அக்டோபர் 22

கர்த்தர் மோட்சத்திற்கு ஆரோகணமாகிறார்.

இயேசுநாதர் தம் அலுவலை முடித்து விட்டார் . திருச்சபையின் அமைப்பை வகுத்து விட்டார் . அவர் மோட்சத்துக்குப் போவதனால் நமக்குப் பெரும் பயன் உண்டு . தமது மோட்ச ஆரோகணத்தால்  நம்மில் விசுவாசத்தின் வாழ்வை உறுதிப்படுத்தினார் . நமக்காக ஏற்கனவே அவர் மோட்சத்தை சுதந்திரித்திருந்தபடியால் நம் நம்பிக்கையை உறுதிப்படுத்தினார் . பரலோகத்திலிருந்து நமக்கு அனுப்பும் மகிமையான கொடைகளினால் விசேசமாய்த் திவ்விய பரிசுத்த ஆவியை அனுப்புவதினால் நம்மில் தேவ சிநேகத்தையும் அதிகரித்தார் . அவர் மோட்சத்திற்கு ஏகியிராவிடில் பரிசுத்த ஆவி நம்மேல் இறங்கி வந்திருக்க மாட்டார். மோட்சமும் நமக்குத் திறந்திராது

இதைப் பற்றி அர்ச் அகுஸ்தீன் சொல்லுகிறார் "இயேசுவின் உத்தானம் நமது நம்பிக்கை . அவருடைய ஆரோகணம் நமக்கு மகிமை . இயேசுவின் மோட்ச ஆரோகணத் திருநாளை நாம் இன்று கொண்டாடுகிறோம் . சரியான விதமாக விசுவாசத்தோடும் , பக்தியோடும் , பரிசுத்தமாகவும் அன்போடும் ஆண்டவரின் ஆரோகணத்தைக் கொண்டாடுவோமேயாகில் நாம் அவரோடு மேலே ஏற வேண்டும் . அங்கு நம் இதயம் உயர வேண்டும் . மேலேறுகையில் கர்வம் மேலே ஏறக் கூடாது . நமது பேறுபலன்களைக்  கொண்டே நாம் மேலே போகிறோம் என்ற மதி மோசம் இருத்தலாகாது . ஆண்டவருக்காக என்பதை மறந்து உயரப் பறப்பது அகங்காரம் . ஆண்டவரோடு நம் உள்ளம் மேலே போகுமேயாகில் அது நமது சொந்த வீடேகுவதாம்.

கவனியுங்கள் சகோதரர்களே என்ன அதிசயம் ! கடவுள் மேலே இருக்கிறார் . நீ மேலே ஏறப்பார். அவர் உன்னை விட்டுப் பறந்து விடுகிறார் . தரைமட்டம் உன்னைத் தாழ்த்து . அவர் உன்னிடம் கீழே வருகிறார் . இது ஏன் ? ஆண்டவர் உயர்ந்தவர் . தாழ்ச்சியுள்ளவர்கள் மேல் தன் கண்ணைத் திருப்புகிறார் . உயர்ந்தவர்களை எட்டி நின்று பார்க்கிறார் . தங்களைத் தாழ்த்துகிறவர்களை அருகிலிருந்து இரக்கத்தோடு எழுப்பி விடுகிறார் . அகங்காரமுள்ள பெரியோரை எட்டி நின்று பார்த்துக் கீழே உருட்டி விடுகிறார்

ஆண்டவரின் ஆரோகணம் மனித சுபாவத்தின் ஆடம்பர வெற்றி . என்றென்றுக்கும் கடவுளும் மனிதனுமான இரண்டாம் தேவ ஆளோடு ஒன்றித்து மோட்சம் கொண்டு போகப்படுகிறோம் . இயேசுநாதருடைய பாடுகளாலும் மரணத்தாலும் அவருடைய மனித சுபாவம் மோட்சத்தில் எல்லா சிருஷ்டிகள் மேல் அரசுரிமை பெற்றது . தேவ சுபாவத்தில் அவர் பிதாவுக்கும் பரிசுத்த ஆவிக்கும் சமம் . மனித சுபாவத்திலும் தேவ வல்லமையிலும் சுதந்திரம் பெற்று மனுக்குலத்திற்கே நீதிபதியும் அதிபதியும் ஆனார் . முள்முடி தான் அவரது ஆட்சியின் சுதந்திரத்தின் சின்னம் . அவர் கரத்தின் மூங்கில் கோல் நீதி செலுத்த அவருக்குள்ள அதிகாரத்தின் சாட்சி . அவரது கரங்களிலும் கால்களிலும் உள்ள காயங்கள் பேயின் மேலும் உலகின் மேலும் உடலின் மேலும் அவர் கொண்ட வெற்றியைப் பறையடிக்கின்றன

இயேசுவின் ஆரோகணம் அப்போஸ்தலர்கள் உள்ளத்தில் அதிசயத்தையும் அக்களிப்பையும் ஊட்டின . இயேசுநாதர் தம் அலுவலை முடித்து ஆனந்தத்தில் மகிமையில் பிரவேசித்து விட்டார் . அவருக்கு இனிமேல் மகிழ்ச்சியும் மகிமையுமே . அவரது அரசுக்கு முடிவில்லை . ஆதலால் நாம் இயேசுவுக்காக மகிழ்வோம் . மோட்சம் இனிமேல் நமதே . நம்மைக் குறித்தும் அகமகிழலாம் . பாவத்தை எந்நாளும் தவிர்த்து நடப்பது சங்கட அலுவல் . எனினும் பாவமின்றி வாழ்ந்தால் போதுமென்ற தாழ்ந்த மனப்பான்மை நம்மிடம் தாமதிக்கலாகாது . புண்ணியத்தின் ஏணியில் மேலும் மேலும் ஏற வேண்டும் .இயேசுவோடு பந்திக்கும் ஐக்கியத்தில் நாளுக்கு நாள் அதிகம் நெருங்க வேண்டும் எனும் தீர்மானம் உறுதிப்பட வேண்டும்

சரிதை.

அர்ச் சாமினாதருக்கு பேதுரோ என்ற பேர் கொண்ட ஒரு அத்தை மகன் இருந்தான் . இவன் பாவ வழியில் ஈடுபட்டு அலைந்தான் . தன் உறவினர் செபமாலையின் வல்லமையைப் பற்றி பிரசங்கம் செய்துகொண்டிருக்கிறார் எனவும் அப்பிரசங்கங்களைக் கேட்டு பலர் மனந்திரும்பி தங்கள் பாவ வழியை விட்டு திருத்தி அமைத்துக் கொண்டார்கள் எனவும் கேள்விப்பட்டான்

"நான் நல்வழிக்குத் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கையை இதுவரை இழந்திருந்தேன் . இப்பொழுது எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை பிறக்கிறது . இப்பக்திமானின் பிரசங்கத்தை நான் கேட்பேன்  " என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் . ஒரு நாள் பிரசங்கம் கேட்கச் சென்றான் . கூட்டத்தில் இவன் நிற்பதை சாமிநாதர் கண்டு கொண்டார் . மகா உக்கிரத்தோடு பாவத்தின் மோச நிலையையும் , பாவத்தின் அக்கிரமத்தைப் பற்றியும் சாமிநாதர் அழுத்தமாகப் பேசினார் . தன் உறவினன் தன் பாவாக்கிரமத்தைக் கண்டுணர்ந்து மனஸ்தாபப்பட வேண்டுமென்று உள்ளத்தில் இறைவனிடம் கெஞ்சினார்

