தேவ பராமரிப்புக்கு நம்பிக்கையுள்ள அர்ப்பணம் சங்.சேவியர் இக்னேஷியஸ் சுவாமி எழுதியது...... பாகம் -4

எப்படி கடவுளால் தீமையை சித்தங்கொள்ளவோ அல்லது அனுமதிக்கவோ முடியும்?

நடைமுறை எடுத்துக்காட்டுகள்

அர்ச். கிரகோரியார் இதே உண்மையை, மற்றொரு வெளிச்சத்தில் நமக்கு தெளிவுபடுத்துகிறார். அவர் சொல்லுகிறார், ஒரு மருத்துவர் ஒரு நோயாளியின் கெட்டுப் போன இரத்தத்தை வெளியேற்றுவதற்கு, அட்டைப் பூச்சிகளைப் பயன்படுத்தும் படி உத்தரவிடுகிறார். நோயாளியிடமிருந்து இரத்தத்தை உறிஞ்சுவதில், இந்த சிறிய பூச்சிகளின் நோக்கம், தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்வதும், தங்களால் முடிந்தவரை, இரத்தத்தை உறிஞ்சியெடுப்பதும் மட்டும்தான். ஆனால், மருத்துவரின் விருப்பமோ, கெட்டுப்போன இரத்தத்தை வெளியேறச் செய்து, அந்த நோயாளியைக் குணப்படுத்துவது மட்டுமே. எனவே, அந்த அட்டைப் பூச்சிகளின் அடங்காத பேராசைக்கும், அவற்றைப் பயன்படுத்துவதில் அந்த மருத்துவர் கொண்டுள்ள புத்திசாலித்தனமான நோக்கத்திற்குமிடையே எந்தத் தொடர்பும் இல்லை. அந்த நோயாளியும் கூட அந்த அட்டைகள் பயன்படுத்தப்படுவதை எதிர்ப்பதில்லை. அவற்றை அவன் தன் எதிரிகளாக நினைப்பதில்லை. மாறாக, அவற்றின் அருவருப்பான உருவம் தன்னில் ஏற்படுத்தும் வெறுப்புணர்வை வெல்ல அவன் முயல்கிறான். தன் உடல்நலத்திற்கு இது பயன்படும் என்று மருத்துவர் நினைப்பதால், அவை தனது இரத்தத்தை நன்கு உறிஞ்ச அவன் உதவுகிறான்.

கடவுளும், இந்த மருத்துவர் செய்வதைப் போலத் தான் மனிதர்களையும் பயன்படுத்துகிறார். எனவே, நமக்கு எதிராக செயல்பட, கடவுள் வல்லமை அளித்திருக்கிற மனிதர்களின் தீமையை சட்டை செய்யவோ அல்லது அவர்களது கொடிய எண்ணங்களுக்காக வருத்தப்படவோ கூடாது. அவர்கள் மீது வரும் வெறுப்புணர்ச்சியை நம்மிடமிருந்து விலக்க வேண்டும். அவர்களுடைய தனிப்பட்ட கண்ணோட்டங்கள் எப்படியிருந்தாலும், நம்மைப் பொறுத்தவரை, அவர்கள் நமக்கு நன்மையே செய்கிறார்கள். சர்வ நன்மைச் சுரூபியும், பூரண ஞானமுள்ளவரும், சர்வ வல்லவருமான கடவுளின் திருக்கரங்களால் வழிநடத்தப்படுகிற கருவிகள் அவர்கள். நமக்கு உதவுகிறவரைதான், அவர்கள் நமக்கு எதிராகச் செயல்பட ஆண்டவர் அனுமதிப்பார். உண்மையிலும் உண்மையாக அவை கடவுளிடமிருந்தே வருவதால், அவர்களது தாக்குதல்களைத் தடுப்பதற்குப் பதிலாக, அவற்றை வரவேற்பதில் நாம் ஆர்வம் காட்ட வேண்டும். இது எல்லா வகையான சிருஷ்டிகளுக்கும் பொருந்தும். மேலிருந்து அதிகாரம் பெறாவிட்டால், அவற்றில்

ஒன்றேனும் கூட நமக்கு எதிராக செயல்பட முடியாது.

கடவுளின் ஞான வெளிச்சத்தை உண்மையாகவே பெற்றுள்ளவர்களின் மனதில் இந்த உண்மை எப்போதுமே தெளிவாக உள்ளது. பழைய ஏற்பாட்டின் யோபு இதற்கு மிகச்சிறந்த சான்றாக இருக்கிறார். அவர் தமது குழந்தைகளையும், உடமைகளையும் இழந்து போகிறார்; மிக மேலான செல்வம் மிக்க நிலையிலிருந்து, வறுமையின் பாதாளத்திற்குள் அவர் விழுகிறார். அப்போதும் கூட அவர், “கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார், தேவனுக்கு எப்படி இஷ்டமோ அப்படியே ஆயிற்று, ஆண்டவருடைய நாமத்திற்குத் தோத்திரமுண்டாகக் கடவது" என்றே சொன்னார் (யோபு. 1 : 21). இதை ஆராய்ந்த அர்ச். அகுஸ்தினார் "கவனியுங்கள்! கடவுள் கொடுத்தார், பசாசானவன் எடுத்துக்கொண்டான் என்று யோபு சொல்லவில்லை. ஆனால் அவர் ஞானமிக்கவராக இருந்ததால், 'இந்தக் குழந்தையும், என் உடமைகளையும் கடவுளே எனக்கு கொடுத்தார். இப்போது அவற்றை என்னிடமிருந்து திருப்பி எடுத்துக் கொண்டவரும் அவரே. அவருடைய சித்தத்தின் படியே இப்படி நடந்தது என்று மட்டுமே கூறினார்” என்கிறார்.

இந்த போதனையைத் தருவதில் பழைய ஏற்பாட்டின் சூசையும் எவ்வகையிலும் குறைந்தவரல்ல. உதாரணம்: அவருடைய சகோதரர்கள் அவரை பழிவாங்கும் எண்ணத்தினாலும், தீய நோக்கத்தினாலும், அவரை அடிமையாக விற்றுவிட்டார்கள். ஆயினும் இந்தப் பிதாப்பிதாவானவர், எல்லாமும், தேவ திருவுளப்படியே நடக்கிற ஒன்று என்று ஏற்றுக்கொண்டார். "உங்கள் சீவரட்சணைக்காகத் தேவன் உங்களுக்கு முன்னே என்னை எகிப்துக்கு அனுப்பியருளினார். பூமியிலே பஞ்சந் துவங்கி இரண்டு வருஷமாயிற்று; இன்னும் ஐந்து வருஷமளவும் உழவும் அறுப்பும் நடந்தேறாது. ஆதலால், பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமல் இருக்கும் படியாகவும், நீங்கள் வேண்டிய உணவுகளைப் பெற்றுப் பிழைக்கும்படியாகவும் அல்லோ தேவன் என்னை உங்களுக்கு முன்னமே இவ்விடத்தில் வரப்பண்ணினார். உங்கள் யோசனையால் அல்ல, கடவுளின் திருவுளத்தினாலே இவ்விடத்திற்கு அனுப்பப்பட்டேன்; அவரே என்னைப் பாரவோனுக்குத் தந்தையைப் போலவும், அவருடைய முழு வீட்டுக்கு எசமானாகவும், எகிப்து தேச முழுதுக்கும் அதிபதியாகவும் இருக்கச் செய்திருக்கிறார்” (ஆதி. 45 : 5-8) என்று அவர் கூறுகிறார்.

இனி தம் வார்த்தையாலும், முன்மாதிரிகையாலும் நமக்குப் போதிக்கும்படி பரலோகத்திலிருந்து இறங்கி வந்த நம் இரட்சகரே கூறுவதைக் கேட்போமாக. தமது ஆர்வ மிகுதியினால், அர்ச். இராயப்பர், தமது பாடுகளுக்குத் தம்மை ஒப்புக் கொடுக்கும் ஆண்டவரது நோக்கத்திலிருந்து அவரை திசைதிரும்ப முயல்கிறார். ஆண்டவர் மீது போர்வீரர்கள் தங்கள் கரங்களை வைக்க விடாமல் தடுக்கிறார். ஆனால் சேசுநாதரோ அவரிடம் “உன் பட்டயத்தை உறையிலே போடு, பிதாவானவர் எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ?” என்றார் (அரு. 18 : 11). உண்மையில் தமது பாடுகள் தம்மைக் குற்றஞ்சாட்டிய யூதர்களிடமிருந்தோ, தம்மைக் காட்டிக் கொடுத்த யூதாஸிடமிருந்தோ, அல்லது தம்மை மரணத் தீர்வையிட்ட பிலாத்திடமிருந்தோ, அல்லது தம்மை இழிவாக நடத்தியவர்களும், சிலுவையில் அறைந்தவர்களுமான போர் வீரர்களிடமிருந்தோ தமக்கு வந்ததாக அவர் கூறவில்லை, அவர்கள் அவற்றின் நேரடிக் காரணமாக இருந்தும்கூட, கடவுளிடமிருந்து, அதாவது, ஒரு கடுமையான நீதிபதியாக அன்றி, நேசமிக்கவரும், நேசிக்கப்பட்டவருமாகிய தமது பிதாவிடமிருந்தே அவை வந்ததாக அவர் ஏற்றுக் கொண்டார்.

எனவே, நம் இழப்புகள், ஏமாற்றங்கள், வேதனைகள், நமது அவமானங்கள் ஆகியவை பசாசிடமிருந்தோ, அல்லது மனிதரிடமிருந்தோ நமக்கு வருவதாக நாம் ஒரு போதும் நினையாதிருப்போமாக. அவை அவற்றின் உண்மையாக மூலமாகிய கடவுளிடமிருந்தே வருகின்றன. "இதற்கு மாறாக செயல்படுவது, கல் எறிந்தவனை விட்டு விட்டு, கல்லின் மீது தன் கோபத்தைக் காட்டும் நாயின் செயலுக்கு ஒப்பாக இருக்கும்" என்கிறாள் அர்ச். டோரத்தியம்மாள். எனவே, இன்னார், அல்லது இன்னான் தான் என் துன்பங்களுக்குக் காரணம் என்று சொல்லாமல் இருக்க நாம் கவனமாயிருப்போமாக.

உனது துன்பங்கள், இந்த, அல்லது, அந்த மனிதனிடமிருந்து வராமல் கடவுளிடமிருந்தே வருகின்றன. இனி மீண்டும் உன்னை உறுதிபடுத்துவது யாதெனில்; ராஜரீக நன்மைத்தனமாகிய கடவுள் தம் எல்லாச் செயல்களிலும், பரிசுத்தமானதும், சுபாவத்திற்கு மேற்பட்டதுமான நோக்கங்களுக்காக, அவரது எல்லையற்ற ஞானத்தால் வழிநடத்தப்படுகிறார்.