வைத்து மந்திரித்தேனா? அச்சடங்குகளுக்குப் பொருளுதவி செய்தேனா?

இரண்டாம் கற்பனை 

பொய்யான காரியத்திற்கும், சந்தேகமான காரியத்திற்கும் சர்வேசுரனை சாட்சிக்கு அழைத்து, சத்தியம் செய்தேனா? - மெய்யான காரியமே என்றாலும், அற்பமான காரியத்திற்கு சத்தியம் செய்தேனா? - மனதில் ஒன்று வைத்து, வாயில் வேறு காரியத்தைச் செய்வேன் என்று சத்தியம் செய்தபின் அதைச் செய்யாமல் போனேனா ? -ஆணையிட்டேனா? பிறர் முறையற்ற விதமாய் சத்தியம் செய்யக் காரணமாயிருந்தேனா? - பிறர் செய்த வார்த்தைப்பாட்டை செலுத்தாதபடி தடையாயிருந்தேனா? - என்னையோ, பிறரையோ சபித்தேனா? - இன்ன நன்மையைச் செய்ய மாட்டேன், இன்ன தீமையைச் செய்வேன் என்று ஆணை யிட்டேனா? - சர்வேசுரனுக்கும் புனிதர்களுக்கும் விரோத மாக அவதூறு சொன்னேனா? தேவ தூஷணம் சொன் னேனா? - குருநிலையினரை சங்கையின்றிப் பேசினேனா? அவர்களுக்கு ஏதாவது தீமை செய்தேனா?

மூன்றாம் கற்பனை

ஞாயிறு, கடன் திருநாளில் முழுப் பூசை காணாமல் இருந்தேனா? கண்டாலும் பராக்கோடு அடக்கவொடுக்க மின்றி பூசை கண்டேனா? - அந்நாளை முழுதும் வீணாய் உலகக் காரியங்களில் செலவழித்தேனா? - அந்நாளில் காரண மின்றியும், அனுமதியின்றியும் விலக்கப்பட்ட வேலை செய்தேனா? செய்வித்தேனா?

நான்காம் கற்பனை 

தாய், தந்தை, குருக்கள், மேலதிகாரிகள், ஆசிரியர்கள் முதலான பெரியோரை அசட்டை செய்தேனா, அவர்களை நிந்தித்து வெறுத்தேனா? - அவர்களுக்குக் கீழ்ப்படியா மலும், மரியாதை செலுத்தாமலும் இருந்தேனா? - தாய் தந்தைக்குச் செய்ய வேண்டிய பணிவிடையையும், பராமரிப்பையும் செய்யத் தவறினேனா?- தாய், தந்தையை அடித்தேனா, அவர்கள் சாக வேண்டுமென விரும்பினேனா?

ஐந்தாம் கற்பனை 

கொலை செய்தேனா, அதற்கு எவ்வகையாலும் உதவியாக இருந்தேனா? - தாய் வயிற்று சிசுவை சிதைக்கவோ, அதற்கு எவ்வகையிலாவது தூண்டியோ, மருந்து சொல்லியோ, டாக்டரிடம் கூட்டிச் சென்றோ, துர்ப்புத்தி சொல்லியோ உதவினேனா? - குடும்பக் கட்டுப்பாடு செய்யவோ, பிறர் செய்து கொள்ளவோ உதவி செய்தேனா? - யாரையாவது அங்கவீனம் செய்தேனா? - பிறர்மேல் பகை வைத்தேனா? வர்மம் வைத்தேனா? - பிறருடன் சண்டையிட்டு, கோபமாய்ப் பேசி, வர்மத்தில் சமாதானம் செய்ய மனமில்லாதிருந்தேனா? - பிறருக்கு வந்த தீமையைப் பற்றி சந்தோஷப்பட்டேனா? அவர்களுக்கு வந்த நன்மையைப் பற்றி வருத்தமடைந்தேனா? - பிறருடைய செயல்களுக்குக் காரணம் கற்பித்தேனா? - பிறர் பாவத்தில் விழக் காரணமா யிருந்தேனா? - பழி வாங்கினேனா? பழி வாங்கக் கருத்தாயிருந்தேனா? - பிறருக்கு நேரிட இருந்த பொல்லாப்பை இயன்ற மட்டும் தடுக்காமலிருந்தேனா? - அவதூறு பேசி னேனா? கோள் புறணி பேசினேனா? பிறருடைய பெயருக்கு அபகீர்த்தி வருவித்தேனா?

ஆறாம் கற்பனை 

மனம் பொருந்தி கெட்ட நினைவு நினைத்தேனா? கெட்ட நினைவு, ஆசைகளை உடனே தள்ளாமல் இருந்தேனா? - தன்னில் தானாகவோ, பிறருடனோ கெட்ட காரியம் செய் தேனா? அப்படிச் செய்ய வந்த ஆசையை விலக்காமல் இருந் தேனா? - தகாத பார்வை பார்த்தேனா? அப்படிப்பட்ட பேச்சை விரும்பிக் கேட்டேனா? கெட்ட கதைகள், நகைச் சுவைகள், காரியங்களைப் பேசினேனா? கெட்ட பாட்டுக் களைப் பாடினேனா, கேட்டேனா? - டி.வி.யிலும் சினிமாக் களிலும், (இணைய தளத்திலும்) கெட்ட புத்தகங்களிலும் தகாத படங்களைப் பார்த்தேனா? வாசித்தேனா? அவற்றை வைத்திருந்தேனா? - கெட்டவர்களோடு கூடினேனா? பிறரோடு மோக பாவம் செய்தேனா? பிறர் பாவம் செய்யத் தூண்டி னேனா? கட்டாயப்படுத்தினேனா? - ஆசையைத் தூண்டும் கருத்தோடு கவர்ச்சி ஆடைகளை அணிந்தேனா? அலங் காரங்களைச் செய்து கொண்டேனா? - நடை உடை பாவனைகளில் அடக்கவொடுக்கம் தவறினேனா ? - பிறரு டைய மனைவியை விரும்பினேனா? பிறர் மனைவியோடு பாவம் செய்தேனா? - பாவ சந்தர்ப்பமான ஆட்களையும், பொருட்களையும், இடங்களையும் உலக ஆடம்பரத்திற் காக அல்லது முகத் தாட்சணியத்திற்காக அகற்றாமல் இருந் தேனா? - மாசற்ற சிறுவர் சிறுமியர்க்கு அசுத்த பாவத்தைக் கற்றுக் கொடுத்தேனா? - என் பொறுப்பிலுள்ள இள வயதினர் பாவ சந்தர்ப்பங்களை விலக்கும்படி கண்டிப்பா யிருக்கத் தவறினேனா? - தேவைக்கு மேலாக உடலை போஷித்தேனா? குடிவெறி கொண்டேனா? போதைப் பொருட்கள் பயன்படுத்தினேனா?

ஏழாம் கற்பனை 

திருடினேனா? திருட்டுப் பொருளை வாங்கினேனா? - பிறரைத் திருடத் தூண்டினேனா? அதற்கு உதவி செய்தேனா? - வியாபாரத்தின் அளவு நிறையில் வஞ்சனை செய்தேனா? - திருடினதை உத்தரியாமல் இருந்தேனா? - வாங்கிய கடனைத் திருப்பித் தர மனமின்றி இருந்தேனா? - கண்டு எடுத்த உடைமைகளுக்கு உரியவர்களைத் தேடி கொடுக்காமல் இருந்தேனா? - உடன்படிக்கையில் தவறினேனா?

8-ம் கற்பனை 

பொய்சாட்சி சொன்னேனா?- முகஸ்துதி செய்தேனா? - என் குற்றத்தை மறைக்கப் பொய் சொன்னேனா? - பிறரைப் பற்றி அவதூறு சொன்னேனா? அநியாயமாய் பிறரின் கருத்து, செய்கை, வார்த்தைக்குத் தவறான அர்த்தம் கற்பித் தேனா?

9-ம் கற்பனை 

பிறர் தாரத்தை விரும்பிப் பாவப் பழக்கத்தில் ஈடுபட்டேனா? - அசுத்தப் பாவகரமான வார்த்தை , செயல், நினைவுக்கு இடம் கொடுத்து சரசங்களில் ஈடுபட்டேனா?

பத்தாம் கற்பனை 

பிறர் உடைமையின் மீது ஆசை வைத்தேனா? - என் பிழைப்புக்காகப் பிறர் பொருட்களுக்கு சேதம் வருவித்தேனா? - சம்பளம் கூலி கொடாமல் போனேனா? பேசின கூலியைக் குறைத்து அநியாயம் செய்தேனா? - ஏழைகளின் உடைமை களை அபகரித்தேனா? தந்திரம் செய்து, ஏமாற்றி அவற்றைக் கைப்பற்றினேனா?

திருச்சபைக் கட்டளைகள் 

வருடப் பாவசங்கீர்த்தனம் செய்யாமலிருந்தேனா? - பாஸ்கு காலத்தில் திவ்விய நன்மை வாங்காமல் போனேனா? - சுத்தபோசனம், ஒருசந்தி அனுசரியாமல் இருந்தேனா? - என்னால் முடிந்த உதவியை குருக்களுக்குச் செய்யத் தவறி னேனா?

தலையான பாவங்கள்

என்னைப் பற்றிப் பெருமையாய் நினைத்தேனா? பேசினேனா?- கோபித்தேனா? - பணத்தின் மீது மிஞ்சின ஆசை வைத்தேனா? பிச்சை கொடாமலிருந்தேனா? - காய்மகாரப் பட்டேனா? - ஆன்ம, சரீர காரியங்களில் சோம்பலா யிருந்து, வீண் காலம் போக்கினேனா?

