நேர்த்தியான இந்த ஸ்தாபகச் சடங்கைப் பற்றி சிறிது விபரம்!

இப்போது நேர்த்தியான இந்த ஸ்தாபகச் சடங்கைப் பற்றி சிறிது விபரம் சொல்வோம். அழகாய்ச் சித்தரித்த சேசுவின் திரு இருதயப் படம் ஒன்று வாங்கி, வீட்டில் மகிமைக்குரிய இடம் பார்த்து அதை இருத்தி வை; தெய்வீக அரசர் அந்த வீட்டைச் சுதந் தரித்துக் கொண்டு, ஆராதனைக்குரிய நண்பராக அங்கு எப்போதும் தங்க விரும்புவதற்குத் தெரிந்து கொண்ட சாதனம் இது.

அன்பும் உயிருள்ள விசுவாசமும் இருக்குமானால், அரசாட்சி ஸ்தாபக விஷயமாய் ஆவலும் உற்சாகமும் உண்டாகும். இதுதான் இந்தச் சடங்கை மற்ற சடங்குகளிலிருந்து பிரித்துக் காட்டுவது. ஏனெனில், வெறும் ஒப்புக்குச் சடங்குகளை நிறைவேற்றுவது உதவவே உதவாது. குறிப்பிட்ட நேரத்தில் படத்துக்குமுன் பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றுகூடுவார்களாக. உறவினர், நண்பர்களையும் அழைத்துக் கொள்ளலாம். அவர்கள் இராஜ பரிவாரங்களாய் உதவு வார்கள். பொது ஆராதனைப் பாடமும் படித்துக்கொள்வார்கள். படத்தைச் சுற்றிலும் பூக்களால் அலங்கரித்து, திரிகள் ஏற்றி வைத் திருக்க, குருவானவர் (கூடுமானால் பங்குக் குருவானவரே) சடங் கைப் பற்றிச் சிறிய பிரசங்கம் செய்து, படத்தைத் திருச்சபை முறைப் படி மந்திரிப்பார். அதன்பிறகு, எல்லோரும் கிறீஸ்தவக் குடும்பத் திற்குரிய விசுவாசத்தை அறிக்கையிடவும், தங்கள் முன்னோரின் கத்தோலிக்கப் பழக்க வழக்கங்களை அநுசரித்து வருவோமென்று வாக்களிக்கவும், விசுவாச மந்திரம் சொல்லவும் கடவார்கள். முழங் காலிலிருந்து கொண்டே சடங்கு முறையில் குறித்திருக்கிற ஜெபங் களை எல்லோரும் சேர்ந்து சொல்லக்கடவார்கள். பின்னர், வெளி யூருக்குப் போயிருக்கிறவர்களுக்காகவும், குடும்பத்தில் மரித்தவர் களுக்காகவும் ஒரு ஜெபம் செய்து, கடைசியாய்த் திரு இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்தல் ஜெபம் சொல்லப்படும்.

ஆனால் பக்திக்குரிய இந்தச் சடங்கு, ஒப்புக்கொடுத்தல் மாத்திரமன்று, அதை விட அதிகமானது; ஏனெனில் அரசாட்சி ஸ்தாபகத்தில் நமது ஆண்டவரின் தெய்வீக இராஜத்துவத்தை அங்கீகரித்து மகிமைப்படுத்துதலும் கூடியிருக்கிறது. நமது தேசத் தின் பேரால், சிநேகமும், பரிகாரமும் சேர்ந்த ஓசன்னாவும், குடும் பத்தின் இராஜாவே வாழ்க என்ற வாழ்த்தும் அடங்கியிருக்கின்றன. இதன் நிமித்தமே, அரசாட்சி ஸ்தாபகம் என்று பெயரிட்டிருக் கிறோம். இராஜாதிராஜனை நீ வரவேற்கிறாய்; ஆதலால் உன்னால் இயன்ற அளவு ஆடம்பரச் செய்யத் தவறாதே. ""நான் உன் வீட்டுக்கு வந்தேன். நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை... நீ என்னை முத்தம் செய்யவில்லை... நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை'' (லூக்.7:44-46) என்று பரிசேயனான சீமோனுக்குச் சொன்னபடி உன்னையும் சேசுநாதர் கடிந்துகொள்ளாதபடி கவனித்துக் கொள்.

பெரிய மனிதர் ஒருவரை, ஒரு தளபதியை, அல்லது பாப்பரச ருடைய ஸ்தானாதிபதியைத் தகுந்த மகிமை ஆரவாரத்துடன் வரவேற்பாய் அல்லவா? சேசுநாதர் வரும்போது, அவர் மவுனமா யிருப்பதாலும், தாழ்மையே உருக்கொண்டிருப்பதாலும், அவரை உள்ளறை மூலையில் வைத்துவிட்டு அக்கறையற்றிருக்கிறாய்; இது அவரது இருதயத்தைப் புண்ணாக்குமென்பது நிச்சயம். அவர் தாபோர் மலையிலிருந்து இறங்கி வந்ததைக் கண்டிருந்தால் என்ன செய்திருப்பாயோ, அப்படியே இப்போது பேரரசருக்குரிய மகிமை யுடன் அவரை வரவேற்பாயாக! மகிமை ஸ்தானம் அவருக்கே உரியது. அரசரையும், மேற்றிராணியாரையும் வீட்டில் ஏற்றுக் கொள் ளலாம், பரலோக பூலோக ஆண்டவரை ஏற்றுக்கொள்வது எப்படி முடியுமென்று சொல்வதற்கு எடுத்துரைக்கும் போலிக் காரணங்கள் எல்லாம் விசுவாசத் தளர்ச்சியையும், சிநேகக் குறைவையும்தான் காட்டுகின்றன. பயம்தான் இதற்கெல்லாம் ஒரே காரணம்; நமது ஆண்டவர் இருந்தால், சங்கை மரியாதையுடன் கட்டுப்பாடாய் நடக்க வேண்டுமே என்ற பயம். ஆம், அவர் சகலத்தையும் மேற் பார்வையிடக் கூடும், மேற்பார்வையிட வேண்டும். ஆனால் அவரது சமுகத்தில் சொல்லவோ, செய்யவோ கூடாதது, வீட்டிலோ, தெருவிலோ சொல்லவும், செய்யவும் கூடாத விஷயம்தான்.

மகிமையான இடத்தை அவருக்குக் கொடு. வீட்டில் உள்ள அறைகளில் மிகவும் சிறப்பானது அவருக்கென்று இருக்கட்டும். ஏரோது செய்த அவமானத்துக்கும், அவரைக் கடைசி இடத்திற்குத் தள்ளி வைக்கிற அநேக செல்வந்தர்களாலும், கனவான்களாலும் அவருக்கு நேரிடும் அவமானத்துக்கும் உன் செய்கை பரிகாரமா யிருக்கக் கடவது. ""அவர் தமது பாடுகளின்போது அநுபவித்த நிந்தை அவமானங்களுக்கு மாறாக, இராஜ பிரபுக்களின் வீடுகளில் மகிமை ஆரவாரத்தோடு பிரவேசிக்க ஆசிக்கிறார்'' என்று அர்ச். மர்கரீத் மரியம்மாள் இது விஷயமாகச் சொல்லியிருக்கிறாள்.

ஆனால் ஏழை எளியவர்களின் மத்தியிலும் அரசு செலுத்த அவருக்குள்ள ஆவல் அதிலும் குறைந்ததல்ல. தமது மகத்துவ மாட்சியின் தோற்றமெல்லாம் களைந்து விட்டுத் தமது காயங்களே வல்லமையாகவும், தமது இருதயமே ஏக ஆஸ்தியாகவும் வைத்துக் கொண்டு, சகலரிலும் தாழ்ந்தவராகத் தாழ்மையுள்ள தமது உற்ற சிநேகிதரிடம் அவர் எவ்வளவு ஆனந்தமாய்த் திரும்பி வருகிறார் என்று பார். மாட்டுக் கொட்டிலில் பிறந்தவர், நாசரேத்தில் கைவேலை செய்தவர், கூலிக்காரன் குடிசையினருகே அல்லது சின்னஞ்சிறிய வீட்டின் வாசற்படியில் நின்று கூப்பிடுவதைப் பார். ""சீக்கிரம் கதவைத் திறங்கள். ஏனெனில் உங்களைப் போல் நானும் நாளைக்கு என்ன செய்வோம் என்ற நிலைமையில், ஏழைகளின் கஷ்டத்தையும், கவலையையும் அறிந்திருக்கிறேன். சிநேகத்தின் நிமித்தம், ஏழையாய்ப் பிறந்து, வறுமையில் வாழச் சித்தமானேன்'' என்று சொல்கிறார். தச்சரான சூசையப்பரால் வளர்க்கப்பட்ட பிள்ளையாகிய சேசு தாழ்ந்த அந்தஸ்திலுள்ளவர்களை சிநேகித்தது போல வேறெவரும் எக்காலத்திலும் சிநேகித்ததில்லை. ஆதலால் அவர்களை அவர் தமது இருதயத்தின் வழியாகத் தம் அருகில் இழுக் கவும், தமது நேசத்தால் அவர்களை சந்தோஷப்படுத்தவும் வெகு வாய் ஆசிக்கிறார். அத்தகைய மக்களின்மீது தமக்குள்ள பரிதாபத் தைக் காட்டுவதற்காகவே, அப்பங்களையும், மீன்களையும் பலுகச் செய்தார்; அவர்கள் தங்களுடைய சங்கடங்களிலும், துன்பங் களிலும் அவர் ஆறுதல் அளிக்கிறவராயிருக்கும்போது, கஷ்டப் பட்டு வேலை செய்து சிரமப்படுவது எவ்வளவு வித்தியாசமாகத் தோன்றும் என்பதைக் கண்டுணர வேண்டுமென்று விரும்புகிறார்.

நாசரேத்தில் ஏழையாயிருந்தவரை ஏழைகளாகிய அவரது சிநேகிதர்கள் மத்தியில் அரசு புரியச் செய்யுங்கள். சரீரப் பிரயாசை யான வேலை செய்து பிழைப்பவர்களின் குடிசையில், எளிய உணவு அருந்துபவரைக் கண்ணோக்குவதும், முற்காலங்களில் போல், வேலை கிடைக்காமல் தவிக்கிற பெற்றோரும், பசியால் முக வாட்டமாயிருக்கிற பிள்ளைகளும் தம்மைச் சூழ்ந்திருப்பதைப் பார்ப்பதும், அவருக்கு வெகு இன்பமாயிருக்கும். ""ஏழைகள் பாக்கிய வான்கள்... அழுகிறவர்கள் பாக்கியவான்கள்'' (மத்.5:3-5) என்று தாம் சொன்னது எதற்காக என்று, இந்த ஏழை மக்கள் கண்டுணரச் செய்வார். இணையற்ற திரவியம் தமது இருதயமே என்று இவர்கள் கண்டுகொள்ளச் செய்வார்.

நாம் ஏற்கெனவே சொல்லியுள்ளபடி, கிறீஸ்து அரசரைப் பகிரங்கமாய் ஒன்றுகூடி ஆராதிப்பது அவர்மீது பூரண அன்பும், நம்பிக்கையும் கொண்டிருப்பது, அரசாட்சி ஸ்தாபகத்திற்கு அவசிய மானது. இந்த ஆராதனை எப்போதையும்விட இக்காலத்தில் அதிக அவசியம்; ஏனெனில், சமுதாயமும் தேசமும் அவரை விட்டகன்று போயிருப்பதே இக்காலத்திய பெரிய அக்கிரமம். ஆதலால், இந்த அரசாட்சி ஸ்தாபக அலுவலிலும், இதன் பெயரிலும் பொதிந் திருக்கும் கிறீஸ்தவ விசுவாச முயற்சியைப் பற்றியும், பரிகார முயற்சியைப் பற்றியும், அதிகமாய் அழுத்திச் சொல்லப் போதுமான வார்த்தைகள் இல்லை.

ஆனால் இந்த ஆராதனை எவ்வளவு நேர்த்தியாயிருந்தாலும், அது நமது போதகத்தின் பூரண நோக்கம் என்றாவது, அல்லது அதன் ஏக கதி என்றாவது சொல்லக் கூடாது. சேசுவின் திரு இருதயத்தை அன்பின் அரசராக ஏற்றுக்கொள்கிற வீட்டில், அரசாட்சி ஸ்தாபக மானது, உயிருள்ள விசுவாசமும் உருக்கம் நிறைந்த சிநேகமும் கூடிய ஒரு புது வாழ்வின் ஆரம்பமாயிருக்க வேண்டும். இவ்வாறு அரசாட்சி ஸ்தாபகத்தின் ஒப்புக்கொடுத்தலானது, ஒரு சடங்காக மட்டும் இராமல், அநுதினம் வாழ்ந்து வருவதாயிருக்கும். சுபாவத்துக்கு மேலான கிறீஸ்தவ நோக்கத்தின் பயனாக, சேசுவின் திரு இருதயம் கொஞ்சங் கொஞ்சமாய்க் குடும்பத்தின் தேவ உயிராகி, அக்குடும்பத்தின் ஏக சட்டம் சுவிசேஷ சட்டமாகவும், அதன் ஏக பாக்கியம் வீட்டு எஜமானருக்கு (சேசுவுக்கு)க் கீழ்ப்படிவதாகவும் இருக்கும் என்பதே எனது கருத்து. நமது குடும்ப வாழ்வு சேசுநாதர் பங்காளியாயிருக்க வேண்டும் என்பது அர்த்தமாகும். அவர் தமது சிநேகிதர்களோடு தங்கியிருந்து, வீட்டிலுள்ள சகலத்தையும் விடியற்காலத்திலிருந்து அஸ்தமனம் வரைக்கும், தொட்டிலிலிருந்து கல்லறை வரைக்கும், ஆசீர்வதித்துக் கொண்டிருப்பதற்காகவே, நமது வீட்டில் அவருக்குச் சிம்மாசனம் ஸ்தாபித்திருக்கிறோம். சேசுநாதர் தம்மால் நேசிக்கப் பட்ட நமது வீட்டின் தலைவராயிருந்து, சிநேகிதனைப் போல் அதைக் கண்காணித்து, ஆண்டு நடத்தி வருகையில் என்னென்ன துன்பங்கள் நமக்கு நேரிடினும் முகமலர்ச்சியுடன் போராடி வாழ்வது எளிதா யிருக்கும். சேசுநாதர் குடும்ப விசேஷங்களில் பங்குகொள்ளும் போது, பாக்கியம் பெற்ற இந்த பெத்தானியாவில் சகலமும் மேன்மை அடைந்து அர்ச்சிக்கப்படுகிறது. அத்தகைய வீட்டில் அவர் உள்ள படியே வாழ்கிறார். அந்தக் குடும்பம் அவராலும் அவரோடும் வாழ்கிறது.

குடும்பத்தில் கிறீஸ்தவ வாழ்வின் தன்மை இதுதான் என்று மக்கள் உணராதிருப்பது மிகவும் வருந்தத்தக்கதே. சில ஜெபங்களை வாயால் சொல்வதில்தான் அநேகரின் பக்தி அடங்கியிருக்கிறது. பக்தி யுள்ள குடும்பங்கள் அநேகம் உண்டு. ஆனால் சேசுநாதரைத் தங்கள் சிநேகித ராக எண்ணி நடப்பவர்கள் மிகக் குறைவு. இது சம்பந்தமாக போலொஞ்ஞா நகரில் மேற்றிராணியாரின் அரண்மனையில் நடந்த சம்பவம் ஒன்று என் ஞாபகத்துக்கு வருகிறது. அரசாட்சி ஸ்தாபகத்தையும், அதன் முக்கிய நோக்கத்தையும் பற்றி உயர்குடிப் பெண்களுக்குப் பிரசங்கம் செய்துவிட்டுப் பிரசங்க மேடையிலிருந்து கீழே இறங்கப் போகும் போது, அதிமேற்றிராணியார் என்னைப் பார்த்து, ""சுவாமி, கொஞ்சம் பொறுங்கள், நான் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். நீங்கள் ஒரு மகத்தான சத்தியத்தை எங்களுக்கு எடுத்துரைத்திருக்கிறீர்கள். ஆனால் கடைசி "ஆமென்' நான் சேர்க்க வேண்டும். பெரிய திருநாட்களில், என் மேற்றிராசனக் கோவிலிலும் இதர ஆலயங்களிலும், மக்கள் கூட்டத்திற்குக் குறைவில்லை. ஆயினும் என் மக்கள் நாளுக்கு நாள் ஞான வளர்ச்சி அடைகிறார்கள் என்று சொல்ல இயலாது. இதற்குக் காரணம் நீங்கள் சொன்னதுதான். பூசை கண்டால், அல்லது வேறு ஏதாவது வேதச் சடங்கில் பங்குபெற்றால் போதும் என்று பலர் நினைக்கிறார்கள்; வீட்டுக்குத் திரும்பிப் போனால் அங்கே சேசுநாதர் இல்லை. குடும்பத்தின் உயிராக அவர் இருப்பதில்லை. வீடு ஆண்டவரின் கூடாரம் என்று சொல்வதற்கில்லை. இதுதான் கத்தோலிக்க குடும்ப வாழ்வில் பெரும் குறை. பெத்தானியா இல்லம் இல்லாத குறை'' என்று சொன்னார்.

இந்தக் கருத்தை இன்னும் விபரமாய்ச் சொல்லும்படி சில நேர்த்தியான சம்பவங்களை எடுத்துக் கூறப் போகிறேன். அவை கேட்க இன்பமானவை மட்டுமன்றி, சேசுநாதர் குடும்பத்தில் வாழ்கிற நண்ப ரும், அதன் தெய்வீக உயிரும், அரசரும், எஜமானருமாயிருக்கிறார் என்று நான் சொல்வதன் அர்த்தம் என்னவென்று, நான் செய்யும் பிரசங்கத்தை விட அதிக நன்றாய் உங்களுக்கு விளங்கப் பண்ணும்.

நான் சொல்லப் போகிற சம்பவம் உலகப் போரின்போது நடந்தது. ஒரு நாள் வியக்கத்தக்க விசுவாசமுள்ள ஒரு தாய்க்குத் தன் மூத்த மகன் செத்துப் போனான் என்று தந்தி வந்தது. இது அவளது இருதயத்திற்குத் தாங்க முடியாத வேதனையைத் தந்தது என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் அவள் தனது துயரத்தை அடக்கிக் கொண்டு, மண்டபசாலைக்கு ஓடிப் போய் அன்பின் அரசர் பாதத் தில் தந்தியை வைத்து விட்டு, அமைதியாய் தனது சிறு பிள்ளை களைக் கூப்பிட்டு, அவர்களும் வேலைக்காரர்களும் சேர்ந்து, திரு இருதய சிம்மாசனத்தை என்றும் இல்லாத சிறப்பு அலங்காரமாய் ஜோடிக்கச் சொன்னாள். தானும் அவர்களோடு சேர்ந்து பூக்களாலும், மெழுகுவர்த்திகளாலும் அதை அலங்கரிக்க உதவி செய்தாள். ஜோடித்து முடிந்தபின், ஒரு பாட்டுப் பாடத் தொடங்கி, எல்லோ ரும் தன்னோடு சேர்ந்து பாடச் சொன்னாள். பாடிய பிறகு, விசுவாச மந்திரமும், ஒப்புக்கொடுத்தல் ஜெபமும் சொல்லப்பட்டன. இவ்வாறு இல்லத்து அரசருக்குச் சங்கை புரிந்து, இந்தப் பெரும் துயரத்தில் அவர் தங்களோடு பிரசன்னமாயிருக்கிறார் என்று வெளிப் படையாய் அங்கீகரித்த பிறகே தாய் தந்தியை எடுத்துப் பிள்ளை களுக்கு வாசித்துக் காட்டினாள். ""உங்கள் சகோதரன் தனது அரசரின் கரங்களில் பரலோகத்திற்குப் போய் விட்டான். அவரது சித்தப்படி ஆகட்டும். அவருடைய திரு இருதயம் என்றும் வாழ்க! அவரது இராச்சியம் வருக!'' என்று அழுகையுடன் சொன்னாள். அவர்கள் அழுதார்கள் என்பதில் சந்தேகமில்லை. நிச்சயம். ஆனால் சேசுவின் திரு இருதயத்தில் சமாதானமாய் அழுதார்கள். இது சரீரத்துக்கும் இரத்தத்துக்கும் உரிய வேதனையல்ல. மகிமைக்குரிய பேறு பலனுள்ள வேதனை; சேசுநாதரோடு அன்பின் நிமித்தம் துயரப்பட வேண்டிய மாதிரி இதுவே.

இரண்டாவது சம்பவம் முழுவதும் வித்தியாசமானது; ஆனால் உள்ளடங்கியுள்ள கருத்து ஒன்றே. பள்ளிக்கூட பரிசளிப்பு நாள்; ஆறு பையன்கள் புகழ்ச்சிக்குரிய பதக்கங்களும், புத்தகங்களும் நற்சான்றிதழ்களும் சுமந்து கொண்டு வீட்டுக்கு வந்தார்கள். அக்களிப்புடன் உள்ளே போய், தகப்பனாரின் அறையை நோக்கி விரைந்து சென்றார்கள். அவர் தங்களைப் புகழ்ந்து கொண்டாடி, சன்மானம் தருவார் என்று எண்ணினார்கள். தகப்பன் அவர்கள் வருவதைக் கண்டதும், "இங்கே உள்ளே வர வேண்டாம், என் பின்னே வாருங்கள்'' என்று சொல்லி, இல்லத்து அரசர் இருந்த மண்டப சாலைக்கு அவர்களை அழைத்துக் கொண்டு போனார். "இப்போது உள்ளே போய், நீங்கள் பெற்ற பரிசுகளையெல்லாம் நம் தெய்வீக எஜமானரின் முன்பாக வைத்து, "உம்மை நாங்கள் நேசிக்கிறோம், உமது இராச்சியம் வருக!' என்று சொல்லுங்கள்'' எனக் கற்பித்தார். ஆறு பிள்ளைகளும் சந்தோஷமாய்க் கீழ்ப்படிந்து தகப்பனோடு சேர்ந்து, ஒப்புக்கொடுத்தல் முயற்சி செய்தார்கள். ""இப்போது, உங்கள் தாயிடம் செல்வோம். அவளும் உங்களை வாழ்த்த வேண்டும். ஆனால் இவ்வீட்டில் தலைமை வகித்து ஆள்பவர் திரு இருதய நாதரே என்பதையும், இன்பத்திலும், துன்பத்திலும் அவரை மறந்துபோகக் கூடாது என்பதையும் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்'' என்றார்.

மூன்றாவது நிகழ்ச்சி அதிக உருக்கம் நிறைந்தது. மாப்பிள்ளையும் பெண்ணும் பரம ஏழைகள்; அவர்களுடைய கலியாணத்தை நான் மந்திரித்து முடித்ததும், அன்றைக்கே தங்கள் குடிசையில் அரசாட்சி ஸ்தாபகம் செய்ய வேண்டுமென்று என்னைக் கேட்டுக் கொண்டார்கள். ""சேசுநாதரை உங்கள் சிநேகிதராக எண்ணி, நீங்கள் மெய்யாகவே அவரைப் பார்த்தது போல் நடப்பீர்களென்று எனக்கு வாக்களியுங்கள். உங்களுக்குத் துன்பங்கள் நேரிடும் என்பது நிச்சயம். ஆயினும் திரு இருதய ஆண்டவர் உங்களுக்குச் சந்தோஷம் அளிப் பார்'' என்று சொன்னேன்.

சில வருடங்களுக்குப் பிறகு, ஒரு நாள் அந்தக் கணவன் என்னிடம் வந்து, ""சுவாமி, என் மனைவி சாகக் கிடக்கிறாள்'' என்று சொல்லி என்னைக் கூப்பிட்டான். நான் போய்ப் பார்த்த போது, அவள் மெய்யாகவே மரண ஆபத்திலிருந்தாள். ஆனால் யாதொரு கலக்கமுமின்றி முழு மன அமைதியும் சந்தோஷ முகமுமாய் அவள் இருக்கக் கண்டேன். அந்தச் சிறிய ஏழைக் குடிசையில் இருந்த ஏக ஆஸ்தி, நான் அவர்களுடைய கலியாண நாளில் அவர்களுக்குத் தந்து, அங்கே ஸ்தாபித்து வைத்த சேசுவின் திரு இருதயப் படம்தான். அவளுடைய பாவசங்கீர்த்தனத்தைக் கேட்டபின், அவள் இந்தக் கலக்கமான வேளையில் பரலோகத்துக்குரிய இத்தகைய அமைதியை அநுபவிப்பதைக் கண்டு, என் ஆச்சரியத்தை அடக்க முடியாமல், அதன் காரணத்தை அறிய விரும்பி, ""மகளே, நீ மோட்சத்துக்குப் போகுமுன் என்னிடம் ஒரு காரியம் சொல்ல வேண்டும். நீ கலியாணம் செய்ததிலிருந்து துக்கமாயிருந்திருக்கிறாயா?'' என்று கேட்டேன். அவள் வியப்புற்றுக் கண்களை விரியத் திறந்து, ""என்ன சுவாமி, நீங்கள்தானே எங்கள் கலியாணத்தன்று சேசு இராஜாவிடம் எங்களை ஒப்படைத்து, இந்த எளிய குடிசையில் அவர் எங்கள் நண்பராயிருக்கும்படி எங்களுக்குக் கொடுத்து விட்டுப் போனீர்கள்; அவர் இருக்கையில், துக்கமாயிருந்தேனா என்று கேட்கிறீர்களே! ஒருக்காலும் இல்லை, சுவாமி, ஒரு வினாடி கூட துக்கமாயிருந்த தில்லை. சங்கடங்களும் போராட்டங்களும், துன்பங்களும் இருந்தது உண்மை. ஆனால் சேசுநாதர் ஏழைகளின் நண்பரும், அரசருமானவர், விசேஷமாய் இந்தக் குடிசைக்கு அரசரும் நண்பருமாயிருக்கும் போது, துக்கமாயிருக்க முடியுமா?'' என்று சொல்லிவிட்டுத் தன் கணவனது கையைப் பிடித்துக்கொண்டு, அவனை நோக்கி, ""நீங்கள் என்ன சொல்கிறீர்கள், துக்கமாயிருந்தீர்களா?'' என்று கேட்டாள். அவனது குரல் அவனது மன வேதனையைக் காட்டினாலும், அவன் சொன்ன வார்த்தைகள் ஆத்துமத்தின் கீதம்போல் தொனித்தன: ""சுவாமி, கடின பாடுகள் பட்டோம்; அதுதான் வாழ்வு; ஆனால், அவள் உங்களிடம் சொன்னபடி, சேசுநாதர் எங்களோடு இருக்கிறார் என்ற எண்ணத்தால் நாங்கள் எவ்வளவு சந்தோஷமாயிருந்தோம் என்று சொல்ல முடியாது. அவரே எஜமான். அவர் அவளை அழைத்துக் கொண்டு போகிறார். ஆனால், சீக்கிரம் என்னையும் அழைக்க வருவார்; அப்புறம் நாங்கள் இந்தச் சிறிய குடிசையில் அவரோடு பாக்கியமா யிருந்தது போலவே அதோ மோட்சத்தில் இருவரும் ஒன்றித்து, அவரோடு பாக்கியமாயிருப்போம்'' என்று பதிலுரைத்தான்.

இந்த வார்த்தைகளின் மேன்மையையும், அவைகளில் அடங்கி யுள்ள கருத்தின் உன்னதத்தையும் விவரித்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த ஏழை மக்கள் இருவரும் அரசாட்சி ஸ்தாபகத் தின் கருத்தையும் நோக்கத்தையும் சரிவரக் கண்டுணர்ந்து, அதற்குத் தகுந்த வண்ணம் வாழ்ந்தார்கள். தங்கள் பரிதாபமான குடிசையில், சேசுநாதரைத் தங்கள் அரசரும், இணைபிரியாத நண்பருமாக ஆக்கிக் கொண்டார்கள்; அவர்களது தேவனும் சகலமும் அவரே. பக்தியும், படிப்புமுள்ள அநேகரை விட இவ்விருவரும் சுவிசேஷத்தை நன்றாய் அறிந்திருந்தார்கள். அந்தக் குடிசையில் எப்போதும் மூன்று பேர் இருந்தார்கள்; சேசுநாதரும், அவரது இரு நண்பர்களும்.

நாட்டுப்புறத்தில் வசித்த ஓர் ஏழைப் பெண் எழுதின கடிதத்தை இப்போது படித்துக் காட்டுகிறேன்: ""சுவாமி, இந்த எளிய குடிசையில் அரசாட்சி ஸ்தாபகம் செய்த நாள் துவக்கி, நான் சேசு நாதருடைய வீட்டில் வசிப்பவளாக உணர்கிறேன். ஏனெனில் அந்த நாளில் நான் அனைத்தையும் அவருக்குக் கையளித்து விட்டேன். எனது பூக்கள், கோழிகள், என் கணவர் எல்லாம் அவருக்குச் சொந்தம். அது முதல் இராஜ அரண்மனையில் நான் வசிக்கிறேன். அவர் எனது காணிக்கையை ஏற்றுக்கொண்டார் என்று எனக்குத் தெரியும்; ஏனெனில் அந்த நாளிலிருந்து என் வாழ்வை அவர் முற்றிலுமாக மாற்றி விட்டார். நாங்கள் இப்போது எங்களுக்காக அல்ல, அவருக்காகவும், அவரிலும் வாழ்கிறோம்.''

ஓர் ஏழை வேலைக்காரப் பெண் எனக்கு அனுப்பின கடிதத்தைப் பற்றிப் பல தடவைகளில் நான் பிரசங்கத்தில் சொல்லியிருக் கிறேன். அவள் எழுதினதாவது: ""அரசாட்சி ஸ்தாபகத்தைப் பற்றி நீங்கள் சொன்ன பிரசங்கத்தை இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் கேட்டுக் கொண்டிருந்தேன். இன்று எனக்குக் கலியாணமாயிற்று. பணக்காரர் கலியாண விருந்து என்று சொல்கிற உணவு முடிந்ததும் இதை எழுதுகிறேன். ஏழைகளாகிய நாங்கள், நீங்கள் வெகுவாய் எடுத்துரைத்த தெய்வீக நண்பரை விருந்துக்கு அழைத்தோம். கானா வூர்க் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டவரை நானும் என் கணவரும் சேர்ந்து இந்த முக்கியமான வேளையில் எங்கள் அரசராக ஸ்தாபித் துக் கொண்டோம். நீங்கள் சொன்னபடி, ஒரு மணி நேரத்துக்கல்ல, எங்கள் ஜீவிய காலம் முடியும் வரைக்கும் அவர் எங்கள் நண்பரும், எஜமானருமாயிருக்கும்படி அவரை மன்றாடினோம். சுவாமி, எங்களை ஆசீர்வதித்து, எங்கள் காணிக்கையை உறுதிப்படுத்துங்கள். இன்பத்திலும், துன்பத்திலும் திரு இருதய நாதரே எங்கள் ஏக அரசரும், நண்பருமாயிருப்பார். எங்கள் சிறிய வீடு அவருக்குச் சொந்தம், அவர் எங்களுக்குச் சொந்தம். '

அவள் எழுத்துப் பிசகாய்க் கிறுக்கிக் கிறுக்கி எழுதியிருந்ததை யெல்லாம் நான் இப்போது சொல்ல முடியாது; கிறுக்கி எழுதியிருந் தாலும், அதில் உள்ள படிப்பினை வெகு நேர்த்தியானது. அந்தக் கடிதத்தை என்ன செய்தேன் என்று தெரியுமா? பரிசுத்த பிதா பாப்பரசர் 15-ம் ஆசீர்வாதப்பருக்கு அதை அனுப்பி, ""ஞானப் பிதாவே, நான் போதிக்கும்படி நீங்கள் எனக்குக் கற்பித்த சுவிசேஷத்தை ஓர் ஏழை வேலைக்காரப் பெண் எவ்வளவு நேர்த்தியாய்க் கண்டு பிடித்திருக்கிறாள் என்று பாருங்கள்'' என்று எழுதினேன். ஞானப் பிதா அந்தக் கடிதத்தை வாசிக்கும்போது புன்முறுவல் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்திருப்பார் என்று நிச்சயமாயிருக்கிறேன்.

இப்போது சொல்லப் போகிற நிகழ்ச்சியும் வெகு உருக்க மானது. மிகவும் நல்ல கத்தோலிக்கனான குடும்பத் தலைவன், வெள்ளிக்கிழமையன்று அரசாட்சி ஸ்தாபகம் செய்ய வேண்டு மென்று தீர்மானித்திருந்தான். எதிர்பாராத விதமாய்த் திடீரென்று கடின வியாதி கண்டு, புதன்கிழமை இறந்து போனான். ஆனால் தனது மரணத்தால் நேரிடும் வெற்றிடத்தைத் திரு இருதய ஆண்டவர் பூர்த்தி செய்யும் வரை, தன் சடலத்தைக் கல்லறைக்குக் கொண்டு போகக் கூடாதென்று சாவதற்கு முன் தன் மனைவியிடம் தெரிவித் திருந்தான். ""நான் போனபிறகு, விசேஷ விதமாய் சேசுநாதர் என் வீட்டின் எஜமானரும், எல்லாமுமாயிருக்க வேண்டும்'' என்று சொல்லியிருந்தான். சடலத்தைக் கல்லறைக்குத் தூக்கிச் செல்லும் துயரத்திற்குரிய நேரம் நெருங்கி வந்தது. சவப்பெட்டியை வீட்டி லிருந்து அப்புறப்படுத்தப்போகும் சமயத்தில், விதவை தன் பிள்ளை களோடு வந்து, ""ஒரு நிமிடம் பொறுங்கள், பொறுங்கள்'' என்று கத்தினாள். இது எல்லோருக்கும் வியப்பாயிருந்தது. அதன்பின் அழகாய்ச் சட்டம் கட்டிய அரசரின் படம் ஒன்றைக் கொண்டு வந்து, சவப்பெட்டிக்கு மேலாய் வைத்து, ""அரசாட்சி ஸ்தாபகம் செய் யாமல் கல்லறைக்குத் தன் சடலத்தைக் கொண்டு போகக் கூடா தென்று அவர் தமது கடைசி விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். என்னோடும், என் மக்களோடும் சேர்ந்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும்படி, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று சொல்லவே, விசுவாச மந்திரத்தையும், சடங்கு முறையில் குறிப்பிட் டிருக்கிற மற்ற ஜெபங்களையும் எல்லோரும் சொல்லி முடித்தார்கள். அதன்பின், ""இப்போது நீங்கள் அவரது சடலத்தைத் தூக்கிச் செல்ல லாம். அவர் இனி சேசுவின் இருதயத்தில் எங்கள் மத்தியில் தங்கி யிருப்பார்'' என்று அழுகைக் குரலுடன் அறிவித்தாள். சேசுநாதர் நமது இல்லத்தில் இருக்கும்போது, துன்பத்தைச் சகிப்பது எவ்வளவு சுலபம், நாம் சிந்தும் கண்ணீர் பரிசுத்தமாயும், அமைதியாயும் இருக்கும்.

பயங்கரமான இரவு வேளையில், நடுக்கத்துக்குரிய ஒரு பூமி அதிர்ச்சி உண்டான சிறிது நேரத்திற்குப் பின், அரசாட்சி ஸ்தாபகம் செய்திருந்த ஒரு குடும்பத்தைத் தேடிப் போனேன். நான் தேடிப் போன சிநேகிதர் இடிந்து விழுந்து கிடந்த தங்கள் வீட்டு அழிவின் மத்தியில் அமைதியாக நின்று கொண்டிருந்ததைக் கண்டேன். ""சுவாமி, எல்லாம் அழிந்துபோயிற்று. பெத்தானி மாத்திரம் இருக் கிறது. அரசாட்சி ஸ்தாபக தினத்தன்று, நீங்கள் சொல்லிக் காட்டின சமாதானமும், சந்தோஷமும் நீடித்திருக்கின்றன. பெத்தானி அழிவுறாது. ஏனெனில் அதன் உயிர், அதன் சந்தோஷ சமாதானம் சேசுநாத ரல்லவா?'' என்று சொன்னாள் குடும்பத்தின் தாய்.

இந்தக் கருத்துடன் உங்கள் வீட்டில் அரசாட்சி ஸ்தாபகம் செய்திருப்பீர்கள் என்றால், நமது ஆண்டவர் தமது இருதய நண்ப ரிடம் கேட்டிருப்பவைகளையும், அவர் அவர்களுக்கு அளித் திருக்கிற வாக்குத்தத்தங்களையும் மறக்க மாட்டீர்கள் என்று சொல்லத் தேவையில்லை. தலைவெள்ளிக்கிழமை அநுசரிப்பு, அடிக்கடி பரிகார நன்மை வாங்குதல், திருமணி முயற்சி, இவை முக்கியமானவை. கடைசியாய், சேசுவின் திரு இருதயத் திருநாளைத் தகுந்த விதமாய்ச் சிறப்பியுங்கள்; காலையில் பக்தியுடன் திவ்விய நன்மை உட்கொண்டு, மாலையில் வீட்டில் திருநாள் கொண் டாடுங்கள். பிள்ளைகள் இருப்பார்களாகில், அவர்களை உற்சாகப் படுத்தத் தக்க விதமாய்க் குடும்பக் கொண்டாட்டம் ஒன்று செய்யத் தவற வேண்டாம். இவ்விதம் செய்வதால் சேசுவின் திரு இருதயத் திருநாள் பக்தியுள்ள கத்தோலிக்கரிடையில் மெய்யாகவே குடும்பப் பரம்பரையாய் நடந்து வருமென்று சந்தேகமறச் சொல்லலாம். அந்த வெள்ளிக்கிழமையில், பீடமும், வீடும், பரிசுத்த சந்தோஷத்தால் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்! குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் ஒன்றுகூடியிருக்கக் கூடிய நேரம் பார்த்து, திரு இருதயப் படத்திற்கு முன்பாக, அரசாட்சி ஸ்தாபக முயற்சியைப் புதுப்பி யுங்கள்.

உங்களுக்கு ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்தி, இதை முடிக் கிறேன். இந்தப் போதகம் தேவபராமரிப்பால் ஏற்பட்டது. இது உயிர் கொண்டு, ஒழுங்குடன் அமைந்து, எங்கும் பரவ வேண்டும் என்பது அர்ச். பாப்பானவருடைய விருப்பம். இது மிகவும் அவசியமும், முக்கியமுமானதென்று கிறீஸ்துநாதரின் பிரதிநிதி எண்ணுகிறார். ஏனெனில் அரசாட்சி ஸ்தாபகமானது சுபாவ வாழ்வின் ஊற்றாகிய இல்லத்தையும், தேவ உயிருக்கும் வரப்பிர சாதத்திற்கும் ஊற்றாகிய சேசுவின் திரு இருதயத்தையும், ஒரேயொரு நீர்த் தாரையாக இணைத்து விடும். பார-லே-மோனியாவில் தெய்வீக எஜமானர் நம்மிடம் கேட்டவைகளை நாம் தாராளமாகச் செய்து வருவோ மானால், அவர் செய்த தெய்வீக வாக்குத்தத்தங்களை இரக்க மிகுதியால் நிறைவேற்றுவார் என்பது நிச்சயம்.