கர்த்தர் உயிர்த்தெழுந்தார்!

கர்த்தர் உயிர்த்தெழுந்ததை நேரில் கண்டவர்கள் கல்லறைக் காவலர்களே . "மோயீசனையும் தீர்க்கதரிசிகளையும் அவர்கள் நம்பாவிட்டால் , மரித்தவர்களிடத்திலிருந்து ஒருவர் உயிர்த்து வந்தாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள் " என்று சேசு சொன்ன வார்த்தை எவ்வளவு உண்மையானது .

அப்போஸ்தலர்களுக்குப் பயம். சேசுநாதர் உயிர்த்ததைக் கேட்டு பயம் , உயிர்த்த சேசுவைக் கண்டு பயம் . விசுவாசம் எவ்வளவு மெதுவாய் அவர்கள் உள்ளத்தில் ஊர்ந்தூர்ந்து உதித்தது . தாம் உயிர்த்து வரப் போவதாக இயேசுநாதர் தீர்க்கதரிசனமாக அறிவித்திருந்தார் . இயேசு உயிர்த்தெழுந்ததாக சம்மனசுக்கள் கூறியும் , தரிசனை கண்ட பெண்கள் கூறியும் , தாங்களே சேசுவை முகமுகமாய்க் கண்ட பின்னும் உடனே அவர்கள் விசுவசிக்கவில்லை.

அப்போஸ்தலர்களின் பயத்துக்குக் காரணம் என்ன ?மரித்தவர் உயிர்த்து வந்தால் யாவருக்கும் பயம் தான் . ஆண்டவர் உயிர்க்க வேண்டும் என்னும் வேத வாசகத்தை விசுவாசிக்கததால் வந்த பயம் . உயிர்த்த சேசுவின் மகிமையையும் பிரகாசத்தையும் கண்டு கலங்கினார்கள் . இந்நிலையில் அவரைப் பார்த்தும் அறிந்து கொள்ளவில்லையே . அவரை விட்டு ஓடி ஒளிந்து அவரை அவர்கள் மறுதலித்து விட்டபடியால் இப்போது பயம்

எனினும் அச்சம் ஒரு பக்கம் , மகிழ்ச்சி மறு பக்கம் . சந்தோசம் ,பயத்தை முற்றும் விரட்டிவிடவில்லை . அவர்கள் பயந்தார்கள் , மகிழ்ந்தார்கள் . சமயத்துக்குச் சமயம் குறுகிய நேரம் ஒன்றாய் வாழ்ந்தனர் . ஏரிக்கரையில் நிற்கிறார் . அவர்களோடு உண்கிறார் ,அவர்களுக்குப் போதிக்கிறார் . தேற்றரவானவரை அனுப்புவதாக வாக்களிக்கிறார் அவரது மனித சுபாவம் பூண்ட தேவ ஆளின் பரம இரகசியத்தை , அவர் கொண்டு வந்த நற்செய்தியைப் பிரசங்கிக்கக் கற்பித்தபின் மறைந்தார்

அவரது உத்தானத்தால் நம்மில் நம்பிக்கையை வளர்க்கிறார் . அவர் எழாதிருந்தால் மரித்தவர்களில் ஒருவரும் உயிர்த்து எழுந்திரார். அவரது உத்தானம் நமது உத்தானத்தின் அச்சாரம், அடையாளம் , அவர் ஜெயித்தார் . நம்மையும் ஜெயம் பெறச் செய்வார் . கிறிஸ்துவோடு நாம் உயிர்த்த வாழ்க்கை நடத்த வேண்டும் . "சேசுவோடு உயிர்த்திருப்பீர்களேயாகில் மேலிருக்கும் காரியங்களை நாடிச் செல்லுங்கள் "

உத்தானத்தினால் வந்த புது வாழ்க்கையைத் திருச்சபை தன் சடங்கு முறையில் துலங்க வைக்கிறது . புது நெருப்பு மந்திரிக்கப்படுகிறது . ' கிறிஸ்துவின் ஒளி' என்ற கீதத்தில் திரி அர்ச்சிக்கப்படுகிறது . மக்கள் உள்ளத்தை கழுவி சேசுவின் திரு இரத்தத்தில் வெண்மையாக்க குளிர்ந்த நீர் மந்திரிக்கப்படுகிறது . மகிழ்ச்சியின் அடையாளமாக மணிகள் ஒலிக்கப்படுகின்றன . பிரார்த்தனை பாடப்படுகிறது . அதில் உயிர்த்த ஆண்டவர் பாதம் நம் குறைகள் யாவையும் சமர்ப்பிக்கிறோம் . அவருக்கு நம் மேல் கவலை உண்டல்லவா? புதிதாய் மந்திரித்த தூபமும் வான் நோக்கிப் பறக்கிறது

சேசுவின் உத்தானம் அவரது தெய்வீகத்திற்கு அசையாத சாட்சி , பூமியில் அவர் கொண்டு வந்த போதனையின் பிணை ; அவரோடு வர இருக்கும் மகிமையின் அச்சாரம் . சேசுவின் உத்தானம் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஞான ஜீவியத்தில் வாழவும் வளரவும் மனிதனுக்கு வல்லமை அளித்தது

அவர் ஒரே தரம் மரித்து நித்திய ஜீவியத்தில் சேர்ந்தார் . நாம் ஒவ்வொரு நாளும் சாக வேண்டும். திரும்பத் திரும்ப எழ வேண்டும் . அதாவது நம்மில் பழைய மனிதனை , பழைய ஆதாமைக் களைந்து விடுவது , சேசுவோடு முற்றிலும் மரிப்பது , பாவத்திற்கும் அதன் விளைவுகளுக்கும் அடியோடு சாவது . இவை யாவும் வாழ்நாள் முழுதும் நாம் செய்ய வேண்டிய அலுவல் . சுய ஒறுத்தலாலும் தபத்தாலும் நாம் தினம் தினம் மரிப்போமேயாகில் மாமிச இச்சையின் குழியிலிருந்து கல்லறையிலிருந்து ஒவ்வொரு நாளும் எழுந்து கடவுளின் வளர்ப்புப் பிள்ளைகளின் மகிமையில் சேருவோம்

உயிர்த்த சேசு தன் தாய்க்குத் தானே முதலில் தோன்றி இருப்பார் ? தேவமாதா சொல்லொணா மகிமை பூண்டு வந்த மகனைக் கண்டார்கள் . அவர்களது அதிசயத்தையும் ஆனந்தத்தையும் அன்பு வளர்ச்சியையும் அறிகிறவர் யார் ?

செபம்

களிமண் சகதியாகிய எங்கள் உள்ளத்தில் அன்பில் மலர்ந்த மலரினால் வழங்கப் பெற்ற நித்திய வாழ்வின் வித்தே , எங்களில் முளைத்து எழுவாய் . மெல்லிய புல்லின் மேல் நடந்த சேசுவின் உயிர்த்த பாதங்களைக் கொண்டும் , மலர்ந்த மணம் வீசும் இதழ்களைத் தீண்டிய கிறிஸ்துவின் புத்துயிர் பெற்ற கரங்களைக் கொண்டும் , எல்லாச் சிருஷ்டிகளையும் இனிய பார்வையோடு நோக்கும் சேசுவின் விரிந்த கண்களைக் கொண்டும் , நாங்கள் கேட்பது என்னவெனில் , அதிசயத்தினால் உள்ளம் பூரிக்கவும் , பூலோக அழகை மிதித்து அதை உதாசீனம் செய்யவும் எல்லாவற்றிலும் இருக்கும் தேவ சந்நிதானத்தை நினைவு கூரவும், உயிர்த்த சேசுவே எங்களுக்குக் கற்றுத் தந்தருளும் . செபமாலை இராக்கினியே இக்கிருபையை எங்களுக்குப் பெற்றுத் தாரும். ஆமென்.