புனித உத்தரிய மாதா ஆலயம்
இடம்: அரசக்குழி, 606003
மாவட்டம்: கடலூர்
மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: நெய்வேலி
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித அந்தோனியார் ஆலயம், கோபாலபுரம்
2. புனித காணிக்கை மாதா ஆலயம், புதுக்கூரைப்பேட்டை
3. புனித சகாய மாதா ஆலயம், சகாயபுரம்
4. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், குமாரமங்கலம்
பங்குத்தந்தை அருள்பணி. V. அருள்தாஸ்
குடும்பங்கள்: 380
அன்பியங்கள்: 21
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி
நாள்தோறும் காலை 05:30 மணி ஜெபமாலை, காலை 06:00 மணி திருப்பலி
செவ்வாய் மாலை 06:00 மணி ஜெபமாலை,புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி
திருவிழா: மே மாதம் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலான பத்து நாட்கள்.
அரசக்குழி மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருள்பணி. அ. சைமன் (late)
2. அருள்பணி. V. பீட்டர் பிரான்சிஸ்
3. அருள்பணி. P. ஜான் போஸ்கோ, Vellore Diocese
4. அருள்பணி. S. அந்தோணி சாமி, Bhopal Diocese
5. அருள்பணி. S. ஞானமணி, SDB
6. அருள்பணி. M. அலெக்சாண்டர், OMI
7. அருள்பணி. ஜோசப் பெர்னாண்டஸ், குவனெலியன்
8. அருள்பணி. S. ஸ்தனிஸ்லாஸ், MMI
9. அருள்பணி. L. லூக்காஸ், OFM Cap
10. அருள்பணி. A. பவுல் பிரான்சிஸ், குவனெலியன்
11. அருள்பணி. A. ஜான் பீட்டர், குவனெலியன்
12. அருள்பணி. S. மரிய சூசை, Sambalpur Diocese
13. அருள்பணி. A. அருள்ராஜ், குவனெலியன்
14. அருள்பணி. வனத்தையன், MSFS
அருள்சகோதரிகள்:
1. அருள்சகோதரி. S. உன்னதமேரி, FIHM
2. அருள்சகோதரி. ஆ. லுத்தமில்லா மேரி, FIHM (late)
3. அருள்சகோதரி. S. லீமா, FIHM
4. அருள்சகோதரி. ரெஸ்டினா மேரி, FIHM
5. அருள்சகோதரி. M. விமலி, FIHM
6. அருள்சகோதரி. மேரி சுதில், CSST (late)
7. அருள்சகோதரி. லூர்து சகாய மேரி, FIHM
8. அருள்சகோதரி. லீமா கிறிஸ்டினா, தூய ஆவி கன்னியர் மடம் கேரளா
9. அருள்சகோதரி. செல்வா, கார்மேல் இருதய அன்னை சபை
10. அருள்சகோதரி. J. லூர்துமரி, FIHM
11. அருள்சகோதரி. V. வினோ ஆரோக்கியம், FIHM
12. அருள்சகோதரி. S. எஸ்தர் இமெல்டா லில்லிமேரி, Cluny
13. அருள்சகோதரி. V. செல்வா, CSST
14. அருள்சகோதரி. A. ஷெரிபா தோமினிக், FIHM
15. அருள்சகோதரி. ஜோஸ்பின் புஷ்ப ராணி, FIHM
16. அருள்சகோதரி. S. எலிசபெத் ராணி, FIHM
17. அருள்சகோதரி. S. ரோஸ்லின், FIHM
Church YouTube channel:
https://youtube.com/@mountcarmelchurcharasakuzh981...
வழித்தடம்:
கடலூர் -விருத்தாசலம் பிரதான சாலையில், கடலூரிலிருந்து 50கி.மீ தொலைவிலும், விருத்தாச்சலத்திலிருந்து 8கி.மீ தொலைவிலும் அரசக்குழி அமைந்துள்ளது.
