தேவ பராமரிப்புக்கு நம்பிக்கையுள்ள அர்ப்பணம் சங்.சேவியர் இக்னேஷியஸ் சுவாமி எழுதியது...... பாகம் -1

கடவுளின் சித்தமே அனைத்தையும் படைத்து ஆண்டு வருகிறது.

கடவுளின் திருச்சித்தத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அர்ச். அகுஸ்தினாரைப் பின்பற்றி, புனித தாமஸ் அக்குவினாஸ், கடவுளின் சித்தமே உலகில் இருக்கிற அனைத்திற்கும் காரணமாக இருக்கிறது என்று போதிக்கிறார். சங்கீத ஆசிரியரும் “ஆண்டவர் வானத்திலும், பூமியிலும், சமுத்திரத்திலும், சகல பாதாளங்களிலும் தமக்குச் சித்தமான யாவற்றையும் செய்தருளினார்” (சங். 134: 6) என்கிறார். மேலும் காட்சியாகமத்தில் "எங்கள் கர்த்தராகிய சர்வேசுரா, தேவரீர் மகிமையையும், மேன்மையையும், வல்லமையையும் அடைந்து கொள்ளப் பாத்திரமாயிருக்கிறீர். ஏனெனில் தேவரீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர். உமது சித்தத்தினாலேயே சகலமும் இருந்தன. சகலமும் சிருஷ்டிக்கப்பட்டன" (காட்சி 4 :11) என்று எழுதப்பட்டுள்ளது.

இதனால், தேவ சித்தமே இந்தப் பிரபஞ்சத்தை அதனுடைய சகல மேன்மைகளோடும் அதில் வசிக்கிற சகல சிருஷ்டிகளோடும் ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டாக்கியது. அதுவே பூமியையும், அதன் மேலும், அதற்குக் கீழும் உள்ள சகலத்தையும் படைத்தது. காண்பவையும், காணாதவையும், உயிருள்ளவையும், அசைவற்றவையும், பகுத்தறிவு உள்ளவையும், இல்லாதவையும், மிக உயர்ந்தவையும், மிகத் தாழ்ந்தவையுமான அனைத்து சிருஷ்டிகளையும் படைத்ததும் தேவ சித்தமே.

கடவுள் இவை அனைத்தையும், அர்ச். சின்னப்பர் சொல்வது போல, "தம் திருவுள நோக்கத்தின்படி" (எபே. 1: 5) படைத்திருக்கிறாரென்றால், அவை அவரது திருச்சட்டத்தின் ஆலோசனைப்படியே பாதுகாக்கப்படவும், ஆளப்படவும் வேண்டும் என்பதும் மிகவும் நீதியானதும், அறிவுக்கு உகந்ததும், முற்றிலும் அவசியமானதாகவும் இருக்கிறதில்லையா? "உமது சித்தமில்லாமல் எந்தக் காரியம் நிலைத்திருக்கக் கூடும்? உமக்கு மனமில்லாமல் எந்தக் காரியம் காப்பாற்றப்படக்கூடும்?" (ஞான. 11:26).

ஆனால் மோயீசனின் சங்கீதத்தில் “சர்வேசுரனால் செய்யப்பட்ட கிரியைகள் உத்தமமானவைகள்" (உபா. 32: 4) என்று எழுதப்பட்டுள்ளது. கடுமையோடும், நீதியோடும் தீர்ப்பிடுகிறவராகிய சர்வேசுரன் தாமே “எல்லாம் மெத்தவும் நன்றாயிருந்தன” (ஆதி. 1: 32) என்று காணும் அளவுக்கு அவை அனைத்துமே அவரால் மிக நன்றாகப் படைக்கப்பட்டன. "தமது ஞானத்தால் பூலோகத்திற்கு அடித்தளமிட்டு, தமது விமரிசையால் வானமண்டலங்களை ஸ்தாபித்த" (பழ. 3 :19) ஆண்டவர், அவற்றை சிருஷ்டித்த போது கொண்டி ருந்ததைவிடக் குறைவான பூரணத்துவத்தை, அவற்றைப் பராமரிப்பதில் காட்ட முடியாது. எனவே, அவர் நமக்கு நினைவூட்டக் கவனமாயிருப்பது போல, அவரது திருச்சித்தம் "சகலத்தையும் பாதுகாப்பதைத்" (ஞான. 12:13) தொடர்ந்து செய்து வருகிறது என்றால், அது "அளவோடும் கணக்கோடும், நிறையோடுமே" (ஞான. 11 : 21). "அவரது வல்லமை, நீதியின் துவக்க மாயிருக்கிறது,

அவர் சகலத்தையும் தயவாய் நடத்துகிறார்" (ஞான. 12:16). “ஏன் இப்படிச் செய்தீரென்று அவரை வினவ எவனாலும் கூடாது" (சங். பிர.8: 4). ஏனெனில் தம் சிருஷ்டிகளின் முடிவை அவர் தமது சித்தப்படியே நியமிக்கிறார். அந்த முடிவை நோக்கி அவர்களை அழைத்துச் செல்ல தமக்கு நல்லவையாகத் தோன்றுகிற வழிகளை அவரே தேர்ந்தெடுக்கிறார். அப்படி அவர் அவர்களுக்கென நியமிக்கிற முடிவு நல்லதாகவும், ஞானமிக்கதாகவுமே இருக்க முடியும். நல்லதும், ஞானமிக்கதுமான வழியாலன்றி, அவர் அவர்களை அவர்களது இறுதி கதியை நோக்கி அழைத்துச் செல்ல முடியாது. எனவே, "எவனும் உங்களை வீண் வார்த்தைகளால் மயக்க இடம் கொடாதிருங்கள்" (எபே.5:7) என்று அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் நம்மிடம் சொல்கிறார்.

ஆனால், "மிகுந்த சம்பாவனைக்கு ஏதுவான உங்கள் நம்பிக்கையை இழந்து போகாதிருங்கள், தேவ சித்தத்தை நிறைவேற்றி, வாக்குத்தத்தத்தைக் (அதாவது நித்தியப் பேரின்பத்தைக்) கைக் கொள்ளுங்கள்..." (எபி. 10:38) 

ஏனெனில், “உலகமும், அதன் இச்சையும் ஒழிந்து போகும். தெய்வசித்தத்தை நிறைவேற்றுகிறவனோ என்றென்றைக்கும் நிலை நிற்பான்"" (1அரு. 2:17) என்று எழுதப்பட்டுள்ளது.