தவக்கால சிந்தனைகள் 22 : ( மிக மிக முக்கியமான பகுதி.. மேலும் மோட்சம் எப்படி இருக்கும் என்பதை சேசுவே சொல்லும் பகுதியும் கூட) சேசுவின் மறையுரை தொடர்ச்சி..

அப்போது இராயப்பர்:

“ஆண்டவரே, நீர் எங்குதான் போகிறீர்?” என்று கேட்கிறார்.

“நீ இப்பொழுது என்னைப் பின்செல்ல முடியாத இடத்திற்குப் போகிறேன். ஆனால் பிந்தி நீ என்னைப் பின்செல்வாய்.”

“ஏன் இப்பொழுது முடியாது? “என்னைப் பின்செல்” என்று நீர் சொன்னதிலிருந்து எப்பொழுதும் உம்மை நான் பின்சென்று வந்திருக்கிறேன். ஒரு துக்கமில்லாமல் எல்லாவற்றையும் விட்டு விட்டேன்... இப்பொழுது உம்முடைய எளிய சீமோனை விட்டு நீர் போவது - எனக்கு எல்லாமாக இருக்கிற நீர், உமக்காக முன்பு என்னிடமிருந்த கொஞ்ச சொத்தையும் நான் விட்ட பிறகு - இப்படிப் போவது நியாயமல்ல, நன்றாகவுமில்லை. நீர் உம் மரணத்திற்குப் போகிறீரா? சரி, நானும் உம்முடன் வருகிறேன். மறுவுலகத்திற்கு நாம் இருவரும் சேர்ந்து போவோம். ஆனால் அதற்கு முன் உம்மை நான் பாதுகாக்க வேண்டும். உமக்காக என் உயிரைக் கொடுக்க நான் தயாராயிருக்கிறேன்.”

“எனக்காக உன் உயிரைக் கொடுப்பாயா? இப்பொழுதா? இப்பொழுது கொடுக்க மாட்டாய். இதோ நான் உனக்குச் சொல்கிறேன். சேவல் கூவுமுன் என்னை நீ மூன்று தடவை மறுதலித்திருப்பாய். இப்போது முதலாம் சாமம். இதன்பின் இரண்டாம் சாமம் வரும். அதன்பிறகு மூன்றாம் சாமம். இன்றிரவு சேவல் உரக்கக் கூவுமுன் நீ உன் ஆண்டவரை மும்முறை மறுதலித்திருப்பாய்.”

“நடக்க முடியாதது ஆண்டவரே! நீர் சொல்கிற எல்லாவற்றையும் நான் ஏற்கிறேன். ஆனால் இதை அல்ல. நான் என்னைப் பற்றி நிச்சயமாயிருக்கிறேன்.”

“இப்பொழுது, இந்நேரம் நீ நிச்சயமாயிருக்கிறாய். ஏனென்றால் என்னை இன்னும் கொண்டிருக்கிறாய். கடவுளை உன்னோடு கொண்டிருக்கிறாய். சீக்கிரத்திலே மாம்சமான கடவுள் பிடிபட்டு விடுவார். அப்பொழுது அவரை நீ கொண்டிருக்க மாட்டாய். சாத்தான் உன்னைப் பளுவாக்கியபின் உன்னைப் பயங்காட்டுவான். உன்னுடைய நிச்சயிப்பே சாத்தானுடைய தந்திரம்தான் - உன்னைக் கீழே வீழ்த்தும் அடிப்பாரம் அது. அவன், உன்னிடம் சுட்டிக் காட்டிப் பேசி: “கடவுள் இல்லை. நான் இருக்கிறேன்” என்று சொல்வான். நீயும் அச்சத்தினால் உள்ளம் மங்கியிருந்தாலும் இன்னும் உன்னால் வாதிட முடியுமாதலால் நீ இதைக் கண்டுபிடிப்பாய். சாத்தான் இந்த நேரத்தில் உலகின் எஜமானாயிருக்கையில், நல்லது இறக்கும்; தீமை செயலாற்றும்; உள்ளம் சலிப்படையும்; மனிதமே வெற்றிபெறும்.