நெய்வேலி மந்தாரகுப்பத்திலிருந்து 10கி.மீ தொலைவில் அரசக்குழி அமைந்துள்ளது.
Location map: Our Lady of Mount Carmel Church
https://maps.app.goo.gl/9XMzNa9oHjkqq5AbA
வரலாறு:
பெயர்க் காரணம் :
முற்காலத்தில் அரசக்குழிக்கு மேற்கில் சிறிது தொலைவில் ஆலமரத் தொகுப்பு இருந்திருக்கிறது. அவ்விடம் வழியாக பயணம் மேற்கொள்பவர்கள், அந்த ஆல மரத்தினடியில் தங்கி இளைப்பாறுவது வழக்கம். ஒரு முறை அரசரும், அமைச்சர்களும், போர்வீரர்களும் இவ்வழியாக பயணித்த போது இங்கு தங்கி இளைப்பாறினர். ஆனால் போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. எனவே, அவர்கள் இங்கு வாழ்ந்த மக்கள்மீது பரிவு கொண்டு, குளம் வெட்டினர். குளம் வெட்டிக் கொண்டிருக்கையிலேயே, நீரூற்று பீறிட்டு அடித்தன. அரசன் குளம் வெட்டவும், நீர் பீறிட்டு அடிக்கவும் அவ்விடத்திற்கு 'அரசுக்குடிநீர்' என்ற சொல் வழங்கப்பட்டு, பின்னாளில் 'அரசக்குழி' என்று மருவி காரணப் பெயராயிற்று. வெட்டப்பட்ட
குளத்திற்கு 'பாண்டுகுளம்' என்று பெயர் பெற்றது என்றும் சொல்லப்படுகிறது.
அரசுக்குழி எல்லைகள்:
இவ்வூருக்கு வடக்கே இருப்புக்குறிச்சியும், கிழக்கே கொம்பாடிக்குப்பமும், தெற்கே கோபாலபுரமும், மேற்கே சாத்தமங்களமும் எல்லைகளாக கொண்டிருக்கிறது. இந்த ஊரில் பன்முகத்தினர் ஒற்றுமையாக வசித்து வருகின்றனர். வெள்ளையன் குப்பத்திலிருந்து கிறிஸ்தவ மக்கள் புலன்பெயரும் முன்னமே, இந்து சமயத்தைச் சார்ந்த சகோதரர்கள் வசித்து வந்தார்கள். சிறப்புமிகு இவ்வூரில் அமைந்துள்ள, புனித உத்தரிய மாதா ஆலய வரலாற்றைக் காண்போம் வாருங்கள்…
இயேசு சபையினரின் நற்செய்திப் பணி:
இயேசு சபையினர் 1600 ஆம் ஆண்டு வேலூரில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அருள்பணி. கிராந்தி அடிகளார் மைலாப்பூரில் இருந்து 1660- ஆம் ஆண்டு செஞ்சிக்கு வந்து மறைப்பணியாற்றினார். இதே காலகட்டத்தின் இடைப்பகுதியில் திருச்சி, மதுரை பகுதிகளில் உழைத்து வந்த இயேசு சபை குருக்கள், உள்நாட்டு பகுதிகளிலும் நற்செய்தியைப் பரப்பினர். இதனாலேயே பல இடங்களில் கிறிஸ்தவ சமூகங்கள் உருவாயின.
1640 ஆம் ஆண்டில் அருள்பணி. மெர்த்தின்ஸ் அவர்கள் திருச்சியில் பணியாற்றிய போது ஏற்பட்ட, வேதகலாபனைகள், சண்டைகள் காரணமாக கொடுமைப்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் வெளியேறி செஞ்சி அரசின் திருவண்ணாமலை, செங்கம், வேட்டவலம் பகுதிகளில் புகலிடம் தேடினர். 1660 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு அருட்பணியாளர்கள் பிரேர், ஜான் டி பிரிட்டோ (புனித அருளானந்தர்), லெனெ (மைலாப்பூரின் பின்னாள் ஆயர்), தெலேஸ் ஆகியோர் இப்பகுதிகளை பார்வையிட்டு, ஒழுங்குப்படுத்தி, குழப்பங்கள், கொடுமைகளுக்கு மத்தியில் இம்மக்களை பேணி வளர்க்க உழைத்தனர். இந்த குருக்கள் கொள்ளிடத்திற்கு அருகே கொழை, கூத்தூர் ஆகிய இடங்களில் தங்கியிருந்து கோணாரப்பட்டு (கிருஷ்ணங்குப்பம் அருகேயுள்ளது), அகரம் கூரைப்பேட்டை (இன்றைய நெய்வேலி), கூனங்குறிச்சி, பரூர், திருவாடி, சித்தனாங்கூர் (இருந்தைக்கு அருகில்), வீரசோழபுரம் (முகையூர், ஆற்காட்டுக்கருகில்), அத்திப்பாக்கம், ஆதிச்சனூர், தண்டரை, வேட்டவலம், வீராணம், சாத்தனூர் அருகே செங்கம், கொரட்டாம்பட்டு, இன்னும் செஞ்சி வழியாக வேலூர் வரையுள்ள பகுதிகளையும், உத்திரமேரூர், காஞ்சிவரம் ஆகிய இடங்களையும் கண்காணித்து வந்தனர். மேலும் மைசூர் பகுதியில் இருந்த இயேசு சபைக் குருக்கள் தருமபுரியிலிருந்து அடிக்கடி, திருவண்ணாமலை பகுதிகளுக்கு வந்து, இங்கு பணிபுரிந்து கொண்டிருந்த மதுரை மிஷன் குருக்களுக்கு, கிறிஸ்தவர்களை பராமரிப்பதில் உதவி புரிந்து வந்தனர்.
நங்காத்தூர் முதல் கிறிஸ்தவர்கள் 1676 ஆம் ஆண்டு ஆரணியில் இருந்து வந்தவர்கள் என்றும், 1700 ஆம் ஆண்டு அணையேரியில் கிறிஸ்தவர்கள் இருந்தனர் என்றும் குறிப்புகள் உள்ளன. 1700 ஆம் ஆண்டு காலகட்டத்தில் திருக்கோயிலூர், செஞ்சி பகுதிகளில் ஏறக்குறைய 4000 கிறிஸ்தவர்கள் சிதறி வாழ்ந்து வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெய்வேலியில் கிறிஸ்தவம்:
கூரைப்பேட்டை (நெய்வேலி) பங்கில் வாழ்ந்த முதல் கிறிஸ்தவர்கள், இயேசு சபையினரான புனித சவேரியார் வழிகாட்டலில் வந்தவர்களாக கருதப்படுகிறார்கள். ஏனெனில் பாளையங்கோட்டை குறுநில மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இவரின் படைத்தளபதிகளாகவும், குதிரைப்படையில் வீரர்களாகவும் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த மக்கள் பணிபுரிந்தனர். படைவீரர்களின் சேவையை பாராட்டி, அவர்களது குடும்பங்குளுக்கு அப்போது காடாக இருந்த இந்தப் பகுதி 1610 ஆம் ஆண்டில் எழுதி தரப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது.
அருட்பணி. ஆண்ட்ரு பிரைரே:
கி.பி. 1680-இல் இயேசு சபையைச் சார்ந்த பிரான்ஸ் தேசத்து குருவானவர் அருட்பணி. ஆண்ட்ரூ பிரைரே இப்பகுதிக்கு மறைபோதகத்திற்காக அனுப்பப்பட்டார். அவர் குள்ளஞ்சாவடி என்ற ஊருக்கருகில் இருந்த கோணார்பட்டு என்ற கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்தவாறே கூரைப்பேட்டை (நெய்வேலி) பகுதிக்கு வந்து, மக்களுக்கு மறைபோதகம் செய்துவிட்டுப் போவது அவரது வழக்கமாயிருந்தது. இப்படி அவர் செய்த மறைபோதகப் பணி செயல்பாடுகள், அவைகள் பற்றிய குறிப்புகள், ஆண்டு அறிக்கை கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. தலைமை இடமான உரோமிற்கு அனுப்பப்பட்ட ஆண்டு அறிக்கை கடிதத்தில் இவ்வூரைப் பற்றிய குறிப்புகளும் எழுதப்பட்டிருக்கிறது.
கி.பி. 1680-இல் இங்குள்ள கூரைப்பேட்டை கிறிஸ்தவர்களுக்காக சிவப்பு மண்ணாலும், கூரையாலும் வேயப்பட்ட ஒரு சிற்றாலயம் எழுப்பப்பட்டது.
கூரைப்பேட்டையின் தாய் மறைத்தளம் கோவிலானூர் ஆகும். கோவிலானூரில் இருந்து முதன் முதலாக கூனங்குறிச்சியும், பணிக்கன் குப்பமும் தனிப்பங்குகளாக ஆயின. அதன் பின்னர் கூனங்குறிச்சி பங்கிலிருந்து பிரிந்து கூரைப்பேட்டை தனிப்பங்காக உருவெடுத்தது. கூனங்குறிச்சி, வெள்ளையன் குப்பம், கூரைப்பேட்டை, எருப்புக்குரிச்சி, தோப்பளிக்குப்பம் ஆகிய ஐந்து ஊர்களையும் உள்ளடக்கியதே கூரைப்பேட்டை (நெய்வேலி) பணித்தளமாகும்.
1703 ஆம் ஆண்டு கர்நாடக மிஷன், மதுரை மிஷன் ஆகியவற்றிற்கிடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, பெண்ணையாற்றுக்கு தெற்கேயுள்ள பகுதி மதுரை மிஷனின் கீழ் இருந்தது. இதனால் முன்பு முக்கியமான நிலையிலிருந்த அகரம், கோணார்பட்டு ஆகியவை தங்களது முக்கியத்துவத்தை இழந்தது. 1710 ஆம் ஆண்டு கூரைப்பேட்டை என்று அழைக்கப்படும் நெய்வேலி -யில் முதன் முதலாக அருட்பணியாளர் ஒருவர் பொறுப்பேற்றார். அவரது பெயர் தெரியவில்லை. கூனங்குறிச்சியிலும் 1715 ஆம் ஆண்டில் அருட்பணியாளர் ஒருவர் பணிபுரிந்துள்ளார். மேலே குறிப்பிட்டுள்ள கூரைப்பேட்டை (நெய்வேலி), கூனங்குறிச்சி ஊர்களுடன் இன்னும் எறையூர், வேலூர், பணிக்கன்குப்பம், சாத்திப்பட்டு ஆகியவை கிறிஸ்தவர்கள் வாழ்ந்த முக்கிய இடங்களாகும்.
சிறுசிறு தொல்லைகளுக்கிடையேயும், சண்டைகளும், அதன்காரணமாக சிப்பாய்களின் நடமாட்டமும் இருந்த போதிலும், கிறிஸ்தவர்கள் தங்களது இறைவிசுவாசத்தில் பற்றுறுதியுடன் வாழ்ந்தனர். இந்த இடங்களுக்கு முதன் முதலாக விஜயம் செய்த ஆயர் லெனே ஆவார். இவர் சாந்தோம் ஆயரான பின்னர் 1713 ஆம் ஆண்டு இப்பகுதிக்கு வந்தார். அவ்வேளையில் மதுரை மிஷனுக்கு சொந்தமான இப்பகுதியில் கோணான்குப்பத்தை மையமாகக் கொண்டு, அருள்பணி. பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இதன் பின்னர் இயேசு சபை கலைப்பு, குருக்கள் பற்றாக்குறை, தொல்லைகள் போன்ற காரணங்களால் 1745 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கோணான்குப்பம், அய்யம்பேட்டையுடன் இணைக்கப்பட்டது.
