தேவ பராமரிப்புக்கு நம்பிக்கையுள்ள அர்ப்பணம் சங்.சேவியர் இக்னேஷியஸ் சுவாமி எழுதியது...... பாகம் -3

எப்படி கடவுளால் தீமையை சித்தங்கொள்ளவோ அல்லது அனுமதிக்கவோ முடியும்?

ஆயினும், இந்த எல்லாச் செயல்களிலும் பாவத்தின் தன்மை உள்ளது என்று நீ ஒருவேளை கூறலாம். கடவுள் பூரண பரிசுத்தர், பாவத்தோடு எந்தத் தொடர்புமில்லாதவர் என்றால், இத்தகைய செயல்களை எவ்வாறு அவர் சித்தங் கொள்ள முடியும்? அவற்றில் அவர் எப்படி பங்கெடுக்க முடியும்?

கடவுள் உண்மையில் அப்படியல்ல, பாவத்தை விளைவிக்கிறவராகவும் இருக்க முடியாது. ஆயினும் ஒவ்வொரு பாவத்திலும் இரு பகுதிகள் இருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒன்று, சுபாவம் மற்றொன்று ஒழுக்கம். இதனால், உனக்கு எதிரான துன்பம் விளைவிப்பதாக நீ கருதும் ஒரு மனிதனின் செயலில், உதாரணமாக, உன்னைத் தாக்கும் கரத்தின் இயக்கம், அல்லது உன்னைப் பழிக்கும் நாக்கின் அசைவு, மற்றும் சரியான காரணத்திலிருந்தும், தேவ கட்டளையிலிருந்தும் விலகிச் செல்லும் சித்தத்தின் செயல் ஆகியவை இருக்கின்றன.

மற்ற எல்லா இயற்கைப் பொருட்களையும் போலவே, கை மற்றும் நாவின் சரீரப்பூர்வமான செயல்பாடு தன்னிலேயே முழுவதும் நல்லது தான். அந்த செயல்பாடு கடவுளின் ஒத்துழைப் போடும், அவரது ஒத்துழைப்பாலும் நிகழ்வதை யாராலும் தடுக்க முடியாது. தீமையானதும், கடவுளால் ஒத்துழைக்க முடியாததுமானது யாதெனில், அந்தச் செயலுக்குக் காரணமான மனிதனின் சொந்த சித்தத்தின் பாவகரமான நோக்கம் தான்.

ஒரு மனிதன் ஊனமுள்ள காலுடன் நடந்து செல்லும் போது, அவனது இயக்கம் அவனது ஆத்துமத்திலிருந்தும், காலிலிருந்தும் வருகிறது. ஆனால் அவன் மோசமாக நடக்கச் செய்யும் குறைபாடு காலிலிருந்து மட்டுமே வருகிறது. இதே முறையில் தான் மனிதனின் எல்லாத் தீய செயல்களும், அவற்றின் இயற்கையான நிலையில் கடவுளிடமிருந்தும், உடல்சார்ந்த செயல் என்ற நிலையில் அந்த மனிதனிடமிருந்தும் வருகிறது. ஆனால் அவை பாவகரமானது, குற்றமானது என்ற முறையில் அவை மனிதனின் சித்தத்திலிருந்து மட்டுமே வருகின்றன.

ஒரு மனிதன் உன்னை தாக்கும் போது, அல்லது அவதூறு பேசும் போது, அவனது கை, மற்றும் நாவின் செயலில் எந்த வகையிலும் பாவமில்லை. கடவுள் மிக நிச்சயமாக அதன் காரணராக இருக்க முடியும். உண்மையிலேயே அவர் அவ்வாறு தான் இருக்கிறார். ஏனெனில் மற்ற எல்லா சிருஷ்டிகளையும் போலவே மனிதனின் உள்ள இருத்தலும், இயக்கமும் அவனிடமிருந்து வருவதில்லை. ஆனால், அவை அவனிலும், அவன் வழியாகவும் செயல்படும் கடவுளிடமிருந்தே வருகின்றன. “ஏனெனில் நாம் அவருக்குள் ஜீவிக்கிறோம். அவருக்குள் அசைகிறோம், அவருக்குள் இருக்கிறோம்" (அப்.நடபடி. 17:28) என்று அர்ச். சின்னப்பர் கூறுகிறார்! அந்த நோக்கத்தின் தீமையை பொறுத்தவரை, அது அந்த மனிதனிடமிருந்து மட்டுமே. வருகிறது. அதில் மட்டுமே பாவத்தன்மை உள்ளது. கடவுளுக்கோ அதில் எந்தப் பங்கும் இல்லை. ஆயினும் நம் சொந்த சித்தத்தின் சுயாதீனத்திற்குள் தலையிடாமல் இருக்கும்படியாக, அவர் இதை அனுமதிக்கிறார்.

மேலும், உன்னைத் தாக்குகிற, அல்லது உன்னைக் கொள்ளையடிக்கிற ஒருவனோடு கடவுள் ஒத்துழைக்கிற போது, சந்தேகமின்றி உன் உடல் நலத்திற்கும், உடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்த கடவுள் சித்தங் கொள்கிறார். ஏனெனில் நீ அவற்றைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாய். அவை உன் ஆத்துமத்திற்குத் தீமை விளைவிக்கப் போகின்றன. ஆயினும் உன்னைத் தாக்குபவன், அல்லது கொள்ளையடிப்பவன் ஒரு பாவத்தின் மூலம் உன்னிடமிருந்து அவைகளை பறித்துக் கொள்வது அவருக்குச் சித்தமில்லை. அது மனிதனின் தீய குணத்தின் ஒரு பகுதியேயன்றிக் கடவுளின் திட்டமல்ல. ஓர் எடுத்துக்காட்டு இதை இன்னும் தெளிவாக்கக் கூடும்.

ஒரு குற்றவாளி நியாயத் தீர்ப்பின்படி, மரணத் தீர்வையடைகிறான். தண்டனையை நிறைவேற்றுபவனோ, ஏற்கனவே அவனது எதிரியாக இருக்க நேரிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இவன் நீதிபதியின் கட்டளையை நிறைவேற்றுவதை ஒரு கடமையாக எண்ணுவதை விட்டு விட்டு, வெறுப்போடும், பழியுணர்வோடும் அதைச் செய்கிறான். இந்த நிலையில் இந்தக் கொலைஞனின் பாவத்தில் நீதிபதிக்கு எந்தப் பங்கும் இல்லை. இந்தப் பாவம் கட்டிக் கொள்ளப்பட வேண்டும் என்பது அந்த நீதிபதியின் நோக்கமில்லை, மாறாக, நீதி தவறாமல் நிறைவேற்றப்படுவதும், அந்தக் குற்றவாளி தண்டிக்கப் படுவதுமே அவரது சித்தமும் நோக்கமுமாக இருக்கிறது.

இதே முறையில் தான், உன்னைத் தாக்குகிற, அல்லது உன்னைக் கொள்ளையடிக்கிற மனிதனின் தீய குணத்தில் கடவுளுக்குச் சிறிதும் பங்கில்லை. அது அந்த மனிதனுக்கு மட்டுமே உரியது. நாம் கூறியுள்ளது போல, உன்னை உன் பாவங்களிலிருந்து விடுவித்து, புண்ணியத்திற்கு உன்னை வழிநடத்தும்படியாக, கடவுள் நீ உன்னுடைய சொந்தக் குற்றங்களை காணச் செய்கிறார். உன்னைத் தாழ்த்துகிறார். உன் உடமைகளை உன்னிடமிருந்து பறித்துக் கொள்கிறார்; ஆனால், எந்தப் பாவத்தின் தலையீடும் இல்லாமல், எத்தனையோ வழிகளில் அவர் நிறைவேற்றக் கூடிய இந்த நல்ல, இரக்கமுள்ள திட்டத்திற்கும், அவரது கருவியாகச் செயல்படும் மனிதனின் பாவத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. உண்மையில் உன்னைத் துன்புறுத்துவதும், தாழ்த்துவதும், தரித்திரனாக்குவதும் இந்த மனிதனின் கெட்ட நோக்கமோ அல்லது பாவமோவல்ல, ஆனால் நீ உன் உடல்நலத்தையும், நல்ல பெயரையும், உடமைகளை இழந்து போனதுதான் உன்னை இந்த நிலைக்குள்ளாக்கு கிறது.

பாவமானது, அதன் குற்றத்திற்குரிய மனிதனுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்கிறது. இத்தகைய செயல்களில் தீமைகளிலிருந்து நன்மையைப் பிரித்தறிய வேண்டிய முறை இதுதான். இப்படித் தான் கடவுள் மனிதர் வழியாகச் செயல்படுவதற்கும், மனிதர்கள் அச்செயலுடன் தங்கள் சொந்த சித்தத்தைச் சேர்த்துக் கொள்வதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நாம் கண்ட பிடிக்க வேண்டும்.