புனித செபஸ்தியாரின் வரலாறு

விசுவாசத்தைக் கட்டிக்காக்க வீர மரணமடைந்து, விண்ணக பேரின்ப வாழ்வை தன் உடமையாக்கிக் கொண்ட புனித செபஸ்தியார் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த நர்போன் என்ற நகரில் பிறந்து இத்தாலியில் உள்ள மிலான் நகரில் வளர்ந்து, திறமைமிக்க வாலிபனாகத் திகழ்ந்தார்.

உரோமை பேரரசர் கறினுசின் படையில் செபஸ்தியார் கி.பி. 283ல் சேர்ந்து, சிறந்த படைவீரன் ஆனார். வேதத்திற்காக சிறைக் கூடங்களிலே அடைப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்த விசுவாசிகளை சந்தித்து, அன்பாக அவர்களுக்கு ஆறுதல் கூறினார். கிறிஸ்துவின் அன்பைக் காட்டி விசுவாசத்தில் அவர்கள் நிலைத்து நிற்கச் செய்தார். இந்த பணியை செய்வதற்காக அவர் தனது உயர் பதவியையும், செல்வத்தையும் பெரிதென எண்ணவில்லை.

சிறையில் துன்பப்பட்ட மார்க்குஸ், மார்செல்லியானுஸ் என்ற  சகோதர்களைச் சந்தித்து, அவர்களை விசுவாசத்தில் திடப்படுத்தினார். அப்போது அங்கு வந்த ஆறு வருடங்களாக பேச முடியாமல் இருந்த சோயே என்ற பெண், தனக்கு பேசும் வரம் வேண்டும் என புனிதரின் காலைப் பிடித்து மன்றாடினார். புனிதரும் மனமிறங்கி, அவளது வாயின்மேல் சிலுவை அடையாளம் வரைந்து அவளைப் பேச வைத்தார். அவள் தன் கணவருடன் மனம் மாறி கத்தோலிக்க திருச்சபையில் சேர்ந்தார். அவ்வாறே மார்க்குஸ், மார்செல்லியானுஸ், அவர்களின் மனைவிகள், பெற்றோர், சிறைக்காவலர் மற்றும் பலர் உண்மை வேதத்தில் சேர்ந்தனர். போலிகார்ப் என்ற குறு அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்தார்.

உரோமை பேரரசன் கிரோமாசியுஸின் நோயைப் புனித செபஸ்தியார் நீக்கியதால், அவரும் அவரது மகனும் கத்தோலிக்கத் திருச்சபையைச் தழுவ எண்ணங் கொண்டு, திருமுழுக்கு வாங்கினர். அதுமட்டும் அல்லாமல், தனக்கு அடிமையாக இருந்த 1400 கிறிஸ்தவர்களையும் விடுவித்தான்.

புனித செபஸ்தியாரின் நற் பண்புகளையும், நெஞ்சுறுதியையும் கண்டு, கி.பி. 283-ல் உரோமை பேரரசன் இவரை தனது மெய்க்காப்பாளன் ஆக்கினார். உரோமை எங்கும் வேதகலாபனை தொடர்ந்து வண்ணம் இருந்தது. கிறிஸ்தவர்களை மீட்க அதிகாரம் தரும்படி செபஸ்தியார் திருத்தந்தை காய்யுஸ் என்பவரிடம் வேண்டினார். ஆனால் திருத்தந்தை போலிஸர்ப் என்ற குருமூலம் மெய்காப்பாளராக இருந்து கொண்டே பணிபுரிய அதிகாரம் கொடுத்தார்.

கி.பி. 286-ம் ஆண்டு வரை வேத கலாபனை தொடர்ந்தது. புனித செபஸ்தியாரும் கிறிஸ்தவன் என்பது அரசரின் காதை எட்டியது. ‘நன்றி மறந்தவன்’ எனச் சொல்லி அரசன் கண்டித்தான், இறைவனை வாழ்த்தி வணங்குவதாகவும், அரசனுக்காக   ஜெபிப்பதாகவும் சொன்னார். இதைக்கேட்டு வெகுண்டெழுந்த அரசன், அவரைக் கம்பத்தில் கட்டி அம்பால் எய்ய ஆணைப் பிறப்பித்தான். காவலர் அவரை கம்பத்தில் கட்டி, இரக்கமின்றி அவர்மீது அம்பால் எய்து, அவர் இறந்தவிட்டார் என தவறாக நினைத்து சென்று விட்டனர். இரேனாள் என்ற பெண் சென்று, அவர் உயிரோடிருப்பதைக் கண்டு, தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். அங்கே குணமடைந்தார். அவரை மறைவாயிருக்கும் படி கிறிஸ்தவர்கள் மன்றாடினார். ஆனால் அவர் அரசன் கோவிலுக்குச் செல்லும் வழியில் நின்று “பேரரசரே! கிறிஸ்தவர்கள் மீது கோள் சொல்லும் பொய்யர்களின் வார்த்தைகளைக் கேட்டு நீர் மதியை இழக்கலாமா? கிறிஸ்தவர்களை விட நல்லவர் இல்லை என்றும், அவர்கள் மூலம் உமக்கு நன்மையே அதிகம் என்று  அறிவீர்” என்றார்.

புனித செபஸ்தியார் உயிரோடு இருப்பதையும், தன்னை எதிர்த்துப் பேசுவதையும் பேரரசன்   தியோகிளேசியன் கண்டு வியந்தான். புனிதர் அந்த அரசனைப் பார்த்து, ‘அவர் நான் தான்’, நீர் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துகிறீர் என்று உலகம் அறியும் பொருட்டு மீட்பராகிய இயேசுகிறிஸ்து என்னை உயிரோடு காப்பாற்றினார் என்றார்.

இதைக் கேட்ட அரசன் கோபங்கொண்டு தடிகளால் அடித்துக் கொல்ல ஆணையிட்டான். 288-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் நாள், செபஸ்தியார் அடித்துக் கொல்லப்பட்டார். லூசினாள் என்பவள் காட்சியில் கண்டு, அவரது உடலை எடுத்து புனித இராயப்பர், சின்னப்பர் கல்லறை வாயிற்படியின் அருகில் அடக்கம் செய்தார்.