புனித வெள்ளி

இயேசுவின் மரணம் நெருங்கி வரவே  அவருடைய திருக்கண்கள் பஞ்சடைகின்றன  சம்மனசுகளுக்குப் பிரமிப்பு வருவிக்கும்  அவருடைய திருமுகம் வெளுக்க  பற்கள் கிட்டிபோகின்றன  அவருடைய திருத்தலை கீழே சாய்கின்றது  

என் சகோதரனே எழுந்து அவர் தலைசாய்ந்த பக்கத்தில் முழங்காலில் இருந்து  நமது பாவ துரோக்களுக்கு மன்னிப்புக் கேட்டு அவர் நம்மை நோக்கி சொல்லும் முறைப்பாடுகளைக் கவனமாகக் கேட்பாயாக  

+ இயேசுகிறிஸ்து நம்மிடம் சொல்கிறார் +

ஓ நிர்பாக்கிய ஆத்துமங்களே  நம்மை இவ்வளவு கொடிய மரணத்துக்கு கையளித்தீர்களே  நாம் உங்களுக்கு என்ன தீமை செய்தோம் சொல்லுங்கள்   நாம்  உங்களுக்கு செய்ததெல்லாம் பெரும் நன்மை உபகாரங்களாகவே இருக்க நம்மை ஏன் இவ்வளவு  அவமானமாய் கொள்கிறீர்கள்  நீங்கள் செய்யும் பல வேலைகளால் நம்மை துதிக்கும் பொருட்டு உங்களுக்கு கரங்களையும நடமாடுவதற்கு கால்களையும்  கொடுத்திருக்க  இதோ உங்களுக்கு  துஷ்ட பாவக் கிரிகைகளால் எனது கைகால்களைப் பெரும் இரும்பு ஆணிகளால் சிலுவையில் அறைந்து விட்டீர்களே  இதுதான் நீங்கள் எனக்கு காட்டும் பிரதி நன்றி  எனக்கு ஊழியம் செய்யும் பொருட்டு உங்களுக்கு  நல்ல புத்தியையும்  கண் செவியையும் கொடுத்திருக்க  நீங்கள் தீங்கைக் கருதிப் பரிசுத்த கற்புக்கு விரோதமான  அசுத்தமான நினைவுகளை மனதில் நினைத்து  யோசிப்பதாலும்  ஆகாத பொருட்களையும்  இச்சையானவைகளை பார்பதாலும் பெரியவர்கள் மேல் சொல்லப்படும் பறணி பொறாமைக்குக் காது கொடுப்பதாலும்  எனது சிரசைக் கூர்மையான முட்களால் ஊடுருவி அந்த காயங்களால் எனது கண்களிலும் செவிகளிலும் இருந்து ஏராளமான இரத்தத்தையும் சிந்த செய்தீர்கள் 

ஆ கொடிய ஆன்மாக்களே எனக்கு இவ்வளவு அகோர உபாதையை  வருவித்தது ஏன்  உங்களுக்குஎன்ன பொல்லாங்கு செய்தேன்  சொல்லுங்கள்  நீங்கள் இவ்வுலகத்தில்  எனக்கு ஊழியம் செய்த பின்பு  பரலோகத்தில்  சகலவித பாக்கியங்களையும் அநுபவிப்பதற்காக உங்களுக்கு ஓர் சரிரத்தைக் கொடுத்தேன்  அதற்கு கைமாறாக நீங்கள் எனக்கு காட்டிய நன்றி இதுதானா  உங்கள் சிற்றின்பங்களுக்காகவும்  ஆசாபாசங்களுக்காகவும்  உலக போக்கான வாழ்கைக்காகவும்  எனது திருவுடலை இவ்வளவு காயப்படுத்தினீர்களே 

நீங்களே பாருங்கள் எனது உடலில் காயமில்லாத இடம் ஏதேனும் இருக்கிறதா என்று  தீர்க்கதரிசிகளின் வாக்கியபடியும் எனது எலும்புகள் எல்லாம் வெளியே தெரிகின்றன  இதோ எனது உடலில் பல இடத்தில் தேகத்தில் பள்ளம் விழுந்திருக்கிறது  இவ்வளவு கொடூரமாய் என்னை நீங்கள் தண்டிப்பதற்கு நான் உங்களுக்கு பன்னின தீங்கைச் சொல்லுங்கள் ஆத்துமாக்களே

அல்லது நான் உங்களுக்காக என்ன நன்மையை செய்யவில்லை என்று சொல்லுங்கள்  அன்றியும் நான் எனது உடலாலும்  இரத்தத்தாலும்  உங்களை காத்தேனே  இதோ எனக்கு நஞ்சு கலந்த காடியை குடிக்கக் கொடுத்தீர்கள் மேலும் உங்களை மோட்சத்துக்கு உரித்தான பிள்ளைகளாக நியமித்திருக்க  உங்களுடைய ஆங்கார  பெருமையால் என்னை சொல்ல முடியாத நிந்தைக்கு உள்ளாக்கிப் பெரும் பாதகர் நடுவில் சிலுவை மரத்தில் அவமானமாய் அறைந்தீர்கள் 

ஆ குருட்டாட்டமுள்ள ஜனங்களே உங்களுக்கு இருதயம் இல்லையா  உங்கள் மரண எதிரிக்கு முதலாய் இவ்வளவு கஸ்தி நிர்பந்தகளை வருவிக்க உங்களுக்கு மனம் வராதபோது  மனித புத்தியில் அடங்காத அவ்வளவு நன்மை உபகாரங்களைச் செய்த  உங்கள் தேவனும்  தகப்பனும்  சகோதரனும் கடைசியாய் உங்களுக்குச் சகலுமுமான எனக்கு ஏன் இவ்வளவு நிஷ்டூர பாதகங்களைச் செய்தீர்கள்  போதும்  ஆ  என் இரத்தத்தால் இரட்சிக்கப்பட்ட ஆன்மாக்களே  நிறுத்துங்கள் நான் உங்களுக்கு செய்த நன்மை உபகாரத்தைச் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பீர்களாகில்  இவ்வளவு நிஷ்டூர வேலையைச் செய்திருக்க மாட்டீர்கள்  இதோ இராயப்பருடைய குற்றங்களைப் பொறுத்தேன்  பச்சாதாபக் கள்ளனுடைய குற்றங்களை மன்னித்தேன் எனது சிலுவையைக் காட்டி மனஸ்தாபப்பட்டு அழும் மரியமதலேனாவை மன்னித்தேன்  நீங்களும் உங்கள் கொடூர பாவங்களுக்காக மனம் மாறுங்கள்  நரக வாழ்வை விட்டுவிட்டு மோட்ச வாழ்விற்க்கு உங்களை தயார் செய்யுங்கள் என் சிலுவைபாடுகளுக்குள் வந்து உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு ஒப்புக் கொடுப்பீர்களானால் பரிபூரண மன்னிப்பு அளித்து எனது வான் வீட்டில் உங்களுக்கு ஓர் இடம் அளிப்பேன் என் பிள்ளைகளே

எங்கள் மேல் தயவாயிரும் சுவாமி எங்கள் மேல் தயவாயிரும்!