அந்த நேரம் பேதுரோ பயந்தான் . ஆனால் மறு நிமிடம் அதை மறந்தான் . தன் வாழ்க்கை வழியைத் திருத்தி அமைத்துக் கொள்ளவில்லை . வேறொரு நாளும் பிரசங்கம் கேட்கப் போனான் . சுவாமிநாதர் அவனுடைய கல்நெஞ்சத்தைக் கண்டு உரத்த சத்தமாய்ச் சொன்னார் " ஆண்டவரே , உமதாலயத்துக்குள் சற்று முன் வந்தவனுடைய ஆத்தும நிலையை இங்கு கூடியிருக்கும் மக்கள் யாவரும் காணக் கிருபை செய்யும் " என்றார் . சனங்கள் என்ன கண்டார்கள் ? பயங்கரமான கொடிய மிருகங்களைப் போல பேய்கள் பேதுரோவைச் சூழ்ந்து நிற்பதையும் , பெரும் இருப்புச் சங்கிலிகளால் அவைகள் அவனைப் பிணைத்திருப்பதையும் கண்டனர் . மக்கள் பயந்து அரண்டு நாலா பக்கமும் சிதறி ஓடினர் . இவ்விதம் மக்கள் தன்னை விட்டு பயந்து ஓடுவதைக் கண்ட அவனை கலக்கமும் பீதியும் பிடித்தன

சாமிநாதர் யாவர் மத்தியிலும் அமைதியை நிறுத்தி , பின் பாவியை பார்த்துப் பேசுவார் :" நிர்பாக்கிய மனிதனே , உன் கேவலமான நிலையை உணர்ந்து தேவ தாயின் பாதத்தில் விழு . இதோ இச்செபமாலையை எடுத்து உன் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு பக்தியாய்ச் சொல் . உன் வாழ்க்கையைத் திருத்தி அமைக்க நல்ல பிரதிக்கினை செய் " என்றார் . பேதுரோ முழந்தாளில் விழுந்து முழுச் செபமாலை சொல்லி மெய்யான மனஸ்தாபத்தோடு பாவசங்கீர்த்தனம் செய்தான் . தினந்தோறும் செபமாலை சொல்லவும் செபமாலை மாதா சபையில் சேரவும் புனிதர் புத்திமதி சொன்னார் . அவன் அப்படியே நடப்பதாகச் சொன்னான் . ஆலயத்தை விட்டு வெளியேறும்போது அவனது முகம் சம்மனசின் வதனத்தைப் போல் பிரகாசித்தது . செபமாலையை அடிக்கடி சொல்லி கிறிஸ்தவ சீவியம் சீவித்து பாக்கியமாய் மரித்தான்.

செபம்.

மோட்சத்திற்கு ஆரோகணமான இயேசுவே , உமது கரங்களிலும் காலிலும் அகில உலகின் காயங்களை நீர் தரித்திருக்கிறீர் . கடவுளின் காணா முகத்தின் முன் விண்மீன்களைப் போல பிரகாசித்து எங்களுக்காக அவை பரிந்து பேசுகின்றன .உமது ஐந்து திருக்காயங்களால் எங்களை ஐம்புலங்களைச் சுத்திகரித்து எங்கள் உள்ளங்களை மோட்சத்திற்கு எழுப்பியருளும் . உமது மகிமை பிரகாசிக்கும் உடலில் உள்ள காயங்களைக் காண்பித்து எங்கள் மேல் இறைவனின் இறக்கம் இறங்கச் செய்கிறீரே , உமது அன்பின் பெருக்கம் நீர் அடைந்த காயங்களை உலக மக்களுக்குக் காட்டி அவர்களை உம்மிடம் மேலே இழுக்க எங்களுக்கு வரம் தாரும்

இயேசுவின் ஆரோகணத்தை அருகில் நின்று கவனித்த செபமாலை இராக்கினியே , எங்கள் உள்ளம் அவரோடு பரகதியில் என்றும் வாழக் கிருபை செய்தருளும்.

ஆமென்.