இறுதித்தீர்வை!

மோட்சம்- நரகத்தைப்பற்றி இயேசுவே சொல்லிவிட்டார். ஆகையால் நமக்கு கொடுக்கப்பட்ட ஒரே வாய்ப்பான மனிதபிறவியில் பாவங்களிலிருந்து நம்மைக்காத்துக்கொண்டு புண்ணிய வாழ்வு வாழ்ந்து மோட்சத்திற்கு நம்மையே தயாரிக்க வேண்டும். அதற்காக சந்தோசமாக வாழக்கூடாது என்று அர்த்தமல்ல; பாவம் செய்யாமல் வாழவேண்டும். தப்பித்தவறி செய்திருந்தாலும் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து மனம் திருந்தி இயேசுவுக்கு உகந்த பிள்ளைகளாக வேண்டும்.

அதேபோல் செயல் இல்லாத கிறிஸ்தவாழ்வு சுத்த பயனற்றது. நான் ஜெபிக்கிறேன் ஜெபத்தில் வாழ்கிறேன் என்றால் மட்டும் நாம் மோட்சம் போகிவிட முடியாது. என்ன என்ன நற்செயல்கள் செய்தோம்; எத்தனை பேருக்கு உதவி செய்தோம்;எத்தனை பேருக்கு நம் சொல்லால், செயல்களால் ஆறுதல் தந்தோம் என்று யோசிக்க வேண்டும்.

இதோ நம் ஆண்டவர் இயேசு பட்டியலிடுகிறார். நாம் யார் யாருக்கு உதவி செய்யவேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? " சின்னஞ்சிறியோருக்கு செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள் " என்கிறார். நம் தெரசா அம்மா அதனாலேயே இந்த பங்கை, பணியை தேர்ந்துகொண்டார். நாம் வெறுமனே தெரசா அம்மா படங்களையும், அவர் பற்றிய செய்திகளையும் மட்டும் சேர் செய்தால் போதாது. அவரைப்போல், அவரில் ஒரு சிரிய பகுதியாவது வாழ்ந்துகாட்ட வேண்டும்.

அன்னைக்கு கொடுக்கப்பட்டதைப்போல் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் வாய்ப்புகளை கடவுள் தருகிறார். ஆனால் நாம்தான் அலட்சியமாக,சோம்பேரித்தனமாக அல்லது " நல்ல சமாரியன் " உவமை போன்று எதாவது ஒரு காரணங்களைச்சொல்லி வாய்ப்புக்களை நழுவவிடுகிறோம். நாம் நழுவவிட்டவர் இயேசுவாககூட இருக்கலாம்.

"செயலற்ற விசுவாசம் வீண் " என்கிறார் புனித சின்னப்பர். ஆகையால் நாம் வாழும்போதே நமக்கு அருகில், ஏதாவது ஒரு தேவைகளோடு யாராவது வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவி அன்பான ஆறுதலான வார்த்தைகள், நம்மால் முடிந்த பொருள் உதவி செய்து நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் வெறும் ஜெபத்தோடு நின்றுவிடாமல் ஜெபம்+செயல்களோடு வாழ்ந்து புண்ணியங்களை சம்மாதித்து முடிவில்லா வாழ்வுக்கு நம்மையே தயாரிப்போம்.

நற்செய்திவாசகம் தொடர்கிறது

மத்தேயு 25 : 31-46

"வானதூதர் அனைவரும் புடைசூழ மனுமகன் தம் மாட்சிமையில் வரும்போது மாட்சி அரியணையில் வீற்றிருப்பார்.அவர் முன்னிலையில் எல்லா இனத்தாரும் ஒன்று சேர்க்கப்படுவர். இடையன் செம்மறிகளையும் வெள்ளாடுகளையும் பிரிப்பதுபோல், அவர்களை வெவ்வேறாகப் பிரிப்பார்.

செம்மறிகளைத் தம் வலப்பக்கமும் வெள்ளாடுகளை இடப்பக்கமும் நிறுத்துவார்.பின்னர், அரசர் தம் வலப்பக்கம் உள்ளோரை நோக்கி, 'வாருங்கள், என் தந்தையின் ஆசி பெற்றவர்களே, உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அரசு உங்களுக்கு உரிமையாகுக.

ஏனெனில், பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள். தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள். அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்றீர்கள்.ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள். நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள். சிறையில் இருந்தேன், என்னைக் காணவந்தீர்கள் ' என்பார்.

அப்போது நீதிமான்கள் அவரிடம், ' ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாய் இருக்கக் கண்டு உணவு கொடுத்தோம்? தாகமாயிருக்கக் கண்டு குடிக்கக் கொடுத்தோம்?எப்பொழுது நீர் அன்னியனாய் இருக்கக் கண்டு வரவேற்றோம்? ஆடையின்றியிருக்கக் கண்டு உடுத்தினோம்?

எப்பொழுது நீர் நோயுற்றோ சிறையிலோ இருக்கக் கண்டு, உம்மைப் பார்க்க வந்தோம்?' என்பார்கள்.

அதற்கு அரசர் அவர்களிடம் கூறுவார்: 'உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்.'

பின்னர், இடப்பக்கம் உள்ளோரை நோக்கி, 'சபிக்கப்பட்டவர்களே, என்னை விட்டு அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடுசெய்துள்ள முடிவில்லா நெருப்புக்குள் செல்லுங்கள்.

ஏனெனில், நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உண்ணக் கொடுக்கவில்லை. தாகமாயிருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுக்கவில்லை.அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்கவில்லை. ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தவில்லை. நோயுற்றும் சிறையிலும் இருந்தேன், என்னைப் பார்க்க வரவில்லை ' என்பார்.

அப்பொழுது அவர்களும் அவரிடம், 'ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ தாகமாகவோ அன்னியனாகவோ, ஆடையின்றியோ நோயுற்றோ சிறையிலோ இருப்பதைக் கண்டு உமக்குப் பணிவிடை செய்யாதிருந்தோம் ?' என்பர்.அவர் மறுமொழியாக, ' உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறியவர் இவர்களுள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்யாதபோதெல்லாம் எனக்கே செய்யவில்லை ' என்பார்.

எனவே, இவர்கள் முடிவில்லாத் தண்டனைக்கும், நீதிமான்கள் முடிவில்லா வாழ்வுக்கும் போவார்கள்."

இயேசுவின் இரத்தம் ஜெயம்; இயேசுவுக்கே புகழ் ; மரியாயே வாழ்க !