அந்தஸ்தின் கடமைகள் 

காலை மாலை ஜெபம் தவறினேனா ? - ஞான உபதேசத்தை அசட்டை செய்தேனா? - பாடங்களில், வீட்டு வேலைகளில், அலுவலக வேலைகளில் அலட்சியமா யிருந்தேனா? - என் குடும்பத்தைப் பராமரிக்கத் தவறி னேனா ? - என் வாழ்க்கைத் துணையை நேசிக்கத் தவறி னேனா? - குழந்தைகளின் ஞான வாழ்வில் அக்கறையின்றி இருந்தேனா? அவர்களுக்குத் துர்மாதிரிகை காட்டினேனா?

பாவசங்கீர்த்தனத்துக்கு முன் 

மேற்கூறிய ஆத்தும் சோதனையைப் பின்பற்றி, நம் பாவங் களை நன்கு சிந்தித்து, அவற்றிற்காக மிகுந்த துயரத்துட னும், நரக பயத்துடனும் மனஸ்தாபப்பட்டு, சாவான பாவங் களின் எண்ணிக்கையையும், வகையையும் குருவிடம் தாழ்ச்சி யோடு வெளிப்படுத்தி, குருவின் ஆலோசனை கேட்டு, அவர் இடும் அபராதக் கடமையையும் நிறைவேற்ற வேண்டும்!

பாவசங்கீர்த்தனத்துக்குப் பின் 

இந்தப் பொதுப் பாவசங்கீர்த்தனமே நம் ஆன்மாவில் ஒலித்த ஆண்டவரின் எச்சரிப்புக்கு ஏற்ற பதிலாயிருக்க மாதா அருள்வார்களாக. இது முதல் சுத்திகரிக்கப்பட்ட புனித வாழ்வைத் தொடங்க வேண்டும். அது ஜெபமும், தவமும் நிரம்பியிருக்க வேண்டும். ஆண்டவருடனும் மாதா வுடனும் வாழப்பட வேண்டும். தாவீதரசரின் ஏழு தவச் சங்கீதங்களையும் (திருக்குடும்ப பக்திமாலை, பக்கம் 256) அடிக்கடி பயன்படுத்தி நம் பாவத் தன்மையை உணர்ந்து,

தாழ்ச்சியுள்ள, தேவ அன்பாகிய வாழ்வை வாழ்வோமாக. உலகத்தின் இன்றைய அவசரத் தேவை புனிதமுள்ள ஆன்மாக் களே. நாம் அந்த ஆன்மாக்களாக இருக்க முயல்வோமாக!

பாவத்தை விலக்குவோம்! பிரபஞ்சவெடிப்புகளாலும், வால் நட்சத்திரங்களாலும் ஏற்படும் உலக சேதங்களை விட ஒரு சாவான பாவத்தால் அதிக சேதம் விளையும் என்பது நாம் நம் விசுவாசத்தால் அறியும் உண்மை . ஆதலால் எந்த சாவான பாவத்திலிருந்தும் மனமறிந்த அற்பப் பாவத்திலிருந்தும் மாதாவின் உதவியால் நம் ஆன்மாவைக் காத்துக் கொள்வதே எச்சரிப்புக்கு நாம் கூறும் நல்ல பதிலாகும்.

சுத்திகரிப்புத் தண்டனை - மூன்றாம் உலகப் போர்? 

மனிதர்கள் கடவுளின் எச்சரிப்பை சட்டை பண்ணாமலும், மனந்திரும்பி அவரிடம் வராமலுமிருந்தால், சுத்திகரத் தண்டனை வரும். அது பெரும் அழிவாக இருக்கும் என்றும், உலகின் மொத்த மக்களில் பாதிக்கு மேல், கிட்டத் தட்ட முக்கால்வாசி நிர்மூலமாகி விடும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பெரும் அழிவு மூன்றாம் உலகப் போராகக் கூட இருக்கக்கூடும் என்றும் அவ்வறிவிப்புகள் கூறுகின்றன. போர்! உலகப் போர்! அதன் கொடிய கொடுமைகளை யாரால் தாங்க முடியும்? “ஆண்டவரே! எங்களைக் காப்பாற்றும் எங்கள் பாவங்களை மன்னியும் பொறுத்தருளும் கர்த்தாவே!" என்று நாம் சொல்லும் ஒவ்வொரு நாளும் ஓலமிட்டுக் கதறி தேவ இரக்கத்தையும், தேவ மாதாவின் பாதுகாப்பையும் தேடுவோமாக!

மூன்றாம் பாகம் நிறைவுற்றது.