இயேசு சபை கலைக்கப்பட்ட பின்னர் இப்பகுதியில் நற்செய்திப் பணியாற்றிய அருள்பணி. மச்சாதோ அவர்கள் 1775 ஆம் ஆண்டில் ஆவூரில் ஓய்வு பெற்றார். கோணான்குப்பம் ஆலயமானது சாந்தோம் ஆயரின் கீழ் கொண்டு வரப்பட்டது.
1804 ஆம் ஆண்டு கோணான்குப்பம் பங்கு குருவாக இருந்த கோவா மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி. கஜத்தான் வியெகாஸ் அவர்கள், கர்நாடகா மிஷனில் அத்திப்பாக்கம் பகுதியில் உள்ள கிறிஸ்தவர்களையும், மணிக்கொல்லை ஊரையும் பராமரித்து வந்தார். கடற்கரைப் பகுதியில் கடலூர், பரங்கிப்பேட்டை ஆகியன துறவற சபை குருக்களின் கண்காணிப்பில் சாந்தோம் ஆயரின் கீழ் செயல்பட்டு வந்தன.
கூரைப்பேட்டையில் (நெய்வேலி) தற்போது உள்ள ஆலயமானது அருள்பணி. சவரிநாதன் அவர்களால் கட்டப்பட்டது. 1911 ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1920 ல் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று அர்ச்சிக்கப்பட்டது. ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அருள்பணி. சவரிநாதன் அவர்கள் கூனங்குறிச்சிக்கு சென்று விட்டார். அதன் பிறகு 1933 வரை நெய்வேலி பங்கில் எந்த குருவானவரும் பணிபுரியவில்லை. 1933-1938 அருள்பணி. மெசின் அடிகளார் பணிபுரிந்தார். 1939-1946 அருள்பணி. சாமிநாதன் பணிபுரிந்தார். அதன்பின் 10 வருடங்களுக்கு குருவானவர் எவரும் பணிபுரியவில்லை. 1956-ல் அருள்பணி. அலெக்ஸாண்டர் ஓலாசாயில் பணிபுரிந்தார். இவரது பணிக்காலத்தில் தான் நெய்வேலி சுரங்க நிறுவனத்தார் ஆலயத்தையும், ஆலயத்திற்கு சொந்தமான இடத்தையும் அரசு உடைமை ஆக்கினார்கள்.
அருள்பணி. அலெக்ஸாண்டர் அவர்கள் பழுப்பு நிலக்கரி நிர்வாக உயர் அதிகாரிகளிடம் மிக நெருக்கம் கொண்டிருந்ததன் பயனாக, நெய்வேலி புனித காணிக்கை மாதா ஆலயத்தின் (சிலுவைக் கோயில்) மேற்புறமும், கீழ்புறமும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
அரசக்குழி:
1960 ஆம் ஆண்டு நெய்வேலியில் உள்ள வெள்ளையன் குப்பம் என்ற பகுதியில் முதல் சுரங்க விரிவாக்கப் பணி துவங்கிய போது, அங்கிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களே அரசக்குழி இறைமக்கள் ஆவர்.
வெள்ளையன் குப்பம் வசிப்பினர் தேனி, கம்பம் ஆகிய பேரூர்களுக்கு அருகில் இருக்கின்ற வெள்ளக்கோவில் என்ற ஊரில் இருந்து குடியேறியவர்கள் ஆவர்.
நெய்வேலி பங்கில் மேலகூரைப்பேட்டையில் தற்போதுள்ள முதல் சுரங்க அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் அப்பகுதி மக்களால், புனித அந்தோனியார் சிற்றாலயமானது மண்ணால் கட்டப்பட்டு, கூரை வேய்ந்து வழிபாட்டு தலமாக திகழ்ந்தது. அதனையடுத்து வடமேற்கில் வெள்ளையன் குப்பம் கிராமத்தில், மண்ணால் சிலுவை வடிவில் கிழக்கு நோக்கி புனித உத்தரிய மாதா ஆலயம் கட்டப்பட்டது. அருட்பணியாளர்கள் அலெக்ஸாண்டர் ஓலாசாயில், வல்லபநாதர், வெரினோ அடிகள் ஆகியோர் இங்கு திருப்பலி நிறைவேற்றி மக்களுக்கு ஞான உதவிகள் செய்து வந்தனர். நிலக்கரி நிறுவன நில ஆர்ஜிதத்தால் இந்தப் பகுதிகளும் ஆலயங்களும் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவை இடிக்கப்பட்டன.
வெள்ளையன் குப்பம் ஆலயத்தை நிர்வாகம் எடுத்துக் கொண்ட போது, பிற்காலத்தில் மக்களுக்குத் தேவை என்றால் ஆலயத்திற்கு இடம் தருவதாக நிறுவன அதிபர் பங்குத்தந்தைக்கு உறுதியளித்திருந்தார். தற்போது இங்கு நிர்வாக அனுமதியுடன், உலக இரட்சகர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
அரசக்குழி ஆலயம்:
அரசக்குழியில் 1959-60 காலகட்டத்தில் வேப்பமரத்தடியில் திருப்பலி மேடை அமைத்து அருள்பணி. அ. புஷ்பநாதர் அவர்களால் திருப்பலி நடத்தப்பட்டு வந்தது.
1961 ஆம் ஆண்டு 10 சென்ட் நிலமானது அருள்பணி. புஷ்பநாதர் அவர்களின் முயற்சியால் வாங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. 1961 நவம்பர் மாதத்தில் மேலும் 20 சென்ட் நிலமானது வாங்கப்பட்டு, இந்த இடத்தில் அருள்பணி. அ. புஷ்பநாதர் அவர்களால் கீற்றுக் கொட்டகை ஆலயம் கட்டப்பட்டு, வழிபாட்டிற்காகவும், ஆரம்ப பள்ளிக்கூடமாகவும் செயல்பட்டு வந்தது. 01.02.1962 அன்று பள்ளிக்கூடத்திற்கு அரசு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது. அருள்பணி. வேளாங்கண்ணி அவர்கள் மண்சுவர் மங்கர் ஓடு வேய்ந்து ஆலயமாகவும், பள்ளிக்கூடமாகவும் நடத்தி வந்தார். இவ்வாறாக 9 ஆண்டுகள் இவை செயல்பட்டு வந்தன.
தொடர்ந்து பணிபுரிந்த அருட்பணி. பி. பி. சேவியர் அவர்களின் முயற்சியால் 25.12.1972 அன்று தற்போது உள்ள புதிய ஆலயம் கட்ட அப்போதைய கொத்து தலைவர்களுடன் கலந்தாலோசித்து, 02.02.1973 அன்று ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. அந்தோணி தும்மா அவர்கள் ஆலய கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய, 08.09.1975 அன்று பேராயர் மேதகு செல்வநாதர் அவர்களால் ஆலயமானது அர்ச்சிக்கப்பட்டது.
1974 ஆம் ஆண்டில் திருஇருதய ஆண்டவர் கெபி கட்டப்பட்டது.
அரசக்குழி தனிப்பங்கு:
கூனங்குறிச்சி பங்கிலிருந்து பிரிந்து 10.07.2006 அன்று அரசக்குழி தனிப் பங்காக உருவானது. முதல் பங்குதந்தையாக அருட்பணி. K. A. டேனியல் (2007-2013) அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார். இவரது பணிக்காலத்தில் அமரர் ஊர்தி ஏற்படுத்தப்பட்டது. 2007 ஆம் ஆண்டு முதல் பங்கு திருவிழா கொண்டாடப் பட்டது. ஆலய தரைக்கு டைல்ஸ் போடப்பட்டது. 2010 ஆம் ஆண்டு ஆலய முகப்பு எழுப்பப்பட்டது. ஆலயமானது புனரமைப்பு செய்யப்பட்டு, பேராயர் அந்தோனி ஆனந்தராயர் அவர்களால், 22.05.2013 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
13.01.2013 பழைய கூரை அகற்றப்பட்டு, புதிய கூரை அமைக்கப்பட்டது. புனித லூர்து அன்னை குகை அமைக்கப்பட்டது.
