பரிசுத்த ஆவியின் வருகை.
திருச்சபையின் முதல் நவநாள் ஆரம்பித்தது . இயேசுநாதர் மோட்சத்திற்கு ஆரோகணமானபின் தேவ தாயும் அப்போஸ்தலர்களும் கூடி பரிசுத்த ஆவியின் வருகைக்காக செபத்தில் நிலைத்திருந்தனர். பத்தாம் நாள் பெரும் புயல் காற்று வீசியது . தேவ தாயின் மேலும் அப்போஸ்தலர்கள் மேலும் பரிசுத்த ஆவி அக்கினி ரூபமாய் இறங்கி வந்தார் .
மனுதாவதாரத்தின் அலுவல் அன்பின் அலுவல் . ஒவ்வொரு மனிதனின் ஆத்துமத்திலும் - ஒவ்வொருவனும் அந்த அன்பில் பங்கு பெற்று , அதைத் திருப்பிக் கொடுப்பதால் - அந்த அலுவல் முற்றுப் பெற வேண்டும் . தம் தயாளத்திற்கு அளவேயில்லா மோட்ச பிதாவானவர் தமத்திருத்துவத்தின் மூன்றாம் ஆளை , தேவ சிநேகத்தின் ஆவியை அனுப்பி வைத்தார் . ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் விருந்தினரைப் போலும் , வழிகாட்டியாகவும் ,ஆலோசனை தருகிறவராகவும் தைரியம் ஊட்டுகிறவராகவும் வசிப்பார். அன்பின் ஆண்டவர் நமக்களித்த எல்லாக் கொடைகளிலும் அவர் தான் பெருங் கொடை. அவர் தேவ சிநேகத்தின் ஆளல்லவா ? இரண்டாம் தேவ ஆள் உலகத்திற்கு வந்து யாவருக்கும் சம்பாதித்த ஈடேற்றத்தை இரட்சணியத்தை ஒவ்வொருவரிடமும் உத்தமமாக்க வேண்டியவர்
பார்வைக்குரிய அளவில் தேவ தாயின் மேலும் அப்போஸ்தலர்கள் மேலும் வந்த வரைக்கும் , உறுதிப்பூசுதலில் காணக்கூடாத விதமாய் ஒவ்வொருவர் மேலும் வருவதற்கு அது சான்று . கிறிஸ்தவ வாழ்வில் அன்பின் முக்கியத்துவத்தை அந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது . இறைவனுடைய அன்பு நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இறங்கி அதில் ஊன்றிப் போய் - உண்பதும் , குடிப்பதும் ,ஓடுவதும் , ஆடுவதுமான - நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஞான மதிப்பளித்து அது அன்பின் ஒளியாகத் திகழ வேண்டும்
பரிசுத்த ஆவியின் வரவு திருச்சபையின் பரம இரகசியம் . பலவீனர்களான அப்போஸ்தலர்கள் பலசாலி ஆனார்கள் . விவேகமற்ற அப்போஸ்தலர்கள் ஞானி ஆனார்கள் . தன் ஊர் தன் கிராமம் என்று ஒடுங்கிய அற்ப புத்தியுள்ளவர்கள் பரந்த உலகின் மக்களாயினர். பாடுகளின் காலத்தில் பயந்து ஓடி ஒளிந்து - இயேசுவின் உத்தானத்திற்குப் பின் உயரிய நோக்கமின்றி - இந்நேரமாவது இஸ்ராயேலரின் அரசியலைத் திரும்ப எழுப்புவாரா என்று கேட்டார்கள் அல்லவா ? இப்பொழுது ஞானோதயம் பிறந்தது , பலம் வந்தது , உலகமெங்கும் போய் போதித்து தங்கள் போதனையின் உண்மைக்குச் சான்றாக தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்
பிரகாசத்தின் பிரவாகத்தை - வெள்ளத்தை - புனித இராயப்பரின் முதல் பிரசங்கத்தில் காணலாம் . உலகின் பற்பல கோடியிலிருந்து பற்பல மொழிகள் பேசுகிறவர்கள் , இராயப்பர் அரமேயிக் மொழியில் போதித்தாலும் அதை ஒவ்வொருவனும் தத்தம் மொழியில் கேட்டான் . வேதாகமம் விளங்கியது ; உத்தானம் , ஈடேற்றம் முதலியவற்றின் பொருள் விளங்கியது . தடுமாற்றம் இல்லை . அந்நாளே மூவாயிரம் பேருக்கு மேல் மனந்திரும்பினர் . மற்ற ஒவ்வொரு பிரசங்கத்திலும் ஆயிரமாயிரம் பேர் மனந்திரும்பினர் . இயேசுவின் பேரால் நோயாளிகளுக்குச் சுகத்தை கொடுத்தார் .
