நவம்பர் 6

உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் சர்வேசுரனைக் காணாமல் படுகிற வேதனையைக் காண்பிக்கிற விளக்கமாவது.

தியானம்.

அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராய் இருக்கிற சர்வேசுரனை முகமுகமாய் தரிசித்து அவருடன் ஒருமைப்பட்டு அவரைக் குறையாத நேசத்தால் அனுபவிக்கிறதே மோட்ச பேரின்ப பாக்கியம் தான் . அவரைத் தரிசியாமலும் , அவரிடத்தில் நம்பிக்கை இல்லாமலும் ,அவரை ஊழியுள்ள காலம் நேசிக்கக் கூடாமல் இருக்கிறதே நரகந்தான் . இந்தப் பரம கடவுளைக் காணவும் நேசிக்கவும் அனுபவிக்கவும் கூடாமல் இருக்கிறது நரக வாசிகளுக்கு அவர்கள் படும் மற்ற வேதனைகளிலும் நூறாயிரம் பங்கு பெரிய வேதனையாம் என்று அர்ச் . கிரிசோஸ்தோம் அருளப்பர் திருவுளம் பற்றினார் . உத்தரிக்கிற ஆத்துமாக்களோவென்றால் தங்களுக்குக் கட்டளையிடப்பட்ட உத்தரிப்பு முடியும் வரை வெகு உபாதைகளை அனுபவிக்கிறதும் தவிர , தாங்கள் ஏகமாய் நேசிக்கும் சர்வேசுரனைத் தரிசிக்காமலும் அவரிடத்திலே சேரக் கூடாமலும் இருப்பார்கள் . சர்வேசுரனைக் காணாத வேதனை எவ்வளவு பெரிதென்று இப்போது கொஞ்சமாகிலும் கண்டுபிடிக்கப் பிரயாசைப்படக் கடவோம் . இந்த ஆத்துமாக்களுக்கு நேரிட்ட எந்த வருத்தங்களிலும் அதுவே விசேஷ வருத்தமும் பொறுக்கப்படாத ஆக்கினையுமாமென்று வேத பாரகர் எல்லோரும் நிச்சயித்துச் சொல்லுகிறார்கள் .

நல்ல தாய் தகப்பனை வெகு வருஷமாய்க் காணாத மகனானவன் அவர்களிடத்திலே திரும்பிச் சேரும் சமயத்தில் போகாதபடிக்கு வழியில் நிறுத்தப்பட்டால் எவ்வளவு வேதனை அனுபவிப்பான் ? ஒரு பெரிய இராச்சியத்தை ஒருவன் கைக்கொள்ள வரும்போது யாதோர் தடையினால் போகக்கூடாதிருப்பானேயாகில் அவனுக்குண்டான விசனம் எவ்வளவு பெரிதாய் இருக்கும் ? தூரப் பயணத்துக்கு யாத்திரையாய்ப் போனவன் எவ்வகைத் துன்பங்களையும் இக்கட்டுக்களையும் பட்டு பெரும் புயல்களுக்கும் கடல் திருடருக்கும் தப்பித்து மிகுந்த திரவியங்களைச் சம்பாதித்து இறங்குதுறைச் சமீபத்தில் சேரும்போது யாதொரு காரணத்தால் கரையேறாதபடிக்கு நிறுத்தப்படுவானேயாகில் மனோவாக்குக்கு எட்டாத கசதி அனுபவிப்பானல்லோ ? அதைப் போல உத்தரிக்கிற ஆத்துமாக்கள் எல்லாவற்றையும் விட தாங்கள் நேசித்து ஆசிக்கிற சர்வ நன்மைத்தன்மை நிறைந்த சர்வேசுரனை அடையக் கூடாமலும் இவ்வுலக பூசல்களில் இருந்து தப்பித்து இவ்வுலக யுத்தங்களிலே ஜெயங்கொண்டு வந்திருந்தாலும் மோட்ச கரையிலேறவும் மோட்ச முடியைச் சூட்டவும் கூடாமல் இருக்கும் காரணத்திற்காக இந்தப் பரிசுத்த ஆத்துமாக்களுக்கு எப்பேர்ப்பட்ட துக்கமும் வருத்தமும் இருக்கும் என்று சொல்லத்தகுந்த தன்மை இல்லை

தமக்குப் பிரியமுள்ள மகனான சூசையப்பர் காணாமற் போனதினிமித்தம் பிதாப் பிதாவாகிய யாக்கொபென்பவர் யாதோர் ஆறுதலுமின்றி துக்கப்பட்டு பிரலாபித்து அழுது கொண்டு , என் குமாரனை இனி காணாமற் பிழைப்பேனோ என்பார் . தாவீது ராஜாவின் மகனான அப்சலோம் என்பவர் தன்னுடைய தகப்பனாரின் சமூகத்துக்குப் போகக்கூடாதென்கிறதைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டு , என் தகப்பனார் என் குற்றத்தைப் பற்றி இன்னும் நினைத்து தம்மிடத்தில் என்னை வரவொட்டாமல் இருப்பாரேயாகில் , என்னை வெட்டிச் சாகப் பண்ணினால் நல்லது என்பார். இவர்கள் அனுபவித்த துயரம் மகா பெரியது என்றாலும் , உத்தரிக்கிற ஆத்துமாக்கள் தங்களுக்குத் தகப்பனாருமாய் கடவுளுமாய் கதியுமாய் இரம்மியமுமாய் இருக்கிற சர்வேசுரனுடைய பிரதாபமுள்ள சமூகத்துக்கு வரக்கூடாதென்கிறதினால் அவர்கள் படும் துயரம் எம்மாத்திரம் கடினமானதென்று சொல்லுவாருண்டோ ? கண்டுபிடிப்பருண்டோ ?

பூர்வீக காலத்திலே ஏசா என்கிறவன் ஒரு பதார்த்தத்தைச் சாப்பிட வேண்டும் என்கிற ஆசையினாலே மூத்த மகனான தனக்குச் செல்லுஞ் சுதந்திரத்தைத் தன தம்பியான பிதாப் பிதாவாகிய யாக்கோபென்பவருக்கு விற்று விட்டான் . அப்படி அதோடு எவ்வித நன்மைகளையும் பெறுவிக்கும் தன் தகப்பனாருடைய விசேஷ ஆசீர்வாதத்தையும் இழந்து போனான் . மயக்கம் மாறிப் புத்தி தெளிந்து சகலத்தையும் பார்க்கும்போது இந்த நஷ்டமெல்லாம் தன் குற்றத்தினாலே தானே நடந்தது என்று நன்றாய் அறிந்து , தான் பட்ட துன்ப மிகுதியினாலே ஒரு துஷ்டமிருகம் ஊளையிடுகிறார்போலே அகோரமாய்க் கர்ஜித்து பயங்கரமாய்க் கதறி அபயசத்தமிட்டு பொறுக்கப்படாத விசனத்தை அனுபவித்தானென்று வேத புத்தகத்திலே சொல்லி இருக்கிறதாமே . இந்த மனுஷனுடைய வியாகுலம் மிஞ்சியதென்று காணப்பட்டாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் படும் துன்பமும் கிலேசமும் விசனமும் மனக்கவலையும் மேற்பட்டதாய் இருக்குமென்று சொல்வதற்குச் சந்தேகமில்லை .

ஏசா என்கிறவன் தன் போசனப்பிரியத்தாலும் வேணுமென்கிற மனதாலும் மேற்சொன்ன நஷ்டமெல்லாம் தனக்கு வந்ததைப் பற்றி அவ்வளவு கவலை காண்பித்தானே. அவ்வண்ணமே அந்த ஆத்துமாக்கள் தங்களுடைய புத்தியீனத்தாலேயும் சொற்ப காரணத்தினாலேயும் தாங்கள் தான் தங்களுடைய நிர்பாக்கிய நிலைக்குக் காரணமாய் இருக்கிறதைக் கண்டு அதிக வேதனைப்பட்டு வெகுவாய்ப் பிரலாபித்து தங்கள் பேரிலே முறையிடுவார்களாம். நரகத்தில் என்றென்றைக்கும் உபாதிக்கப்படுகிற பாவிகள் தாங்கள் இந்த குற்றங்களிலே விழுந்திருக்கிறது தங்களுடைய குற்றமல்லாமல் வேறல்லவென்று அறிந்ததினாலே இந்த நினைவு அவர்களை இடைவிடாது அரிக்கும் மனப்புழுவைப் போலேயும் ஓயாமல் வருத்தப்படுத்தும் மனக்கண்டனையை போலேயும் இருக்குமல்லவா ?இந்த நினைவு அவர்கள் படும் வேதனையை எவ்வளவு அதிகரிக்குமென்று சொல்லக் கூடுமோ ?

உத்தரிக்கிற ஆத்துமாக்களோவென்றால் தங்களுடைய உபாதை வருத்தங்கள் எல்லாம் தங்களாலே வந்தது கண்டு அப்படியே அதிக கஷ்டப்படுவார்கள் என்கிறது தப்பாது . ஆகையினால் அவர்கள் தங்கள் பேரில் முறையிட்டு "அய்யய்யோ ! அப்படி அந்தப் பாவங்களைக் கட்டிக் கொண்டோம் ? எப்படிக் கேட்டுப் போனோம்  ? எப்படி இந்த நிர்பாக்கிய ஸ்தலத்துக்கு வந்தோம் ? எப்படி தேவ ஊழியத்தில் அசட்டையாய் இருந்தோம் ? எப்படிப் புண்ணிய வழியில் சுறுசுறுப்பில்லாமல் நடந்தோம் ? எப்போது எங்கள் பேரில் வந்த கோபாக்கினை அமரும் ? எப்போது மோட்ச பேரின்பத்தை அடைவோம் ? எப்போது எங்களுக்குச் சகல நன்மையை இருக்கிற சர்வேசுரனை முகமுகமாய் தரிசிப்போம் ? பூமியிலே வசிக்கிற புண்ணிய ஆத்துமாக்களே , எங்கள் பேரில் இரக்கமாய் இருங்கள் . எங்களுடைய நிர்பாக்கியத்தைப் பாருங்கள் , இந்த நிற்பக்கியத்தை முடியப்பண்ணுகிறது உங்களாலே கூடுமான காரியம் . ஓ! எங்களை மறவாதேயுங்கள் என்று இந்த ஆத்துமாக்கள் புலம்புவது போல நினைக்கத் தக்கதாய் இருக்கிறது .

கிறிஸ்துவர்களே ! இந்த ஆத்துமாக்களின் பேரில் உங்களுக்கு இரக்கம் வரும்படியாய் இப்போது சொன்னதை நன்றாய் தியானித்தால் போதுமென்றிருக்கிறோம்.

இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்.

சேசுவே ! எங்கள் பேரில் தயவாயிரும்

செபம்.

மட்டற்ற கிருபை உடைத்தான சர்வேசுரா ! உம்முடைய கிருபையை நம்பி மரித்தவர்களுடைய ஆத்துமாக்களை கிருபாகடாட்சமாய்ப் பார்த்து மூன்று சுத்தவாளரை சுவாலையிலே தேற்றினார்போல இந்த ஆத்துமாக்களை இளைப்பாறப்பண்ணி பேரின்ப பாக்கியத்தைக் கொடுக்கும் உம்மிடத்திலே சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று உம்மை பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்

ஆறாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது :

உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒன்றிரண்டு பிச்சைக்காரருக்குச் சாப்பாடு கொடுக்கிறது

புதுமை.

அர்ச் ஐந்து காயப் பிரான்சீஸ்கு உண்டு பண்ணின சபையிலே அந்தொனிக் கோர்சொ என்ற ஒரு சந்நியாசி இருந்தார் . அவர் சபையிலே தாம் பண்ணின சுகிர்த புண்ணியங்களினாலும் தம்முடைய சரீரத்தை ஒறுத்துத் தாம் பண்ணின அகோர தவங்களினாலும் ஒரு செஞ்சுடரைப் போல விளங்கிக் கொண்டிருந்தார் . ஆகையினாலே அவரை எல்லோரும் பெரிய அற்சிஷ்டவராக எண்ணிக் கொண்டிருந்தனர் .அது இப்படி இருந்தாலும் அவருடைய காலம் முடிவுற்று செத்துப் போய் மோட்ச பேரின்பத்துக்கு உடனே போகாமல் உத்தரிக்கிற ஸ்தலத்தின் கடினமான சிறைச்சாலையில் நிறுத்தப்பட்டார் . அதிலிருந்து தேவ உத்தாரத்தின்படியே ஒருநாள் புறப்பட்டு அதிக துக்கபடுகிற மாதிரியாகவும் , பொறுக்கப்படாத வேதனைப்படுகிற மாதிரியாகவும் தாம் செத்த மடத்தில் வியாதியஸ்தரை விசாரிக்கும் சந்நியாசியாருக்குத் தம்மைக் காண்பித்தார் .

அந்த சந்நியாசியாரோ அந்த ஆத்துமத்தைக் கண்டு மிகவும் திகிலடைந்து பிரம்மித்துச் சொன்னதாவது :"சகோதரரான அந்தோனியாரே , நாங்கள் உம்மை மோட்ச பேரின்ப வீட்டில் இருக்கிறதாக எண்ணிக் கொண்டிருந்தோமே, நீர் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கிறதெப்படி? நீர் அவ்விடத்தில் படுகிற வேதனை என்னவென்று சொல்லுவீராக "என்றார் . அதற்க்கு அந்த ஆத்துமம் மறுமொழியாய் " நான் அவ்விடத்தில் இருவகை வேதனை அனுபவிக்கிறேன் . சொல்லிலடங்காத வருத்தத்தைக் கொடுக்கும் அக்கினி முதலான வாதனைகளைப் படுகிறேன் . ஆயினும் நான் இன்னும் எவ்வித நன்மையும் உடைத்தான கடவுளாகிய சர்வேசுரனைக் காணாமல் இருக்கிறேன் . இந்த வருத்தமானது மேற்சொன்ன எல்லா வேதனைகளுக்கு மேற்பட்டதாகவும் எந்த மனுஷனுடைய புத்தியினாலேயும் கண்டுபிடிக்கக் கூடாததாகவும் இருக்கிறது உண்மை தான் . நான் கடவுளான சர்வேசுரனைக் காணாதிருக்கும் அளவும்  என்னைப் போல நிர்பாக்கியமுள்ளவன் ஒருவனும் இல்லை .

ஆகையினால் நீர் என் பேரில் இரக்கமாய் இருந்து நமது சபையில் இருக்கிற சகல சகோதரர்களும் எனக்காக ஆண்டவரிடத்தில் வேண்டிக் கொண்டு என்னுடைய நிர்பாக்கியம் முடியும்படிக்குப் பிரயாசைப்பட வேணுமென்று மன்றாடுகிறேன் என்று சொல்லி மறைந்து போனார்

அவ்வாறே அச்சபை சந்நியாசியார்கள் இந்தச் செய்தியை அறிந்து மிகவும் அதிசயப்பட்டதுமல்லாமல் , அந்த ஆத்துமத்துக்கான தவ தான தர்மக்கிரியைகளைச் செய்து செபங்களைப் பொழிந்து அநேக தடவை திவ்விய பூசையை ஒப்புக்கொடுத்தார்கள்

கிறிஸ்துவர்களே ! ஒரு பெரிய அற்சிஷ்டவராக எல்லாப் புண்ணியங்களையும் பண்ணி அற்சிஷ்டவரைப் போலச் செத்த இந்த சந்நியாசியார் , மோட்சத்துக்கு உடனே போகாமல் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வெகுநாளாய் நிறுத்தப்பட்டிருக்கும் போது பாவச் சேற்றிலே உருண்டு புரண்டு அநேகம் பாவங்களைக் கட்டிக் கொண்ட நீங்கள் பாவசங்கீர்த்தனம் பண்ணிச் செத்தாலும் உத்தரிக்கிற ஸ்தலத்திலே உங்களுக்கு வரப்போகிற வேதனைகள் எவ்வளவென்று பார்த்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் நன்றாய் நினைத்து நேரத்தோடு வேண்டிய பரிகாரம் பண்ண வேண்டாமோ ?

அதற்குப் பிற்பாடு இவ்வுலக கவைகளில் சிக்கப்பட்ட நீங்கள் சர்வேசுரனை முகமுகமாய் தரிசிக்காமல் இருக்கிற வேதனை எவ்வளவு பெரிதென்று அறியாமல் இருந்தாலும் இது எல்லா வேதனைகளையும் விட பெரிதாய் இருக்கிறதென்று விசுவசித்து , இந்த வேதனைகளை அனுபவிக்கும் பாவங்களைச் செய்யாமல் இருக்கும்படிக்கு மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள் .

கடைசியிலே உத்தரிக்கிற ஆத்துமங்கள் அபய சத்தமிட்டு தங்களுக்கு உதவி பண்ண வேணுமென்று அவ்வளவு ஆசையோடு கேட்குமிடத்தில் நீங்கள் அந்த ஆத்துமாக்களுக்கு இரங்காமல் இருப்பீர்களோ ? உங்களுக்குக் கொஞ்சம் இரக்கமாய் இருந்தால் அவர்களுடைய நிர்பாக்கியம் அமரும்படிக்கு உங்களுடைய செபங்களையும் தபங்களையும் ஒப்புக் கொடுக்க வேண்டுமென்று அறியக் கடவீர்களாக

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.