அருள்பணி. அல்போன்ஸ் (2013-2019):
2014 ல் புதிய பள்ளிக் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்டு, 12.01.2015 அன்று மறைமாவட்ட முதன்மை குருவால் திறந்து வைக்கப்பட்டது. இப்பள்ளிக்கூடம் விரிவாக்கம் செய்யப்பட்டு 20.11.2018 அன்று அருள்பணி. இரட்சகர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
தூய லூர்து மாதா கெபி கட்டப்பட்டு 11.02.2015 அன்று அருள்பணி. ஆர். இரட்சகர் அவர்களால் மந்திரிக்கப்பட்டது. ஆலய பொன்விழா 23.05.2015 அன்று கொண்டாடப்பட்டு, சுல்தான்பேட்டை மறைமாவட்ட ஆயர் அவர்களால், உத்தரிய மாதாவிற்கு இறைமக்களால் வழங்கப்பட்ட தங்க கிரீடம் சூட்டப்பட்டது.
02.11.2015 அன்று வியாகுல மாதா செபக்கூடம் அமைக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் வெண்கல கொடிமரம் நிறுவப்பட்டது.
அருள்பணி. V. அருள்தாஸ் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று சிறப்புற வழிநடத்தி வருகின்றார். ஆலயத்தை புதுப் பொலிவுடன் புனரமைப்பு செய்து 07.11.2021 அன்று மேதகு ஆயர் அந்தோனிசாமி பீட்டர் அபீர் (Apostolic Administrator Archdiocese of Pondicherry Cuddalore) அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும் பங்குதந்தை அருட்பணி. V. அருள்தாஸ் அவர்களின் வழிகாட்டலில், பங்கு மக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் உதவியுடன் நற்கருணை ஆராதனை ஆலயம் மற்றும் கடலூர் -விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் புனித அந்தோனியார் கெபி ஆகியன கட்டப்பட்டு, 07.11.2022 அன்று மேதகு ஆயர் அந்தோனிசாமி பீட்டர் அபீர் (Apostolic Administrator Archdiocese of Pondicherry Cuddalore) அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
அருட்பணி. V. அருள்தாஸ் அவர்களின் முயற்சியால் சிலுவைப் பாதை நிலைகள் அமைக்கப்பட்டு, பேராயர் மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களால் 14.05.2023 அன்று மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.
பங்குதந்தை அருட்பணி. அருள்தாஸ் அவர்கள் ஊடகத்தின் வழியாக அரசக்குழி பங்கின் புகழை உலகறியச் செய்து வருகின்றார்.
பங்கின் பள்ளிக்கூடம்:
புனித ஞானப்பிரகாசியார் தொடக்கப்பள்ளி
பங்கின் கெபிகள்:
1. புனித அந்தோனியார் கெபி
2. தூய லூர்து மாதா கெபி
3. சிலுவைப் பாதையின் 14 நிலைகள்.
4. திருஇருதய ஆண்டவர் கெபி
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
மரியாயின் சேனை
புனித வின்சென்ட் தே பவுல் சபை
பாலர் சபை.
புதுமைகள் பலபுரியும் புனித உத்தரிய மாதா ஆலயம் வாருங்கள்..
தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. V. அருள்தாஸ் அவர்கள்
ஆலய வரலாறு: அருள்பணி. அ. சூசை ராஜா, OFM Cap எழுதிய (2021 ஜூலை) அரசக்குழி புனித உத்தரிய மாதா திருத்தல காலச் சுவடுகள் புத்தகம்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி: ஆலய உறுப்பினர் கிரேஸி ஆரோக்கிய மேரி ஆசிரியை அவர்கள்.
புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர் திரு. இராபர்ட் அவர்கள்.