இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 24-ம் தேதி.

இயேசுவின் திருஇருதயம் கீழ்ப்படிதலுக்கு மாதிரிகை.

நம்முடைய சுபாவமானது தன்னிலேதானே கீழ்ப்படியாதென்று அறிந்த திவ்விய இயேசு இப்புண்ணியத்தை நாம் எளிதாய் அநுசரிக்கும் பொருட்டு தமது வார்த்தைகளாலும் மாதிரிகையினாலும் படிப்பிக்கத் தயை புரிந்தருளினார். தமது அந்தரங்க வாழ்வில் முப்பது வருஷமாய் தாம் கீழ்ப்படிதலுக்கு எவ்வளவு உத்தம மாதிரிகையாயிருந்தாரென்றால், பரிசுத்த விவிலியமானது கீழ்ப்படிதல் மட்டில் அவருக்குண்டாயிருந்த ஆவலை மாத்திரம் பாராட்டி அவருடைய முப்பது வருட வாழ்வையும் "அவர் அவர்களுக்கு புனித. சூசையப்பருக்கும், தேவமாதாவுக்கும்) கீழ்ப்படிந்தார்" என்கிற மூன்றே வார்த்தையில் கூட்டி அடக்கிவிட்டது. தமது பிதாவின் விஷயமாய் சகலத்திலும் அவருடைய சித்தத்தை மிக உத்தமமாயும் அவருக்கு மிக மனரம்மியம் வருவிக்கக்கூடிய விதமாயும் நிறைவேற்ற மிகுந்த கவனமுள்ள வாராயிருந்தார்.

தமது திருப்பாடுகளின் போது திவ்விய இயேசு தமது சத்துராதிகளுக்கும் கீழ்ப்படிகிறார். ஓர் நியாயசாலையிலிருந்து வேறோர் நியாயசாலைக்கும், கடைசியாய் கல்வாரி மலைக்கும் அவர்கள் தம்மை இழுத்துச் செல்ல விட்டுவிடுகிறார். தமது பிதாபேரிலும் நமது பேரிலும் வைத்த அன்புக்காக தமது கொலைகாரர்களுக்கு கீழ்ப்படிந்து தமது கரங்களைச் சிலுவையில் அறையும்படி நீட்டிக்கொடுக்கிறார். இப்போது பரிசுத்த தேவநற்கருணையில் குருவானவருடைய மனதுக்குக் கீழ்ப்படிந்து தம்மை முழுதும் அவரிடத்தில் கையளிக்கிறார். இயேசுக்கிறிஸ்துநாதரின் திவ்விய மாதிரிகையால் தைரியமடைந்து, நம்முடைய விசுவாசம் தேவ அன்பில் பலம் கொண்டு, நமது ஆண்டவருக்கும் அவருடைய பதிலாளிகளுக்கும் உத்தம விதமாய்க் கீழ்ப்படிந்து இயேசுவின் திரு இருதயத்துக்கு நமது பக்தியைக் காண்பிக்கக்கடவோம்.

பிதாவாகிய சர்வேசுரன் சம்மனசுகளுக்குக் கொடுத்த கட்டளையினிமித்தம் முதல் கீழ்ப்படிதலும், முதல் கீழ்ப்படியாமையும் நடந்தது. புனித மிக்கேலும் நல்ல சம்மனசுகளும் தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்ததால் மோட்சபாக்கியத்தை அடைந்தார்கள். லூசியும் கெட்ட சம்மனசுக்களுமோவென்றால் தேவ சித்தத்தை மதியீனமாய் எதிர்த்து நின்றதால் நித்திய நரக நெருப்பில் அப்போதேத் தள்ளப்பட்டார்கள். நம்முடைய ஆதித்தாய் தந்தையர் தேவகட்டளைக்குக் கீழ்ப்படியாததினால் இதற்கு தண்டனையாக சிங்காரத்தோப்பிலிருந்து துரத்தப்பட்டு, நாம் இவ்வுலகில் இப்போது அநுபவிக்கிற சகல கேட்டுக்கும் காரண கர்த்தாக்களானார்கள். கோர், ஆபிரோன், பாத்தான் என்பவர் மூவரும் தேவகட்டளையை மீறினதால் உடனே பூமி பிளந்து அவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் அங்கிருந்து கிளம்பின நெருப்புக்கு இரையாகப் புதைக்கப்பட்டார்கள்.

இவ்வித உதாரணங்கள் இன்னும் அநேகமுண்டு; என்றாலும் கீழ்ப்படியாமையை ஆண்டவர் எவ்வளவு கண்டிப்பாய்த் தண்டிக்கி றாரென்று காட்ட மேற்சொன்ன உதாரணங்களே போதும். நமது ஊழியமும், நமது அலுவல்களும் கடவுளுக்குத் தேவையில்லை . நம்மிடம் அவர் கேட்கிறதேதென்றால் அவருடைய சித்தத்துக்கு அமைந்து அவருக்கும் அவருடைய பதிலாளிகளுக்கும் கீழ்ப்படிய வேண்டுமென்பதுதான்.

கிறிஸ்துவர்கள் கீழ்ப்படிய வேண்டிய ஞான அதிகாரிகள் யார் ? சர்வேசுரன், பாப்பானவர், ஆயர்கள், குருக்கள் என்னப்பட்டவர்கள்தான். தவிர துறவிகள், அருட்சகோதரிகளுக்கு தங்கள் தலைவர்களும் ஞான அதிகாரிகளாயிருக்கிறார்கள்.

முதலாவது - சர்வேசுரன்: சர்வேசுரன் நமது சிருஷ்டிகர், இரட்சகர், நமது நித்திய அரசர். அவருக்கு நாம் ஆராதனை புரியவும், மரியாதை செலுத்தவும், அவரை அன்பு செய்யவும், அவருக்குக் கீழ்ப்படிந்து அவர் கொடுத்த சகல கற்பனைகளையும் பிரமாணிக்கமாய் அநுசரிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இரண்டாவது - பாப்பானவர்: இவ்வுலகத்தில் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி பாப்பானவர். உலக முடிவு மட்டும் நம்மோடுகூடவிருந்து திருச்சபையை ஆண்டு நடத்தி ஆத்துமாக்களை புனிதப்படுத்தி மீட்க நமக்கு தனிப்பட்ட விதமாய் காணப்படும் இயேசுக்கிறிஸ்து இவரே. புனித . பாப்புவின் அதிகாரம் இயேசு கிறிஸ்துவின் அதிகாரம். புனித. இராயப்பருடைய நிலைக்கு பாப்புமார்கள் ஒருவருக்குப்பின் ஒருவராய் வந்து பற்பல பெயர் தரித்துக் கொள்ளுகிறார்கள். பெயர் வித்தியாச மிருந்தாலும், புனித . பாப்பு எப்போதும் நமது ஆண்டவருடைய பிரதிநிதி.

மூன்றாவது - ஆயர்கள்: அப்போஸ்தலர்கள் இறந்துபோனார்கள். இவர்களுடைய அதிகாரம் ஆயர்களுக்குக் கொடுக்கப்பபட்டிருக்கிறது. இவர்கள் திருச்சபையின் பிரபுக்கள். தங்கள் மேற்றிராசனத்தில் இயேசுக்கிறிஸ்துவின் பிரதிநிதிகள். புனித . பாப்பானவரோவென்றால் திருச்சபை முழுமைக்கும் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி புனித. பாப்பானவருடைய அனுமதிப்படி, அவரவருக்குக் கொடுக்கப்பட்ட ஆத்துமங்களுக்கு ஆயனும் தகப்பனுமாக நியமிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஆயரும் இயேசு கிறிஸ்து நாதரிடமிருந்தே தமது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறார்."

நான்காவது - குருக்கள், குருக்களுக்குக் கிறிஸ்துவர்கள் மிகுந்த மரியாதையும், உத்தம் கீழ்ப்படிதலும் காட்ட வேண்டியது கடமை. பாப்பானவர், ஆயர்களைக் கொண்டு நமது ஆண்டவர் தாமே தமது தெய்வீக குருத்துவத்தையும், அதிகாரத்தையும் அவர்கள் பெறும் குருப்பட்டத்தின் வழியாய் அவர்களுக்குக் கொடுக்கிறார். நமது ஆண்டவரே குருக்கள் மூலமாய் நமக்குப் போதித்து, திரு அருட்சாதனங்களை நிறைவேற்றி இரட்சண்ய பாதையில் நம்மை நடத்துகிறார். குருக்களிடமாய் எப்போதும் இயேசுக்கிறிஸ்துவைப் பார். நமது ஆத்தும் நன்மைக்காக அவர்கள் சொல்லும் புத்திமதிகள், செய்யும் தீர்மானங்களனைத்தையும் வணக்கத்தோடும், கீழ்ப்படிதலோடும் ஏற்றுக்கொள். குருவானவருக்குக் கீழ்ப்படிகிறவன் ஆண்டவருக்குக் கீழ்ப்படிகிறான். குருவானவர் மட்டில் நாம் காட்டும் வணக்கக்குறைவும், கீழ்ப்படியாமையும் இயேசுக்கிறிஸ்துவுக்கே காட்டுகிறோம். ஆதலால் நமது ஆண்டவர்தாமே அப்போஸ்தலர்களையும், அவர்களுக்குப்பின் வருபவர்களையும் நோக்கி: உங்களுக்குக் காது கொடுக்கிறவன் நமக்குக் காது கொடுக்கிறான். உங்களை நிந்திக்கிறவன் நம்மை நிந்திக்கிறான். (லூக் 10.16) என்று சொன்னதே இதற்கு அத்தாட்சி.

வரலாறு.

புனித சாமிநாதர் சபையைச் சேர்ந்த வில்லானி என்னும் பேர் கொண்ட ஓர் அருட்சகோதரிதான் பக்திவைத்திருந்த உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக நவம்பர் 2-ம் தேதி முழுவதும் ஜெபத்தில் செலவழிக்க விருப்பாக இருந்தார். ஆனால் அன்று அதிகாலையில் தலைமைத் தாயார் அவளைக் கூப்பிட்டு அந்த நாள் முழுவதும் எழுதும்படியாக ஓர் எழுத்து வேலை கொடுத்தாள். இது சகோதரிக்கு மிக வருத்தம் உண்டுபண்ணினது. அச்சமயம் திவ்விய இயேசு அவளுக்குத் தம்மை காண்பித்து, "நீ வருந்த வேண்டாம். கீழ்ப்படிதல் உனக்குக் கொடுத்த வேலையை முழுமனதோடு செய். நீ எழுதுகிற ஒவ்வொரு வார்த்தையும் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமம் ஒன்றை மோட்சம் சேரச் செய்யும்" என்று திருவுளம் பற்றினார். கீழ்ப்படிதலினிமித்தம் இவ்வளவு சம்பாவனையையும் பலனையும் கொடுத்த இந்த வேலையை அந்தப் பாக்கியம் பெற்ற சகோதரி எவ்வளவு ஞான ஊக்கத்தோடு சகோதரி செய்துமுடித்திருப்பாளென்று வெகு சுளுவாய்க் கண்டு பிடிக்கலாம்.

சில வருஷங்களுக்கு முன் மதுரை மிஷன் வேத போதகர் ஒருவர் கூடிய சீக்கிரம் வரப்போகிற இயேசுவின் திரு இருதயத் திருவிழாவை வெகு பக்தியோடு கொண்டாட ஆயத்தம் செய்துகொண்டிருந்தார். விசேஷமாய் அந்தத் திருநாளிலே தன் தனிக்கருத்துக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுத்து இயேசுவின் திருஇருதயத்தோடு மிகுந்த ஒன்றிய வாழ்வை அடைய மிக ஆசையாயிருந்தார். திருநாள் காலையில் குருவானவர் திருப்பலி நிறைவேற்றப் போகும்போது தலைமை குருவானவர் வேறே ஒரு விசேஷ கருத்துக்காகப் திருப்பலி நிறைவேற்ற கட்டளையிட்டார். குருவானவர் மிகவும் கலக்கமுற்றுத் தத்தளிப்பான மனதோடு திருப்பலி ஆரம்பித்தார். ஒரு சமயத்தில் திருப்பலியைத் தொடர்ந்து நடத்த முதலாய் அவரால் கூடாதேபோயிற்று. ஆண்டவர் அப்போது குருவானவரை நோக்கி: "உன்னுடைய பக்தி எனக்கு அவசரமென்று நினைக்கிறாயா? நீ என்னை அன்பு செய்தால் நீ எனக்குப் பிரியப்பட விரும்பினால், உன்னுடைய தலைவருக்கு நல்ல மனதோடு கீழ்ப்படி. அப்படி செய்யாவிடில், நீ கொண்டாடும், திரு இருதய பத்திக்கும், நமது திரு இருதயத்துக்கும் சம்பந்தமேயில்லை" என்று தெளிவாய் திருவுளம்பற்றினார். இதைக்கேட்ட குருவானவர் வெகு வெட்கப்பட்டார். தான் இதுவரையில் திரு இருதயப் பக்தி விசேஷமாய்க் கொண்டிருந்த தவறான எண்ணத்தை மாற்றி, கீழ்ப்படிதல் சொன்னபடி திருப்பலியை பக்தியோடு செய்து முடித்தார்.

ஓர் தீர்மானத்தை இயேசுக்கிறிஸ்துநாதரின் பிரதிநிதிகள் கொடுக்கிறதற்கு என்ன காரணமென்று நாம் சில சமயம் அறியாதிருக்கும்போது, நமது ஆண்டவர் தாமே பாப்பு, ஆயர்கள், குருக்கள் வழியாய்ப் பேசி நம்மை நித்திய வாழ்வுக்கு அவர்கள் வழியாய் தான் நடத்துகிறாரென்று நிச்சயித்து, புனித சூசையப்பர் பாவனையாக மிகுந்த விசுவாசத்தோடு கீழ்ப்படிய வேண்டியது.

புனித . மார்க்கரீத் மரியம்மாளின் சுகிர்த வாக்கியம்.

நம்மாலான அன்பு முயற்சிகளையும், ஆராதனை நமஸ்கார முயற்சிகளையும், இன்னும் நம்மை முழுதும் இயேசுவின் திரு இருதயத்துக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறதையும் விட உத்தம் தனத்துக்குக் குறுக்குப் பாதையும், இரட்சண்யத்துக்கு அதிக உண்மையான வழியும் வேறு கிடையாது. (பர. அரு. பிதா.)

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.