புனித ஜெர்த்ரூத்தம்மாள் வாழ்க்கைப்பாதையில் 8 : ஜெர்த்ரூத்தின் அர்ச்சிப்பில் தேவதாயின் பங்கு தொடர்ச்சி.. ( இதுவும் முக்கியமானதே...)

ஜெர்த்ரூத்தும் தேவ இரக்கம் உலக மீட்பை, ஆன்மாக்களின் அர்ச்சிப்பை, ஆண்டவரின் கொடைகளை ஏன் ஆண்டவரையே ஒரு பெண்ணின் கைகளில் ஒப்படைத்த பரம இரகசியத்தை தெளிவாகக் கண்டுணர்ந்தாள். இதற்கு பின்பு அவள் தேவதாயின் பரிந்துரையை அதிக பிரமாணிக்கத்துடனும் அதிகமான உருக்கத்துடனும் எந்நாளும் நாடினாள். அவள் பெற்றுக்கொள்ளும் தேவ நற்கருணையை தகுந்த விதத்திலும் அதிக பக்தியுடனும் பெற்றுக்கொள்ள தேவதாயின் உதவியை நாடினாள். தேவதாயும் அவரது குமாரத்தியை தன்னுடைய புண்ணியங்களால் நன்கு அலங்கரித்தார்கள்.

சேசு அவளது ஆன்மா எவ்வளவு அழகுள்ளதாக இருக்கிறது என்பதை அவளுக்கு தெரியப்படுத்தினார். ஆண்டவரது கண்களுக்கு ஜெர்த்ரூத்தின் ஆன்மா, தேவதாயின் ஆன்ம அழகினால் பிரகாசிப்பதாகத் தெரிந்தது. ( திருச்சபை தேவதாயின் மந்திரமாலையில், ‘ நீர் மட்டும் இனையற்ற விதமாக நமதாண்டவராகிய சேசு கிறிஸ்துவுக்கு மகிழ்ச்சி அளிக்கிறீர்’ என்று பாடுகிறது.)

ஜெர்த்ரூத்தின் இருதயம் நமது ஆண்டவருக்கு விருப்பமான இல்லிடமாகிய மாறியது என்றால், அது அவளது மன்றாட்டின் காரணமாக தேவதாய் செய்த செயலே. ஒருநாள் தியானத்தின்போது அவள் ஆண்டவரிடம், “ ஆண்டவரே, நான் உம்மை இன்னும் அதிகமாக மகிழ்விப்பது எவ்வாறு? “ என்று கேட்டாள். ஆண்டவர் அதற்கு, “ இதோ எனது தாய் ! அவரை தகுந்த விதத்தில் பாராட்டு “ என்றார். ஜெர்த்ரூத் தேவதாயிடம், “ தாயே நீர்தான் ஆண்டவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் தோட்டம். ஆண்டவரது இல்லடமாக நீர் தேர்ந்தெடுந்தெடுக்கப்பட்டதற்காக நான் உம்மை பாராட்டுகிறேன் “ என்று பாராட்டி தனது மன்றாட்டை சமர்ப்பித்தாள். “ தாயே எனது இருதயமும் ஆண்டவருடைய இல்லிடமாக ஆவதற்கு உரிய விதமாக என் இருதயத்தை அலங்கரித்தருளும்.” தேவதாய் இம்மன்றாட்டை ஏற்றுக்கொண்டார். தேவதாய் அவளது உள்ளத்தில் சிநேகம் என்ற ரோஜா செடியை, தாழ்ச்சி என்ற ஊதா மலர் செடியை மற்றும் பற்பல புண்ணியங்களை நடலானார்.

சிறிது நாட்களில் தேவதாயை அதிகமாகப் புகழ்ந்தேனோ என்ற அச்சம் அவளை விட்டு அகலவே, தேவதாயை போதுமான அளவு புகழவில்லையோ என்ற அச்சம் அவள் உள்ளத்தை ஆட்கொண்டது. இந்த பேருபகாரிக்கு உரிய அளவு மரியாதையும் நன்றியும் செலுத்துவது ஓருபோதும் முடியாத காரியம் என்று அவள் உணர்ந்தாள். ஆகவே இந்த இயலாமையை, அன்புத்தாயை உரிய அளவில் போற்ற முடியாத நிலையை நமதாண்டவரின் இருதயம் மட்டுமே மாற்ற முடியும் என்பதனை கண்டுகொண்டாள். இந்த உணர்வை அவளது எழுத்துக்களில் அடிக்கடி காணமுடியும்.

தேவதாய் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட திருநாளுக்கு முன்தினம் ஜெர்த்ரூத் மிகவும் வருத்தமடைந்தாள். இந்த விண்ணக அரசிக்கு தான் செய்ய வேண்டிய கடமைகளை போதிய அளவு செய்யவில்லை என்பதுதான் அவ்வருத்தத்திற்குக் காரணம். மிகுந்த வருத்தத்துடன் நமதாண்டவரிடம் அவள், தனது குற்றங்களுக்காக தேவதாயிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தேவதாய் தன்மீது பரிவுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள். இதனால் ஆண்டவர் தனது தாயை கட்டித்தழுவி, “ மிகவும் நேசமுள்ள அம்மா, நான் என்னுடையவளாக தெரிந்துகொண்ட இந்த ஆன்மாவிடம் தயைக் காட்டும் “ என்று வேண்டினார்.

நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !