இறை ஊழியர் தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையா நேற்று இன்று நாளை!

பிறப்பு தரித்திரமானாலும், இறப்பு சரித்திரமாகட்டும் தடம் பார்த்து நடப்பவர்கள் மனிதர்கள் தடம் பதித்துச் செல்பவர்கள் மாமனிதர்கள் இது போன்ற பொன்மொழிகளை வாசித்துள்ளோம். மேடைப்பேச்சுக்களில் கேட்டுள்ளோம். இம்மண்ணில் சுயநலம் நிறைந்த சில்லறை மனிதர்கள்; தம்மைப் பற்றி மட்டுமே கவலை கொள்ளும் சராசரி மனிதர்கள், தங்களை மறந்து கடவுளுக்காகவும், பிற மனிதருக்காகவும் வாழும் மாமனிதர்களே புனிதர்கள் என்று மனிதர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். இம்மூன்று வகையினரில் முதல் இரண்டு வகையினரே அதிகம். மூன்றாவது வகையினர் மனித வரலாற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறிஞ்சிமலர் போன்று எப்பொழுதாவது பூத்து மணம் வீசுபவர்கள்.

மனிதர்களில் மாணிக்கமாக வாழ்ந்தவர்களின் வரலாறு எழுதப்படும்போது ஒரு தலைமுறை மறு தலைமுறைக்கும் அதன் மக்களுக்கும் கடந்து செல்லும் ஆற்றல் பெறுகிறது. தனக்காக வாழ்ந்து தன்னுடன் - தன் சமூகத்துடன் அழிந்து போகும் ஒருவராகாமல், மனிதர்கள் பிறர்நல வாழ்வுக்கான வேட்கையை விதைத்துவிட்டுச் செல்கின்றனர். அப்போதுதான் எதிர்காலச் சமுதாயத்திற்கு அடித்தளமிடப்பட்டு, ஆற்றலுடைய சமூகமாக மாறுவதற்கான எதிர்நோக்கு பிரகாசமாகும்.

இறை ஊழியர் தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையா சென்னை புனித அன்னாள் சபை நிறுவனர் 1819 ஆம் ஆண்டு காலி ராயண்ணா மற்றும் மரியம்மா என்ற பக்தி நிறைந்த தம்பதியருக்கு இரண்டாவது தவப்புதல்வியாக ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரங்கிபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார்; இறை ஊழியர் தாட்டிபத்ரி ஞானம்மா. இவரது தந்தை பங்கு வேதியராகப் பணியாற்றிய குழந்தைப் பருவத்திலிருந்தே தனது சகோதரர் சௌரய்யால இணைந்து தந்தையிடமிருந்து மறைக்கல்வி கற்றார். தாயின் வழிகாட்டுதலால் பக்தியும், தாழ்ச்சியும், தியாகமும், கார் குணமும், கடின உழைப்பும், எளிமையும் நிறைந்த இளம் பெண்ணாக விளங்கினார். 1837- ம் ஆண்டு ஞானம்மாவக்கம் பிரங்கிபுரத்தில் வேதியராக பணியாற்றிய இன்னையா என்பவருக்கும் திருமணம் நடந்தேறியது. எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான புதல்வியருக்கு ஞானத்தாயாக ஞானம்மா விளங்கிடுவார் என்பது இறைத்திட்டமாக இருந்ததால் என்னவோ இனிய இல்லற வாழ்வின் சான்றாக இத்தம்பதியருக்கு ஐந்து புதல்வர்கள் மட்டுமே பிறந்தனர்.

இறை ஊழியர் தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையா தமது 37 வது வயதிலேயே கணவனை இழந்தாள் இருபது ஆண்டுகால மகிழ்ச்சியான இல்லற வாழ்விற்குப்பின் கணவரின் திடீர் மரணம் இறை ஊழியர் தாட்டிபத்ரி ஞானம்மாவின் வாழ்வில் புயலென வீசி நிலைகுலையச் செய்தது. இருப்பினும் இறைவனின் அருள் துணையோடு தமது புதல்வர்களை கிறித்துவ விசுவாசத்தில் வளர்த்ததால் ஐவரும் குருத்துவ பயிற்சியிலும் துறவற உருவாக்க இல்லத்திலும் இணைந்தனர் இறைவன் தனக்கு அளித்த கடமையை நிறைவு செய்த நிம்மதியோடு இன்னும் இருக்கின்ற காலம் அமைதியான செபவாழ்வாக இருக்கவேண்டும் என்று விரும்பினார்.

ஆந்திராவில் குண்டூர் மறைமாவட்டத்தில் உள்ள பிரங்கிபுரம் பங்கு அப்போது மதராஸ் உயர் மறைமாவட்டத்தின் அதிகாரத்திற்குட்பட்ட ஒரு பகுதியாக இருந்தது அப்போது பேராயராக (Apostolic Vicar) இருந்தவர் மேதகு ஜான் ஃபெலலா பிரங்கிபுரத்திலிருந்து ஞானம்மா குருத்துவப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த தனது மகன்களை காண்பதற்காகச் சென்னைக்கு அவ்வப்போது வருவார். அவரது பயணச்சிரமங்களை பார்த்து பேராயர் மேதகு ஜான் பெனலி ஞானம்மாவை சென்னையிலேயே கங்கும்படி அறிவுறுத்தினார் அவரது அறிவுரையின்படி சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவிலுள்ள கீழச்சேரியில் துறவறப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த தனது மகன்களை சந்திக்க எதுவாக இருக்கும் வண்ணம் அங்கேயே நிரந்தரமாக குடியமர்ந்தார்.

இறைவன் திட்டத்தில் கீழச்சேரி

19 ஆம் நூற்றாண்டில் மிகவும் பின் தங்கிய கிராமங்களில் கீழச்சேரியும் ஒன்று. பெண்கள் ஆண்களுக்கு இணையாகக் கருதப்படாத சூழல். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வீட்டு வேலைகளிலும், வயல் வேலைகளிலும் ஈடுபடுவது மரபாக இருந்தது. பெண்களும் படிக்க முடியும், பல பணிகள் செய்ய முடியும் என்ற எண்ணம் யாருக்கும் இருக்கவில்லை. மரபை மறுத்தோ எதிர்த்தோ பேச யாருக்கும் துணிவில்லை. மாற்றுச் சிந்தனையின்றி கால ஓட்டத்தோடு ஓடிக்கொண்டிருந்த சமூகமாக அது இருந்தது. அச்சமூகத்தில் மாற்றுச் சிந்தனையை விதைக்கும் புளிக்காரமாக, வினையூக்கியாக, விடிவெள்ளியாக ஞானம்மா விளங்க திருவுளம் கொண்டார் இறைவன்.

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இறைவனின் தாய் அமல அன்னையின் பிரான்சிஸ்கன் துறவிகள் கீழச்சேரியில் மக்களின் ஆன்மீகத் தேவைகள், அருட்சாதனங்களை நிறைவேற்றி வந்தார்கள். ஞானம்மாவின் முதல் இரண்டு புதல்வர்கள் தாமஸ் மற்றும் மரியண்ணா இச்சபையைச் சார்ந்தவர்கள். அதோடு ஆண்பிள்ளைகளுக்கென ஆரம்பப்பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார்கள். பள்ளி மணியடித்ததும் ஆண்பிள்ளைகள் ஆரவாரக் கூச்சலுடன் பள்ளிக்கும் அவர்களின் வயதொத்த பெண்பிள்ளைகள் வயல் வேலைக்கு செல்லும் காட்சி ஞானம்மாவின் இதயத்தை இன்னலுகுள்ளாக்கியது. இந்த நிலை இப்படியே தொடர வேண்டுமா? பெண் பிள்ளைகளும் கடவுளின் படைப்பு தானே? கடவுள் இவர்களுக்கு நீதி வழங்கமாட்டாரா? என்ற கேள்விகளுடன் ஞானம்மாவின் தொடர் ஜெபம், தியானம் அமைந்தது. இந்த நிலை மாறும், புதிய சமுதாயம் மலரும் என்ற நம்பிக்கையை அவரில் பிறக்கச் செய்தது.

கீழச்சேரி திரும்பிய ஞானம்மா, கோவிலுக்கு அருகிலேயே இருந்த மங்கள அருளப்பா என்பவருக்குச் சொந்தமான வீட்டையும் அதைச் சுற்றி இருந்த நிலத்தையும் விலை கொடுத்து வாங்கினார். வசதிகளுடன் கூடிய பள்ளிக் கட்டடம் கட்ட விளைந்த ஞானம்மா இறைவனின் தாய் புனித அமல அன்னை பிரான்சிஸ்கன் அருட்சகோதரர்கள் கபிரியேல், சகிலி சவுரிரெட்டி இவர்களின் துணையுடன் குண்டூர், கடப்பா, கர்நூல் மாவட்டங்களில் உள்ள ஒண்டெத்துப் பள்ளி, நாகராஜுபள்ளி, போரூர், கொட்டாலா போன்ற கிறிஸ்தவ மையங்களுக்கு பயணம் செய்து நிதி சேர்த்தார். 3-51863 இல் பெண்களுக்கு என்று புனித கிளாரம்மாள் பள்ளி உதயமானது. இந்தப்பள்ளியில் 63 பெண் குழந்தைகள் படித்ததாக வரலாறு பதிவு செய்கிறது. கங்கராஜு பிரகாசம் என்பவருடைய மனைவி அன்னம்மா பள்ளியின் முதல் ஆசிரியர் ஆவார். ஞானம்மாவும் அப்பள்ளியில் மறைக்கல்வி கற்பித்து வந்தார்.

இச்செய்திகீழச்சேரியிலும், சுற்றுப்புறக் கிராமங்களிலும் காட்டுத் தீயெனப் பரவியது . சிலர் மனம் மகிழ்ந்தாலும், பலருக்கு அது அதிர்ச்சியாகவே இருந்தது. ஞானம்மாவின் ஆன்மீக வாழ்வையும், நல் உள்ளத்தையும் உணர்ந்த மக்கள் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க முன் வந்தார்கள். அதோடு சுற்றுப்புற கிராமங்களான எறையூர், இல்லூர், செல்லம்பட்டிடை, போளுர் போன்ற ஊர்களுக்கும் பயணித்து பள்ளியில் சேர பிள்ளைகளை அழைத்து வந்தார். பிற கிராமங்களில் இருந்து வந்த பிள்ளைகள் தங்கி பயில விடுதி ஒன்றை அமைக்க முடிவு செய்து, ஒரு மாதத்திற்குள்ளகாவே அதாவது 04-06-1863 அன்று பெண்களுக்கான விடுதியைத் துவக்கினார்.

பெண் கல்விக்கு வித்திட்ட ஞானம்மாவின் அரும்பெரும் சேவை நற்செய்தியென விரைவிலேயே பல பகுதிகளுக்கும் பரவியது. அன்னையின் வாழ்வால் ஈர்க்கப்பட்ட அருளம்மா, ஆகத்தம்மா என்ற இருவரும் 1871-ம் ஆண்டு ஞானம்மாவின் பணியை தொடர்ந்து ஆற்ற துறவு மேற்கொள்ள விரும்பினார்.

துறவு மேற்கொள்ள விரும்பிய அருளம்மா, ஆகத்தம்மா ஆகிய இருவரின் விண்ணப்பத்தை இன்னும் தமது பணி தொடரப்பட வேண்டும் என்பதற்கான இறைவனின் திட்டம் என்று எண்ணினார் ஞானம்மா. முன்னாள் பங்குத்தந்தை அருட்திரு ஆரோக்கியநாதரின் ஆலோசனைப்படி பெல்லாரியில் நல்லாயன் கன்னியர்களால் வழிநடத்தப்பட்ட பெங்களூர் புனித அன்னாள் சபை நவகன்னியர் உருவாக்க இல்லத்தில் பயிற்சிபெற்று இருவரும் அர்ப்பணம் ஏற்றனர். இடைவிடாத உழைப்பு, 20 வருடகால ஆஸ்துமா, நீண்ட மற்றும் கடினமான பயணங்கள் ஞானம்மாவின் உடல்நிலையை மிகவும் கவலைக்கிடமாக்கின. தனது முடிவு நெருங்கி வருவதை உணர்ந்த ஞானம்மா தன் தவப்புதல்விகளை அழைத்து இறுதி அறிவுரை வழங்கினார். கீழச்சேரியின் அப்போதைய பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை இரத்தினநாதர் கைகளிலிருந்து நோயில் பூசுதல் அருள் சாதனத்தைப் பெற்றப்பின் 1874-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி இரவு 11 மணியளவில் அவரது 55-வது அகவையில் இன்னுயிரை ஈந்தார். Rev. Fr. J.M. Leroux அவர்களால் இறுதிச்சடங்குகள் நிறைவேற்றப்பட்டு பங்குக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். 

அன்னை ஞானம்மா தான் இறக்கும் தருவாயில் அறிவுறுத்திய இறுதி வார்த்தைகள்:

என் அன்பு செல்வங்களே உங்களுக்கு பொறுப்பாய் உள்ளவர்களுக்கு பணியுங்கள். ஆன்மீக வழிகாட்டிகளுக்கு செவிமடுங்கள். இளம்பெண்களுக்கு மறைக்கல்வி, பிறகல்வியுடன் அடைக்கலமும் பாதுகாப்பும் தாருங்கள். இறையன்போடு கலந்த பிறரன்புடன் பிறர் சேவைக்கெனவாழ கற்றுக் கொள்ளுங்கள். பண உதவிக்கு அரசையோ, பிறரையோ நம்பியிராமல் கடின உழைப்பை மேற்கொண்டு உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

ஞானம்மாவின் இறப்பிற்குப்பின் அவர் பிறந்த இடத்திலும், இறந்த இடத்திலும் இருபெரும் துறவற சபைகள் உருவெடுத்தன எனவே இன்று அன்னை ஞானம்மா சென்னை புனித அன்னாள் சபை மற்றும் பிரங்கிபுரம் புனித அன்னாள் சபை என்ற இருபெரும் சபைகளின் நிறுவுநராக விளங்குகிறார். சென்னை புனித அன்னாள் சபையின் முன்னாள் சபைத்தலைமை அன்னையும் விண்ண ப்பதாரருமான (Petitioner) அருட்சகோதரி லீமா ரொசாரியோ அவர்கள் தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையா அருளாளர் பட்டத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ள தடையில்லை (nihil obstat) என புனிதர் பட்டத்திற்கான பேராயத்திடம் அனுமதி பெறவும் அதன்பின்பு உயர் மறைமாவட்டத்தின் ஆய்வுக் குழு அமைத்திடவும் வேண்டி இப்பணிக்கான வேண்டுகையாளர். துணை வேண்டுகையாளர் சபையால் நியமிக்கப்பட்டு 2013 செப்டம்பர் மாதம் 21-ம் நாள் விண்ணப்பக் கடிதத்தை சென்னைமயிலை உயர்மறைமாவட்டத்தின் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களிடம் சமர்ப்பித்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ் விண்ணப்பத்தை வத்திக்கானின் புனிதர் பட்டத்திற்கான பேராயத்தில் முறையாக மதிப்பீடு செய்தபின் 2014 ஜனவரி மாதம் 21-ம் நாள் தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையாவை இறை ஊழியர் என்று பிரகடனம் செய்தார்.

இறை ஊழியர் தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையா புனித நிலைக்கு உயர்த்துவதற்கான பணிகளை பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம் தற்போது தொடங்கியிருக்கின்றது.

கடந்த 7 ஆண்டுகளில், ஆணையத்தின் ஆயரின் பிரதிநிதி (Episcopal Delegate), நீதிநெறியாளர் (Promotor of Justice), எழுத்துப்பதிவாளர் (Notary), மொழிபெயர்ப்பாளர் (Translator), நகலெடுப்பவர் (Copyist), வரலாற்று ஆணையக்குழு (Historical Commission), இறையியல் தணிக்கையாளர்கள் (Theological Censors) ஆகியோர் தங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பணிகளை வத்திக்கான் பேராயத்தின் விதிமுறைகளின்படி நேர்மையோடு நிறைவேற்றினர்.

பேராயரால் நியமிக்கப்பட்ட இச்சிறப்புக் குழு தமக்குரிய பணிகளை சிரமேற்கொண்டு கண்ணும் கருத்துமாக ஆற்றியிருக்கிறது. பல ஆவணக் காப்பகங்கள், நூலகங்கள். பங்குதளங்கள், வரலாற்று இடங்கள், பல்வேறு துறைகளில் தொடர்புடைய மக்கள், தேவையான பதிவுகள், சேகரித்த கட்டுரைகள், பல குழுக்களுடன் நடத்திய உரையாடல்கள், மறைமாவட்ட விசாரணைகள், சாட்சிகளுடன் நடத்திய பதிவுகள் எல்லாவற்றிற்கும் மேலாக சந்தித்த இறைஊழியர் தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையாவின் நான்கு தலைமுறையினர் குடும்பங்கள் என ஆந்திரா, தமிழ்நாடு, காஷ்மீர் என்று தொடர்பான எல்லா விவரங்களின் தொகுப்புகளை பதிவு செய்து, தம் பணிகளை முடித்திருக்கும் இக்குழுவின் அர்ப்பணம் மிகுந்த பணி நம் கவனத்தை ஈர்க்கிறது. கடவுள் அவர்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

இந்த சிறப்பு நோக்கத்திற்காக ஜெபிக்க உங்களை அன்போடு அழைக்கிறோம். வத்திக்கானில் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நம் அன்னை இறைஊழியர் தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையா வணக்கத்திற்குரிய நிலைக்கு உயர்த்தப்படும் நாளுக்காக மகிழ்ச்சியுடன் காத்திருப்போம்.

Sisters of St.Anne - Madras (SSAM) Sisters of St.Anne - Phirangipuram (CSSA)

Most Rev. Dr. George Antonysamy Archbishop of Madras - Mylapore

President Cause of Beatification and Canonization