கிறிஸ்மஸ் கால சிந்தனைகள் 5 சேசு தொடர்ந்து பேசுகிறார் தன் தாயார் குறித்து..

"ஆனால் அதற்கிடையில் ஓர் அன்னையைக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியினால் தேவாலயத்தின் நிழலில் மறைபொருளான ஒரு வார்த்தையை நான் கூறுகிறேன். அந்த தேவாலயம் இஸ்ராயேலின் நம்பிக்கையை தன்னுள் கொண்டிருந்தது. அவ்வாலயம் தன் வாழ்நாளில் இறுதிக்கட்டத்தில் இருந்தது. ஏனெனில் புதியதும், உண்மையுமான ஆலயம் பூமிக்கு வரும் தருவாயிலிருந்தது. இந்த ஆலயம் ஒரு ஜனத்தின் நம்பிக்கையை மாத்திரம் அல்ல, எல்லா உலக மக்களுக்கும் காலா காலத்திற்கும் உலக முடிவு வரையிலும் மோட்சத்தின் நிச்சயத்தை உள்ளடக்கியிருக்கிறது. இந்த வார்த்தை வளமற்றதை வளமுடையதாக்கும் அற்புதத்தை செய்கிறது. அது எனக்கொரு அன்னையைத் தரும் அற்புதத்தையும் செய்தது. அவ்வன்னை இரண்டு அர்ச்சிஷ்ட்டவர்களிடம் பிறந்ததினால் இயல்பிலேயே மிக மேலான சுபாவம் கொண்டிருந்தார்கள். அதுமட்டுமல்ல அவர்கள் ஒரு சிறந்த தனிப்பிறவியாகவும் இருந்தார்கள்.

பலர் இன்னும் கொண்டிருப்பது போல நல்ல ஓர் ஆன்மாவை அவர்கள் கொண்டிருந்ததும் தவிர, அவர்களின் நல்ல மனத்தினால் அவர்களிடம் நன்மைத்தனம் இடைவிடாமல் வளர்ந்து கொண்டே வந்தது. அவர்கள் ஓர் அமல உற்பவ சரீரத்தைக் கொண்டிருந்தார்கள். அமல உற்பவ ஆத்துமத்தையும் பெற்றிருந்தார்கள்.

கடவுளிடமிருந்து இடையறாது ஆன்மாக்கள் பிறப்பிக்கப்பட்டிருந்ததை நீ கண்டிருக்கிறாயே! இப்பொழுது இந்த ஆன்மாவின் அழகு எப்படிப்பட்டதாயிருக்கும் என எண்ணிப்பார். காலம் தோன்றும் முன்னே பரம பிதா அதை அன்போடு உற்று நோக்கினார். அது தமதிருத்துவத்தின் மகிழ்ச்சியாய் இருந்தது. அதைத் தன் கொடைகளால் அலங்கரித்து அழகு செய்யவும், அவ்வான்மாவை தனக்கே பரிசாக்கிக்கொள்ளவும், தமதிருத்துவம் ஆவலாயிருந்ததே!

ஓ கடவுள் தமக்கெனவும் அதன் பின் மனிதர்களின் மீட்புக்காகவும் சிருஷ்ட்டித்த மிகப் புனித மரியாயே! நீங்களே முதல் மீட்பராக இருந்தீர்கள். உயிருள்ள மோட்சமே! உங்களின் புண்ணகையால் உலகை அர்ச்சிக்கத் தொடங்கினீர்கள்!

கடவுளின் தாயின் ஆன்மாவாக சிருஷ்ட்டிக்கப்பட்ட இந்த ஆன்மா எப்படிப்பட்டது! தமதிருத்துவத்தின் மும்முக ஸ்நேகத்தின் கூடுதலான உயிரோட்டமுள்ள துடிப்பிலிருந்து இந்த ஜீவ சுடர் வெளிப்பட்டபோது சம்மனசுக்கள் களி கூர்ந்தார்கள். ஏனென்றால் இதைப்போன்றதொரு பிரகாச ஒளியை மோட்சம் இதுவரை கண்டதில்லை. அது ஒரு இரத்தினம்; அது ஒரு சுவாலை! பரலோக ரோஜா மலரின் ஓர் இதழைப் போல் திருநிகழ்வான விலையேறப்பெற்ற இதழ்! மற்றவர்களுக்குப் போலல்லாமல் வேறுபட்ட முறையில் ஒரு சரீரத்திற்கு கொடுக்க இறங்கி வந்த கடவுளின் உயிர் மூச்சு அது.

அதன் ஆர்வத்தில் எவ்வளவு வலிமையுடன் இறங்கி வந்ததென்றால் பாவக்கரை அதைத் தீண்ட இயலவில்லை. அது மோட்சத்தின் வழியாக வந்து ஒரு பரிசுத்தமான உதிரத்தில் தன்னை அடைத்துக்கொண்டது.

உலகம் தன் மலரைப்பெற்றது. ஆனால் அது அந்த உண்மையான, தனிச் சிறந்த, நித்தியத்திற்கும் பூக்கும் மலரை அறியவில்லை. லீலி, ரோஜா, நறுமண வயலட், முல்லை, ஹெலியாந்த், சைலமன் அனைத்தும் ஒன்றாய்க் கலந்து, உலகத்துலுள்ள அத்தனை மலர்களும் ஒன்று சேர்ந்த ஒரே மலர் மாமரி.

அவர்களிடம் எல்லா வரப்பிரதாங்களும், எல்லாப்புண்ணியங்களும் குவிந்துள்ளன."

நன்றி : கடவுள் மனிதனின் காவியம், கிடைக்கும் இடம் மாதா அப்போஸ்தலர்கள் சபை, ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமாதாப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில் தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983, 9894398144

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க!