ரோஜா மலர்க்கிரீடம்! - அர்ச். மரிய மோன்போர்ட்.

ஜெபமாலைப் பக்தி முயற்சியை முத். ஆலன் ரோச் புதுப்பித்த நாள் முதல், மக்களின் ஒருமித்த குரல் இதனை 'ரோஜா மலர்க் கிரீடம்' என்ற பெயரிட்டு அழைத்தது. மக்கள் குரல் தெய்வக் குரல்!

ரோஜா மலர்க் கிரீடம்! அதாவது நாம் பக்தியுடன் ஜெபமாலை செய்யும் ஒவ்வொரு முறையும் 153 வெண் ரோஜா மலர்களை தேவ அன்னையின் தலையில் சூடுகிறோம். 15 சிவந்த ரோஜா மலர்களை சேசுவின் சிரசில் சூடுகிறோம். இவை விண்ணக மலர்களாதலால் ஒரு போதும் வாடுவதில்லை. இவற்றின் சிறந்த அழகு கெடுவதுமில்லை .

ரோஜா மலர்க் கிரீடம் என்ற பெயரை ஜெபமாலைக்குச் சூட்டியதை தேவ அன்னை முழுவதும் அங்கீகரித்துள்ளார்கள். அநேக தடவைகளில் இதைப் பலருக்குக் கூறியுள்ளார்கள். அருள் நிறை மந்திரத்தைச் சொல்லும் ஒவ்வொரு தடவையும் நாம் அவர்களுக்கு ஒரு அழகிய ரோஜா மலரைக் கொடுப்பதாகவும், ஒவ்வொரு முழு ஜெபமாலையும் அவர்களுக்கு ஒரு ரோஜா மலர்க் கிரீடமாக இருப்பதாகவும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சேசு சபையில் புகழ் பெற்ற சகோதரர் அல்போன்ஸ் ரொட்ரிகஸ் உருக்கமாக ஜெபமாலை ஜெபிப்பார்.

எவ்வளவு பக்தி உருக்கத்துடன் அதைச் செய்வாரென்றால், பல தடவைகளில், பரலோக மந்திரத்தை அவர் சொல்லும் போது ஒரு சிவப்பு ரோஜா அவர் வாயிலிருந்து வெளி வரக் காண்பார். ஒவ்வொரு அருள் நிறை மந்திரத்திற்கும் ஒரு வெண் ரோஜா வெளிவரக் காண்பார். இவ்விரு வண்ண ரோஜா மலர்களும் அழகிலும் நறுமணத்திலும் சமமாயிருந்தன. நிறம் மட்டுமே வேறுபாடு.

அர்ச். பிரான்சிஸ்டைய நாட்குறிப்பில் ஒரு இளம் சகோதரரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்த சகோதரர் தினமும் பகல் உணவுக்கு முன் ஒரு ஜெபமாலை சொல்லும் நல் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒருநாள் எப்படியோ அவரால் அதைச் சொல்ல முடியவில்லை. பகல் உணவுக்கு மணியும் அடித்து விட்டது. எனவே, தலைவரிடம் சென்று சாப்பிடுமுன் ஜெபமாலைச் சொல்வதற்கு உத்தரவு பெற்று கொண்டு தன் அறைக்குப் போய் ஜெபமாலை சொல்ல துவங்கினார்.

நெடுநேரம் ஆயிற்று. தலைமை சகோதரர் இன்னொரு சகோதரரை அனுப்பி, அவரை அழைத்து வரச் சொன்னார். அவர் வந்து பார்க்கையில், அந்த சகோதரர் ஒரு விண்ணக ஒளியில் மூழ்கி, தேவ அன்னையை நோக்கியவாறு காணப்பட்டார். தேவ தாயுடன் இரு சம்மனசுக்களும் காணப்பட்டனர். அந்த சகோதரர் அருள் நிறை மந்திரத்தை சொன்ன ஒவ்வொரு முறையும் ஒரு அழகிய ரோஜா மலர் அவர் வாயிலிருந்து வெளி வந்தது. சம்மனசுக்கள் அம் மலர்களை ஒவ்வொன்றாக எடுத்து தேவதாயின் தலையில் சூட்டினார்கள். மாமரியும் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

தலைமை சகோதரர்கள் வேறு இரு சகோதரர்களை அனுப்பி முந்திய இருவருக்கும் என்ன நேர்ந்தது என்று பார்த்து வரச் சொன்னார். அவர்களும் வந்து இவ்வரிய காட்சியைக் கண்டார்கள். முழு ஜெபமாலை சொல்லி முடியும் வரையிலும் தேவ அன்னை அங்கேயே இருந்தார்கள்!

எனவே முழு ஜெபமாலை என்பது பெரிய ஒரு ரோஜா மலர்க்கிரீடம். ஐம்பத்து மூன்று மணி ஜெபமாலை என்பது ஒரு சிறு ரோஜா மலர் வளையம். இவற்றை நாம் சேசு மரியாயின் சிரங்களில் சூடுகிறோம். ரோஜா மலர்களுக்கெல்லாம் அரசி. அது போல் பக்தி முயற்சிகளிலெல்லாம் சிறந்தது ஜெபமாலையே. எனவே ஜெபமாலையே மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்.

"உங்களுக்காக அதிகம் உழைத்த மரியாயிக்கு மங்களம் சொல்லுங்கள்" (ரோ . 16:6).

ஜெபமாலையின் இரகசியங்கள் புத்தகத்திலிருந்து...

இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க