பாத்திமா காட்சிகள் - வேதசாட்சியம்

குழந்தைகள் மூவரும் ஆர்ட்டுரோவின்முன் நிறுத்தப் பட்டனர்.  அவர் முகம் எரிந்து போயிருந்தது.

“அந்த இரகசியம் என்ன? சீக்கிரம் சொல்லுங்கள்” என்று வெடித்தார் ஆட்சித் தலைவர்.

“ஏன், சொல்ல மாட்டீர்களோ?  பேசவும் மாட்டீர்களோ?  என்ன தைரியம்!” என்றார் மீண்டும்.

குழந்தைகள் மூவரும் பயந்துகொண்டே வாய்திறவாமல் நின்றார்கள்.  இரகசியத்தைச் சொல்ல முடியாது.  என்ன பதில் சொல்வது? அவர்களுக்கு ஒன்றும் தோன்றவில்லை. தேவ அன்னையின் நினைவு தவிர அவர்களால் வேறு எதுவும் நினைக்கவும் முடிய வில்லை.  அந்த அம்மா சொல்லக் கூடாது என்றார்கள்தானே?  இவரிடம் எப்படிச் சொல்வது...?

“சரி, உங்களைக் காப்பாற்ற நினைத்தேன்.  நீங்கள் நகர ஆட்சிக்குக் கீழ்ப்படிய மாட்டீர்கள் இல்லையா?  உயிரோடு உங்களைக் கொதிக்கும் எண்ணைக் கொப்பறையில் போடுகிறேன்” என்று கோபத்துடன் கூறிய ஆர்ட்டூரோ, மிகச் சத்தமாக, “யார் அங்கே?” என்று கர்ஜித்தார்.  உடனே ஒரு கதவு திறந்தது.  கோரமான முகத்தையும், அரக்க தோற்றத்தையுமுடைய பயங்கர மனிதன் ஒருவன் வந்தான்.

“என்னாங்க?” என்று அரோசிகமான கடுங்குரலில் கேட்டான்.

“எண்ணை கொதித்து விட்டதா என்ன?” 

“ஆமா, நல்லா கொதிக்குது.” 

“குமிழி விட்டுக் கொதிக்கிறதா?” 

“அப்படியே கொதித்து இளகிப் போய் நிற்குது.” 

“இவளைக் கொண்டு போடு உள்ளே” என்று ஜஸிந்தாவைக் காட்டினார் ஆர்ட்டூரோ.

அந்த பயங்கர மனிதன் ஜஸிந்தாவைப் பிடித்தான்.  அவள் மற்ற இருவரிடமும் ஒரு வார்த்தை சொல்லக் கூட சமயம் கொடுக்காமல் அவளைத் தூக்கிச் சென்றான்.

வந்து விடுமோ என்று பயந்த வேதசாட்சிய நேரம் திடீரென்று வந்து விட்டது.  லூஸியா உள்ளம் துடிக்க ஜஸிந்தாவுக்காக ஜெபித்தாள்.  தன் தங்கை எண்ணெயில் விழுந்து செத்தாலும் அந்த இரகசியத்தை மட்டும் சொல்லி விடக்கூடாது என்று அவளுக்காக பிரான்சிஸ் ஒரு அருள்நிறை மந்திரம் சொன்னான்.  இதற்குள் ஜஸிந்தா எண்ணெயில் வெந்து இறந்திருப்பாள்!  அவள் செத்தால் நாமும் அப்படியே சாவோம் என்றே இருவரும் எண்ணினார்கள்.

“லூஸியா, இவர்கள் நம்மைக் கொன்றால் கொல்லட்டும்.  நாம் நேரே மோட்சம் சென்று விடலாம்” என்றான் பிரான்சிஸ் மிக மெதுவான குரலில்.

அந்தக் கதவு மீண்டும் திறந்தது.  அப்பயங்கர உருவம் வந்து, “அது பொரிஞ்சு செத்து விட்டதுங்க. அடுத்ததைக் கொண்டு போகட்டுங்களா?” என்று ஒருவித கோர இளிப்புடன் கூறியபடி பிரான்சிஸை முரட்டுத்தனமாய் இழுத்துக்கொண்டு சென்றான் அம்மனிதன்.

லூஸியா மட்டும் நின்று கொண்டிருந்தாள்! ஆர்ட்டுரோ அவளை வெறுப்புடன் நோக்கி: “அடுத்தது நீதான், தெரிகிறதா பிள்ளை? அந்த இரகசியத்தை இப்போதாவது சொல்லிவிடு” என்றார்.

லூஸியா உறுதியுடன்: “சொல்ல மாட்டேன்.  சாகிறேன்” என்றாள்.

“அப்படியா? அப்போ சாகு!” 

இதற்குள் அப்பயங்கர மனிதன் வந்து லூஸியாவையும் இழுத்துச் சென்றான்.

இழுத்துச் சென்ற அவன், ஓர் அறையைத் திறந்து, லூஸியாவை உள்ளே தள்ளி விட்டுப் போய் விட்டான்!  அங்கே நின்றார்கள் பிரான் சிஸும், ஜஸிந்தாவும்!  மூவரும் ஒருவரையயாருவர் கட்டிக்கொண்டு மகிழ்ச்சியால் நிறைந்து போனார்கள். தன்னைத் தவிர மற்ற இருவரும் எண்ணெய்க் கொப்பறையில் இறந்து விட்டதாக எண்ணிய அவர்கள் ஒவ்வொருவருக்கும் இது மிகப் பெரிய ஆறுதலாயிருந்தது.  ஆர்ட்டுரோ இப்படி ஒரு நாடகம் நடத்தியதை அப்போதுதான் குழந்தைகள் அறிந்தார்கள்.

மரணத்திற்கும் அஞ்சாத திடம் இச்சிறுவர்க்கு எப்படி வந்தது என்று ஆர்ட்டூரோவால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொள்ளவும் மனமில்லை.  அன்று இரவும் அவர் களை முன்போலவே அதே அறையில் அடைத்து வைத்தார்.  மறுநாள் ஆட்சி மன்றக் கட்டடத்திற்கு அவர்களைக் கொண்டு போனார்.  

அங்கு மீண்டும் ஒரு முறை முயன்று பார்த்தார். குழந்தைகள் இனியுமா அவருக்கு அஞ்சப் போகிறார்கள்!

எனவே குழந்தைகளை ஒன்றும் செய்ய முடியாதென்று கண்ட ஆட்சித் தலைவர் அவர்களை பாத்திமா பங்குக் குருவின் வீட்டிற்குத் திருப்பி அனுப்பி விட்டார்.  அன்று புதன்கிழமை, ஆகஸ்ட் மாதம் 15-ம் நாள்: தேவ அன்னை மோட்சம் சென்ற மகத்தான நாள்!

மனுவேல் மார்ட்டோவுக்கும் ஒலிம்பியாவுக்கும் இரண்டு இரவும், இரண்டு பகலும் சித்திர வேதனை.  பிரான்சிஸும், ஜஸிந்தாவும் என்ன ஆனார்களோ? அவர்களைப் பற்றி எந்தச் செய்தியும் வரவில்லை.  ஒருவேளை ஆர்ட்டுரோ அக்குழந்தைகளை அவ்ரம் பட்டணத்திற்குக் கொண்டு போயிருக்கக்கூடும் என்று கேள்விப்பட்டபோது, அவர்கள் அதிகம் கலங்கினார்கள்.  

அவ்ரம், வேத எதிர்ப்புக்குப் பெயர்போனது.  தன் பிள்ளைகளை அநியாயமாக ஆர்ட்டூரோ கொண்டு போய்விட்டதாக வழக்குத் தொடரவும் கூடாதிருந்தது. எனவே இப்பெற்றோர் தங்கள் பிள்ளைகள் இருவரையும் சர்வேசுரனுடைய பாதுகாப்பில் விட்டுவிட்டு, தாங்கள்  அவர்களுக்காக ஜெபமாலை ஜெபித்து மன்றாடிக் கொண்டிருந்தார்கள்.

ஆகஸ்ட் மாதம் 15-ம் நாள் மார்ட்டோ தம்பதிகள் தாங்க முடியாத துயரத்துடன் பாத்திமாவுக்கு பலிபூசை காணச் சென்றார்கள். பூசை முடியவும் குழந்தைகள் மூவரும் பங்குக் குருவின் இல்லத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்ட மார்ட்டோ அங்கு விரைந்து சென்றார்.  “உம் பிள்ளைகள் இதோ” என்றான் அவ்ரம் நகரிலிருந்து வந்திருந்த சேவகன்.  கண்ணீருடன் மார்ட்டோ ஜஸிந்தாவைத் தூக்கிக் கையில் வைத்துக்கொள்ள, பிரான்சிஸும், லூஸியாவும் அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.

நடந்தவைகளைக் கவனித்து வந்த மக்கள் மத்தியில் ஒருவிதமான முறுமுறுப்புச் சத்தம் ஆரம்பித்தது.  வாலிபர்கள் குறிப்பாக, ஆர்ட்டூரோ சதிகளுக்கு பங்குக் குருவின் ஒத்துழைப்பும் உண்டென்று தவறாய்ப் புரிந்து கொண்டதால், கூட்டத்தில் அவருக்கு எதிரான கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்தக் கொந்தளிப்புக்கு மார்ட்டோதான் காரணம் என்று கருதினார் பங்குக் குரு. ஆனால் மார்ட்டோ தம் குரலை எழுப்பிக் கூட்டத்தைப் பார்த்து இவ்வாறு பேசினார்:

“நண்பர்களே! ஒன்றும் செய்யாதீர்கள். உங்களில் சிலர் பங்குத் தந்தைக்கும், சிலர் ஆட்சித் தலைவருக்கும் எதிராக சத்தமிடுகிறீர்கள்.  ஆனால் யாரையும் இவ்வி­யத்தில் குறைகூற முடியாது. குற்றம் எல்லாம் கடவுளை நம்பாத குற்றம்தான்.  இதெல்லாம் சர்வேசுரனால்தான் அனுமதிக்கப்பட்டுள்ளன” என்றார்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட பங்குக் குருவின் சந்தேகம் தீர்ந்தது.  அதற்குள் சந்தையிலிருந்து தன் வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்த ஆர்ட்டூரோ கீழே இறங்கி, “மார்ட்டோ, இப்பேச்சை நிறுத்தும்” என்றார்.  தன்னை எதிர்த்து மார்ட்டோ பேசுவதாக அவர் நினைத்து விட்டார். ஆனால் தனக்குப் பின்னால் கம்புகளுடன் வந்து கொண்டிருந்த வாலிபர்களை ஆர்ட்டூரோ கவனித்ததும் மார்ட்டோவை சமாதானப்படுத்துவது போல், “மார்ட்டோ, என்னுடன் வாரும். சற்று ஒயின் அருந்தலாம்” என்று அழைத்தார் ஆட்சித் தலைவர். 

மார்ட்டோ வேண்டாமென்று மறுத்தார். ஆனால் அதற்குள்ளாக வாலிபர் படை நெருங்கி வந்து விட்டது. ஏதாவது உபாயம் செய்யப்படாவிட்டால் ஆர்ட்டூரோ அடிக்குத் தப்ப மாட்டார்.  எனவே மார்ட்டோ அவரிடம், “சரி, உங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்.  இருவரும் உடனே சற்று நடந்துபோய் கல்லறைத் தோட்டத்திற்கு அருகேயுள்ள ஒயின் கடைக்குள் சென்றார்கள்.

“உம் பிள்ளைகளை நான் எப்படி நடத்தினேன் என்று அவர் களைக் கேட்டுப் பாரும்” என்றார் ஆர்ட்டூரோ.

“ஆமாம். அதில் என்ன சந்தேகம் கேட்பதற்கு? ஆனால் இந்தக் கூட்டம் அதை விட அதிகமான கேள்விகளை உம்மிடம் கேட்கும் போலிருக்கிறது” என்றார் மார்ட்டோ.

ஆட்சித் தலைவர் திரும்பிப் பார்த்தார்.  கூட்டம் நிற்பது ஏன் என்று உணர்ந்தார். மிகச் சாதுர்யமாக, “உரொட்டி கொண்டு வா, ஒயின் கொண்டு வா” என்று கடைக்காரனுக்கு உத்தரவிட்டார். மார்ட்டோவும் தானும் மிகவும் நட்புரிமையுடன் இருப்பதாக கூட்டத்திற்கு நடித்துக் காட்டினார்.

பேச்சோடு பேச்சாக குழந்தைகள் தன்னிடம் அந்த இரகசியத்தைக் கூறி விட்டார்கள் என்றும் ஆர்ட்டூரோ சொன்னார்.

“சரிதான்! அவர்கள் தங்கள் தந்தையிடமும், தாயிடமும் கூறாததை ஆட்சித் தலைவரிடம் போய்ச் சொல்லியிருப்பார்கள்.  இதை அப்படியே நம்புகிறேன்” என்றார் மார்ட்டோ கிண்டலாக.

மார்ட்டோ சிறிது ஒயின் மட்டும் பருகினார்.  ஆட்சித் தலைவர் அவரைத் தன்னுடன் வண்டியில் ஏற்றிக் கொண்டு தபால் நிலையம் வரை சென்றார். கூட்டத்திலிருந்த மக்கள் மார்ட்டோவையும் ஆட்சித் தலைவர் பிடித்துச் செல்கிறார் என்று பேசிக் கொண்டார்கள்.

இவை பாத்திமாவில் நடந்து கொண்டிருக்கும்போது, மூன்று குழந்தைகளும் நேரே கோவா தா ஈரியாவுக்குச் சென்று அன்னை தோன்றும் அஸின்ஹேரா மரத்தடியில் ஜெபமாலை சொல்லிக் கொண்டிருந்தார்கள்!  இன்னும் வீட்டுக்குச் செல்லவில்லை!  தேவ அன்னையைச் சென்ற 13-ம் தேதி (ஆகஸ்ட்) பார்க்கத்தான் முடியவில்லை. குறைந்தது அந்த இடத்திற்காவது சென்று ஜெபிக்க வேண்டும் என்ற ஆவலில் சென்றார்கள்.  

அந்த அஸின்ஹேரா மரம் மொட்டையாக்கப்பட்டிருந்தது!  சில இலைகள் மட்டுமே காணப் பட்டன. ஆகஸ்ட் 13-ம் நாள் கூடிவந்த கூட்டம் அம்மரத்தின் இலைகளை நினைவுச் சின்னமாகக் கொய்து சென்று விட்டது.