சேசுநாதர் சிலுவையிலிருந்து வசனித்த 5-ம் வாக்கியம்

சேசுக்கிறிஸ்துநாதருடைய திருப்பாடுகளின் பேரில் தியானங்கள்

அர்ச்சியசிஷ்ட வாரத்தில் வரும் திங்கட்கிழமை 41 - ம் தியானம்

சேசுநாதர் சிலுவையிலிருந்து வசனித்த 5-ம் வாக்கியம்

1- ம் ஆயத்த சிந்தனை

சேசுநாதர் சிலுவையில் தொங்கும்போது தமக்குள்ள தாகத்தை அடக்கமாட்டாமல் நான் தாகமாயிருக்கிறேன் என்று வெகு பிரலாபத்துடன் சொல்லுவதை நீ கேட்பதாக ரூபிகரித்துக் கொள்.

2-ம் ஆயத்த சிந்தனை

நமது போசனத்தை மட்டுப்படுத்தி அடிக்கடி நமது சரீரத்தை ஒறுத்து அடக்கி மட்டசனம் (இச்சையடக்கம்) என்னும் புண்ணியத்தை அநுசரிப்பதற்கான வரத்தைக் கேட்போமாக.

தியானம்

நமது வணக்கத்துக்குரிய இரட்சகர் பெரிய வியாழக்கிழமை இராப்போசனம் முதல் தம் உயிர் பிரியுமட்டும் ஒன்றும் சாப்பிடாமலும் குடியாமலும் இருந்ததாலும், அவர் பிடிபட்ட இராத்திரி முழுதும் சேவகரால் அடி மிதி நிந்தை அவமானங்களுக்கு உள்ளானதினாலும், மறுநாள் காலமே யூதர்கள் அவரை இழுத்துக் கொண்டு போன இடங்களுக்கெல்லாம் சென்று தூணில் கட்டப்பட்டு அடிபட்ட போதும், முள்முடி தரிக்கப்பட்ட போதும் அவர் ஏராளமான இரத்தத்தைச் சிந்தினபடியாலும், அவர் சிலுவை சுமந்து போகும்போது கணக்கில்லாத தடவைகள் கீழே விழுந்து

கடைசியாய்க் கடினமான வெயிலெரிக்கும் மத்தியான வேளையில் சிலுவையில் அறையப்பட்டதாலும், அவர் அநுபவித்த அகோரமான தாகத்தைப் பொறுக்கமாட்டாமல் வெகு வருத்தத்துடன் தமது வாயைத் திறந்து தாகமாயிருக்கிறேன் என்கிறார்

ஆ! என் அன்புக்குரிய இரட்சகரே! பூர்வீக காலத்தில் தவித்திருந்த இஸ்ராயேல் ஜனத்தைக் கற்பாறையில் நின்று அற்புதமாய்த் தண்ணீர் வரச்செய்து அவர்கள் தாகத்தை ஆற்றினவரும், கழுதையின் அலகெலும்பில் நின்று அற்புதமாய் புறப்படச் செய்த தண்ணீரால் சம்சோனுடைய அகோரதாகத்தை அமர்த்தினவரும் சகல மனிதர்களையும் உமது திருஇரத்தத்தால் திருப்தியாக்கினவருமான தேவரீர் இப்போது உமக்கிருக்கும் கடூர தாகத்தை நீரே தீர்த்துக் கொள்ளாமல் உமது சத்துருக்களை நோக்கித் தாகமாயிருக்கிறேனென்று சொல்கிறீரே.

ஆ! என் ஆத்துமமே! உன் ஆண்டவர் படும் கஸ்தியைப் பார். சகல மனிதருக்கும் மிருகங்களுக்கும் தெளிவான தண்ணீரைக் குடிக்கக் கொடுப்பவர் இப்போது தாமே தாகத்தால் அவதிப்படுகிறார்.

அற்புதமான விதமாய்த் தமது தாகத்தைத் தீர்த்துக் கொள்ளக் கூடுமாயிருந்தும் நமது நிர்ப்பாக்கிய பாவங்களினிமித்தம் யாதோர் ஆறுதலுமடையாமல் தமது பாடுகளின் பாத்திரத்தைக் கடைசித்துளி மட்டும் தாமே உட்கொள்ளச் சித்தமாகிறார்.

ஆ! என் சர்வேசுரா! தேவரீர் தெரிந்து கொண்ட பாடுகளில் ஒன்றையும் தள்ளி விடாமல் சகலத்தையும் அநுபவித்தது போல் அடியேனும் எனக்கு நியமிக்கப் பட்டிருக்கும் சொற்ப துன்ப துரிதங்களைப் பொறுமையுடன் அநுபவித்த என் சரீரத்தை மட்டசனத்தாலும் தவத்தாலும் ஒறுத்து அதை என் ஆத்துமத்துக்குக் கீழ்ப்படியச் செய்வதற்கான வரத்தைத் தயை செய்தருளும்

சேசுநாதர் தாகமாயிருக்கிறேனென்று சொன்னதைக் கேட்ட யூதர்கள் அவர் அவ்வளவு இரத்தத்தைச் சிந்தி அந்தக் கொடிய வெயிலில் கடின மரணமடைவதினால், அவருக்கு அகோரமான தாகமிருக்குமென்று கண்டிருந்தும் கொஞ்சங்கூட மனமிளகாமல் அந்தப் பாதகர் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்.

"இவ்விதமாய் என் ஆகாரத்துக்குப் பிச்சைக் கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள் என்னும் தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று, நாம் போசன பானத்தில் ருசியையும் பிரியத்தையும் தேடாமலும், அவைகள் கோபித்து முறைப்பாடு சொல்லாமலும் முரட்டுத்தனமள்ள துஷ்ட மிருகத்துக்கொப்பான நமது சரீரம் கேட்கும் மிதமிஞ்சின போசனத்தையும் ருசிவர்கமான பதார்த்தங்களையும் கொடுக்காமல் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தொழிலைச் செய்வதற்கும் நாம் இவ்வுலகத்திலிருக்கும் மட்டும் சர்வேசுரனுக்கு ஊழியம் செய்வதற்கான பலத்தைக் காப்பாற்றும்படிக்கும் தேவையான அளவு மட்டும் புசித்து நாள்தோறும் போசன வேளையில் சொற்ப ஒறுத்தல் முயற்சியைச் செய்து வருவோமாக.

நமது திவ்ய கர்த்தர் நம்மிடத்தில் கேட்கும் பொறுமை தாழ்ச்சி சிரவணத்துக்குப் பதிலாய் நம்மைச் சாராத உலக காரியங்களில் அதிகமாய் கலந்து அவைகளில் நாட்டம் வைத்திருக்கும் நமது உலக கவலைகளையும், பக்தி உருக்கத்துக்குப் பதிலாய் வெது வெதுப்புள்ள குணத்தையும், கடைசியாய் நாள்தோறும் புண்ணியத்தில் அதிகரிப்பதற்குப் பதிலாய் அவைகளில் வளர்ச்சியடையாமல் அசமந்தமாயிருந்து பழைய தப்பிதங்களை அடிக்கடி கட்டிக் கொள்வதால் அந்த யூதர் செய்தது போல் நாமும் நம் ஆண்டவருக்குக் கசப்பான பானத்தைக் குடிக்கக் கொடுக்கிறோம் என்பது நிச்சயம். ஆகையால் சிலுவையின் அடியிலே சாஷ்டாங்கமாக விழுந்து, ஆண்டவரே! முற்காலத்தில் காயீன் நல்ல கனிவர்க்கங்களைக் கொடாமல் உதவாததைத் தேவரீருக்கு ஒப்புக்கொடுத்தது போல் நானும் இதுவரையிலும் செய்து வந்தேன்.

ஆனால் இப்போது என் பெரும் குருட்டாட்டத்தைக் கண்டுபிடித்து அவைகளுக்காக மனஸ்தாபப்படுவதுமன்றி, தன் கிடையிலிருந்த கொழுத்த ஆடுகளைத் தேவரீருக்கு நல்ல மனதோடு பலியிட்ட ஆபேலைப்போல் உமக்கு பலியிட என்னிடத்தில் ஒன்றுமில்லாதிருந்தும் இதோ! என் இருதயத்தை முழுவதும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். இதைத் தேவரீர் கையேற்றுக் கொண்டு உமது சிநேகத்தில் நான் தாகமாயிருக்கப் பண்ணியருளும் இப்போதைக்கும் எப்போதைக்கும் உம்மையே, உம்மை மாத்திரமே, சிநேகிக்க அநுக்கிரகம் செய்தருளும்.

(மட்டசனம் என்பது இச்சையடக்கம் என்பதாகும்)