கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 6 : “ குழந்தை ஒன்றை துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள் “ லுக்காஸ் 2 : 12

இயேசுவை ஏன் தீவனத்தொட்டியில் கிடத்தினார்கள். மாடுகளுக்கு தீவனம் வைக்கும் தொட்டியில்தான் இயேசு சுவாமி பிறந்தவுடன் கிடத்தினார்கள். முன்னொரு பகுதியில் இயேசு எவ்வளவு எளிமையாக மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார் என்பதை பார்த்தோம். உலக மீட்பர் பிறந்திருக்கிறார். உலகின் பொக்கிஷம் பிறந்துள்ளது. அவரைக்கிடத்த தொட்டில் இல்லை மாறாக மாட்டுத்தொட்டிதான் கிடைத்தது.

இந்த தெய்வீக பெற்றோருக்கு பின்னாளில் தங்கள் மகன் தன் மானிட மக்களுக்காக கசையால் அடிக்கப்பட்டு சிலுவை சுமந்து சிலுவையில் பலியாகி தன்னையே உணவாக்கி மக்களுக்கு வழங்க இருக்கிறார். அதன் முன் அடையாளமாகத்தான் நாம் இப்போது நம் செல்வத்தை ஒரு தீவனத்தொட்டியில் கிடத்துகிறோம் என்று.

ஆம். இந்த தீவனத்தொட்டியில் பிறந்த இந்த தெய்வீக குழந்தைதான் பின்னாளில் தன் உடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாக வழங்கினார்.

“ அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தி அதைப்பிட்டு கூறியதாவது “ இதை வாங்கி உண்ணுங்கள் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல் “

அவ்வன்னமே உணவருந்தியபின் கிண்ணத்தை எடுத்து நன்றி கூறியதாவது “ இதை வாங்கி பருகுங்கள் எனெனில் இது நித்திய உடன்படிக்கைக்கான என் ரத்தம். பாவ மன்னிப்புக்கென உங்களுக்காகவும், பலருக்காகவும் சிந்தப்படும் என் ரத்தம். இதை என் நினைவாக செய்யுங்கள்” மத்தேயு 26 : 26-29

இந்த தீவனத்தொட்டியில் இருக்கும் குழந்தை இயேசுவையும், நற்கருணை பேழையில் இருக்கும் இயேசுவையும் ஒப்பிட்டு பார்ப்போம். ஓ எங்கள் இயேசுவே மாட்டுத்தீவனத்தொட்டியில் துவங்கிய உம் மனித பயணம் கல்வாரி மலையில் சிலுவையோடு முடிந்தது..

தங்கத்தொட்டில்களிலோ, வெள்ளித்தொட்டில்களிலோ அல்லது சாதாரன தொட்டில்களிலோ துவங்கிய எங்கள் பயணம் எங்கள் சுய ஆசைகள், விருப்பங்கள், இச்சைகள், தன்னலங்களால் தடம் புரண்டு, எங்கெல்லாமோ ஓடி, முட்டி மோதி எங்கள் பயணத்தை தொடர வழியில்லாமல் பாதியில் நிற்கிறது.

எப்போதுமே உலக ஆசை பயணம் எங்களுக்கு ஆவலாகவும், இனிமையாகவும் இருக்கிறது அதிலே பயணம் செய்யவே மனம் துடிக்கிறது..

ஆனால் உம்மை நோக்கிய எங்கள் பயணம் கடினமாக இருக்கிறது.. அப்படியே அதில் பயணம் செய்தாலும் எங்களை வலுக்காட்டாயமாக தள்ளிக்கொண்டுதான் பயணம் செய்ய முடிகிறது..

ஏன் இந்த வேற்றுமை..ஏன் எங்களால் ஒன்று முடிகிறது ஒன்று முடியவில்லை.? சாத்தான் எங்களை பாவத்தின் பிடியில் வைத்திருப்பதாலா?

இதைத்தான் ஒரு ஊழியனால் இரண்டு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்று உரைத்தீரா? அப்படியெல்லாம் சொல்லி எங்களை நீர் விட்டுவிட முடியாது. நீர் எங்கள் கரம் பிடித்து, சாத்தானிடமிருந்து எங்களை நிரந்தரமாக பிரித்து உம்மோடு இனைத்து அழைத்துச் சென்றுதான் ஆக வேண்டும்..நாங்கள் உம்மை விடமாட்டோம். நீங்களும் எங்களை விட்டிவிடாதீரும்.. அதற்கு திவ்ய நற்கருணை நாதரை தகுதியான உள்ளத்தோடும், பக்தியும் பாசமும் நிறைந்த நெஞ்சத்தோடு பாவமில்லாமல் முழங்காலில் நின்று நாவில் வாங்கி உட்கொள்ளும் தகுதியும், உறுதியும் நாம் பெறவேண்டும்.

ஜெபம் : மாட்டுத்தொட்டிலில் எங்களுக்காய் பிறந்த இயேசுவே ! உம்மை பின் பற்றி நடக்க எங்களுக்கு ஏராளமான ஆசைகள் இருக்கின்றன. ஆனால் அந்த ஆசையை விட உலக ஆசை சற்று பெரிதாக இருப்பதால் இந்த ஆசைகள் அந்த ஆசைகளையும் சேர்த்து தள்ளிக்கொண்டு போவதால் உம்மை நோக்கி எங்களால் முன்னேற முடிவில்லை. உலக ஆசைகள் வலுவிலக்கவும், உம்மை நோக்கிய ஆசைகள் வலுப்பெறவும் உம் துணையிருப்பு, உம் அரவணைப்பு எங்களுக்கு கட்டாய தேவை. இரு கரம் விரித்தவராகவும் இதையத்தை திறந்தவராகவும் நற்கருணையில் வீற்றிருக்கும் உம்மை முழுமையாக, முழு மனதாக தேடி உன்னில் சரணடைந்து உம் பிறப்பு விழாவுக்கு எங்களை தயாரிக்க வரம் தாரும் இயேசு சுவாமியே.. – ஆமென்

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !