தூய லூர்து அன்னை ஆலயம்
இடம்: இராயக்கோட்டை
மாவட்டம்: கிருஷ்ணகிரி
மறைமாவட்டம்: தருமபுரி
மறைவட்டம்: தேன்கனிக்கோட்டை
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்கு : தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், பஞ்சப்பள்ளி டேம்
பங்குத்தந்தை அருட்பணி. சக்கரையாஸ்
குடும்பங்கள்: 30
ஞாயிறு திருப்பலி காலை 09:15 மணி
நாள்தோறும் திருப்பலி காலை 06:30 மணி
திருவிழா : பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை
வழித்தடம்: இராயக்கோட்டையில் இருந்து, கெலமங்கலம் செல்லும் சாலையில் இடதுபுறம் இவ்வாலயம் அமைந்துள்ளது.
Map location: https://g.co/kgs/8TF3eC
வரலாறு:
இராயக்கோட்டையிலும், கிருஷ்ணகிரியைப் போல ஆங்கிலேய வருகையினால் கிறிஸ்தவர்கள் குடியேற்றம் நடந்தது. 20-7-1791இல் மேஜர் கௌடின் என்பவரால் திப்புவிடமிருந்து இராயகோட்டை கைப்பற்றப்பட்டது. அருள்தந்தை எம்.எஸ். ஜோசப் அவர்கள், அருள்திரு. அபே தூபுவா (MEP) பற்றி குறிப்பிடும்போது, இராயக்கோட்டையைப் பற்றியும் குறிப்பிடுகிறார். சில கிறிஸ்தவர்கள் இராயக்கோட்டையில் இராணுவத்திற்காக வாண மத்தாப்புகள் செய்தனர் என்றும் அதில் எழுதியுள்ளார்.
அருள்தந்தை குயோன் அடிகளார் கோவிலூரிலிருந்து இராயகோட்டையை கவனித்துவந்தார். 1861இல் இராயக்கோட்டையிலிருந்து இராணுவம் அழைத்துக்கொள்ளப்பட்ட போது, ஒருசில கிறிஸ்தவர்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தனர். மேற்கூறிய செய்திகள் சேலம் மறைமாவட்ட சுருக்கம் நூலில் இடம்பெற்றவை ஆகும்.
மதராஸ் மாநிலத்தில் உள்ள ஆங்கிலேயர் கல்லறைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது "List of inscriptions of Tombs or monuments in Madras" by Julian James cotion பக்கம் 290இல் இராயக்கோட்டை பற்றிய குறிப்பு உள்ளது. "1816 Captian Beva met at Rayakotta the Abbe Dubois during his periodical visit to the community he had at this place".
கோவிலூர் பங்குத்தந்தையர்களால் கண்காணிக்கப்பட்டு வந்த இராயக்கோட்டை கிறிஸ்தவர்கள், எலத்தகிரி பங்கு உருவான பின் எலத்தகிரி பங்குத்தந்தையர்களின் பொறுப்பில் இருந்தனர். 1930-1952 ஆண்டுகளில் எலத்தகிரி, கிருஷ்ணகிரி பங்குத்தந்தையர்கள் எழுதிய கடிதங்கள் வாயிலாக இதை அறிகிறோம். ஆங்கிலேயர் கல்லறைகளை, பழுதுபார்த்து நினைவுச் சின்னம் எழுப்ப, பங்குத்தந்தை என்ற முறையில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று எலத்தகிரியிலிருந்து 3.1.1931இல் அருள்தந்தை மார்ட்டின் (MEP) ஓசூர் உதவி ஆட்சியருக்கு எழுதியுள்ளார். இராயக்கோட்டையில் 1.88 ஏக்கர் நிலமும், அதிலுள்ள கல்லறைகளும் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமாக இருந்தது. 1.5.1931இல் இந்நிலத்தை அளவீடு (Survey) செய்தது பற்றி அருள்தந்தை கபிரியேல் பிளேயுஸ்ட் (MEP) எழுதுகிறார்.
பின்னர் வந்த காலங்களில் இராயக்கோட்டையை கண்காணிக்கும் பொறுப்பு, கடகத்தூர் பங்குத்தந்தையர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 1954இல் கடகத்தூர் பங்குத்தந்தை அருள்திரு. A. அந்தோணிசாமி எழுதிய குறிப்புகள், 24.10.1958 அருள்தந்தை P. A. சக்கரையாஸ், ஓசூர் சார் ஆட்சியருக்கு எழுதிய கடிதங்கள் இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றன. இந்நிலம் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டது.
1985இல் பாலக்கோடு பங்கு உருவாக்கப்பட்டபின், பாலக்கோடு பங்குத்தந்தை அருள்பணி. ஹென்றி பொனால் அவர்கள் இராயகோட்டையிலுள்ள கிறிஸ்தவர்களை சந்தித்தார். இறைமக்களுடைய இல்லங்களில் மாதம் ஒருமுறை திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பாலக்கோட்டில் பங்குத்தந்தையாக இருந்தபோது 1993-94ஆம் ஆண்டுகளில் இராயகோட்டை, தக்காளி மண்டிக்கு அருகில் கெலமங்கலம் சாலையில் அருள்தந்தை ஹென்றி பொனால் அவர்கள் நிலம் வாங்கினார். 1995ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இராயக்கோட்டையின் பங்குத்தந்தையாக அவர் நியமிக்கப்பட்டார். தாம் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தபின் 5-7-1996 முதல் இராயக்கோட்டையில் தங்க ஆரம்பித்தார்.
25-1-1997 இல் பங்குத்தந்தை இல்லத்தைக் கட்டிமுடித்தார். திருப்பலி பங்குதந்தை இல்லத்திலேயே நிறைவேற்றப்பட்டது. ஒருசில குடும்பங்கள் மட்டுமே இருந்ததால், அவ்விடமே போதுமானதாக இருந்தது. இராயக்கோட்டை ஆலயத்திற்கான
பணிகள் 26-6-1997 அன்று அன்றைய தருமபுரி ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்களின் ஆசீருடன் தொடங்கப்பட்டது.
26.6.1997 அன்று முதல் சூளகிரி இறைமக்களை கண்காணிக்கும் பொறுப்பினையும், அருள்தந்தை ஹென்றி பொனாலிடம் தருமபுரி ஆயர் ஒப்படைத்தார். இராயக்கோட்டை தூய லூர்து அன்னை ஆலயம் கட்டப்பட்டு 18.4.1999 அன்று மேதகு ஆயரால் புனிதப்படுத்தப்பட்டது.
பஞ்சப்பள்ளியில் உள்ள இலங்கைத் தமிழர் முகாமிலுள்ள கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தேவைகளையும், இராயக்கோட்டை பங்குத்தந்தையர்கள் நிறைவேற்றி வருகின்றனர். 26.2.1999இல் உத்தனப்பள்ளியில் 1.10 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.
பங்குப்பணியாளர்களின் வழிகாட்டலில் தொடர்ந்து ஆன்மீகப் பாதையில் பயணித்து வருகிறது இராயக்கோட்டை இறைசமூகம்.
பணியாற்றிய பங்குதந்தையர்கள்
1. அருள்பணி. ஹென்றி போனால், MEP (1995-2009)
2. அருள்பணி. ஹென்றி ஜார்ஜ் (2009-2014)
3. அருள்பணி. மரியஜோசப்
4. அருள்பணி. தாமஸ்
5. அருள்பணி. சக்கரையாஸ் (2019....)
தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. சக்கரையாஸ் அவர்கள்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: திரு. ஏசுதாஸ் கிருஷ்ணகிரி.