நவம்பர் 7

உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நெருப்பில் வேதனைப்படுகிற விளக்கமாவது.

தியானம்.

செம்பொன் உலையில் சுத்தமாகிறதைப் போல உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நெருப்பிலே சுத்திகரிக்கப்பட்டு மோட்ச பேரின்பத்தை அடைவார்கள் என்று வேதபாரகர் ஒழுங்குடன் சொல்லுகிற சத்தியமாம் . சரீரத்தை விட்டு பிரிந்து போன ஆத்துமம் எப்படி நெருப்பிலே வாதிக்கப்படுமென்றால், சர்வேசுரனுடைய சர்வ வல்லபத்தால் புதுமையாக அப்படி மெய்யாகவே ஆகுமென்று அர்ச். அகுஸ்தீனுஸ் எழுதி வைத்தார் . ஆத்துமாக்களை சுட்டழிக்காமல் அவைகளை சுட்டெரித்து சுத்தமாக்குகிற இந்த நெருப்பு எவ்வளவு பெரிய வேதனை என்று சற்று நேரம் தியானிப்போமாக

நெருப்பினாலே வருகிற வேதனை எல்லா வேதனைகளை விடக் கொடியது என்று சிறு பிள்ளைகள் முதலாய்ச் சொல்லுவார்கள் அல்லவோ ? ஓர் இராச்சியத்தை சுதந்தரிக்க வேணுமென்றால் ஒன்றிரண்டு நாள் அல்லது ஒன்றிரண்டு மணிநேரம் நெருப்பிலே வேகவேணுமென்றிருந்தால் அதற்குச் சம்மதிப்பாருண்டோ ? இவ்வுலகத்திலுள்ள நெருப்பானது அவ்வளவு பயங்கரமான வேதனை கொடுக்கும்போது உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பு எப்பேர்பட்டதாய் இருக்கும்?

நெருப்பானது கற்பாறைகளையும் ,இரும்பு ,வெள்ளி, தங்கம் முதலான உலோகங்களையும் வைரக் கற்களையும் உருகப் பண்ணுமே . இந்த நெருப்பு உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பு என்று சொல்ல கூடுமோ ? அப்படி உத்தேசமாய்ச் சொல்ல முடியாது நேபுக்கோத்தநேசர்  மன்னன் மூன்று சுத்த வாலிபரைச் சுட்டெரிக்க நெருப்பு சுவாலையை ஏழு பங்கு அதிகமாய் மூட்டி எரிக்க வேணுமென்று மகா கோபத்தோடு கற்பித்தானே, அகோரமாய் எரியும் அந்த சுவாலையின் நெருப்பு உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பென்று சொல்லக் கூடுமோ ? அப்படிச் சொல்லவும் முடியாது

சோதோம் , கொமேர் பட்டணங்களில் இருந்த குடிகள் பெரும் பாவிகளாய் இருந்தபடியினாலே இந்தப் பட்டணங்களையும் சுற்றுப் பட்டணங்களையும் முழுதும் அழிக்கத்தக்கதாக சர்வேசுரனுடைய கோபத்தினாலே நெருப்பு மழை பொழிந்து இந்த நாடெல்லாம் அக்கினியிலே எரிந்து போனதே , இப்பேர்பட்ட அக்கினி உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்புக்குச் சரியொத்தது என்று சொல்ல முடியுமோ ? அதையும் சொல்ல முடியாது

சர்வசங்கார நாள் வரும்போது இவ்வுலகத்தையும் அதில் அடங்கிய மாட மாளிகைகளையும் ,ஊர் பட்டணங்களையும் மலை பர்வதங்களையும் சகல மனுஷரையும் அழிக்கத்தக்கதாக நெருப்பினாலே மழை பெய்து உண்டானதெல்லாம் ஏக அக்கினியாய் போய் சங்கரிக்கப்படும். அப்போது சகலத்தையும் சுட்டெரிக்கும் அந்த நெருப்பு உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்புக்கு ஒப்பனை என்று சொல்லுவது சரியோ? அதுவும் சொல்ல முடியாது

இப்போது காண்பிக்கப்பட்ட நெருப்புக்கு உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பு மேற்பட்டதாய் இருக்கிறதென்பது சாத்தியமாகையால் அதனுடைய அகோரத்தை விவரித்துக் காண்பிக்கிறது எந்த மனுஷனாலேயும் செய்யக் கூடிய தன்மை அல்ல . அதெப்படிஎன்றால் , சர்வேசுரனுடைய பிரதாபமுள்ள இலட்சணங்களை எல்லாம் அளவறுக்கப்படாத தன்மையாய் எல்லாவற்றிலும் மனுஷனுடைய புத்திக்கு மேற்பட்டதென்பது பரம சத்தியமாகும். அளவில்லாத அவருடைய நீதி கோபத்தினால் இந்த நெருப்பு உண்டாயிருக்கிறதல்லாமல் அளவில்லாத அவருடைய பரிசுத்த தனத்துக்குத் தக்கது ஆத்துமாக்களை சுத்திகரிக்க உண்டாயிருக்கிறது  . அதனாலே அதனுடைய அகோரம் அளவின்றி மட்டின்றி இடையின்றி உத்தரிக்கிற ஆத்துமாக்களைப் பிடித்து ,தீயாக்கி, அழிக்காமல் சுட்டெரித்து , எவ்வகையாலும் வருத்தப்படுத்தும் . அதனால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் தேவ சிநேகமும் நம்பிக்கையும் இல்லாமல் இருந்தால் உத்தரிக்கிற ஸ்தலம் நரகமென்று கருதப்படும் . அற்சிஷ்டவர்கள் முதலாய் இப்பேர்ப்பட்ட நெருப்பை நினைக்கும்போது பயந்து நடுங்கி ஐயையொவென்று கடின தபசு பண்ணுவார்களே . பெரிய பாவிகளாய் இருக்கிற நாம் அதற்குப் பயப்படாமல் இருக்கிறது எப்படி ?

மீண்டும் இந்த நெருப்பு சர்வேசுரனுடைய நீதியினாலே கொளுத்தப்பட்டு , நீதியின்படியே ஆத்துமாக்களை வருத்தப்படுத்தும் என்கிறதற்குச் சந்தேகமில்லை. அதெப்படி என்றால் , ஒவ்வொருவன் செய்த பாவங்களுக்கும் இந்தப் பாவங்களுடைய கொடுமைக்கும் எண்ணிக்கைக்கும் ஆக்கினைக்கும் தக்கதாய் இருக்கும் . ஒன்றிரண்டு பாவங்களுக்கும் ,நூறு , ஆயிரம் பாவங்களுக்கும் அசட்டையினாலே கட்டிக் கொண்ட பாவங்களுக்கும் அறிந்து மனதோடு துணிந்த பாவங்களுக்கும் ஆத்துமாக்களை அந்த நெருப்பு வெவ்வேறு விதமாய் வெவ்வேறு கடினமாய் உபாதிக்கும் என்பது சத்தியமாமே . சர்வ நீதியுள்ள சர்வேசுரன் எந்த புன்னியத்துக்கும் வெகுமதி கொடாமல் இருக்க மாட்டார் என்பது போல எந்தப் பாவத்துக்கும் தண்டனை கட்டளையிடாமல் இருக்க மாட்டார் . இது இப்படி இருக்க , கணக்கின்றி மட்டின்றி அச்சமின்றி பாவங்களைக் கட்டிக் கொள்ளுகிற உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பவிக்கும் என்று பாருங்கள்

அதல்லாமலும் உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமமானது தன் சரீரத்தோடு இல்லாமல் இருந்தாலும் இந்த சரீரத்தைக் கொண்டும் இந்த சரீரத்தின் அவயவங்களைக் கொண்டும் செய்த பாவங்களினிமித்தம் ஆத்துமம் அந்தந்த அவயவங்களில் வாதிக்கப்படுகிறார்போல வெகுவாய் வருத்தப்ப்படுமென்று சாஸ்திரிகள் சொல்லுகிற தன்மையாம் . பொய், ஆவலாதி ,அவதூறு இது முதலான பாவங்களுக்காக நாக்கு வேகிறார்போலவும் , இல்லாத சேதிகளையும் சிற்றின்ப பாட்டுக்களையும் சந்தோசமாய்க் கேட்டுக்கொண்டிருந்த பாவத்துக்காக காதுகளில் நெருப்பு வேகிறார்போலேயும் களவுகளையும் சண்டை சச்சரவுகளையும் செய்ததுக்காக இரண்டு கைகள் நெருப்பிலே இருக்கிறார்போலேயும் ஆகாத நினைவுகளுக்காய்த் தலை மண்டையில் மூளை கொதிக்கிறார்போலேயும் போசனப்பிரியத்துக்காக குடலெல்லாம் நெருப்பாய் இருக்கிறார்போலேயும் ஆத்துமமானது அந்தந்த வாதிகள் எல்லாவற்றையும் அனுபவிக்கும் .

இப்போது விவரித்தவைகளை ஆராய்ந்து பார்த்து தியானிக்கும்போது மனமிளகிப் புத்தி மயங்கி ,பலமற்று , பிரக்கினை தப்பி அய்யய்யோ  எப்படிப் பொறுக்கக் கூடுமென்று மிகுந்த அச்சமும் நடுநடுக்கமும் வருகிறதல்லவா ?ஆயினும் இந்த பயம் பிரயோசனமில்லாமல் போகாதபடிக்கு நாம் சொல்லப்போகிறதைக் கேளுங்கள் . ஒரு முனிவர் பாவத்தைக் கட்டிக் கொள்ள பசாசு சோதனை வருவிக்கும்போது நரகத்தின் நெருப்பைப் பொறுக்கக் கூடுமோ கூடாதொவென்று சோதிக்கிறார் போல தமது இரண்டு கால்களை அனலிலே வைத்தார் . பொறுக்கவேண்டும்  என்று பிரயாசைப்பட்டாலும் கொஞ்ச நேரமாவது பொறுக்கக் கூடாதென்று கண்டு பசாசின் சோதனைகளை தள்ளி அற்சிஷ்டவராக ஜீவித்தார் . கிறிஸ்துவர்களே ! உத்தரிக்கிற ஸ்தலத்தின்  நெருப்பு நரக நெருப்புக்கு சமமாய் இருக்கிறபடியினாலே அதைப் பொறுக்கக் கூடுமோ கூடாதொவென்று சோதிக்க இந்த முனிவரைப் போலச் செய்யுங்கள் . பொறுக்கக் கூடாதென்றால் இந்த நெருப்பில் விழாதபடிக்குத் தக்க பிரகாரமாய் நடக்க வேண்டும்

வர்த்தகனானவன் கடன் படுமுன்னே அவைகளை அடைக்க வழியும் வகையும் உண்டோ ? இல்லையோவென்று பார்க்கக்கடவானல்லோ ? அப்படிச் செய்யாமல் கடன் மேல் கடன்பட்டால் அவன் முழுமையும் கெட்டுப் போகிறது தப்பாது . நீங்கள் அப்படி எந்த பாவத்தையும் செய்யும் முன்னே இந்தப் பாவங்களுக்கு உத்தரிக்கிற ஸ்தலத்திலாகிலும் கடன்களை செலுத்துகிறார் போலே உத்தரிக்க வேண்டியதை இருக்கும் என்று நினைக்க வேண்டாமோ ? அதை நினைக்காதிருந்தால் நீங்கள் வெகு வேதனைகளைச் சம்பாதிக்கிறதுமல்லாமல் நித்திய நரகத்துக்குப் போகிற மகா ஆபத்தில் இருப்பீர்கள் என்பதற்குச் சந்தேகமில்லை

உங்களுடைய பிள்ளைகளாவது உங்களுடைய பெண்ஜாதியாவது வேறே எந்த மனுஷனாவது நெருப்பிலே விழுகிறதைக் கண்டால் எவ்வளவு ஜாக்கிரதையுடனேயும் எவ்வளவு வருத்தத்துடனேயும் அவர்களை எடுக்க பிரயாசைப்படுவீர்கள் ? உங்களுடைய மகன் மகளாவது தாய் தகப்பனாவது புருஷன் பெண்ஜாதியாவது இப்பூமியின் நெருப்பில் ஆயிரம் பங்கு அகோரமாய் எரியும் உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பிலே வெந்து கிடக்கிறதை அறியும்போது அவர்களை மீட்க ஒன்றும் செய்யாமல் இருக்கக் கூடுமோ ?

இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம் :

சேசுவே எங்கள் பேரில் தயவாயிரும்

செபம்.

கடவுளான சர்வேசுரா ! எங்களுக்குமுன் விசுவாசத்தின் முத்திரையோடு இறந்து தேவரீருடைய சமாதானத்தில் இருக்கிற ஸ்திரீ பூமான்களான உமது ஊழியர்களை நினைத்தருளும் ஆண்டவரே ! அவர்களுக்கும் சேசுக்கிறிஸ்து நாதரிடமாக மரித்த மற்ற எல்லோருக்கும் நித்திய இளைப்பாற்றியையும் குறையாத பிரகாசத்தையும் துன்பமறியாத சமாதானத்தையும் கிருபையாய்த் தந்தருள வேண்டுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்

ஏழாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரியை.

கூடுமானால் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களைக் குறித்து ஒருசந்தியாய் இருக்கிறது முடியாது போனால் ஒரு பிச்சைக்காரனுக்கு ஏதாகிலும் கொடுப்பது

புதுமை.

முத்திபேறு பெற்ற ரக்கொனீக் கத்தரீனம்மாள் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் மிகவும் பக்தியாய் இருந்ததினாலே அவர்களுடைய வேதனையைக் குறைக்க மகா தவக்கிரியைகளை நடத்துவாள் . ஒரு நாள் அவள் காய்ச்சலாய்க் கிடந்தது அகோரமாய்க் காய்ந்து அதிகமாய் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கையில் தனக்குப் பொறுமை வரத்தக்கதாய் உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைகளை நினைத்துக் கொண்டிருந்தாள் .அப்போது சர்வேசுரனுடைய கிருபையால் பரவசத்தை அடைந்து உத்தரிக்கிற ஸ்தலத்தில் அகோரமாய் எரியும் அக்கினித் திரளை கண்டாள். மேலும் அந்த அக்கினி எவ்வளவு கொடிதென்று அவள் அறியும்படியாகவும் ,ஆத்டுஹ்மாக்களின் பேரில் அவளுக்கு இன்னும் பக்தி வரும்படியாகவும் ஆண்டவருடைய செய்கையினாலே அந்த நெருப்பிலிருந்து ஒரு பொறி அவளுடைய இடது கன்னத்தின் பேரில் விழுந்தது . உடனே அதில் கனத்த காயமாகி முகமெல்லாம் வீங்கிப் போய் அவளுக்குப் பொறுக்கப்படாத வேதனை உண்டானது . இதைக் கண்டவர்களுக்கு இவள் : இவ்வுலகத்தில் வரக்கூடுமான வருத்த நோக்காடெல்லாம் இந்தச் சின்னத் தீப்பொறி எனக்கு வருவிக்கும் வேதனையினிடமாக ஒன்றுமில்லாதது போல இருக்கிறதென்பாள்.

அர்ச் சாமிநாதர் உண்டு பண்ணின சபையிலே ஸ்தனிஸ்லாஸ் என்னும் பேர் பெற்ற குருவானவர் ஒருவர் இருந்தார் . அவர் ஒரு நாள் அக்கினியால் சூழப்பட்ட ஒரு உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமத்தைக் கண்டார். அந்த ஆத்துமத்தைப் பார்த்து உன்னை உபாதிக்கும் நெருப்பு இந்த உலகத்து நெருப்பை விட அதிக வேகமுள்ளதோ என்று கேட்டதற்கு , அந்த ஆத்துமம் மறுமொழியாக பூலோகத்தின் நெருப்பை எல்லாம் என்னைச் சுட்டெரிக்கும் அக்கினியோடு ஒப்பிட்டால் குளிர்ந்த காற்றைப் போல் காணப்படும் என்றது . மறுபடியும் குருவானவர் நான் அதன் அகோரத்தைப் பரீட்சை செய்யலாமோ என்று கேட்டதற்கு , அந்த ஆத்துமம் , இவ்வுலகத்தில் உள்ள எந்த மனுஷனும் கொஞ்சமாவது பொறுக்கக் கூடாதென்றிருந்தாலும் உம்முடைய கையை நீட்டும் , கொஞ்சம் பார்ப்பீராக என்றவுடனே , அந்த ஆத்துமம் தனது நெற்றியிலிருந்து ஒரு துளி வியர்வை விழுந்தாற்போல அந்த சந்நியாசியாருடைய கையிலே பட்டது . அதனாலே சந்நியாசியாருக்கு வந்த வருத்த மிகுதியினால் பெரும் சப்தமிட்டு தரையிலே விழுந்து சாகிறார்போல கிடந்தார் . இந்த சத்தத்தைக் கேட்டு மற்ற சந்நியாசிமார்கள் ஓடி வந்து என்ன நடந்ததென்று கேட்க , மிரண்டு , நடுக்கமெடுத்து தமது கையைக் காண்பித்து நடந்ததை விவரித்தார் . அவர் இன்னும் ஒரு வருஷம் தனக்கு உண்டாயிருந்த காயத்தால் சொல்லில் அடங்காத வேதனைகளை அனுபவித்து , பிற்பாடு சாகப் போகிற தருணத்தில் கிட்ட நின்றவர்களைப் பார்த்து 'தம்பிமார்களே ! இவ்வளவு பயங்கரமான வேதனைகளை நீங்கள் அனுபவிக்காதபடிக்கு உங்களாலே கூடுமான மட்டும் எல்லா பாவங்களையும் விலக்க வேண்டியதுமல்லாமல் செய்த பாவங்களுக்கு எப்போதும் தபசு பண்ணுங்கள் என்று சொல்லி மரணத்தை அடைந்தார் .

கிறிஸ்தவர்களே ! இந்த சந்நியாசியார் சொன்ன வார்த்தைகள் உங்களுக்குத் தானே சொல்லப்பட்டாற்போல தியானித்து எப்போதும் நினைக்கக் கடவீர்களாக.

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது 

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.