அப்போது நீங்கள் தளபதி இல்லாத போர் வீரரைப் போலிருப்பீர்கள். எதிரியால் துரத்தப்படுவீர்கள். தோற்கடிக்கப்படும் அங்கலாய்ப்பில் நீங்கள் வெற்றி கொள்பவனுக்கு உங்கள் கழுத்தைத் தாழ்த்துவீர்கள். நீங்கள் கொல்லப்படாதபடிக்கு விழுந்து விட்ட வீரரை மறுதலிப்பீர்கள். ஆனால் தயவு செய்து உங்கள் இருதயங்களைக் கலங்க விடாதீர்கள். சர்வேசுரனை விசுவசியுங்கள். என்னையும் விசுவசியுங்கள். வெளித் தோற்றங்களுக்கெல்லாம் மாறாக என்னை விசுவசியுங்கள். நிலைத் திருக்கிறவர்களும் விட்டு ஓடிப் போகிறவர்களும் என்னுடைய இரக்கத்தையும் பிதாவின் இரக்கத்தையும் நம்பக் கடவார்கள்.

மவுனமாயிருக்கிறவனும், “அவனை அறியேன்” என்று சொல்ல தன் உதடுகளை அசைப்பவனும் அப்படியே நம்பக்கடவான். மேலும் அதே போல என் மன்னிப்பிலும் நம்பிக்கை கொள்ளுங்கள். வருங்காலத்தில் உங்கள் செயல்கள் எப்படியிருந்தாலும் - நன்மையிலும், என் போதனையிலும். ஆகவே என் திருச்சபையிலும் - அவை உங்களுக்கு மோட்சத்தில் சம இருக்கைகளைத் தரும் என்றும் நம்புங்கள். என்னுடைய பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உள்ளன. அப்படியில்லாவிட்டால் உங்களிடம் சொல்லியிருப்பேன். ஏனென்றால் உங்களுக்கு ஒரு இடம் ஆயத்தம் செய்வதற்காக நான் முந்திப் போகிறேன். நல்ல தகப்பன்மார்கள் தங்கள் சிறு பிள்ளைகளை வேறிடத்திற்குக் கொண்டு செல்லும்போது அப்படிச் செய்வதில்லையா? அவர்கள் முந்திப் போய் வீட்டையும், ஜாமான்களையும், உணவு காரியங்களையும் ஆயத்தம் செய்கிறார்கள். அதன்பின் அவர்கள் தங்கள் அருமைக் குழந்தைகளைக் கூட்டி வரப் போகிறார்கள். சிறு பிள்ளைகளுக்கு எதுவும் குறையிருக்கக் கூடாதென்பதற்காகவும், புது இடத்தில் அவர்களுக்கு அசெளகரியம் ஏற்படாதிருக்கவும் அன்பினால் அப்படிச் செய்கிறார்கள்.

நானும் அதையே செய்கிறேன். அந்தக் காரணத்திற்காகவே செய்கிறேன். இப்பொழுது நான் போகிறேன். பரலோக ஜெருசலேமில் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் இடம் தயார் செய்தபின், நான் இருக்குமிடத்தில் நீங்களும் இருக்கும்படியாக நான் திரும்ப வந்து உங்களைக் கூட்டிக் கொண்டு போவேன். அங்கே மரணமும் துக்கங் கொண்டாடுதலும் இல்லை. கண்ணீர்களும், கூச்சல்களும் இல்லை. பசியும் நோவும் இருட்டும், வறட்சித் தாகமும் இல்லை. அங்கே எல்லாம் ஒளியும், அமைதியும், மகிழ்ச்சியும், பாடலும்தான். தெரிந்து கொள்ளப்பட்ட பன்னிருவரும் இஸ்ராயேல் கோத்திரங்களின் பன்னிரு பிதாப்பிதாக்களுடன் ஞான அன்பின் நெருப்பின் ஆர்வத்தில் உந்நதமாய் உயர்ந்த மோட்சத்தின் பாடலைப் பாடுவார்கள்.

அவர்கள் மோட்ச பாக்கியமாகிய சமுத்திரத்தில் நேராய் நின்று அந்த நித்தியப் பாடலை சம்மனசுக் கூட்டங்களின் துரித இயக்கமாய் மீட்டப்படும் இசை நரம்புகளுடன் முடிவில்லா அல்லேலூயாவைப் பாடுவார்கள்..

நான் எங்கே இருப்பேனோ, அங்கே நீங்களும் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். நான் எங்கே போகிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். அங்கு போகும் வழியையும் அறிவீர்கள்.”

நன்றி : www.catholictamil.com

புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479