ஆண்டவரை மறுதலித்து மறைந்து பதுங்கியவர் கிறிஸ்துவின் பிரதிநிதியாக - முதல் பாப்பாண்டவராக - எல்லா உரிமையையும் கொண்டாடினார் .
அக்கினி ரூபமான நாவுகள் :
பழைய ஏற்பாட்டை வாசித்தவர்கள் கண்டு கொள்ளுவார்கள் . அக்கினி , ஆத்துமார்த்ததினுடையவும் பரிசுத்த தனத்தினுடையவும் அடையாளம் . சுத்தம் செய்து தெளிவைக் கொடுத்து நீதி செலுத்தும் கடவுளுடைய நிகரில்லா வல்லமையின் அடையாளம் . பரிசுத்த ஆவியின் மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் ஊன்றிப் பார்த்தவர்களுக்கு விதவிதமான வரப்பிரசாதத்தைக் கொண்டு வந்தார் என்பது தெரியும் .நிறைந்த அருளைக் கொண்டு வந்தார் . பரிசுத்த ஆவியினால் அப்போஸ்தலர்கள் நிரப்பப் பெற்றார்கள் என்றது வேத வாசகம் . நிறைந்த இறை அருள் , அந்தஸ்துக்கு அவசியமான இறை அருள் , கேட்கிறவர்களுக்கும் போதிக்கிறவர்களுக்கும் அவசியமான நிறைந்த அருள் - இவைகளைக் கொணர்ந்தார்
பரிசுத்த ஆவி அன்பின் ,அருளின், இரக்கத்தின் , சமாதானத்தின் தேவன் . உலகை ஒரு புதிய பிரசன்னத்தால் மகிமைப்படுத்தவும் , அர்ச்சிக்கவும் , ஆறுதல் அளிக்கவும் அகமகிழச் செய்யவும் வந்தார்.
பரிசுத்த ஆவி வந்தார் , போய்விடவில்லை; இருக்கிறார் . உலக முழுவதையும் நிரப்பினார் . திருச்சபையான அவரின் ஞான சரீரத்தின் அவயவங்கள் நாம் ; நம்முடைய அலுவல் அவரது பிரசன்னத்தை உலகம் அறியும்படி செய்வதாம்
சரிதை.
இயேசு சபையின் துணைச் சகோதரரான அர்ச் அல்போன்ஸ் ரொட்ரிகசை அறியாதவர்கள் இல்லை . செபமாலையைப் பக்தியால் சொல்லிவந்த படியினால் அவர் புனிதரானார் . ஞானத்திலும் தியானத்திலும் முதிர்ந்து விளைந்தார் . அவர் வெகு அடக்கமாகவும் பக்தியாகவும் செபமாலை சொல்லி வரும் போது சமயத்துக்கு சமயம் அவர் கண்டது ஏதெனில் 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே '' சொல்லி முடிக்கும் ஒவ்வொரு முறையும் அவர் வாயிலிருந்து ஒரு சிவந்த ரோஜா மலர் கீழே விழும் .'அருள் நிறைந்த மரியாயே 'சொல்லி முடிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு வெண் ரோசா மலர் கீழே விழும் . அவைகள் என்ன அழகு என்ன வாசனை நிறம் ஒன்றில் தான் வித்தியாசமே தவிர மணம் அழகில் அவைகளுக்குள் வித்தியாசம் இல்லை
இதையொத்த வேறொரு சம்பவம் : : அர்ச் பிரான்சிஸ் சபைத் துறவி ஒருவர் ஒவ்வொரு நாளும் பகற்போசனத்துக்கு முன் செபமாலை சொல்லி முடிப்பார் .ஒரு நாள் அசனத்திற்கு மணி அடித்தபோது அவர் செபமாலை சொல்லி முடிக்கவில்லை .பந்திக்கு வரும் முன் அதை முடித்து வருவதாக சிரேஷ்டரிடம் உத்தரவு பெற்றார் . வெகு நேரம் வரை பந்திக்கு அவர் வராததால் அவரை அழைத்து வர ஒரு துறவியை சிரேஷ்டர் அனுப்பி வைத்தார் . போனவர் நடந்ததைக் கண்டு மயங்கி நின்று விட்டார் . பக்தியுள்ள துறவி பிரகாச பிரவாகத்தில் மிதந்து நின்றார் . அவருக்கு எதிரில் இரு சம்மனசுக்களுடன் தேவ தாய் நின்றார் . அருள் நிறைந்த மரியே சொல்லி முடித்த ஒவ்வொரு முறையும் அவர் வாயிலிருந்து அழகிய ரோசா மலர்கள் வெளி வந்து கொண்டிருந்தன . சம்மனசுக்கள் அவற்றை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கி தாயின் சிரசின் மேல் வைத்தனர் .அன்னையும் புன்னகையோடு அவைகளை ஏற்றுக் கொண்டார் . வேறு இரு சகோதரர்கள் அனுப்பப் பட்டனர் . அவர்கள் போன போதும் முன் சொன்ன காட்சியைக் கண்டு மெய் மறந்து நின்றனர் . செபமாலை முடிந்த பின் தேவ தாய் மறைந்தார்
ரோஜாமலர் பூக்களின் அரசி ; செபமாலை செபங்களின் அரசி . நாம் செபமாலை சொல்லும்போது மலர்முடி பின்னி மாமரியின் சிரசிலும் அவர் மைந்தன் இயேசுவின் சிரசிலும் வைக்கிறோம் . இதை அறிந்தால் எவ்வளவு பக்தியாகவும் பிரமாணிக்கமாகவும் செபமாலை சொல்லி வருவோம் !
செபம்.
கடவுளின் ஆவியே , ஞானத்தின் ஆவியே , சந்தோஷ சமாதானத்தின் ஆவியே , எங்கள் மேல் எழுந்தருளி வாரும் . புயல் காற்று வீசினது போல் வாரும் . எங்கள் புத்தியை ஒளியின் வெள்ளத்தில் மூழ்கடியும். பிரகாசமுள்ள எரியும் நெருப்பை போல் எம்மிடத்தில் தங்கும். அச்சுவாலையில் எங்கள் மனதைப் பழுக்கக் காய்ச்சி மின்னும் வாளைப் போலாக்கும் . அன்பின் அக்கினிக் குழம்பால் எங்கள் இருதயத்தை சுத்தி செய்தருளும் . அசமந்தமான எங்கள் உள்ளத்தை கிறிஸ்துவின் கொதிக்கும் உடலாக மாற்றியருளும் - தண்ணீரை அவர் இரசமாக்கினது போல திராட்சைச் செடியில் ஓடும் ரசத்தைப் போல - எம்மில் உயிரின் நீரோட்டமாய் இருப்பீராக
செபமாலை இராக்கினியே பரிசுத்த ஆவியின் உதவியினால் நாங்கள் செபமாலையின் மதிப்பை அறிந்து அதைப் பக்தியாய் செய்யவும் நாலா பக்கமும் பரப்பவும் எங்களுக்கு உதவி செய்யும்.
ஆமென்.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