✠ புனிதர் யாக்கோபு (அல்பேயுவின் மகன்)

அல்பேயுவின் மகனான புனித யாக்கோபு என்பவர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவர் அல்பேயுவின் மகன் யாக்கோபு என்றே அனைத்து ஒத்தமை நற்செய்தி நூல்களிலும் உள்ள திருத்தூதர்களின் பட்டியலில் அழைக்கப்படுகின்றார்.

விவிலியத்தில்:

இவரைப்பற்றி விவிலியத்தில் அதிகம் இடம் பெறவில்லை. இவர் புதிய ஏற்பாட்டில் நான்கு முறை மட்டுமே குறிக்கப்படுகின்றார். செபதேயுவின் மகன் யாக்கோபுவிடமிருந்து பிரித்துக்காட்ட இவர் சிரிய யாக்கோபு அல்லது சின்ன யாக்கோபு என்று அழைக்கப்படுகின்றார். (மாற்கு 15:40) இப்பெயரே இவருக்கு பாரம்பரிய சுவடிகளிலும் உள்ளது.

மாற்கு நற்செய்தியில்:

அல்பேயுவின் மகன் யாக்கோபின் அழைப்பு :

மாற்கு நற்செய்தியாளரே முதன் முதலில் இவரை அல்பேயுவின் மகன் என திருத்தூதர்களைப் பட்டியல் இடும் போது அழைக்கின்றார். அவரும் ஒரே முறை தான் அழைக்கின்றார்.

மாற்கு நற்செய்தியில் இவர் அல்பேயுவின் மகன் லேவியின் அழைப்பு இடம் பெறுகின்றது. ஆயினும், லேவி திருத்தூதர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் அல்பேயுவின் மகன் யாக்கோபு இடம் பெறுகின்றார்.

மாற்கு நற்செய்தியில் பிற யாக்கோபு:

மாற்கு நற்செய்தியாளர் மூன்று யாக்கோபுகளை விகுதியுடன் குறிப்பிடுகின்றார். அவர்கள், அல்பேயுவின் மகன் யாக்கோபு, செபதேயுவின் மகன் யாக்கோபு, இயேசுவின் சகோதரரான யாக்கோபு. பிற மூன்று இடங்களில் விகுதியற்று குறிக்கின்றார். அவர்கள் உருமாற்றத்தின் போது ஒலிவ மலையில் உள்ள யாக்கோபு, கெத்சமணி தோட்டத்தில் இயேசுவோடு இருக்கும் யாக்கோபு, தொலையில் நின்று இயேசுவின் சிலுவையை உற்று நோக்கிக்கொண்டிருந்தவர்களுல் ஒருவரான மரியாவைக்குறிக்க சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியா என்னும் போதும்.

மத்தேயு நற்செய்தியில்:

அல்பேயுவின் மகன் யாக்கோபின் அழைப்பு :

பேதுரு, அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு மற்றும் அவரின் சகோதரர் யோவான் ஆகியோர் இயேசு கிறிஸ்துவின் சீடராக அழைக்கப் பெற்றனர். இதன் பின்னர் மாற்கு நற்செய்தியில் உள்ள அல்பேயுவின் மகன் லேவியின் அழைப்பைப் போன்றே மத்தேயு இயேசுவின் அழைப்பை பெறுகின்றார். ஆனாலும் மத்தேயு அல்பேயுவின் மகன் என குறிக்கப்படவில்லை எனினும் மத்தேயுவும் லேவியைப்போல வரி தண்டினவராக குறிக்கப்படுகின்றார். மத்தேயு நற்செய்தியில் வரி தண்டினவரான மத்தயுவும், அல்பேயுவின் மகன் யாக்கோபுவும் திருத்தூதர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.

மத்தேயு நற்செய்தியில் பிற யாக்கோபு:

மத்தேயு தனது நற்செய்தியில் யாக்கோபுவைக்குறிக்கும் போது, அவரின் உறவுவினர்களை வைத்தே பிரித்துக் காட்டுகின்றார். மத்தேயு மூன்று யாக்கோபுகளை தன் நற்செய்தியில் குறிப்பிடுகின்றார். 

அவர்கள் யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரராக, செபதேயுவின் மகனாகவும், யோவான் சகோதரராகவும், அல்பேயுவின் மகனாகவும் தோற்றம் மாறுதலின் போது இருந்த யாக்கோபு யோவான் சகோதரர் என குறிப்பிடப்படுகின்றார். கெத்சமணி தோட்டத்தில் இருந்தவர் அல்பேயுவின் மகனாக குறிப்பிடப்படுகின்றார். மேலும் தொலையில் நின்று இயேசுவின் சிலுவையை உற்று நோக்கிக்கொண்டிருந்தவர்களுல் ஒருவரான மரியாளைக்குறிக்க யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாள் என்னும் போதும் யாக்கோபுவுக்கு இவர் மாற்கை போல "சின்ன" என்னும் அடை மொழி இல்லாமல் குறிக்கின்றார்.

பாரம்பரியம்:

புனித யாக்கோபு என்னும் பெயருடன் ஒருவர் சில கிறிஸ்தவர்களோடு சேர்த்து கைது செய்யப்பட்டு, பின்னர் ஏரோது மன்னனால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என திருத்தூதர் பணிகள் நூல் குறிக்கின்றது.

இவர் பாரம்பரியப்படி எகிப்தில் மறைப்பணி ஆற்றும்போது சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டார் என்பது மரபு.