ஞான ஒடுக்கப் பிரசங்கம். பாகம் 2. ஈடேற்ற அலுவல் - மனிதனுடைய ஒரே அலுவல்!

எம்மைப் படைத்த அன்பு மயமாகிய சருவேசுரனுடைய செயல்களைப் பார்த்தால், அவர், தாம் உலகத்தில் செய்வதை எல்லாம் மனிதனுக்காகவே செய்கிறவராகக் காணப்படுகிறார். அற்ப சிருஷ்டியைப் போல் தோன்றுகிற இந்த மனிதனைப் பராமரிப்பது தான் தம்முடைய ஒரே ஒரு அலுவல் என்றபடி சகலத்தையும் நடத்தியருளுகிறார்.

உலகம் முழுதையும் அவனுக்காக உண்டாக்குகிறார். அது முழுதுக்கும் அவனையே தலையாக, அதிபதியாக வைத்தருளுகிறார். அம்மட்டோ! அவனைத் தேடித் தாமும் மனித வேஷம் பூண்டு வந்து, மனிதருள் ஒரு மனிதனாகி, தாம் உண்டு பண்ணின மனிதனின் கையால் தாமே பாடுபட்டு மரிக்கிறார். அம்மட்டோ ! தாம் பாடுபட்ட பலன்களை ஒருவனாவது அடையாமற் போகாதிருக்கும்படிக்கு, அந்தத் திருப் பலன்களைப் பகிர்ந்து கொடுக்கிறதற்காக ஒரு திருச்சபையை உண்டாக்கி வைக்கிறார். அம்மட்டோ! அந்தத் திருச்சபையிலே தாம் வைத்த சக்கிறமேந்துகளில் ஒன்றாகிய தேவநற்கருணையிலே தாமே தமது மனுஷக ஆத்தும சரீரத்தோடேயும் தேவ சபாபத்தோடேயும் மெய்யாகவே எழுந்தருளி, பாவ மனிதனுடைய தேவ போசனமாகவும் வந்தருளுகிறார். இப்படியே, மனிதனை தம்முடைய வசமாக இழுத்து அவனை ஈடேற்றுவது ஒன்றுமே தம்முடைய ஏக அலுவல் என்றதுபோல அளவில்லாத சருவேசுரன் நடந்துகொண்டு வர, அற்ப மனிதன் வேறொரு அலுவலிலே கண்ணாயிருக்கலாமா ?

சருவேசுரனுக்கு ஊழியஞ்செய்வதுதான்,-ஈடேற்ற அலுவல் தான், மனிதனுடைய ஒரே அலுவலாய் இருக்க வேண்டியது. ஆனால் நம்முடைய சரீரத்தைக் காப்பாற்றிக் கொள்ளுகிறதாகிய அலுவலும் நமக்கு உண்டு; சரீரத்தைக் காப்பாற்றுவதற்காக உலக பொருட்களைத் தேட வேண்டிய அலுவலும் நமக்கு உண்டு. இந்த அலுவலைப் பார்த்துக் கொண்டு வரும்போது, நாம் அந்த அலுவலை, அந்த ஒரே அலுவலைப் பின் போடப்படாது. அதை முன்னுக்கு வைத்து, இதைப் பின்னுக்கு வைப்பதுதான் முறை.

சரீரத்துக்கு ஊணும் உடுப்பும் விடுதியும் தேடுகிறதாகிய அலுவலுக்கு நாம் அடிமையாய் இருக்கப்படாது. நாம் தின்கிறதற்காகச் சீவிக்கப்படாது. சீவிக்கிறதற்காகத் தின்ன வேணும். மிருகங்கள்ளுக்கு ஊணும் பளையும் தேடுவதே ஏக அலுவல். நமக்கோ இதற்கு மேலான அலுவலும் ஒன்று உண்டு. அது தான் நமக்கு முக்கியமான அலுவல். இவ் உலக சீவியத்துக்கு உரியவைகளைத் தேடுவது அதற்குப் பிறகு வருவது.

மிருகங்கள் எல்லாம் கவிழ்ந்த முகமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறது. மண்ணிலே திரிந்து மண்ணுக்குரிய காரியங்களைத் தேடுவது தான் அவைகளுடைய கதி. விண்ணை நோக்கி நடந்து மேல் லோகத்துக்குரிய எதையும் செய்யத்தக்க புத்தியுள்ள ஆத்துமம் அவைகளுக்கு இல்லை. நாமோ நிமிர்ந்த முகமாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். ஏனென்றால், நாம் மேல் நோக்கிப் பார்த்து, வரப்போகிற உலகமாகிய ஒரு கதியை நோக்கி நடக்க வேண்டியவர்கள். மோட்சத்தை அடைவது நம்முடைய கதி. நாம் உலகத்தில் சீவித்தாலும் ''நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது'' ( பிலிப். 3; 20 ).

உலக சீவியத்தின் பராக்கினால் நமது பரலோக குடியிருப்பை மறந்து விடப்படாது. இந்தப் பராக்கினால் அந்த ஏக அலுவலைக் கைநெகிழ்ந்து விட்டால், ''கலியாணவீட்டு அமளியிலே தாலி கட்ட மறந்தது '' போலிருக்கும். தாலி கட்டாவிட்டால் கலியாணம் நிறைவேறினதாயில்லை என்பது நம்முடைய தேச ஆசாரம். சத்திய வேதத்திலே தாலி கட்டல்ல கைப்பிடி தான் முக்கியம். ஆனபடியால் நாங்கள் அந்தப் பழமொழியை மாற்றி ''கலியாண வீட்டு அமளியிலே கைப்பிடிக்க மறந்தது'' போல என்று சொல்லலாம். கைப்பிடி நடவாவிட்டால், கரியல் பொரியல் ஆயத்தம் பண்ணினதும் வீண்; விருந்தாளிகள் வந்ததும் வீண் ; மேளகாறருக்குக் காது கட்டினதும் வீண். கைப்பிடி இல்லாமற் போனால் கலியாணவீடு எல்லாம் பழுதாய்ப் போய்விடும்.

அதுபோல், ஆத்துமம் ஈடேறாவிட்டால் மனிதனுடைய சீவியம் முழுதும் பாழாய்ப் போய்விடும். செல்வம் இருந்தென்ன? செல்வாக்கு இருந்தென்ன ? இன சனம் வேலையாள் ஆடுமாடு காணிபூமி இருந்தென்ன? உத்தியோகம் பார்த்தென்ன? நல்ல சடங்கு முடித்து அநேகம் பிள்ளைகளைப் பெற்று சீராய்ச் சிறப்பாய் வாழ்ந்தும் என்ன? ஆத்துமம் ஒன்று ஈடேறாமற் போனால் எல்லாம் விழல் விழலே. 'மனிதன் உலகம் முழுதையும் தன்னுடையது ஆக்கிக்கொண்ட போதிலும் தன் ஆத்துமத்தை இழந்து போவானாகில் அதனால் அவனுக்கு என்ன பிர யோசனம்?''

இவ்வேளை நரக அக்கினியிலே கிடந்து வேகிற இராசாக்களும் பிரபுக்களும் உத்தியோகஸ்தர்களும் கன தனவான்களும் சிற்றின்பப் பிரியர்களும் செல்வர்களும் தாங்கள் உலகத்தில் இருந்த போது உலகத்தில் அனுபவித்த இன்பங்களைப்பற்றி என்ன எண்ணுவார்கள்? ஐயோ எங்கள் ஒரே அலுவலாகிய ஈடேற்றத்தை - தேவ ஊழியத்தை - மாத்திரம் மறந்து, மற்றச் சகல அலுவல்களையும் பார்த்தோமே; புண்ணியம் சம்பாதிப்பது ஒன்றைக் கை விட்டுவிட்டு மற்றச் சகல பொருள் பண்டங்களையும் சுக போகங்களையும் கீர்த்தி மகிமைகளையும் சம்பாதிப்பதில் பகலிரவாய் உழைத்தோமே. இப்போது பொருள் பண்டங்களையும் இழந்தோம். கீர்த்தி மகிமைகளையும் போக்கடித்தோம். இந்தப் பொறுக்க முடியாத வேதனையே எங்களுக்கு இப்போது ஆஸ்திபாஸ்தியாக வந்திருக்கிறது. ஆத்துமத்தை இழந்ததே எல்லாத்தையும் இழந்தோம் இழந்தோம் என்று அல்லவோ ஓயாமற் புலம்பிக்கொண் டிருப்பார்கள்.

இங்கிலாந்து தேசத்தை ஆண்ட எலிசபேத்து என்கிற இராசாத்தி, சத்தியவேதத்தை விட்டுப் பதித மதத்தில் உட்பட்டிருந்தவள், இவ்வுலக இராசாங்க மகிமைதான் பெரிது என்று மதித்துக் கொண்டு தனக்கு நெடுங்கால அரசு வேணும் என்று மன்றாடினாளாம். அப்படியே நாற்பத்து நாலு வருஷம் அரசாண்டு, பதிதத்தை விடாமலே மரித்தாள். தனக்கு மோட்ச ராச்சியம் வேண்டாம் என்று உலக ராச்சியத்தைத் தேடின அந்த இராசாத்தி அக்கினிக் கடலிலே இன்றைக்கும் அமிழ்ந் திக் கிடந்து வருந்தும் வேளையில், இவ் உலக ராச்சியம் ஆண்ட பவிள்சும் அட்டோலிக்கமும் அவளுக்கு ஏதுக்கு உதவும்? அவை எல்லாம் புகைபோல் மறைந்து போக, நரகத்தின் நித்தியமான வேதனை மாத்திரம் அவளுக்கு மிச்சமாய் இருக்கும் அல்லவோ?

கிறீஸ்தவர்களே, நீங்களும் உங்கள் ஆத்தும ஈடேற்றத்தைக் கை பறிய விட்டுவிட்டால், நீங்கள் இப்போது பாடுபட்டுத் தேடுகிற பொருள் பண்டங்களால் உங்களுக்கு என்ன பிரயோசனம்? தவச தானியங்களால், துணி மணிகளால் என்ன பிரயோசனம்? உத்தியோக ஆடம்பரத்தால், கல்விப் படிப்புக்களால், இன்ப சுக போக சீவியத்தால் என்ன பிரயோசனம்? உங்கள் ஒரே அலுவலை விட்டுவிட்டு பிற்காலம் ஒருநாள் உங்களுடைய மாறாக் கவலைக்குக் காரணமாய் இருக்கப்போகிற காரியங்களிலே நீங்கள் அமிழ்ந்தியிருப்பது ஒருபோதும் புத்தி ஆகாது, புத்தி ஆகாது.