சுத்திகரிப்பின் எச்சரிப்புக்கும், சுத்திகரிப்புத் தண்டனைக்கும் உள்ள ஞானப் பொருள்

உலக சுத்திகரிப்பு என்பது ஆத்தும் சம்பந்தமான ஞான சுத்திகரிப்பேயாகும். ஏனென்றால் இந்நூலின் 2-ம் பாகம், எண் (2)-ல் மேலே கூறியபடி : “இந்த ஆத்துமத்திற்கான எச்சரிப்பின் ஒரு பிரதிபலிப்பாகவே உலகத்திலும் கோளங்களிலும் நடக்கிற மற்ற பயங்கரங்கள் இருக்கும். 

எச்சரிப்பு மனிதர்களின் ஆன்மாக்களுக்குத்தான்." அப்படியென்றால், அதற்கு ஆழ்ந்த ஞானப் பொருள் இருக்க வேண்டும். அது என்ன?

உலக சுத்திகரிப்பு என்பதில் திருச்சபையின் சுத்திகரிப்பும் அடங்கும். சொல்லப் போனால், திருச்சபையின் சுத்திகரிப்பே முதலிடம் பெறும். 

ஏனென்றால் உலகம் இன்று இந்த அளவிற்கு வெறும் லௌகீகமாகி பாவமும், பாவச் சந்தர்ப்பங்களும் நிரம்பியுள்ளதென்றால் அதற்கு ஒரு முக்கியக் காரணம் திருச்சபைக்குள்ளும் உலோகாதாயமும், நடைமுறை நாஸ்திகமும் புகுந்துள்ளதுதான்.  முன்னேற்றம், உயிருள்ள ஒரு நிறுவனத்தின் தவிர்க்க முடியாத வளர்ச்சி, மறுமலர்ச்சி என்று கூறுவதெல்லாம் சற்றும் பொருந்தாத காரணங்கள். ஏனெனில் இவை எதுவும் திருச்சபையின் உண்மையான ஆன்மாவும், உயிருமாயிருக்கிற பரிசுத்த ஆவியானவருக்கு ஏற்றதல்ல. அவரால் கீழ் வரும் வகைகளில் அது ஒலிக்கலாம்: 

1) ஆன்மாவில் திடீரென குழப்ப நிலை காணப்படும். உள்ளத்தில் பயங்கரக் கொந்தளிப்பு இருக்கும். கொஞ்சங் கூட ஆன்மாவில் அமைதி இராது. சமாதானமிராது. சர்வேசுரனுடன் சுமூகமான சமாதான உறவில்லாமல், ஆன்மாவில் பெரும் தவிப்பு ஏற்படும். ஆண்டவரே ஆன்மாவை விட்டுப் போய்விட்டது போன்ற தாங்க முடியாத இழப்புணர்வு ஏற்படும். ஆன்மாவிற்கு மேலே ஆண்டவரிடத்திலும் கீழே பூமியிலும் எந்த ஆதரவும் இல்லாதது போன்ற, அந்தரத்தில் நிராதரவாய் விடப் பட்டது போன்ற நிச்சயமற்ற நிலையில் அது மூச்சுத் திணறுவது போலிருக்கும்.

