மாதாவை அறிதல் :

நாம் மாமரித்தாயின் அன்பை உணர்ந்து கொள்வதுதான் அவர்களை அறிவதாகும். மரியாயின் ஈடு இனையற்ற புண்ணியங்களை நாமும் கண்டு பாவித்தால் அவர்களை அறிந்தவர்களாவோம்.

மாதா நித்தியத்திலே கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள். ஜென்மப்பாவமில்லாமல் முழுவதும் பரிசுத்த அமலோற்பவமாய் இருப்பவர்கள்.

சர்வேசுவரனினுடைய சகல வரப்பிரசாதங்களும் வந்து குவியும் பாத்திரமாயிருப்பவர்கள். எல்லாம் வல்ல கடவுளை பெற்றெடுத்த பாக்கியவதி அவர்களே. பிதாவின் குமாரத்தியும், சுதனின் கன்னிமை குன்றா அன்னையும் பரிசுத்த ஆவியின் பத்தினியாய் இருந்து சகலருக்கும் உற்ற தாயாய் இருக்கிறார்கள். சேசு கிறிஸ்துவுடன் இனைந்து பாடுபட்டு உலகத்தின் இனை மீட்பராக மாதா இருக்கிறார்கள்.

சகல வரப்பிரசாதங்களுக்கும் மத்தியஸ்தியாய் சேசு கிறிஸ்துவுக்கும், மனுகுலத்திற்கும் நடுவில் பாலமாக விளங்குகிறார்கள். ஆத்தும சரீரத்தோடு மோட்சத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இன்று அங்கே வாழ்கிறார்கள். பரலோக பூலோக அரசியாக தமத்திருத்துவத்தினால் முடி சூட்டப்பட்டு சர்வ வல்லமையுள்ள இராக்கினியாக உலகைப் பரிபாலம் செய்து வருகிறார்கள்.

இவ்வளவு சிறப்பு பெற்ற மாமரி நம் அன்புத்தாயாக இருக்கிறார்களே ! அவர்களை உள்ளபடி அறிய நம்மால் கூடுமா? சம்மனசுக்களே இவ்வன்னையைப் பற்றி அறிந்துள்ளதைவிட அறியாத மகிமைகள் அதிகம் என்று புனித லூயிஸ் மோன்போர்ட் கூறியுள்ளார். அப்படியானால் நம்மால் இத்தாயை நம்மால் முழுவதும் அறிந்து கொள்ள இயலுமா? ஆயினும் அறிவு அறியாததை அன்பு புரிந்து கொள்ளும். பிள்ளைக்குரிய அன்போடு நாம் நம் தாயை நேசிப்போம்..

மாதாவை நோக்கி ஜெபம் :

என் அருமைத் தாயும் தலைவியும் என் வல்லமையுள்ள அரசியுமாகிய மரியாயே வாழ்க !

என் மகிழ்வே ! என் மகிமையே ! என் இருதயமே ! என் ஆத்துமமே வாழ்க !

ஆனால் நான் இன்னும் போதிய அளவு உங்களுடையவனா(ளா)யில்லை, ஆதலால் மீண்டும் என்னை முழுவதும் உங்களிடம் ஒப்படைக்கின்றேன். எனக்கோ மற்றவர்களுக்கோ எதையும் நான் ஒதுக்கி வைக்கவில்லை..

உங்களுக்கு சொந்தமில்லாத யாதொன்றையும் நீங்கள் என்னிடத்தில் கண்டால் இந்தக் கணத்திலேயே அதை எடுத்துக்கொண்டு, என்னிடத்திலுள்ள சகலத்திலும் தாங்களே எஜமானியாக இருந்து கொள்ளுங்கள்.

என்னிடத்தில் கடவுளுக்கு பிரியமற்ற எல்லாவற்றையும் அழித்து விடுங்கள். உங்களுக்கு நல்லதெனத் தெறிகின்ற எல்லாவற்றையும் என்னில் வைத்து அதை விருத்தி செய்து என்னிடம் வளரச்செய்யுங்கள்…

உங்கள் விசுவாசத்தின் ஒளி என் மன இருளை நீக்குவதாக…

உங்கள் ஆழ்ந்த தாழ்ச்சி என் ஆங்காரத்தை அகற்றி அங்கே இருப்பதாக…

உங்கள் உந்நத தியான காட்சி ஜெபம், அலைகிற என் உள் மனதின் பராக்குகளுக்கு ஒரு முடிவைக் கொணர்வதாக.

( இது ஜெபத்தின் ஒரு பகுதியே..)

நன்றி : புனித லூயிஸ் மோன்போர்ட் எழுதிய அன்னை மாமரியாளுக்கு முழு அர்ப்பண தயாரிப்பு நூல்..

இந்த நூல் மட்டுமல்ல “மரியாயின் மீது உண்மை பக்தி “, பாத்திமா காட்சிகள் “ “ கடவுள் மனிதன் காவியம் Part 1 to 10 “ “ மாதா பரிகார மலர் “ இன்னும் அரிய கத்தோலிக்க நூல்கள் கிடைக்கும் இடம் :

மாதா அப்போஸ்தலர்கள் சபை, ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமாதாப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில் தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983, மேலும் சகோ.ஜேசுராஜ் Ph. 9894398144

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !