நவம்பர் 16

உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நமக்குச் சொந்தமான ஆத்துமாக்கள் என்று காண்பிக்கிற விளக்கமாவது.

தியானம்.

உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருக்க வேணுமென்பதற்கு முன் சொன்ன நியாயங்கள் பலத்த நியாயங்களாயிருந்தாலும், எண்ணிக்கையில்லாத கிறிஸ்துவர் கள் இவைகளைச் சரியாய்க் கவனித்துப் பார்க்காமல் அந்த ஆத்துமாக்களை மறந்து, அவர்களுடைய அவதியைக் குறைக்க ஒன்றும் செய்யாமற் போகிறார்கள். அப்படி உத்தரிக்கிற ஆத்துமாக்களை மறந்து அவர்களுக்காக ஒன்றும் செய்யாதிருக்கிறது எவ்வளவு பெரிய கொடுமை யென்று இப்போது காண்பிக்க வேணும்.

ஒருவன் தன்னுடைய சொந்தக்காரரை விசாரிக்காமற்போனால் அவன் சத்திய வேதத்தை விட்டு  புறமதத்தானைவிட அதிகக் கெட்டவனாயிருக்கிறானென்று அர்ச் சின்னப்பர் திமோத்தேயு இரண்டாம் நிருபம் ஐந்தாம் அதிகாரம் ஏழாம் வசனத்தில் எழுதியிருக்கிறார். உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நமக்குச் சொந்தமான ஆத்துமாக்களென்று காட்டுவோ மேயாகில், அவர்களை விசாரிக்காமல் போவது பெரிய துரோக மென்றும், பெரிய கொடுமையென்றும் ஒப்பித்தாற்போலாகுமல்லவோ?

முதலாவது சகலமான உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நமக்குத் தகப்பனாகிய சர்வேசுரனாலே உண்டாக்கப்பட்டு. அவருடைய பிரதாபமுள்ள சாயலைத் தரிசித்து, அவருடைய இஷ்டப்பிரசாதத்தோடு இறந்து, என்றென்றைக்கும் அவரிடத்திலே வாழ நியமிக்கப்பட்டிருக்கையில், அந்த ஆத்துமாக்கள் நமக்கு வேற்றுமையுள்ள ஆத்துமாக்களென்று சொல்லக்கூடுமோ? நமக்குச் சம்பந்தமற்ற ஆத்துமாக்களென்று நினைக்கக் கூடுமோ?

மீண்டும் நமதாண்டவருமாய் இரட்சகருமாய் சகோதரருமாயிருக்கிற சேசுகிறிஸ்துநாதருடைய திவ்விய இரத்தத்தினால் அந்த ஆத்துமாக்கள் மீட்டிரட்சிக்கப்பட்டு, அவருடைய ஞான உறுப்புகளாயிருந்து, அவருடன் தேவ சிநேகத்தால் பிரியாத பந்தனமாய் ஒன்றித்து, அவரோடேகூட நித்தியத்தில் எவ்வித பாக்கியங்களையும் அநுபவிக்கத் தெரிந்து கொள்ளப் பட்டிருக்கையில், அந்த ஆத்துமாக்களை உங்களுக்குப் புறத்தியாத்துமாக்களென் பீர்களோ? சம்பந்தமற்ற ஆத்துமாக்களென்று நினைப்பீர்களோ? மேலும், சகலமான கிறிஸ்துவர்களுக்கு சர்வேசுரன் ஒருவரே தகப்பனும், சேசுநாதர் ஒரே இரட்சகரும், தேவமாதா ஒரே தாயாரும், ஞானஸ்நானம் ஒரே ஞான முத்திரையும், திருச்சபை ஒரே ஞான மந்தையும், மோட்சபாக்கியம் ஒரே  ஒரே ஞான சரிரமும் ஒரே ஆத்துமமுமாயிருக்கிறார்களே.

இது இப்படியிருக்க மரித்தவர்களுடைய ஆத்துமாக்களை உயிரோடிருக்கிற நமக்குப் புறத்தி ஆத்துமாக்களென்று சொல்லலாமோ? சம்பந்தமற்ற ஆத்துமாக்க ளென்று நினைக்கலாமோ? அவர்கள் பேரில் இரக்கமில்லா மலிருக்கலாமோ? அவர்களுக்கு ஆறுதலுமின்றி ஒத்தாசை புமின்றி அவர்களை வருத்தப்படவிட்டுவிடலாமோ? அவர்களை அப்படி விட்டால் அது பெரிய அநியாயமும் பலத்த கொடுமையுமென்று உங்களுக்குத் தோன்றாதோ?

இரண்டாவது உத்தரிக்கிற ஆத்துமாக்களை அப்படி பொதுப்படப் பார்த்தால் உங்களுக்குச் சொந்தமல்ல வென்றாலும், அந்த ஆத்துமாக்களுக்குள்ளே எத்தனையோ ஆத்துமாக்கள் உங்களுடனே அதிக சம்பந்தமும் அதிக பந்தனமும் அதிக சொந்தமுமாய் இருக்கிறார்களென்று பாருங்கள். உங்களுடைய தேசத்தார். ஊராரையும், சிநேகிதர், உபகாரிகளையும், உறவின் முறையாரையும், உபாத்தியாயர், உபதேசிமார்களையும் குருக்கள் மேற்றிராணிமார்களையும் உங்களுக்கு அந்நியர்களென்று நினைக்கவும் கூடாதென்றால் அவர்களுடைய ஆத்துமங்களுக்காக ஏதாவது பிரயாசைப்பட வேண்டாமோ? உங்களைப்பற்றி உங்களுடைய குருக்களும் உபதேசி உபாத்திமார்களும் எவ்வளவு துன்பப்பட்டு உங்களை மோட்சத்துக்குச் செல்லும் வழியிலே நிறுத்த வருந்தினார்களென்று அறியமாட்டீர்களோ?

உங்களுடைய உறவின்முறையார் எப்போதும் உங்களோடு கூட நன்மை தின்மை காரியங்களிலே நின்று உங்களுக்கு எவ்வளவு உதவி சகாயம் பண்ணினார்களென்று நினைக்காதிருப்பீர்களோ? நீங்கள் பட்ட வருத்தங்களிலும் இக்கட்டுகளிலும் உங்களுடைய சிநேகிதர் உபகாரிகளும் உங்களுக்கு எவ்வளவு பட்சங்காட்டி எவ்வளவு உபகாரம் செய்து கொண்டு வந்தார்களென்றும் உங்களுக்குத் தெரியாமல் இருக்குமோ ? உங்களுடைய ஊரார் தேசத்தாரும் உங்களோடு ஒரே சமூகமாய் இருந்ததினாலே யோசிக்காதிருப்பீர்களோ ? மெய்யாகவே ,சத்தியமாகவே , இவர்கள் எல்லோரும் உங்களுக்கு மிகவும் சொந்தமென்றும் உறவென்றும் பந்தனமென்றும் சொல்லவேண்டும் அல்லவோ ?இவை உண்மையென்றால், அவர்களுடைய ஆத்துமாக்களை மறவாமல் அவர்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டிரட்சிக்க உங்களுடைய செப தப தான தர்மங்களினாலே பிரயாசைப்பட வேணுமென்கிறதற்குச் சந்தேகமில்லை.

மூன்றாவது உங்களுடைய தாய் தகப்பன்மார்களையும், பிள்ளைகளையும், புருஷன் பெண் சாதியையும் தம்பி அண்ணனையும், தங்கை தமக்கையாரையும், மாமனாரையும், மைத்துனி மைத்துனன்மாரையும் உங்களுக்கு மிகச் சொந்தமென்றும் கிட்டின உறவென்றும் உற்ற பந்தனமென்றும் சற்றாகிலும் ஒத்துக் கொள்ளுவீர்கள் ஆயினும் அவர்கள் செத்தபிற்பாடு அவர்களை மறந்தது போல அவர்களுடைய ஆத்துமங்களின்  மட்டில் வெகு அசட்டையாயிருக்கிறீர்களென்பது எல்லாருக்குந் தெரிந்த விஷயம் .

அவர்கள் உயிரோடிருந்தபோது அவர்கள் யாதொரு பெல்லாப்பு நிமித்தம் துன்பம் அனுபவிக்கிறதை யாவது நீங்கள் கண்டபோது, படாத பிரயாசையெல்லாம் பட்டு, செய்யாத செலவெல்லாம் செய்து யாதொன்றுக்கும் அஞ்சாமலும், பின்வாங்காமலும், அவர்களைக் காப்பாற்றவும் தேற்றவும் மீட்கவும் மிகவும் உழைத்திருப்பீர்களல்லவோ? இப்போது அறிந்தும், அவர்களுக்கு ஆ றுதலையும் இளைப்பாற்றியையும் வருவிக்க ஒன்றும் செய்யாமலிருக்கிறதெப்படி? அந்த ஆத்துமாக்களுக்காக உங்களாலே கூடுமானதெல்லாம் செய்யாதுபோனால், நீங்கள் ஒநாய் கரடி புலியினங்களைக் காட்டிலும் அதிகக் கொடுமையுள்ளவர்களென்று சொல்ல வேண்டும்.

நீங்கள் குடியிருக்கிற வீடும், அணிந்திருக்கின்ற உடையும், உழுகிற காடும், பயிர் செய்யுந் தோட்டமும், விதைக்கற வயலும், செய்யுந் தொழிலும், அனுபவிக்கிற ஆஸ்தியும் அவர்களுடையதாகையால், இவையெல்லாம் மரித்த இவர்களுடைய பேரையும் உங்களுடைய கடமையையும் இரவும் பகலும் ஓயாமல் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறதல்லவோ? இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதே போகுமோ?

மேலும் உங்களுடைய ஊரெல்லையிலே இருக்கிற கல்லறையிலிருந்து ஒரு சத்தம் புறப்படுகிறாற்போல, "எங்கள் பேரில் இரக்கமாயிருங்கள், இரக்கமாயிருங்கள்" என்று மரித்தவர்கள் உங்களைப் பேரொலியாய்க் கூப்பிடுகிறதாக நினைத்துக்கொள்ளுங்கள். இந்த அபயசத்தத்துக்கு முதலாய் நீங்கள் இரங்காதேபோனால், இனிமேல் உங்களுக்கு என்னத்தைச் சொல்லப்போகிறோம். அர்ச் சின்னப்பர் திருவுளம்பற்றினாற்போல, நீங்கள் உங்களுடையவர்களின் ஆத்துமங்களை நினைக்காதிருப்பதைப் பற்றி சத்திய வேதத்தை விட்டுவிட்டாற்போல புறமதத்தாரைவிட நீங்கள் கெடவர்களென்றும் கொடுமையுள்ளவர்களென்றுந்தான் உங்களைக் கூறவேனும்.

கிறிஸ்துவர்களே, அர்ச் சின்னப்பர் எழுதிவைத்த இந்தப் பயங்கரமான வாக்கியம் உங்களுக்கு வராதபடிக்குச் சமஸ்த உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரிலும், விசேஷமாய் உங்களுடையவர்களின் ஆத்துமாக்கள் பேரிலும் வெகு இரக்கமாயிருந்து அவர்களை ஒருபோதும் மறவாமல் அவர்களைக் குறித்து ஜெப தப தானதர்மங்களைச் செய்து, திருச்சபையினுடைய பலன்களைப் பெற்று, திவ்விய பூசையை அடிக்கடி ஒப்புக் கொடுக்கப் பண்ணவேனும். அப்படிச் செய்வீர்களேயானால் உங்களுக்குண்டான ஒரு பலத்த கடனைத் தீர்த்து விடுகிறதுமல்லாமல், உங்களுக்கு அநேகம் நன்மைகளை வருவித்துக் கொள்வீர்களென்று அறியக்கடவீர்களாக.

இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லயச் செபம்

சேசுவின் திரு இருதய மே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்.

செபம் 

மட்டற்ற கிருபையுடைத்தான சர்வேசுரா, நாங்கள் பொழிந்த தாழ்மையான ஜெபங்களைக் கிருபாகடாக்ஷமாய்ப் பார்த்துக்கொள்ளும். தேவரீரை அறிந்து நம்பி உறுதியாய் ஸ்துதித்து வந்த எங்கள் பந்துக்களுடையவும், சகோதரருடையவும், உபகாரிகளுடையவும், சிநேகிதருடையவும் ஆத்துமங்களுக்காக நாங்கள் ஒப்புக் கொடுக்கும் இந்த எங்களுடைய செபங்களை ஏற்றுக் கொண்டு அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை உம்மிடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று தேவரீரை பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்

பதினாறாம் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது :

கல்லறைக்குப் போய் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து முழந்தாளிலிருந்து 10 பரமண்டல மந்திரமும், 10 பிரியதத்தமந்திரமும், 10 திரித்துவ ஆராதனையும் வேண்டிக்கொள்ளுகிறது.

புதுமை

ஜெர்மனியா தேசத்திலுள்ள வோர்ம்ஸ் என்ற பட்டணத்தருகிலுள்ள விஸ்தாரமான ஒரு காட்டில் இரண்டு பலத்த சேனைகளுக்குள் ஒரு கடின போர்ச் சண்டை நடந்தது. அச்சண்டையிலே திரளான சேவகர் மடிந்து அக்காட்டில்தானே அடக்கம்பண்ணப்பட்டார்கள். கொஞ்ச நாளைக்குப் பிற்பாடு இராத்திரி தோறும் ஆகாயத்தில் பெரிய சண்டை நடந்தாற்போலே சப்தித்தது. அந்நாட்டிலுள்ளவர்களெல்லாம் பயந்து கொண்டிருந்தார்கள். விடியற்காலமானதும் இதெல்லாம் நின்று போகும். சந்நியாசிகளுடைய மடம் ஒன்று அக்காட்டருகே இருந்ததினாலே அதில் கேட்கப்பட்ட பயங்கரமான இந்த சத்தங்களினாலே சந்நியாசிமார் தங்கள் செபத்தியானங்களைச் சரியாய் நிறைவேற்றக்கூடாமலிருந்தது. அதனால் மிகப்புண்ணியவானாயிருந்த ஒரு சந்நியாசியாரும் இன்னும் வேறு சில சந்நியாசிமார்களும் இதென்னவென்று அறிய அக்காட்டுக்குப் போனார்கள் . தங்களுடைய நம்பிக்கைஎல்லாம் சர்வேசுரன் பேரில் வைத்து செபங்களைப் பொழிந்து கொண்டு அந்த இடத்துக்கு வந்தார்கள் .வந்து சேர்ந்த உடனே திரளான போர்ச் சேவகர் வெகு இரைச்சலோடு தங்களுக்குள்ளே போர்ச் சண்டை செய்ய எத்தனிக்கிறாற் போலக் கண்டார்கள் .

மேற்சொன்ன புண்ணியவானான சந்நியாசியாரானவர் வெகுவாய்ப் பயந்தாலும், அர்ச் திரித்துவத்தின் பேரைச் சொல்லி, நீங்கள் யாரென்றும் உங்களுக்கு என்ன வேணுமென்றுஞ் சொல்லுங்கள் என்றார். அச்சேவகரில் ஒருவன் மறுமொழியாக நாங்கள் உயிருள்ள சேவகரல்ல, முன் இவ்விடத்தில் செத்து விழுந்த போர்ச் சேவகருடைய ஆத்துமங்கள்தான். எங்களுடைய பிரேதங்கள் இந்த இடத்தில் அடக்கம்பண்ணியிருந்தாலும், எங்களுடைய ஆத்துமங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கின்றன. எங்களைச் சுட்டெரிக்கும் அனல்களை நீங்கள் காணாதிருந்தாலும் அந்த அனல்களினால் பொறுக்கப்படாத வேதனைகள் அனுபவிக்கிறோம் என்றான். அதற்கு சந்நியாசியாரானவர் நடுநடுங்கிக்கொண்டு, இந்த ஆபத்துள்ள வேளையிலே சகாயமாக உங்களுக்கு நாங்கள் என்ன செய்யக்கூடுமென்று சொல்லுங்கள் என்றார். அதற்கு அந்தச் சேவகன் நீங்கள் எங்களுக்கிரங்கி எங்களுக்கு ஆறுதலையும

 மீட்பையும் வருவிக்கும்படியாக சர்வேசுரனுடைய சித்தத்தின்படியே நீங்கள் கண்டதும் , கேட்டதுமாகிய இவைகள் எல்லாம் நடக்கிறது . சகலத்தையும் துறந்த சந்நியாசிமார்களான உங்களுடைய செபமும் தவமும் விசேச விதமாய் நீங்கள் ஒப்புக்கொடுக்கிற திவ்விய பூசையும் , எங்களை வருத்தமின்றி மீட்கக் கூடும் . நாங்கள் எங்கள் அவதி தீர ஒன்றும் செய்யக்கூடாததைப் பற்றி , எங்கள் பரிகாரத்தின் கடன் தீருமளவும் நாங்கள் வேகவும் , வருத்தப்படவும் வேண்டும்  . ஆகையினாலே நீங்கள் எங்கள் பேரில் இரக்கமாய் இருக்க வேண்டுமென்று உங்களை மன்றாடுகிறோம் என்றான் . அவன் அப்படிச் சொன்ன உடனே கூட நின்ற திரளான சேவகர் எல்லோரும் குருக்களே, சந்நியாசிமார்களே, தகப்பன்மார்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டிக் கொள்ளுங்கள் என்று கூவினார்கள். அக்ஷனத்திலேதானே அவர்களெல்லோரும் ஆகாயத்திலே அக்கினிமயமாய் மறைந்து போகவே, அடுத்த ஒரு மலை மேல் ஒரு பெரிய நெருப்பு காணப்பட்டது. சந்நியாசிகளோவெனில் அதிகமதிகமாய்ப் பயந்து தங்களுடைய மடத்துக்கு திரும்பி வந்து அந்த போர்ச்சேவகருடைய ஆத்துமங்களைக் குறித்து வெகு ஜெபங்களையும் தவங்களையும் நடப்பித்து, அநேகம் முறை திவ்விய பூசையையும் ஒப்புக் கொடுத்தார்கள். அதற்கப்பால் அந்தப் பேரொலியும் ஆயுதச் சப்தமும் முழுமையாய் நின்றுவிட்டது.

இந்தப் புதுமையைக் கேட்ட கிறிஸ்துவர்களே, உங்களுடையவர்களின் ஆத்துமாக்கள் தேவ சித்தத்தின்படியே கல்லறைகளிலிருந்து புறப்பட்டு உங்களுக்குக் காணப்பட்டால் என்ன சொல்லுவார்களென்று நினைத்துப் பாருங்கள். நிச்சயமாகவே தங்கள் பேரிலே இரக்கமாயிருக்க வேணுமென்று உங்களை மன்றாடுவார்கள். அதனாலே முன்சொன்ன சந்நியாசிமார்கள் இந்தச் சேவகரைக் குறித்துச் செபதபம் பூசை நடப்பித்தது போலவே நீங்களும் உங்களுடையவர்களின் ஆத்துமங்களைக் குறித்துச் செய்யவேணுமென்று அறியக்கடவீர்களாக

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.