2) ஆன்மாவால் அப்போது ஜெயிக்க இயலாது. ஆண்டவரின் உதவியைக் கூட மன்றாட இயலாது. இதனால் சற்று கூட ஆறுதலில்லாமல் ஆன்மா கைவிடப் பட்டது போலிருக்கும். ஒரே ஏக்கம், கவலை, என்ன நடக்கிறதென்றே அறியாத நிலையில் ஆன்மாவில் கடுமையான வறட்சி காணப்படும். வரப்பிரசாதமே இல்லாதது போல், ஆன்மாவின் உயிருக்கு ஆதாரமாயிருந்த ஆகாரம் அற்று விட்டது போல், எவ்வித ஊட்டமும் இல்லாமல் பலவீனப் பட்ட நிலை உணரப்படும். இதனால் ஆன்மா சோர்ந்து போகும். திண்டாடுவது போலிருக்கும். செயல்பட முடியாத அளவு பலவீனம் காணப்படும். ஆன்மா கண்ணையும், கருத்தையும் கடவுளிடம் எழுப்பக் கூடாதிருப்பதை உணர்ந்து, தனக்கு என்ன நடக்கிறதோ என்று பயப்படும். அச்சம் அதிகரிக்கும். சாத்தான் தன்னை மேற்கொண்டு விட்டதோ? தான் கடவுளுக்கெதிராகவே இவ்வளவு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறேனோ? ஏமாற்றப்பட்டு விட்டேனோ? கடவுளுடன் உறவாக இருந்து அவருடைய அன்புக்காகத் தான் இருந்ததாகவும், செய்ததையெல்லாம் அவருக்காகவே செய்ததாகவும் தான் எண்ணியதெல்லாம் ஏமாற்றம்தானோ? எங்கோ தவறிவிட்டேனோ என்று ஒன்றும் தெரியாமல் ஆன்மா அங்கலாய்க்கும். ஒன்றுமே இல்லை -- எதுவும் இல்லை-- எல்லாம் பாழ்தானோ-- எனக்கு என்ன வைக்கப்பட்டிருக்கிறதோ--அந்தோ-- என்று ஆன்மா நடுநடுங்கத் தொடங்கும்.

3) இந்தத் தவிப்பு நிலை தாங்க மாட்டாமல் ஆன்மா கீழே விழப் போகையில், " மனந்திரும்பு , இன்னும் அதிக நல்வாழ்வுக்கு வா" என்ற அழைப்பு எங்கோ ஒலிப்பதை ஆன்மா மெல்ல, மிக மெல்லக் கேட்கும். ஆண்டவர் தன்னைக் கைவிடவில்லை, அவர் எங்கோ இருந்து தன்னை அழைக்கிறார் என்பதை ஆன்மா மிகக் கொஞ்சமாக உணருகிறது. இதுவே தயாளமுள்ள கடவுள் அதற்குக் கொடுக்கும் நம்பிக்கை. ஆனால் ஆன்மாவோ தன் நிர்ப்பாக்கியத்திலே மேலெழும்ப முடியாமல் மூழ்கிக் கிடக்கிறது.

4) ஆண்டவருக்காகவும், மாதாவுக்காகவும் தான் ஏற்றுக் கொண்ட அலுவல்கள், ஊழியங்கள் எல்லாம் தோற்றுப் போவதை ஆன்மா இப்பொழுது காண்கிறது. தனக்கு அகத்திலும், புறத்திலும் ஏற்பட்டிருக்கிற நெருக்கிடைகளைக் காண்கிறது. உலகமெங்கும் கடவுளின் ஊழியம் மனிதரின் சுயநலத்திற்கு அடிமைப்படுவதை உணருகிறது. திருச்சபையின் குழப்பங்களையும், திருச்சபையால் தனக்கு வரும் என்று தான் எதிர்பார்த்த எந்த உதவியும் மறுக்கப்படுவதையும் அறிகிறது. தன் கிறீஸ்தவக் கடமைகளை அனுசரிக்க முடியாத சூழ்நிலைகளைக் கண்டு, எங்கு போவது என்று கலங்குகிறது. இது வரையிலும் தன் உயிராயிருந்த சர்வேசுரனுடைய நித்திய பலி தனக்கு அற்றுப் போவதாகக் காண்கிறது. வரப்பிரசாத வாய்க்கால்களான தேவத்திரவிய அனுமானங்கள் அழிந்து விட்டது போலிருக்கிறது.

5) ஆன்மா தன் அந்தரங்கத்தில் இப்படிக் கலங்கி ஏங்கித் தவிக்கையில், வெளியுலகத்தின் பழிப்பையும், நகைப்பையும், நெருக்கிடையையும் அவை இருக்கிற அளவை விட அதிகமாக உணர்கிறது. தன்னிடம் ஒன்று மில்லையே --உதவுவாரும் இல்லையே!--ஆண்டவரின் சமூகத்தைக் காணவில்லையே--அவருடைய நண்பர்களின் ஆதரவும் தனக்கு இல்லையே --நான் நம்பியவர்கள் என்னைக் காட்டிக் கொடுத்து விட்டார்களே -- என் கடவுளை நிந்திக்கிறார்களே -- அவருக்காக நான் எண்ணியதையெல்லாம் சிதறடித்து விட்டார்களே --சாத்தான் என் வீட்டில் புகுந்து அதைப் பிளந்து விட்டானே -- என் நல்ல நோக்கம் எதையும் நிறைவேற விடாமல் அவதூறு பேசிப் புறங்கூறி எதிரிகளின் கைகளில் சிக்க வைத்து விட்டானே! மனித எதிர்ப்பை சமாளித்தாலும் சமாளிக்கலாம், சாத்தானும் மனிதனும் சேர்ந்து எதிர்ப்பதை எப்படி சமாளிக்க இயலும்!

6) ஆன்மா இப்படி அவதிப்படுவதை இன்னும் அதிகரிப்பது என்னவென்றால், ஆண்டவரும் மாதாவும் காக்கிற மவுனமே. ஆன்மா அதை மிகக் கூர்மையாக உணருகிறது. அதனால் அதற்குக் கொடிய அங்கலாய்ப்பு ஏற்படுகிறது. ஆன்மாவின் உட்பிரகாரங்களில் எல்லாம் இந்தக் கைவிடப்பட்ட நிலை எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடவுளின் மவுனம் ஆன்மாவைக் கலங்கடிக்கிறது. கடவுளை விட்டுத் தான் பிரிக்கப்பட்டதாக உணருகிறது. அந்த வேதனையை மேலும் அதிகரிக்கக் கடவுளின் பெயரால் இருக்கிற ஆன்மாக்கள் கற்குவியல் சிதறுவதுபோல் ஆளுக்கொரு மூலையாய்ச் சிதறுகிறார்கள். அதனால் ஆண்டவரின் அலுவல் சிதறி ஸ்தம்பித்துத் தேய்ந்து கரைந்து அழிவதைக் காணும் ஆன்மாவின் ஆற்றாமை மிகவும் அதிகரிக்கிறது. மேய்ப்பர்களின் நடுவில் ஏற்படும் இந்தப் பிளவால் மந்தைகள் கலைகின்றன. தேவனின் அலுவல்கள் பானை உடைந்து பால் சிந்துவது போல் சிந்திச் சிதறிப் போகின்றன. அது சாத்தானுக்கு அனுகூலமாகி விடுகிறது. ஆண்டவரை நேசித்து அவரின் அலுவல்களின் நிறைவேற்றத்தைக் காணக் காத்திருக்கும் ஆன்மாக்கள் கவலையடைந்து அழுவதைத் தவிர வேறு ஒன்றுமில்லாமல் போகிறது.

7. சாத்தான் ஆன்மாவைச் சோதித்து இழிவுபடுத்தி இம்சிப்பது பற்றாது என்றாற்போல் சரீரத்தையும் உபத் திரவப்படுத்துகிறது. யோபுவுக்கு ஆண்டவர் அனுமதித்தது போல் சரீரத்தில் இனந்தெரியாத வலிகளும், மூட்டுகளின் நோவும் அவ்வான்மாவைப் பீடிக்கின்றன. முன்சொன்ன ஆன்மாவின் வேதனை கவலை நோவு பழிப்புணர்வு ஏமாற்ற உணர்வு எல்லாவற்றையும் விட இந்தச் சரீர நோவுகளும் ஓய்வற்ற அசௌகரிய உணர்வுகளும் குறைவாகவே ஆன்மாவால் மதிக்கப்பட்டாலும், ஆன்மாவின் நேசம் மேல் நோக்கி எழுவதையும் இந்த வலிகளும் வேதனைகளும் வெகுவாகப் பாதித்து ஆன்மாவைச் செயலிழக்க வைக்கின்றன. கொடிய நோய்களைப் பற்றிய பயம் பயங்கரமாக மூண்டெழுகிறது. 

8) இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஆன்மா மிகப் பெரும் அதிர்ச்சியுடன் இடியோசை போல் உணரும் கொடிய தாக்குதல் என்னவென்றால், கடவுளின் எல்லையற்ற அன்பும், சேசுவின் அளவற்ற பாடுகளும் மாதாவின் அளவில்லாப் பரிசுத்ததனமும் பாவிகளின் கேலிக்கு உட்படுத்தப்படுவதுதான். ஆன்மா தன் கடவுளை, தன் ஆண்டவரை, தன் ஆன்புத் தாயாரை எவ்வளவிற்கு நேசித்து மதித்து ஆராதித்ததோ, அதற்கு நேர் எதிராக, அவர்களை ஒரு நீச சிருஷ்டியை விடக் கேவலமாய்ப் பாவிகள் மட்டுமல்ல, கடவுளின் மக்கள், ஆண்டவரின் பிரஜைகள், மாதாவின் பிள்ளைகளாயிருக்கிறவர்கள் தங்கள் ஆங்காரத்தாலும், சுயநலத்தாலும் நடத்தி நிர்க்கவலையாய், மறதியாலும், அலட்சியத்தாலும், தாங்கள் தீட்டும் திட்டங்களாலும் தங்களையே நினைத்து தங்களையே முக்கியப் படுத்துகிற நிந்தைதான் ஆன்மாவை மிக நுட்பமாய்ப் பாதித்து ஆயாசப்படுத்துகிறது. அப்படியே இந்தக் கடவுளின் பிள்ளைகளின் அல்லது ஆண்டவரின் சீடர்களுடைய அக்கிரமமான மறதியையும், அசிரத்தையையும் சிந்திக்கிற ஆன்மாவின் இதய வானத்திலே சூரியனில் வேகமாய்ச் சென்று தாக்கும் ஒரு திசை தவறிய வால் வெள்ளியால் (Comet) எவ்வளவு ஓசை ஏற்படுமோ, அப்படிப்பட்ட வெடிப்புச் சத்தம் கேட்கிறது. இந்த வெடிப்பு ஓசை சொல்கிறது, "மனந்திரும்பு” என்று. "நீ கடவுளுடைய ஆன்மா என்று நினைக்கிறாய். மெத்தனப் படாதே. நீ இதை விட இன்னும் ஆயிரம் மடங்கு அதிகமாக ஆண்டவரையும் மாதாவையும் நேசித்திருக்கலாம். உன் தவறுக்குப் பரிகாரம் செய். மனஸ்தாபப்படு. பரிகாரம் செய்!” என்ற இடியோசை கேட்கிறது. 

"இதுவே உனக்குரிய எச்சரிப்பு! நீ உடனே மனந்திரும்பி, முழுவதும் அவர்களுக்குரியவனாய் ஆகாவிடில் உனக்குக் காத்திருக்கும் சுத்திகரிப்புத் தண்டனையை உன்னால் தாங்க முடியாது. ஆண்டவரே உன்னைத் தண்டித்துச் சுத்திகரம் செய்வார். எச்சரிக்கை !" |

இதைக் கேட்ட ஆன்மா அஞ்சி நடுங்கி விடவிடத்து : "ஆண்டவரே! எனக்கு நேசிக்க மட்டும்தான் தெரியும். உம்மையன்றி நான் வேறு எதையும் தேடியதில்லை. மாதாவே, என்னை இரட்சித்துக் காப்பாற்றுங்கள்" என்று பலவீனக் குரலில் கதறி மயங்கி விழுகிறது.