929 புனித சூசையப்பர் ஆலயம், பிள்ளைத்தோப்பு

                


புனித சூசையப்பர் ஆலயம்

இடம்: பிள்ளைத்தோப்பு

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: கோட்டார்

மறைவட்டம்: முட்டம்

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை அருள்பணி. C. ஜெகன்

குடும்பங்கள்: 605

அன்பியங்கள்: 26

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 05:30 மணி, காலை 07:00 மணி

திங்கள் மாலை 06:00 மணி புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி 

செவ்வாய், புதன், வெள்ளி, சனி திருப்பலி காலை 06:15 மணி

வியாழன் மாலை 06:00 மணி குழந்தை இயேசு நவநாள் திருப்பலி

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06:00 மணி சிறப்பு குணமளிக்கும் திருப்பலி, நற்கருணை ஆசீர்

மாதத்தின் மூன்றாவது திங்கள் மாலை 06:00 மணி சிறப்பு புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி 

திருவிழா: மே மாதம் 01-ம் தேதி

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருட்பணியாளர்கள்:

1. அருட்பணி. அகஸ்டின் பெர்னாண்டோ

2. அருட்பணி. தாமஸ் பெர்னாண்டோ

3. அருட்பணி. ஸ்தனிஸ்லாஸ்

4. ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ்

5. அருட்பணி. அருள்தாஸ்

6. அருட்பணி. கெர்வின் ஜேசுராஜன்

7. அருட்பணி. ஜெரோம், SAC

8. அருட்பணி. ஆரோக்கிய பெசானியோ

9. அருட்பணி. ஜெரோம், CMF

10. அருட்பணி. விஜய்

11. அருட்பணி. எடிசன்

12. அருட்பணி. சேவியர் 

மண்ணின் அருட்சகோதரர்கள்:

1. அருட்சகோ. பைஜூ

2. அருட்சகோ. பிஜூ

3. அருட்சகோ. கன்சன்

4. அருட்சகோ. அஸ்வின்

மண்ணின் அருட்சகோதரிகள்:

1. அருள்சகோதரி. கிளமென்சியா

2. அருள்சகோதரி. கருணா

3. அருள்சகோதரி. கிராஸ்மேரி (கிரேசி)

4. அருளசகோதரி. சபின் மேரி தாமஸ்

5. அருள்சகோதரி. மரிய டெல்பின்

6. அருள்சகோதரி. சோனியா

7. அருள்சகோதரி. வெனிஷா

8. அருள்சகோதரி. டினா

9. அருள்சகோதரி. அஜிதா

10. அருள்சகோதரி. சசி

11. அருள்சகோதரி. அகிலா

12. அருள்சகோதரி. சகாய ஜெயா

13. அருள்சகோதரி. ரெஜிலா

14. அருள்சகோதரி. சகாய அரசி

15. அருள்சகோதரி. மரிய வினோதினி

16. அருள்சகோதரி. நிஷா

17. அருள்சகோதரி. சகாய பபிதா

18. அருள்சகோதரி. ஜாஸ்மின்

19. அருள்சகோதரி. கெலின் அபிஷா

20. அருள்சகோதரி. மெல்பின்

வழித்தடம்: நாகர்கோவில் -இராஜாக்கமங்கலம் -கல்லுக்கட்டி -பிள்ளைத்தோப்பு.

Map location:St. Joseph's Church (Pillaithoppu)

https://maps.app.goo.gl/cYKhc6Xf6aKxYV6F7

வரலாறு:

இந்திய தீபகற்பத்தின் தென்கோடியில், வரலாற்றுச் சிறப்பு மிக்க குமரிமுனையிலிருந்து 25கி.மீ மேற்கே கடலோரப்பகுதியாக அமையப்பெற்று, கிழக்கே இராஜாக்கமங்கலம்துறை, மேற்கே முட்டம்துறை, வடக்கே அடர்த்தியானத் தென்னந்தோப்புகள் மற்றும் தெற்கே ஆர்ப்பரிக்கும் அரபிக்கடலை எல்லையாகக் கொண்ட மிகச்சிறு கிராமமான, இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் தாலுகாவின் தென்மேற்கு எல்லையாகத் திகழும் தோப்பு என்ற பிள்ளைத்தோப்புப் பகுதியின் பூர்வீகக்குடிகள். இவ்வூர் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோப்பு என்றே அழைக்கப்பட்டது.

கடலோரத்தில் அமையப்பெற்ற தோப்புப் பகுதி, வானுயர்ந்த தென்னை மரங்களால் கண்ணைக் கவரும் எழில்மிகு கிராமமாகக் காட்சியளித்தது. 1534 -1537 ஆண்டுகளில் முத்துக்குளித்துறை கடலோடிகளிடம் ஏற்பட்ட மதமாற்றத்தைத் தொடர்ந்து இப்பகுதி கடலோடிகளும், கத்தோலிக்கத் திருமறையைத் தழுவினர். பிரான்சிஸ்கன் சபையைச் சார்ந்த அந்நாளைய கொச்சி மறைமாவட்ட முதன்மை குரு அருள்பணி. மைக்கேல் வாஸ் அடிகளார் இப்பகுதி மக்களுக்கும் திருமுழுக்கு வழங்கினார். அவ்வாண்டு முதல் இவ்வூரில் சாப்பெல் (Chapel) எனப்படும் ஓலையால் வேயப்பட்ட சிற்றாலயம் இருந்திருக்க வேண்டும்.

அருட்பணியாளர்கள் இல்லாமையால் திருப்பலி கூட இல்லாமல் இருந்த இங்கு, பின்னாளில் புனித பிரான்சிஸ் சவேரியார், செம்மண் புனிதர் அருளானந்தர், இலங்கையின் திருத்தூதர் புனித ஜோசப் வாஸ் ஆகிய புனிதர்களின் காலடிபட்ட புண்ணிய பூமியாக மாறியது.

புனித சவேரியாரின் மறைபரப்புப் பணி:

பிரான்சிஸ் சவேரியார், 1544ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், சிறிய படகில் அரபிக்கடலில் கரை ஓரமாக பயணித்து, பூவாறு முதல் பள்ளம் வரையிலான கிராமங்களைப் பார்வையிட்டார். அப்போது முட்டம் துறையைக் கடந்து வரும்போது, தோப்பு என்ற சிற்றூரைக் கடலோரமாகப் பார்த்ததாகவும், அடர்த்தியானத் தென்னந்தோப்புகளுக்கு இடையில் சிறிய ஓலை வீடுகள், உயரமானத் தென்னை மரங்களுக்குப் பின்னணியில் மலை முகடுகள், ஆகியவற்றைக் கண்டதாகவும், ஆங்காங்கே பூவரச மரங்களில் மஞ்சள் நிற மலர்கள் பூத்துக் குலுங்கியதாகவும், இக்கண்கவர் காட்சிகள் மனதை வருடுவதாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். இங்கிருந்து சிறிது நேரப் பயணத்தில் இராஜாக்கமங்கலம் துறையில் ஆறு கடலில் சேரும் பொழிமுகம் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

தி கிரேட் ஹார்வெஸ்ட் - The Great Harvest:

பூவாறு முதல் பள்ளம் வரையிலானக் கடலோர மக்களை புனித பிரான்சிஸ் சவேரியாரின் அரும்பணி கத்தோலிக்க இறைநம்பிக்கையில் காலூன்றி நிலைக்கச் செய்தது. 1544ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில், புனித சவேரியார், பூவாறு முதல் பள்ளம் வரையிலான கிராமங்களில் கால்நடையாகப் பயணித்து, கத்தோலிக்க மறையில் மக்களை உறுதிபடுத்துகிறார். இதன்மூலம் 7-8 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட விசுவாச விதை துளிர்விட்டு வளர்ந்தது.

சவேரியாரின் வாழ்க்கை வரலாற்றில் இந்நிகழ்வு தி கிரேட் ஹார்வெஸ்ட் The Great Harvest என்றும் 10,000 (பத்தாயிரம்) மீனவர்கள் கத்தோலிக்கத் திருமறையைத் தழுவியதாகவும் சிறப்பாக குறிப்பிடப்படுகிறது.

(Ref: Book: Francis Xavier, His Life, His Times; Volume: 2,Book 3; Page 463; Chapter 4 ; Cheras and Pandyas; Heading 7: The Great Harvest - Author : Fr George SCHURHAMMER SJ)

இயேசு சபையின் மலபார் மறைமாநிலம் (Jesuit Province of Malabar):

வடக்கே வேலூர் முதல், தெற்கே நாஞ்சில்நாடு வரையுள்ள இன்றைய தமிழகம் மற்றும் இன்றைய கேரள மாநிலம் இணைந்த பகுதியே அன்று இயேசு சபையின் மலபார் மறைமாநிலம் (Jesuit Province of Malabar) என அழைக்கப்பட்டது. மலபார் மறைமாநிலத்தின் தலைவர் (Provincial) தொடக்கத்தில் கொச்சியில் இருந்தார். 

மலபார் மறைமாநிலம் கோவா ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டது.

கொச்சி நகரத்தின் வீழ்ச்சி - Fall of Cochin:

டச்சுக்காரர்கள் கொச்சியை கி.பி.1663-ல் கைப்பற்றினர். இந்நிகழ்வை வரலாற்று ஆசிரியர்கள் கொச்சி நகரத்தின் வீழ்ச்சி (Fall of Cochin) என்று குறிப்பிடுகின்றனர். ஹாலந்து நாட்டைச் சார்ந்த டச்சுக்காரர்கள் கால்வீனிய கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள். எனவே, தாங்கள் கைப்பற்றும் பகுதியிலிருக்கும் கத்தோலிக்க கிறித்தவ குருக்களை வெளியேற்றி விட்டு, மக்களிடம் கால்வீனிய மதக்கோட்பாட்டை வளர்ப்பதில் தீவிரம் காட்டி வந்தனர்.

கொச்சி பகுதியை டச்சுக்காரர்கள் கைப்பற்றியதால் இயேசு சபைக் குருக்களும், கத்தோலிக்க மக்களும் பெருந்தொல்லைகளைச் சந்திக்க நேர்ந்தது. எனவே, மலபார் மறைமாநிலத்தின் அதிபர் பாதுகாப்புக் காரணங்களுக்காக, திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குத் தமது இருப்பிடத்தை மாற்றும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். அச்சமயம் திருவிதாங்கூர் சமஸ்தானம் மன்னரின் தனிப்பட்ட ஆளுகையில் இருந்தது.

தலைமைப் பீடம்:

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடலோரப் பகுதிகளில் மக்கள் சிறிய ஆலயங்களை எழுப்பி, கத்தோலிக்க வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வாழ்ந்து வந்தனர். எனவே, மலபார் மறைமாநிலத் தலைமையைத்

திருவிதாங்கூர் கடலோரப் பகுதிக்கு மாற்ற முடிவு செய்தனர்.

திருவிதாங்கூர் மன்னரின் அனுமதியைப் பெற்று, இயற்கைப் பேரழகும், நல்ல தட்பவெப்பநிலையும், அமைதியானச் சூழலும், உள்நாட்டு மறைபரப்புத் தலங்களுக்குத் தரைவழிப் பயணமாகச் செல்ல இலகுவானதும், கடல் பயணங்களுக்கு வசதியானதுமான புவியியல் அமைப்பைக் (Geographical Advantage) கொண்டிருந்த தோப்பு என்ற இன்றைய பிள்ளைத்தோப்பு கிராமத்தைத் தம்முடைய இருப்பிடமாகத் தேர்வு செய்தனர்.

நாஞ்சில் நாட்டிலுள்ள பிள்ளைத்தோப்பில் வாழ்ந்து வந்த மறைமாநிலத் தலைவரின் கண்காணிப்பில் முதன்மை மையங்களாக கயத்தார்,  காமநாயக்கன்பட்டி, மதுரை, முள்ளிப்பாடி, மலையடிப்பட்டி, வடுகர்பேட்டை, கொளை போன்றவை இருந்தன. இப்பகுதிகளில் எண்ணிக்கையில் குறைவான குருக்களே மறைபரப்புப் பணியைச் செய்து வந்தனர். அவர்கள் அனைவருமே வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

இயேசு சபையின் மதுரை மறைபரப்புத் தலத்தின் (Madurai Mission) எல்லைக்கு உட்பட்ட ஒரு பகுதியே மறவநாடு ஆகும். மறவநாடு என்பது இன்றைய இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கியப் பெரும்பகுதியாக இருந்தது. மதுரை மறைபரப்புத் தலம் பிள்ளைத்தோப்பில் வாழ்ந்த மலபார் மறைமாநிலத்தின் அதிபரின் ஆளுகைக்கு உட்பட்டதாகும்.

கொடைக்கானல், செண்பகனுரில் இருக்கும் இயேசு சபை மதுரை மறைமாநில ஆவணக் காப்பகத்திலிருந்து (Jesuit Madurai Province Archives) நாம் திரட்டிய ஆவணங்களின்படி, இயேசு சபையின் மறைமாநில தலைமையகம் 1664-1665-ம் ஆண்டுகளிலிருந்து பிள்ளைத்தோப்பில் செயல்பட்டிருக்க வேண்டும். இயேசு சபை மறைமாநிலத் தலைவரின் வருகையால் குக்கிராமமாக இருந்த தோப்பு என்ற பிள்ளைத்தோப்பு, திருமறையின் தலைமைப் பீடம் தங்கும் தோப்பாகி... ஆன்மாக்களை அறுவடை செய்யும் பெருந்தோப்பாக மாறியது !!!!

மலபார் மறைமாநிலத்திற்குட்பட்ட மறைபரப்புத் தளங்களின் தலைமையகமாகச் செயல்பட்டு, தென்னிந்திய கத்தோலிக்க மறைபரப்புப் பணிகளின் இதயமாக இயங்கியது பிள்ளைத்தோப்பு!!!

பிள்ளைத்தோப்பில் அருளானந்தர் - St John De Britto in Pillaithoppu:

கி.பி. 1682-ம் ஆண்டு அருட்பணி. ஆண்ட்ரே பிரேயர், மறைமாநிலத் தலைவராக பிள்ளைத்தோப்பில்

பணியாற்றி வந்தார். அவருடைய அழைப்பின் பேரில், அவருடைய மேற்பார்வையில் இயங்கிய மதுரை மறைபரப்புத் தளத்திற்குப் பணியாற்றச் செல்லவிருந்த புனித அருளானந்தர், பிள்ளைத்தோப்பிற்கு வந்து, இயேசு சபை இல்லத்தில் சிலநாட்கள் தங்கியிருந்து, மதுரை மறைமாநிலத்தில் தான் செய்யப்போகும் பணிகள் குறித்து ஆலோசித்து சென்றார். 

கி.பி.1686 மே மாதம் முதல் ஜூலை மாதத்திற்குள் மறவ நாட்டின் பனங்குடி, வெள்ளாளன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏறத்தாழ இரண்டாயிரம் மக்களுக்குத் திருமுழுக்கு வழங்கினார். தம்முடைய அனுமதியின்றி மறைபரப்புப் பணியைச் செய்வதை அறிந்த சேதுபதி மன்னனின் அமைச்சர் குமரப்பபிள்ளை, அருளானந்தரையும் அவருடைய ஆறு சீடர்களையும் கைது செய்தார். இரவு முழுவதும் மரத்தில் கட்டிவைத்தார்கள். மறுநாள் நீர்வதை சித்திரவதைக்கு உள்ளாக்கினர். நீர்வதை என்பது நீர் இரைக்கும் கம்பில் தலைகீழாகக் கட்டி நீருக்குள் அமுக்கி எடுப்பதாகும். மூச்சுத்திணறும் வேளையில் சிவன் பெயரை உச்சரிக்கச் சொல்வார்கள். உச்சரிக்காத போது மீண்டும் நீருக்குள் அமுக்குவர். சத்தியநாதச் செட்டி நீர்வதைக்குப் பயந்து சிவ சிவ எனச் சொல்லித் தண்டனையில் இருந்து தப்பினார்.

பின்னர் அனைவரும் குமரப்பப் பிள்ளையின் படையினரால் பாகனேரிக்குக் கொண்டு

செல்லப்பட்டனர். அருளானந்தரின் அங்கியை அகற்றி அவரைச் வெயிலில்சுடுகின்ற பாறை மீது உருட்டிவிட்டனர். இதனால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன. அதன்பின் அனைவரும் இராமநாதபுரத்தில் இருந்த சேதுபதி மன்னர் முன் நிறுத்தப்பட்டனர். அருளானந்தரோடு உரையாடிய மன்னர், மறவ நாட்டில் மறைபரப்புப் பணியைச் செய்யக்கூடாது எனக் கூறி அவரை விடுதலை செய்தார். நடந்தவற்றைக் கேள்வியுற்ற மலபார் இயேசு சபைத் தலைவர், உடனடியாக அருளானந்தரை பிள்ளைத்தோப்புக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். பிள்ளைத்தோப்புக்கு வந்த அருளானந்தர் இங்கு ஒரு மாதம் தங்கி உடல் நலம் தேறினார். அருளானந்தரை மலபார் மறைமாநிலத்தின் பிரதிநிதியாக போர்ச்சுக்கல்லுக்கு இயேசு சபையின் தலைவரைச் சந்திக்கும்படி அனுப்பி வைத்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குப்பின், “போர்த்துக்கல் நாட்டின் அரண்மனைகளை விட காடுகளையே விரும்புகிறேன்” என்று கூறி, ஏழு இளம் குருக்களுடன் அருளானந்தர் இந்தியா புறப்பட்டார். ஓரியூரில் தலை வெட்டப்பட்டு மறைசாட்சியானார்.

ஆலய வரலாறு:

தொடக்கத்தில் பிள்ளைத்தோப்பு பகுதியில் ஓலையால் வேயப்பட்ட மாதா கோவிலே இருந்தது.

இயேசு சபைக் கல்லூரி - College of Topo:

பிள்ளைத்தோப்பில் 12 முதல்15 அருள்பணியாளர்கள் தங்கி மன்றாடி, தியானத்தில் ஈடுபடுமளவுக்கு வசதியான இயேசு சபைக் கல்லூரி (College of Topo) செயல்பட்டதாகவும்,

அப்போது மலபார் மறைமாநிலத் தலைவராக இருந்த அருள்பணி. ஆன்ட்ரு கோமஸ் சே.ச. தன்னை நல்ல முறையில் கவனித்துக் கொண்டதாகவும் காமநாயக்கன் பட்டியிலிருந்து அருள்பணி. பீட்டர் மார்டின் சே.ச. அவர்கள், அருள்பணி. லே கோபியன் அவர்களுக்கு 01.07.1700 வியாழன் அன்று எழுதியக் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

அக்கடிதத்தில் பிள்ளைத்தோப்பு குறித்து பின்வரும் செய்திகளும் இடம்பெற்றுள்ளன. இயேசு சபையினரின் இல்லம் களிமண்ணால் கட்டப்பட்டிருந்தது. கூரைகள் பனைமரத்தின் ஓலைகளால் வேயப்பட்டு இருந்தன. அங்கே இருந்த ஆலயம், புனித மரியன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அவ்வாலயம் ஒரு வீடு போல இருந்தது. இங்கு வசித்த இயேசு சபை அருள்தந்தையர்கள், கல்லூரி மற்றும் ஆலயத்தை அர்ப்பணிப்புடன் பராமரித்து வந்தனர். இங்கு வசதிகள் குறைவாக இருந்தாலும் அருள்பணியாளர்கள் இறைநம்பிக்கையில், மன அமைதியுடன் வாழ்ந்தனர் என எழுதப்பட்டுள்ளது.

கடல்வழிப்பயணம் மேற்கொள்ளும் இயேசு சபை குருக்கள் பலரும், செல்லும் வழியில் பிள்ளைத்தோப்பில் தங்கிச் சென்றுள்ளனர். அவ்வாறு தங்கிச் சென்ற அருள்பணி. தாச்சாரட் சே.ச. (Fr. Thachard S.J.) 16.2.1702 வியாழக்கிழமை அன்று அருள்பணி. டிலா செய்ஸ்க்கு எழுதிய கடிதத்தில், தாம் பிள்ளைத்தோப்பில் தங்கிச் சென்றதைக் குறிப்பிட்டுள்ளார்.

குருக்கள் இல்லம் மற்றும் ஆலயம் தீக்கிரையாக்கப்படல் - Burning of Topo:

மலபார் மறைமாநிலத் தலைவர் அருள்பணி. கிறிஸ்டோபர் டி. சமதோ,

1705 அக்டோபர் 07, புதனன்று, இயேசு சபையின் உலகத் தலைவருக்குக் கடிதமொன்று எழுதியுள்ளார். அக்கடிதத்தில் பிள்ளைத்தோப்பில் இருந்த மறைமாநில இல்லம் மற்றும் புனித மரியன்னை ஆலயம் ஆகியவற்றை தீக்கிரையாக்கித், தரைமட்டமாக இடித்து விட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார். இத்துயர நிகழ்வு 1704 டிசம்பர் அல்லது 1705 ஜனவரியில் நிகழ்ந்திருக்கிறது.

🫐மேற்படித் துயர நிகழ்வு நிகழ்ந்ததற்கானக் காரணம், அண்மை ஊரில் வாழ்ந்த உள்நாட்டுப் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் திருமறையைத் தழுவியதால், எதிர் நடவடிக்கையாக இச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக அக்கடிதத்தில் மறைமாநிலத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் (The British East India Company) வருகையால் அஞ்சியிருந்த திருவிதாங்கூர் மன்னரிடம், மக்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதன் மூலம் இப்பகுதியைக் கிழக்கிந்திய நிறுவனம் எளிதாகக் கைப்பற்றிவிடுமெனத் தவறானத் தகவலைச் சொல்லி, தங்களின் செயலுக்கு மன்னரின் ஒப்புதலைப் பெற்றனர்.

இயேசு சபையின் இல்லத் தலைவர் (Rector) அருள்பணி. லூயிஸ் கொன்சால்வஸ் சே.ச. அவர்கள், மேற்படி சம்பவம் குறித்து, மன்னருக்குக் கடிதம் ஒன்றை எழுதி, உண்மைகளை விளக்கியுள்ளார். இருந்தாலும் மன்னர் உண்மையை உணரும் நிலையில் இல்லை. மன்னர் எந்தவித நஷ்ட ஈடும் கத்தோலிக்க மக்களுக்கோ, இயேசு சபையினருக்கோ கொடுக்கவில்லை. இதன் பிறகு 7 மாதங்களுக்கு, திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்டப் பகுதிகளில் மழை பெய்யவில்லை. விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

புதிய ஆலயம் அர்ச்சிக்கப்படல்:

1705-ம் ஆண்டு ஆலயமும் இயேசு சபைக் கல்லூரியும் எதிரிகளால் இடித்து தீக்கிரையாக்கப்பட்ட பின்பு, 11 வருடங்கள் பிள்ளைத்தோப்பில் ஆலயம் எதுவும் இல்லை. ஞாயிறு திருப்பலி மற்றும் திருவருட்சாதனங்களுக்கு அருகில் இருக்கும் இராஜாக்கமங்கலம் அல்லது முட்டம் சிற்றாலயங்களையே நாடி வாழும் நிலை இருந்தது.

கி.பி.1716-ல் அருள்பணி. வெய்ஸ் சே.ச. மலபார் மறைமாநிலத் தலைவராக இருந்தபோது, பங்கில் வசித்த கடலோடி மக்களின் சொந்த நிதி மூலம் அழகிய சிற்றாலயம் நிறுவப்பட்டது. அப்போது பிள்ளைத்தோப்பு பங்கில் 743 பெரியவர்கள் மற்றும் 126 குழந்தைகள் என 869 கத்தோலிக்கர்கள் இருந்தனர். 

மீண்டும் தலைமைப் பீடம்:

1739-ம் ஆண்டு மே முதல் நாள் வெள்ளிக்கிழமையன்று, இயேசுசபை மறைமாநிலத் தலைவர் அருள்பணி. சல்வத்தோர் டாஸ் ரெய்ஸ் சே. ச. தன்னுடைய மறைமாநில ஆண்டு இறுதிக்கடித்ததை (Annual Letter) பிள்ளைத்தோப்பிலிருந்து எழுதுகிறார்.

பிரஞ்சு மொழியில் எழுதப்பட்டிருக்கும்

அருள்பணி. லியோனார்டு ஜாக்குயிஸ் அவர்களுடைய வாழ்க்கை குறிப்பில்,

1742-ம் ஆண்டு, பிள்ளைத்தோப்பில் இயேசு சபைக் கல்லூரி (College of Trivancore, Topo) தாம் உறுப்பினராகப் பணியாற்றியததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருக்கும் அருள்பணி. சல்வதோர் டா கோஸ்தா

அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்பில்,

1746-ம் ஆண்டு பிள்ளைத்தோப்பில் அவர், மறைமாநிலத் தலைவராக

பணியாற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இயேசு சபை தலைமை இல்லம் மீண்டும் பிள்ளைத்தோப்பில் செயல்பட்டது உறுதியாகிறது.

கொல்லம் மறைமாவட்டம்:

கி.பி.1847-ல் கொல்லம் மறைமாவட்டப் பங்கு பட்டியலில் பிள்ளைத்தோப்பு தனிப் பங்காக இடம்பெற்றது.

முட்டம், கடியபட்டணம் உட்பட 6 கிராமங்கள் இதன் கிளைப் பங்குகளாக இருந்தன.

தற்போதைய ஆலயம்:

1898-ம் ஆண்டு தற்போதைய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

மூன்று ஆலய மணிகள்:

1912, மே 11, சனிக்கிழமை பங்குத்தந்தை‌ அருள்பணி. பெரைரா மற்றும் பங்கு மக்களின் முயற்சியால், கொல்லம் ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் ஆண்டகை அவர்களின் எழுத்துப்பூர்வ அனுமதி பெற்று, ஆலயத்தில் மூன்று புதிய மணிகள் மற்றும் புதிய விளக்குகள் ரூபாய் 200 மதிப்பில் நிறுவப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

திருமுழுக்குத்தொட்டி:

1914, ஜூலை 3, வெள்ளிக்கிழமை கொல்லம் ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் ஆண்டகை அவர்களின் எழுத்துப்பூர்வ அனுமதியோடு, ஆலயத்தில் புதிய திருமுழுக்குத் தொட்டி நிறுவப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

ஆண்டவரின் பாடுகளின் திருக்காட்சி:

1916 ஜனவரி 4, வெள்ளியன்று ஆண்டவரின் பாடுகளின் திருக்காட்சி நடத்த, கொல்லம் ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் ஆண்டகை அவர்களின் எழுத்துப்பூர்வ அனுமதி பெறப்பட்டது. அன்று முதல் பல ஆண்டுகளாக அந்தப் பாரம்பரிய நிகழ்வு பெரிய வெள்ளிக்கிழமைகளில் (Good Friday) நடைபெற்றது.

கடியபட்டணம் தனிப் பங்காக உயர்த்தப்படல்:  

பிள்ளைத்தோப்பின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்த கடியபட்டணம் 1916 ஆம் ஆண்டு பிரிந்து தனிப்பங்கானது.

கொடிமரம் நிறுவுதல்:

1920 ஜனவரி 8, வியாழனன்று பிள்ளைதோப்புப் பங்கு மக்களும், அன்றைய பங்குத்தந்தை அருள்பணி. பெரைரா அவர்களும் பலமுறை கேட்டுக் கொண்டதற்கிணங்க, கொல்லம் ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் ஆண்டகை அவர்கள், எழுத்து மூலம் அனுமதி வழங்க, ரூபாய் 300 செலவில் கொடிமரம் நிறுவப்பட்டது.

புனித மரியன்னை நடுநிலைப்பள்ளி:

1920-ம் ஆண்டு, முட்டம் சகல புனிதர்கள் ஆலயமானது பிள்ளைத்தோப்பின்  கிளைபங்காக இருந்தது. முட்டம் மற்றும் பிள்ளைத்தோப்பில் இருந்த இரு பள்ளிகளுக்கும், பங்குத்தந்தை அருள்பணி. பெரைரா அவர்களே தாளாளராக இருந்தார்.

1920, மே 25 செவ்வாய்க்கிழமையன்று தந்தையவர்கள், கொல்லம் ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் ஆண்டகை அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், பிள்ளைத்தோப்பு மற்றும் முட்டம் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர குழந்தைகள் பலர் காத்திருப்பதாகவும், அதனால் இரு பள்ளிகளிலும் கூடுதலாக ஒரு வகுப்பு ஆரம்பிக்க அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட ஆயர் அவர்கள் 1920 மே 28, வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தார்.

பிள்ளைத்தோப்பு மக்கள் 1920-களிலேயே ஆரம்பக்கல்வியில் ஆர்வம் காட்டியதையும், 1920-ம் ஆண்டுக்கு முன்பே பல ஆண்டுகளாக, புனித மரியன்னை பள்ளி செயல்பட்டு வந்ததையும் இக்கடிதம் உறுதி செய்கிறது.

முட்டம் தனிப் பங்காக உயர்த்தப்படல்:

1929 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை தேதியிடப்பட்ட ஆயரின் அனுமதியுடன், பிள்ளைத்தோப்பு பங்கின் கிளைப் பங்காக இருந்த முட்டம் சகல புனிதர்களின் ஆலயம் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது.

ஆலயத்திற்கு நிலம் வாங்குதல்:

1929 நவம்பர் 9, சனிக்கிழமை கொல்லம் ஆயர் மேதகு அலோசியஸ்‌ மரிய பென்சிகர் ஆண்டகை அனுமதித்ததைத் தொடர்ந்து, ரூபாய். 7500 மதிப்பில் 4 ஏக்கர் நிலம் ஆலயத்திற்காக வாங்கப்பட்டது.

அருள்பணி. பெரைரா மற்றும் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் ஆண்டகை:

பிள்ளைத்தோப்பு பங்கின் பங்குத்தந்தையாக, அருள்பணி. பெரைரா அவர்களும், கொல்லம் ஆயராக மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் ஆண்டகை அவர்களும் 20-ம்

நூற்றாண்டின் முற்பகுதியில்

பல்லாண்டுகள் பணியாற்றியுள்ளனர். இந்த ஆண்டுகளிலேயே பங்குத்தளம் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 

இவர்கள் இருவரும் பிள்ளைத்தோப்பு பங்கின் மீது காட்டிய அன்பும் அக்கறையும் கடிதங்களின் மூலம் நமக்கு காணக்கிடைக்கிறது!!!

மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் ஆண்டகை அவர்கள் இறையடியாராகப் பிரகடனம் செய்யப்பட்டு புனிதர் பட்டத்திற்கானப் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இவர்களை பங்கு சமூகம் எப்போதும் நினைத்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளது!!!!

கோட்டாறு மறைமாவட்டம்:

மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் ஆண்டகை அவர்களின் பரிந்துரையின் காரணமாக, கொல்லம் மறைமாவட்டத்தின் தெற்குப் பகுதி 26, மே 1930, திங்கள் கிழமையன்று கோட்டாறு‌ புதிய மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதன் முதல்‌ஆயராக மேதகு லாரன்ஸ் பெரைரா ஆண்டகை அவர்கள் நியமிக்கப்பட்டார்.

நல்மரண சபை (Bona Mors Confraternity): 

1933 மே, 30, செவ்வாய்க்கிழமை கோட்டாறு ஆயர் மேதகு லாரன்ஸ் பெரைரா அவர்கள், அன்றைய பிள்ளைத்தோப்பு பங்குத்தந்தை அருள்பணி. லூக்காஸ் அவர்களுக்கு எழுதிய மடலில், நல்மரண சபையைத் தொடங்க அதிகாரப்பூர்வ அனுமதி அளிக்கிறார்.‌ 

திருஇருதய சபை தொடங்க அனுமதி:

1935-ம் ஆண்டு ஜூலை 2 ம் தேதி, கோட்டாறு ஆயர் மேதகு லாரன்ஸ் பெரைரா அவர்கள் அப்போதையப் பங்குத்தந்தை அருள்பணி. சூசை மைக்கேல் அவர்களுக்கு‌ அனுப்பிய கடிதத்தில், 1935-ம் ஆண்டு ஜூலை 7-ம் நாள், செவ்வாய் முதல் பிள்ளைத்தோப்பில் திருஇருதய சபையைத் தொடங்க அனுமதியளிக்கிறார்.

புனித மரியன்னை சிற்றாலயம், அழிக்கால்:

1978, டிசம்பர் 23, சனிக்கிழமை, அன்றைய பிள்ளைத்தோப்பு பங்கின் கிழக்கு எல்லையில், மரியன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அழகிய சிற்றாலயம் அர்ச்சிக்கப்பட்டது. 

St Joseph of Lyons அருட்சகோதரிகள் வருகை:

01.05.1993, திங்கள்கிழமை, புனித சூசையப்பரின் பெருநாளானத் தொழிலாளர் தினம் முதல், பங்கில், St Joseph of Lyons அருள் சகோதரிகளின் இல்லம் செயல்பட்டது. அவர்களுக்கான இல்லக் கட்டடம் இல்லாததாலும், மேலும் பற்பல காரணங்களாலும் இவ்வில்லம் பிள்ளைத்தோப்பில் தொடர முடியாமற் போனது.

ஆழிப்பேரலை என்ற சுனாமி - Tsu Nami:

2004 டிசம்பர் 26, ஞாயிறன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் இக்கிராமம் பாதிக்கப்பட்டு, உறவுகள் 68 பேர் உயிரிழந்தனர். இந்நிகழ்வு இறைமக்களை மீளாத்துயரில் ஆழ்த்தியது. ஆழிப்பேரலையைத் தாங்கி நின்றாலும், ஆலயம் சேதமடைந்து, பொலிவிழந்தது. 

இத்துயரச் சம்பவத்தால் உயிரிழந்த இறைமக்கள் நினைவாக, ஆலய கல்லறைத் தோட்டத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலய புத்தாக்கம் - 2007:

ஆழிப்பேரலையால் சேதமடைந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு 20.12.2007 வியாழனன்று, அர்ச்சிக்கப்பட்டது.

அருட்சகோதரிகள் வருகை:

2009-ம் ஆண்டு முதல்  Sisters of Charity சபை அருட்சகோதரிகள் அரும்பணியாற்றி வருகின்றனர்.

அழிக்கால் தனிப்பங்காக உயர்த்தப்படல்:

2010-ம் ஆண்டு முதல் அழிக்காலில் புனித மரியன்னை ஆலயம் அமைக்கப்பட்டு தனிப் பங்காக உயர்த்தப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று:

2020-ம் ஆண்டு ஏற்பட்ட, கொரோனா பெருந்தொற்று, இந்த கிராமத்தையும் வெகுவாகப் பாதித்தது. அரசு அறிவுறுத்தலின்படி மக்கள் தமது இல்லங்களிலேயே இருந்தனர். ஆலயத்தில் திருப்பலிகள் நடைபெறவில்லை.

மக்கள் அலுவலகம்:

2022 செப்டம்பர் 11, மக்கள் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு, பங்கு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 

கல்லறைத் தோட்டம்:

2022 நவம்பர் 2, மூதாதையர்கள் துயிலுறங்கும் கல்லறைத் தோட்டம் புத்தாக்கம் செய்யப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

ஆலய பீடம் புத்தாக்கம் - 2022:

2022 டிசம்பர் 21, புதனன்று, பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட  ஆலய பீடம், கோட்டாறு ஆயர் மேதகு நசரேன் சூசை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

குறிப்பு:

புனித சவேரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக எழுதிய, இயேசு சபை அருள்பணியாளர் ஜார்ஜ் சுராம்மர் (Fr Georg Schurhammer S.J) பிள்ளைத்தோப்பு ஊரை: Tope என்று குறிப்பிடுகிறார். பிரெஞ்சு அருள் பணியாளர்கள் Topo என்றும், ஆங்கிலத்தில் எழுதும் அருள்பணியாளர்கள் Topu / Tope என்றும் குறிப்பிடுகிறார்கள்.

பங்கில் உள்ள குருசடிகள்:

1. புனித மிக்கேல் அதிதூதர் குருசடி

2. புனித சந்த லேனம்மாள் குருசடி

3. புனித அந்தோனியார் குருசடி

4. புனித ஆரோக்கிய அன்னை குருசடி

5. திருச்சிலுவை நாதர் குருசடி 

தூய லூர்து அன்னை கெபி:

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் இந்த கெபியானது அருள்பணி. ஜெறோம் பெர்னாண்டோ அவர்களின் பணிக்காலத்தில் நன்கொடையாளரின் உதவியுடன் உருவாக்கப்பட்டு, 1972 பிப்ரவரி 11-ல் அர்ச்சிக்கப்பட்டது.

அருகிலுள்ள இறைமக்கள் இணைந்து வந்து இந்த கெபியில் நாள்தோறும் மாலையில் செபமாலை செபித்து வந்தனர். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமைகளில் இந்த கெபியில் இருக்கும் சிறிய பீடத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. அத்துடன், ஒவ்வோர் ஆண்டும், முன்தின மாலை ஆராதனையுடன், லூர்துமாதா கெபியில் திருவிழா சிறப்பிக்கப்பட்டது. நாளடைவில் கெபியில் திருப்பலி நிறைவேற்றும் வழக்கம் நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்த கெபிக்கும் ஆலயத்துக்கும் இடையில் மேற்கூரை இல்லாத ஒரு கூட்ட அரங்கம் கட்டப்பட்டது. அந்த அரங்கில்தான் புனித வார வழிபாடுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. கோவிலுக்கு முன் உள்ள மைதானத்தின் கிழக்குப் பகுதியில் அருள்பணி. சூசை ஆன்றனி அவர்களின் பணிக்காலத்தில் புதிய அரங்கம் கட்டப்பட்டு, 2015 ஜூன் 14 அன்று அர்ச்சிக்கப்பட்டது. பின்னர் கெபிக்கு அருகில் இருந்த அரங்கம் இடித்து மாற்றப்பட்டது.

பங்கின் முப்பெரும் விழாவை முன்னிட்டு கெபியானது புதுப்பிக்கப்பட்டு, 05.03.2023 அன்று பங்குதந்தை அருள்பணி. ஜெகன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

பங்கின் நிறுவனங்கள்:

1. புனித மேரி நடுநிலைப் பள்ளி

2. புனித வளனார் திருமண மண்டபம்

3. மக்கள் வங்கி

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. புனித சூசையப்பர் சபை

2. கார்மல் மாதா சபை

3. இயேசுவின் திருஇருதய சபை

4. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்

5. மரியாயின் சேனை

6. புனித வின்சென்ட் தே பவுல் சபை

7. பீடச்சிறார்

8. பாடகர் குழு

9. பெண்கள் பணிக்குழு

10. சிறார் இயக்கம்

11. மறைக்கல்வி மன்றம்

12. சாந்திதான் பெண்கள் இயக்கம்

13. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

14. இளைஞர் இயக்கம்

15. திருவழிபாட்டுக் குழு

16. நற்செய்திப் பணிக்குழு

17. கோல்பிங் இயக்கம்

18. தலைச்சுமடு மற்றும் சிறுதொழில் சங்கம்

19. திருவிவிலியக் குழு

20. நிதிக் குழு 

21. பங்குப் பேரவை

22. அன்பிய ஒருங்கிணையம்

23. பக்த சபை ஒருங்கிணையம்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் (1930 முதல்):

1. அருள்பணி. ஜான் பெரைரா (1930-1931)

2. அருள்பணி. ஆன்றனி லூக்காஸ் (1931-1933)

3. அருள்பணி. ஹென்றி பெரைரா (1933-1934)

4. அருள்பணி. A. சூசை மைக்கேல் (1934-1936)

 5. அருள்பணி. இம்மானுவேல் பெரைரா (1936-1941)

6. அருள்பணி. F. பிரான்சீஸ் (1941 - 1944)

7. அருள்பணி. M. அம்புரோஸ் (1944 1947)

8. அருள்பணி. பெரைரா P.B. (1947 1949)

9. அருள்பணி. V.J. ஸ்டீபன் (1949-1956)

10. அருள்பணி. A.E. ரெத்தினசுவாமி (1956 -1959)

11. அருள்பணி. I. ஸ்தனிஸ்லாஸ் (1959 - 16.05.1961)

12. அருள்பணி. ஜோசபாத் மரியா (16.05.1961 -04.02.1964)

13. அருள்பணி. L.X. இராஜமணி (04.02.1964 -20.05.1966)

14. அருள்பணி. ஜெரோம் பெர்னாண்டோ (20.05.1966 -03.06.1972)

15. அருள்பணி. V. மரிய ஜேம்ஸ் (03.06.1972 -08.05.1975)

16. அருள்பணி. J. மரிய பாட்ரிக் (08.05.75 -01.10.1976)

17. அருள்பணி. வெனான்சியுஸ் பெர்னாண்டோ (01.10.1976 -23.04.1977)

18. அருள்பணி. அகஸ்டின் S. (23.04.1977 -30.10.1979)

19. அருள்பணி. பெனடிக்ட் அலெக்சாண்டர் (30.10.1979 -1983)

20. அருள்பணி, மெல்கியாஸ் (1983 -21.05.1987)

21. அருள்பணி. M. அருள் (21.05.1987 -21.06.1989)

22. அருள்பணி. ஜோசப் பிதேலிஸ் (21.06.1989-1992)

23. அருள்பணி. எல்பின்ஸ்டன் ஜோசப் J. (1992 -1993)

24. அருள்பணி. F. செபாஸ்டின் (1993-1994)

25. அருள்பணி. F பெர்க்மான்ஸ் மைக்கேல் கெனட் (1994 - 06.03.1996)

26. அருள்பணி. A. ஜோசப்ராஜ் (06.03.1996 -14.05.1996)

27. அருள்பணி. ஜெலஸ்டின் ஜெரால்டு A. (14.05.1996 -04.05.1999)

28. அருள்பணி. ஸ்டான்லி சகாயம் T. (04.05.1999 -10.06.2005)

29. அருள்பணி. S. டோமினிக் (10.06.2005 -22.05.2010)

30. அருள்பணி.J.சூசை ஆன்றணி (22.05.2010 -23.06.2015)

31. அருள்பணி. P. அருள் சீலன் (23.06.2015 -08.05.2018)

32. அருள்பணி. M. அமுதவளன் (08.05.2018 -07.07.2021)

33. அருள்பணி. A. மரிய ஜோசப் சிபு (07.07.2021 -07.12.2022)

34. அருள்பணி. C. ஜெகன் (14.12.2022 முதல்...)

பங்கில் பணியாற்றிய இணை அருள்பணியாளர்கள்:

1. அருள்பணி. விமல்ராஜ்

2. அருள்பணி. S.M. செபாஸ்டின்

3. அருள்பணி. A. மெர்லின் ரெஞ்சித் அம்புறோஸ்

4. அருள்பணி. ஆல்வின் ரெக்ஸ், C.S.S.R.

5. அருள்பணி. இராயப்பன்

புனிதர்கள் சவேரியார், அருளானந்தர், ஜோசப் வாஸ் ஆகியோரின் கால்தடம் பதிந்த புண்ணிய பூமியாம் பிள்ளைத்தோப்பில் அமைந்துள்ள தொழிலாளர்களின் பாதுகாவலராம் புனித சூசையப்பர் ஆலயம் வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருள்பணி. C. ஜெகன் அவர்கள்.