ஞான ஒடுக்கப் பிரசங்கம். பாகம் 3.

ஈடேறிக் கொள்ளுவது தான் மனிதனுடைய ஒரேயொரு அலுவல்; முக்கியமான அலுவல்; இன்றியமையாத அலுவல். இந்த அலுவலை நமக்கு யார் பார்த்துத் தருவார்? சருவேசுரனா? திருச்சபையா? இனசனமா? இல்லையில்லை. இந்த ஒரேயொரு அலுவலை, முக்கியமான அலுவலை, இன்றியமையாத அலுவலை ஒவ்வொருவரும் தான் தானே பார்த்து வைக்க வேணும்.

பிரியமானவர்களே, சருவேசுரன் உங்களைக் கேளாமல் உங்களை உண்டாக்கினார் என்பது சந்தேகமில்லாத உண்மை . ஆனால் உங்களைக் கேளாமல், உங்களுடைய விருப்பம் இல்லாமல், உங்களுடைய அதிக பிடிவாதமான ஆசையில்லாமல், உங்களை ஒருபோதும் ஈடேற்றமாட்டார்.

கேளாமற் படைத்தது போல், கேளாமலே ஈடேற்றியும் போட அவருக்குச் சித்தமானால், இந்தப் பூவுலகத்திலே மனுமக்களைப் பரிசோதனைக்கு வைத்திரார்; மனிதருக்குத் தன்னிட்டம் என்னும் வரத்தைத் தந்திரார். பாவைப் பிள்ளைகளைப் பண்ணிவைப்பதுபோல மனிதரையும் படைத்துப் படைத்து நிரைநிரையாய் ஒரு இடத்திலே வைத்து, அவர்கள் சும்மா விழித்து விழித்துப் பார்த்துக்கொண்டிருக்க விடுவதானால், அதிலே மனிதருக்கும் யாதொரு இன்பமில்லை, படைத்தவருக்கும் மேலான மகிமை இல்லை.

''தான் தேடாப் பொன்னுக்கு மாற்றுமில்லை உரையுமில்லை'' என்பது மெய் அல்லவா? மனிதர் தாங்களாகப் பாடுபட்டு, அந்தப் பாடுகளுக்கு ஒரு சம்பாவனையாக மோட்சத்தை அடையாவிட்டால், மோட்ச பாக்கியந்தானும் அவர்களுக்கு இனிக்கமாட்டாது. சருவேசுரனுக்கும் அது மகிமையாய் இராது.

கால் கை விழங்காத ஒரு ஏழை நோயாளிக்கு "வீர சூரச் சேனாபதி'' என்ற பட்டங்கொடுத்தால், அதனால் அவனுக்கு ஏதாவது சுகம் உண்டா? புகழ் உண்டா? '' நாய் அரசாண்டென்ன பூனை சிங்காசனத்தில் இருந்தென்ன?'' மொட்டைச்சியைப் பார்த்து நீ கூந்தல் அழகி என்று சொன்னால், அவளைப் பரிகாசம் பண்ணுவது ஒழிய பாராட்டுகிறதாய் இராதே. அப்படியே சருவேசுரனும் பாடு படாதவர்களுக்குப் பட்டங் கொடுக்க மாட்டார்; தாங்களாக வருந்தித் தேடாதவர்களுக்கு மோட்ச பாக்கியத்திலே பங்கு அருள மாட்டார்.

இது ஒரு புறம் இருக்க: சருவேசுரன் மனிதரை ஈடேற்றுவதற்காகப் பாடுபட்டிருக்கிறாரே, அதனால் நாம் சும்மாவிருக்க நமக்கு ஈடேற்றம் கிடையாதோ என்றால், அப்படியும் இல்லை. சுதனாகிய சருவேசுரன் மனித அவதாரம் பண்ணிச் சொல்லில் அடங்காத பாடுபட்டது, நாம் ஒரு பாடும் படாமல் மோட்சம் அடையலாம் என்று காட்டுவதற்காக அல்ல; இதற்கு மாறாக, அந்தப் பாடுகளிலே நாமும் நம்முடைய பங்கைக் கைக்கொள்ள வேணும் என்று காட்டத்தான்.

துன்பம் அறியாத இன்ப சமுத்திரம் ஆகிய அவர், அத்தனை பாடுகளைப் படாமல், வேறு வகையாகவும் நம்முடைய பாவங்களுக்குப் பொறுதியைத் தந்திருக்கக் கூடும். அப்படிச் செய்ய அவர் திருவுளமாகியிருந்தால், பாவத்தின் பயங்கரமான கொடுமை நமக்குப் புலப்பட்டிராது. நாமும் பாடொன்றும் படாமல் மோட்சத்தை அடைந்துகொள்ளலாம் என்ற மோசமான தப்பெண்ணத்தோடு இருந்துவிடுவோம்.

ஆனால், ஆண்டவர் பாடுபட்டதினால், அந்தப் பாடுகளுக்குக் காரணமாகிற பாவம் சருவேசுரனுக்குத் தாங்கொணாத மகா அவலட்சணமான அருவருப்பு என்று கண்டுகொண்டோம். நாமே பாவவாளரும் ஆண்டவரோ குற்றம் ஒன்றும் இல்லாதவரும் ஆனபடியால், அவருடைய அளவில்லாப் பாடுகளோடே, இயன்றளவு, நம்முடைய பாடுகளையும் சேர்க்க வேண்டும் என்பது குறையாத நீதியின் கிரமம் ஆகும்.

நம்முடைய சின்னப் பாடுகளை ஆண்டவருடைய மகா பாடுகளோடே சேராவிட்டால், நாம் ஈடேற முடியாது என்றது தவறில்லாத ஒரு வேத சத்தியம். இதை அர்ச். சின்னப்பர் வெளிப்படுத்தி : ''நான் கிறீஸ்துநாதருடைய பாடுகளோடு சேர வேண்டிய குறைப்பங்கை அவருடைய சரீரமாகிய திருச்சபைக்காக என் உடலிலே நிறைவேற்றுகிறேன்'' என்கிறார். (கொலோ, 1; 24).

ஒரு ஊரிற் சனங்கள் தாகந் தணிக்கத் தண்ணீர் இல்லாமல் வருந்துவதைக் கண்ட ஒரு தருமவாளன், நல்ல நீர்க்கிணறு ஒன்றைக் கன பாடுபட்டுச் செலவு செய்து வெட்டுவித்தான் என்று வைத்துக்கொள்ளுவோம். அதன்பின், தாகமுள்ள சனங்கள் கிணற்றடிக்குப் போய்த் தண்ணீரை அள்ளுகிற சிறுபாட்டைக் கூடப் படோம் என்று இருந்துவிட்டால், அவர்களுடைய தாகம் தீருமா? தாங்கள் அற்பமும் முயற்சி செய்யாமலிருக்க, தண்ணீர் அவர்கள் வாய்களிலே தானாக வந்து பாயுமா? பாயாதே.