பாத்திமா காட்சிகள் - காணிக்கைப் பணம்

தேவ அன்னை காட்சி தந்த இடத்தில் ஒரு மேசை, அதன் மேல் திரி வைக்கும் தண்டுகள் இரண்டு, பூக்கள் இவற்றை மரிய கரெய்ரா என்ற பெண் அன்னைக்கு ஒரு நேர்ச்சை போலக் கொண்டு வந்திருந்தாள். 

நான்காம் காட்சி தடைப்பட்ட அன்று கூட்டத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பில் மேசை கவிழ்க்கப்பட்டு விட்டது. அது மட்டுமல்ல, அதன்மேல் யாத்ரீகர்கள் போட்ட காணிக்கைப் பணமும் எங்கும் சிதறிக் கிடந்தது.  மரிய கரெய்ராவுக்குத்தான் அந்தப் பணப் பொறுப்பு என்று கூட்டத்தில் பலர் வற்புறுத்தி விட்டுச் சென்றனர்.  

சிதறிக் கிடந்த நாணயங்களை எல்லாம் அவள் பொறுக்கிச்சேர்த்து எண்ணிப் பார்த்த போது 1340 ரேயிஸ்கள் தேறின! மரியாவுக்கு இப்பணத்தை என்ன செய்யவென்று தெரியவில்லை!

மறுநாள் மரிய கரெய்ரா இப்பணத்தை எடுத்துக்கொண்டு மார்ட்டோவிடம் சென்று, அதை வைத்துக்கொள்ளும்படி கேட்டாள்.  அவர் மறுத்து விட்டார்.  லூஸியாவிடம் அதைக் கொண்டு கொடுத்தாள் மரியா. “ஐயோ! ஆண்டவர் என்னைக் காப்பாற்றட்டும்!  இது எனக்கு வேண்டாம்” என்று லூஸியா கூறி விட்டாள்.  

பாத்திமா பங்குக் குருவிடம் பணத்தைக் கொண்டு சென்றாள் மரியா. அவரும் பெற்றுக் கொள்ள மறுக்கவே, அவள், “அப்போ எனக்கேன் இந்தப் பாரம்? இந்தப் பணம் எங்கே கிடந்ததோ அங்கேயே கொண்டு போய்ப் போட்டுவிடப் போகிறேன்” என்று புறப்பட்டாள்.  

“அப்படிச் செய்யாதே, இப்பணத்தை என்ன செய்வதென்று முடிவாகும் வரை நீயே வைத்திரு. அல்லது வைத்துக் கொள்ளக் கூடிய யாரிடமாவது கொடுத்து வை” என்று கூறினார் பங்குக் குரு.  எனவே மரியா பணத்தைத் தன் வீட்டிற்குக் கொண்டு போய் ஒளித்து வைத்தாள்.

இதனால் பலர் அவளை இதனிமித்தம் சந்தேகப்பட ஆரம்பித்தார்கள். ஒரு நாள் சில மனிதர்கள் காட்சித் தலத்தில் தாங்கள் ஒரு கோவில் கட்டப் போவதாகவும், அதற்கு அப்பணத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் மரியாவிடம் கேட்டார்கள்.  மரியா கொடுக்க மறுத்து விட்டாள். 

இரண்டாம் முறையாக பங்குக் குருவிடமே பாரத்தைத் தள்ளிவிட வேண்டுமென்று மீண்டும் கொண்டுபோய்க் கொடுத்தாள். அவரோ ஒரேயடியாக மறுத்து விட்டார்.  லூஸியாவின் தந்தைக்குச் சொந்தமான நிலத்தில்தானே பணம் சேர்ந்தது, எனவே அவரிடம் கொடுக்கலாம் என நினைத்தாள் மரியா.  அதுவும் இயலவில்லை.  

இறுதியாக லூஸியாவைக் கண்டு, இப்பணத்தை என்ன செய்வதென்று தேவ அன்னையிடமே கேட்டுச் சொல்லுமாறு கூறினாள்.  லூஸியாவும் அதற்கு இசைந்தாள்.

சக்தியுடையவர்களாயிருக்கிற கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.