நமதாண்டவர் அர்ச். ஜெர்த்ரூத்தின் இருதயம் நமக்கு மிக மகிழ்ச்சியான இல்லம் என்று அறிவித்துள்ளார். ஆகவேதான் திருச்சபை இந்த அர்ச்சிஷ்ட்டவளின் பூசைக்கான சபைச் செபத்தில் பின்வருமாறு மன்றாடுகிறது :
“ ஆண்டவரே அர்ச்சிஷ்ட கன்னியான ஜெர்த்ரூத்தின் இருதயத்தில் உமக்கென ஒரு மகிழ்ச்சியான இல்லத்தை அமைத்துள்ளீரே ! தேவரீர் மனமிரங்கி அவளது பேறுபலன்களாலும், பரிந்துரையாலும் எமது இருதயத்தில் உள்ள கறைகளைக் கழுவி அவளுடன், எங்களுக்கு இனிய நட்பை உண்டாக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம்.”
ஜெர்த்ரூத்தின் இருதயத்தை ஒரு கோவில், ஒரு சரணாலயம், நமதாண்டவரின் பரிசுத்த பேழை, கிறிஸ்தவ பக்திக்கு ஓர் எடுத்துக்காட்டு, ஒரு படிப்பினை, ஆழ்ந்து படிக்க வேண்டிய, கண்டுபாவிக்க வேண்டிய இருதயம் என்று திருச்சபை கருதுகிறதென்று மேலேயுள்ள சபைச் செபம் நமக்குத் தெறிவிக்கின்றது.
நமதாண்டவர் ஏன் இந்த இருதயத்தைத் தனது இல்லிடமாகத் தெரிந்துகொண்டார்? அதன் இரகசியம் என்ன? இக்கேள்விகளுக்கு பதில் காணும் முயற்சியில் தாய் திருச்சபை நமக்கு உதவி செய்கிறது. சேசு நாதர் இந்த இருதயத்தில் குடிபுகுமுன் அவரது விருப்பப்படி இந்த இருதயத்தை அதற்காகத் தயாரித்தார். ஜெர்த்ரூத்தும், நமதாண்டவர் அவளது இருதயத்தை செப்பனிட, சீர்திருத்த உழைத்தாள் என்று கூறுகிறாள்.
நமதாண்டவர் அவளுக்குப் போதித்த படிப்பினைகள் நம் அனைவருக்கும் பொருந்தும். ஆண்டவருடைய படிப்பினைகளை, ஜெர்த்ரூத் கொண்டிருந்த ஆவலுடன் கேட்கும் அனைவருடைய ஆன்மாக்களையும் அவரது இனிய இல்லமாக மாற்ற ஆண்டவர் தயங்கமாட்டார். நமது படிப்பினைக்காகவே, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து தனக்கு வெளிப்படுத்திய செய்திகளை அவள் எழுதினாள்.
புனித குழந்தை சேசுவின் தெரசாளும், புனித பிரான்சிஸ் சலேசியாரும் அவளை மிகவும் மதித்து, தங்களது ஞானத்தாயாக போற்றி வந்தனர். அவளது எழுத்துக்கள் பல ஞான நூலாசிரியர்களுக்கு ஞான உணவாக இருந்துள்ளன. 1530-ம் ஆண்டில் வாழ்ந்த மடாதிபதியான லூயிஸ் டி பிளாய்ஸ் அவள் எழுதிய புத்தகத்தை ஆண்டுக்கு 12 முறை வாசித்தார். ஞான வாழ்வில் முன்னேற விரும்பும் எல்லோரும் அவளது புத்தகத்தை வாசிக்க வேண்டுமென்று அவர் எழுதினார்.
ஜெர்த்ரூத்தின் பெயர் மட்டுமே தமிழ் உலகத்து கிறிஸ்தவர்களுக்குத் தெறியும். அவளைப் பற்றிய தமிழ் நூல்கள் எதுவும் இல்லை. எனவே இக்குறையை இந்நூல் நிறைவு செய்யும் என்ற கருத்துடன் இப்புத்தகத்தை உங்கள் முன் வைக்கிறோம்.
நூல் வெளியிடு : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. “ மாதா பரிகார மலர், மற்றும் சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !