இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 25-ம் தேதி.

இயேசுவின் திருஇருதயம் நிந்தை அவமானங்களை மன்னிக்கக் கற்பிக்கிறது.

இயேசுவின் திரு இருதயத்துக்குப் பிரியப்படும்படியாய், நிந்தை அவமானங்களை மன்னித்தல் என்கிற புண்ணியத்தை நாம் இன்று விசேஷமாய் அனுசரித்து ஆண்டவருடைய இரக்கத்தையும் பிறரன்பையும் பின்பற்றுவோமாக. இயேசுவின் திரு இருதயத்திலுள்ள எண்ணங்கள் நமக்கும் இருக்குமேயாகில் அவருடைய வாழ்வை பின்பற்றுதல் நமக்கு எளிதாயிருக்கும். நம்மைத்தானே ஜெயித்து இயேசுவின் திரு இருதயத்தின் கருத்தை நம்மிடத்தில் நிலைநிறுத்தா விடில், மன்னித்தல் என்கிற புண்ணியம் நமக்கு மிக கடினமாயிருக்கும். தவிர, நமது சுபாவத்துக்கே அது ஒருபோதும் கூடாததாயிருக்கும்.

இந்தப் புண்ணியத்தை அனுசரிக்கும்படி நமக்கு உதவியாக திவ்விய இரட்சகர் பிறர்சிநேகத்தைப்பற்றி, விசேஷமாய் நிந்தையை மன்னித்தல் என்னும் பெரிய கற்பனையை, தமது வார்த்தைகளாலும் மாதிரிகையினாலும் நமக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துகிறார். "உங்கள் சத்துருக்களை அன்பு செய்யுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களுக்குக் கெடுதல் செய்கிறவர்களுக்காகவும் உங்கள் மேல் அவதூறு சொல்லுகிறவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள். நல்லவர்கள் பேரிலும் கெட்டவர்கள் பேரிலும் சூரியனை உதிக்கச் செய்கிற பெரும், நீதிமான்கள் பேரிலும் அநீதர் பேரிலும் மறை வருவிக்கச் செய்கிறவருமாகிய உங்களுடைய பிதாவுக்கு நீங்கள் உகந்த பிள்ளைகளாகும்படிக்கு, மற்றவர்கள் உங்களுக்குச் செய்கிற நிந்தைகளை மன்னித்தால், மோட்சத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார். நீங்கள் மன்னிக்காவிட்டால் அவரும் உங்களை மன்னிக்கமாட்டார். ஏனென்றால் நீங்கள் மற்றவர்களுக்குச் செய்கிறதை அவர் உங்களுக்கும் செய்வார்." (மத் 5)

இந்தப் போதகத்தை உறுதிப்படுத்துவதற்காக நமது ஆண்டவர் கெட்ட ஊழியனுடைய உவமையைச் சொல்லிக் காண்பிக்கிறார். இந்த ஊழியன் தான் கொடுக்க வேண்டிய ஒரு பெருங்கடனை தன் எஜமான் மன்னித்திருக்க, இன்னொரு எளிய ஊழியன் தனக்குச் செலுத்த வேண்டிய சிறிய கடனுக்காக அவனை இரக்கமில்லாமல் கொடுமையாய் நடத்தினான். இந்தக் குற்றத்தினிமித்தம் அந்த தீய ஊழியன் கடுஞ்சிறையில் அடைக்கப்பட்டு மிக கண்டிப்பான வேதனைகளுக்குத் தீர்வையிடப்பட்டான். இதேவிதமாய், நீங்கள் உங்கள் எதிரிகளை முழுமனதோடு மன்னியாதிருப்பீர்களாகில், நமது பிதாவும் உங்களையும் அப்படியே நடத்துவார் என்று திருவாய் மலர்ந்து இந்த உவமையை முடிக்கச் சித்தமானார்.

எந்த அளவு நாம் நமது அயலாரை மன்னிப்போமோ அந்தளவு நாமும் மன்னிக்கப்படுவோம். நாம் சொல்லுகிற கர்த்தர் கற்பித்த ஜெபத்தில் எங்கள் பிதாவே! எங்களுக்கு தீமை செய்பவர்களை நாங்கள் பொறுப்பது போல் எங்கள் பாவங்களை எங்களுக்குப் பொறும் என்று கேட்கிறோம். இந்த வார்த்தைகளை நாம் சொல்லும்போது நாம் மற்றவர்களை எப்படி நடத்துகிறோமோ அப்படியே நமது ஆண்டவரும் நம்மை நடத்தக் கேட்கிறோம். ஆதலால் நாம் மன்னித்தால் நம்மை மன்னிக்கும்படி கேட்கிறோம். மன்னியாவிட்டால் மன்னியாதிருக்கக் கேட்கிறோம். இதைப் போல் இரக்கமில்லாதவனுக்கு இரக்கமில்லாத தீர்ப்பு கிடைக்கும் என்று புனித யாகப்பர் சொல்லுகிறார். (யாக. 12-13)

திவ்விய இயேசு நம்முடைய பலவீனத்தை நன்றாய் அறிந்திருந்த தினால் நிந்தை அவமானங்களால் பூரிக்கப்பட்ட சம்மதித்த அவருடைய மாதிரிகையாய் நாமும் நம்மை நிந்திக்கிறவர்களை மன்னிக்கப் படிப்பிக்கிறார். பூங்காவனத்தில் பிரவேசித்து அங்கே நடக்கிறதைக் கவனி. தம்மை முப்பது வெள்ளிக்காசுக்கு காட்டிக்கொடுக்கத் தயாராயிருக்கும் சதிகாரனான யூதாசென்பவனோடு நேருக்கு நேர் நிற்கிற உன் ஆண்டவரைப் பார். அவனைப் பழிவாங்க நினையாமலும், தமது சர்வ வல்லமையால் அவனைக் கீழே விழத்தாட்டிக் கொல்லாமலும், அவனை நோக்கி, நண்பா, எங்கே வந்தாய்? என்ன யூதாஸ், மனுமகனை முத்தத்தால் காட்டிக்கொடுக்கவா வந்தாய் என்று தோழமையோடும், சாந்தகுணத்தோடும் சொல்லுகிறார். ஒரு பக்கத்தில் துன்பமும் வேறொரு பக்கத்தில் அன்பும் நிறைந்த இந்த வார்த்தைகளேயல்லாமல் மற்றப்படி கோபமான, கசப்பான , பழிக்கான, மற்றெவ்வித கண்டிப்புக்கான வார்த்தைகளும் அவரது திரு வாயிலிருந்து புறப்படவில்லை. இன்னும் கல்வாரி மலையில் ஆண்டவருடைய எதிரிகள் அவரைச் சிலுவையிலறைந்து, நிந்தை அவமானங்களாலும், தீயவார்த்தைகளாலும் அவரை நிந்திக்கும் போது, "பிதாவே, இவர் களை மன்னித்தருளும், ஏனென்றால் இவர்கள் செய்கிறதெல்லாம் அறியாமல் செய்கிறார்கள்" என்று அவர்களுக்காக பரிந்து பேசுகிறார்.

கல்வாரி மலையில் ஆண்டவருடைய இருபக்கத்திலும் சிலுவையில் அறையுண்ட திருடர்களும் திருடர்களும் ஆண்டவரை நிந்தித்தார்கள். ஆனால் வலது பக்கத்தில் தொங்கின திருடன் அருட்கொடைகளால் தூண்டப்பட்டு அவனுடைய இருதயம் ஆண்டவர் பக்கமாய் இழுக்கப்பட்டு, ஆண்டவரே, உமது இராச்சியத்தில் நீர் பிரவேசிக்கும் போது என்னை நினைத்துக்கொள்ளும் என்று பேரொலியிட்டதும், நமது அன்பார்ந்த இரட்சகர் நல்ல திருடனை நோக்கி, மெய்யாகவே, மெய்யாகவே நாம் உனக்குச் சொல்லுகிறோம். இன்றுதானே நீ நம்மோடுகூட மோட்சத்திலிருப்பாய் என்றார்.

திவ்விய இரட்சகர் காட்டும் இவ்வித மாதிரிகைகளைப் பார்த்த பிறகும், அவருடைய சிலுவையைக் கண்ணாரக் கண்ட பொழுதும், என் எதிரிகள் எனக்கு அதிக நிந்தை வருவித்திருக்கிறார்கள். ஆதலால் நான் அவர்களை மன்னிக்கமாட்டேனென்று யார் சொல்லத் துணிவார்? நீ நிந்தை அவமானப்படும் படி திவ்விய இரட்சகர் விட்டுவிடக் காரணம், தமது திவ்விய மாதிரிகையைப் பின்பற்றும்படி உனக்குச் சமயம் கிடைக்கும் படியாகத்தான். சிலுவையாகிய அந்த உயர்ந்த சிம்மாசனத்திலிருந்து இயேசுக்கிறிஸ்துநாதர் : "எஜமானைவிட சீடன் அதிக மேன்மையாய் நடத்தப்பட முடியாது. நாம் நிந்தை அவமானங்களை ஏற்றுக் கொண்டோம்; நீங்களும் அவைகளை ஏற்றுக் கொள்ளவேண்டியது. நாம் மற்றவர்களை மன்னித்ததுபோல் நீங்களும் மன்னிக்க உங்களுக்கு மாதிரிகை காண்பித்திருக்கிறோம்" என்று போதிக்கிறார்.

இதைக் கேட்ட பின்னும், ஆண்டவரைப் பார்த்த பின்னும் இன்னும் உன் அயலான் பேரில் பழிவாங்க உனக்கிருக்கும் ஆசையை மாற்றுகிறது வருத்தமாயிருந்தால், அல்லது உன்னுடைய மன்னிப்புக்கு அவன் தகுதியில்லாதவன் என்று கண்டால், அவனுக்காக நீ அவனை மன்னிக்காதே போனாலும், நமது ஆண்டவருக்காக அவனை மன்னி. ஆண்டவர் இதை உன்னிடமிருந்து கேட்கிறார். இந்தப் பலியை உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறார். இதிலும் அதிக பெரிய குற்றங்களை நாள்தோறும் செய்கிற உன்னை ஆண்டவர் பெரிய தயவாய் மன்னிக்கிறாரென்பதை ஞாபகப்படுத்திக்கொள்.

முதல் வேதசாட்சியான புனித முடியப்பருடைய மாதிரிகையைப் பார். தமது எதிரிகளால் கல்லாலெறியப்பட்டு சாகுந்தறுவாயிலிருக்கும் போது, நமது திவ்விய குருவின் பாவனையாக மோட்சத்தை அண்ணார்ந்து பார்த்து, ஆண்டவரே! இந்தப் பாவத்தை அவர்கள் மேல் சுமத்த வேண்டாம் என்று மன்னிப்புக் கேட்கிறார்.

வரலாறு.

கன்னியர் மடத்திலுட்பட்ட ஒரு இள வயதுள்ள பெண்ணை சில வருடங்களுக்கு முன் அவளுடைய தாய் தகப்பன் கட்டாயஞ்செய்து மடத்திலிருந்து கொண்டு தங்கள் சொந்தக்காரன் ஒருவனுக்கு அவளை திருமணம் செய்து கொடுத்தார்கள். இவ்வகை திருமணங்கள் எப்பொழுதும் தீமையானதே. திருமணம் செய்த கொஞ்ச நாளைக்குள்ளாக வாலிபன் தன் இஷ்டம் போல் தாறுமாறாய் நடந்து முழுதும் துர்க்குணமான வாழ்வு வாழ்ந்தான். இதுகண்ட அந்த வாலிபப் பெண் தன் கண்ணீரையும், துன்பத்தையும் இயேசுவின் திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுத்து, தன் கணவன் மனந்திரும்ப அத்திரு இருதயத்தை கெஞ்சி மன்றாடினாள். பதினைந்து வருடம் ஆயிற்று, அவன் மனந்திரும்பவில்லை . ஆனால் அவனுக்கு ஓர் கடின வியாதி வந்தது; சாகும் ஆபத்திலிருந்தான். மனைவி தன் வருத்தங்களையெல்லாம் மறந்தவளாய் தன் கணவனுடைய ஆத்துமத்தை எவ்விதத்திலும் மீட்கவேண்டுமென்கிற கவலை கொண்டு குருவானவரைக் கூப்பிட்டு வியாதிக்காரன் அறியாமல் தன் வீட்டில் ஒரு அறையில் இருக்கும்படி சொல்லிவிட்டு, இயேசுவின் திரு இருதயத்தை நோக்கித் தன் புருஷன் மனந்திரும்ப பக்தி உருக்கத்தோடு வேண்டிக் கொண்டு வியாதிக்காரனிடம் சென்று மிகுந்து பாசத்தோடு, "நீங்கள் எனக்கு வருவித்த சகல துன்பங்களையும் என் முழு இருதயத்தோடு மன்னிக்கிறேன். உங்களுடைய ஆத்தும் மீட்புக்காக இவைகளையெல்லாம் நமது ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். நீங்கள் செய்த சகலத்தையும் மறந்துவிட்டேன். உங்களை இரட்சிப்பதே என்னுடைய ஒரே ஆசை" என்றாள். வாலிபனுடைய இருதயம் முழுவதும் இளகிப்போய், "நான் உனக்கு கொடுத்த துன்பங்களையும் நீ மன்னிக்கிறது கூடுமா?" என மனைவி, "ஆம் என் பிரிய கணவனே, முழுவதும் மன்னிக்கிறேன்" என்று பதில் சொல்லி, அவன் பக்கத்தில் முழந்தாளிலிருந்து கொண்டு கண்ணீர் ததும்பின் கண்களோடு அவனைக் கட்டி முத்தமிட்டு சொல்வாள். என் அருமை கணவனே, நான் உம்மிடத்திலிருந்து ஓர் கடைசி ஆறுதல் கேட்கிறேன். உமக்கு ஒப்புரவு அருட்சாதனம் கொடுத்து உம்மைச் சர்வேசுரனிடம் சேர்க்கத் தயார் செய்யும்படி ஓர் குருவானவரைக் கூப்பிட உத்தரவு கேட்கிறேன். அவ்வியாதிக்காரன், "இவ்வளவு பிறர் சிநேகமும் அன்பும் காட்டுகிற உனக்கு நீ கேட்கிறதை எப்படி இல்லையென்று மறுதலிப்பேன்; உடனே குருவானவரை அழைத்துவா” என்றான்.

மனைவியானவள் மனங்குளிர்ந்து உடனே அறைக்குள்ளிருந்த குருவானவரை அழைத்து வியாதிக்காரனிடம் விட்டுவிட்டு வெளியே போனாள். நல்ல பாவசங்கீர்த்தனம் செய்த பிற்பாடு, நோயாளி தன் மனைவியையும் தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களையும் தன்னருகே கூப்பிட்டு, தான் காண்பித்த சகல துர்மாதிரிகைக்கும் மிகு மனஸ்தாபப்பட்டு சர்வேசுவரனிடத்திலும் அவர்களிடத்திலும் பொறுத்தல் கேட்டு, தன் பாவத்துக்குப் பரிகாரமாகவும், தேவ இரக்கத்தில் தான் மரிக்கும்படியாகவும் அவர்கள் வேண்டிக்கொள்ள மன்றாடினான்.

மறுநாள் அவனுடைய ஆத்துமமானது இவ்வுலகத்தைவிட்டு நித்திய மோட்ச பாக்கியம் அநுபவிக்கப்போனது. பக்திப் பற்றுதலுள்ள மனையாளின் பிறர் சிநேகத்தாலும், மாறாத பொறுமையாலும் நித்திய மோட்ச பாக்கியமடைந்தான்.

இயேசுவின் திரு இருதய அன்பர்கள் தங்களுக்கு நிந்தை அவமானம் வருவித்தவர்களை மன்னித்து, தங்கள் வார்த்தைகளில் மாத்திரமல்ல, செயல்களிலும் அவர்களுக்கு அன்பு காண்பிப்பார் களேயாகில் உண்மையில் தாங்கள் திரு இருதய சீஷர்களென்று காட்டுகிறார்கள். தம்மைக் குறித்துத் தங்கள் சகோதரர்களுக்கு செய்ததெல்லாவற்றையும் தமக்கே செய்ததாக திவ்விய இயேசு எண்ணுவார். அவர்களுடைய குற்றங்குறைகளையெல்லாம் மன்னித்து நித்திய மோட்சபாக்கியத்துக்கு அவர்களை இட்டுக் கொண்டு போவார்.

அர்ச். மார்கரீத் மரியம்மாளின் சுகிர்த வாக்கியம் உன்னைத் தாழ்த்துகிறவர்களையும், உனக்கு எதிரிடையாய்ப் பேசுகிறவர்களையும் சிநேகி. உன் புண்ணிய சாங்கோபாங்கத்துக்கு அதிகப் பிரயோசனமாயிருக்கிறார்கள். இயேசுவின் திரு இருதயத்தை அண்டிப்போம். அதிலிருந்து ஒரு புது ஜீவியத்தை அடைவாய் இந்த . ஜீவியத்தில் ஜீவிக்கிறது நீயல்ல, திவ்விய இயேசுதான். அவருடைய திருஇருதயத்தைக் கொண்டு சிநேகிக்கிறாய். (பா. அரு. பிதா.)

மன வல்லப செபம்.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தகுணமுமுள்ள இயேசுவே! என்னிருதயத்தை உமது இருதயத்தைப் போலாகச் செய்தருளும்.

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.